Tuesday, April 28, 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


ஜெயகாந்தனாகிய ஜெயகாந்தனாகிய ஜெயகாந்தனாகிய நான்னு சொல்லிகிட்டுக் கால் மேல காலைத் தூக்கிப் போட்டுகிட்டு உக்காந்தா உங்களால என்னா செஞ்சிட முடியும். இது என் இடம். இங்க என்னை யார் கேள்வி கேக்க முடியும். ஆனா நல்லா இருக்குமா. நான் சொல்லக்கூடாது. ஜெயகாந்தனாகிய இவன்னு நீங்க சொல்லணும். அதான் எனக்கு மரியாத.

யருமே எதையுமே கேட்கப்போவதில்லை கேட்க முடியாது அல்லது கேட்க மாட்டார்கள் என்பதற்காக மட்டுமே ஒன்றைச் செய்வது அல்லது செய்யலாம் என்று எண்ணுவதற்குப் பெயர் சுய மரியாதை அன்று ப்படிச் செய்வது எதன் மீதும் மரியாதையற்ற செயலாகும்.

என் இடம் என் இடம்ங்கறது, இந்த மடத்துக்கு நான் வாடகை குடுக்
குறேங்கறதால இதை என் இடம்னு சொந்தம் கொண்டாடிக்கிறதுக்கு சமானம். எழுத்தாளன் என்கிற ஸ்தானம் சுயார்ஜிதம்தான் எனினும் அது க்களால் மனமுவந்து அவனுக்கு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். அரசன் அதிகாரத்தால் எடுத்துக் கொள்பவன். கலைஞன் சமூகத்துக்குக் கலையை அளிப்பதால் எடுத்துக்கொள்ளும் பாத்யதை உள்ளவன். ஆனாலும் சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமாகிப் பெறுகையில்தான் அவன் மக்களின் கலைஞன் ஆகிறான்.

பேச்சு இப்படிப் பின்னிப்பின்னி போய்க்கொண்டே இருக்கும். எங்கு எப்படித் தொடங்கிற்று எங்கு எப்படி முடிந்தது என்பதைப் பற்றி சபைக்கென்ன கவலை. ஆங்காங்கே தன்னிச்சையாய் விழும் வீச்சுகளை எற்கிறோமோ இல்லையோ ரசிக்காமல் இருக்க முடியாது. பாதி நாடகீய மேடைப்பேச்சும் மீதி அச்சில் ஏற்ற முடியா காற்றில் வீசும் ஏச்சுமாய் போய்க்கொண்டிருக்கும்.

வாசகன் படிப்பு வாசனையே இல்லாதவன் இருவரிடமும் இருக்கும் பொதுவான ஜெயகாந்தனின் பிம்பம் திமிர் பிடித்தவர், யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எடுத்தெரிந்து பேசிவிடக்கூடியவர் என்பதுதான். அது குறித்து அது போன்ற ஆட்களிடத்தில் மரபு சார்ந்த சமூகம் அசூயை கொள்வதே இயல்பு. ஆனால் அதற்கு நேரெதிராய் அவரது திமிர், ஆண்மையின் எழுத்து ஆளுமையின் கம்பீரமாய் பார்க்கப்பட்டது. எல்லோரும் ஆதரிக்கும் ஒரு விசயத்துக்கு ஜெயகாந்தன் எதிர் கோணம் எடுப்பார். அதை தர்க்க ரீதியாய் நிறுவவும் செய்வார். எல்லா சமயங்களிலும் அவர் சொல்வது சரியாய் இருக்காது எனினும் அதற்கு அவர் பயன் படுத்தும் உவமைகளும் உருவகக் கதைகளும் சரம்சரமாய் வந்து விழும் வார்த்தைப் பிரயோகங்களும் கருத்தை ஏற்காத எதிர் தரப்பையும் ரசிக்க வைக்கும். சுழன்று சுழன்று ஒன்றிலிருந்து ஒன்றாய் விரியும் கருத்தொட்டம் ஆஹா ஆஹாவென சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கும். அவரது கதைகளைப் போலவே அவர் உரையாடலுக்கானவர் அல்ல. பிரசங்கி. அவர் பேச நாம் கேட்க ஒத்திசைவோடு இருந்தால்தான் சபை களை கட்டும். இங்கு நான் மட்டும் பிரசங்கிப்பேன் நீ கேள் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. எழுத்தாளர்களில் எழுத்தாளர்களையும் வாசகரையும் பேசவிட்டுக் கேட்பவர்கள் அரிது. ஆனால் அதை யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஜெயகாந்தனின் இந்தப் பிரகடணம் அவரிருக்கும் இடத்தின் காற்றில்கூட எழுதப்பட்டிருக்கும். அது சரி அவர் பேசி நாம் கேட்க விருப்பமுள்ளவந்தானே அங்கே போகவும் செய்கிறான்.

வெறும் சந்தத்துக்காகவும் சத்தத்துக்காகப் பேசுவதுமே ஃபேஷனாய் இருந்த திமுக மேடைப்பேச்சுக்கு எதிர்மாறாய் தர்க்க பூர்வமாய் வீச்சரிவாள் போல் வேகத்துடன் வந்து விழுந்தது அவரது தமிழ்.

நீங்களா இந்து மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள். என்ன அபத்தம். உங்களையல்லவா இந்து மதம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.

என்று அதிகார பூர்வ இந்துத்துவர்களைப் பார்த்து பரிகசிக்க இணையமில்லா காலத்தில் எத்தனைப் பேரால் முடிந்திருக்கும்.

ஜெயகாந்தனின் கர்ஜிக்கும் எதிர்க்குரல் எப்போதும் எதிரியின் மீதான காழ்ப்பு மண்டிய குரலாய் இருந்ததில்லை என்பதும் அவரது திமிர் சிலாகிப்பாய் ரசிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம்.

உண்மையில் பார்க்கப் போனால் ‘திமிர்’ பிடித்த ஜெயகாந்தன், ஒருபோதும் உயர்ந்ததை உதாசீனப் படுத்தியவரில்லை.

டெல்லில ஃபில்ம் ஃபெஸ்டிவல். முதல் நாள்லேந்தே நம்ம படத்துக்குதான் தேசிய விருதுன்னு எல்லாரும் வாழ்த்து சொல்லிகிட்டு இருக்காங்க. நம்ம உசரம் நமக்குத் தெரியாதா. அடப் போங்கைய்யானு கியூல நிக்கிறேன். எங்க?

சாருலதாவுக்கு.

ஹாஹ்ஹாஹ்ஹா ஒய் நீர் சரியான ஆளுங்கானும். ஆமா என் படம் இன்னோரு தியேட்டர்ல ஓடிகிட்டு இருக்கு. நானோ வரிசையில் ஒரு பார்வையாளனாய் தரிசனத்துக்காக நிற்கும் பக்தனாய் பரவசத்துடன் சாருலதா பார்க்க நின்றிருந்தேன். ஸத்யஜித் ரே அவரு என்னா உயரம் சாருலதா முன்னாடி நாம எங்க. என்னா படம் எப்பேர்ப்பட்ட படம் அது.

கைகளைத் தூக்கிக் கூப்பிக் கண்மூடியிருந்த ஜெகேவுக்காகக் காத்திருந்தது கனன்றுகொண்டிருந்த கஞ்சா சிலும்பி. சபை மெளனத்தில் மூழ்கியிருந்தது.

மோகா குத்திரிக்காலக் கொண்டா

சபையின் உதவியாளராயிருக்கும் மோகன் கத்தரிக்கோலைக் கொண்டுவந்தார்.

என்ன அப்படிப் பாக்கறீங்க. கத்த்ரிக்கோலை கத்தரிக்கோல்னே எத்தனை காலத்துக்கு சொல்லிகிட்டு இருக்கறது போரடிக்காதா அதான்.

அதான் ஊத்திகிட்டு இருக்கேன்ல எல்லாருக்கும் அது என்ன உம்ம கிளாசை மட்டும் முன்னாடி நீட்டிகிட்டு. வயதான பெரியவரைக் கடிந்து கொள்கிறாரே என தோன்றுவது முதல் முறை பார்க்க நேர்கிறவருக்கு ஜீரணிக்க சற்று சிரமமாகக்கூட இருக்கும். ஏனெனில் பாலனும் ஒவ்வொரு நாளும் காலி கிளாசை முன்னால் நீட்டுவதும் அதற்கு ஜேகே ஒவ்வொரு முறையும் இதையே போரடிக்காமல் சொல்லுவதும் போகப்போகப் பழகிவிடும்.

கோபத்தில் திட்டுவதும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சுவதும் சபையின் குருவுக்கு சகஜம். இங்க நிறைய தடவை நிறைய பேருக்கு மெமோ குடுக்கப்பட்டிருக்கு. கொடுத்த மெமோ சபை முடியும்போது இங்கேயே கிழித்துப் போடப்படும். ஹாஹ்ஹஹ்ஹா. சந்தோஷத்தின் உச்சத்தில் வரங்கள்கூட கொடுக்கப்படும்.

குருவை சீடன் ஒரு டீயில புடிச்ச கதை தெரியுமா. உமக்கு சொல்லியிருக்கேனா.

இல்ல ஜேகே.

விவேகானந்தர் ஒரு நாள் ரொம்ப பிரியமாயிட்டாரு. சிக்கன் பிரியாணி சாப்ட்டுட்டு சிகரெட் பிடிப்பாரு விவேகானந்தர் தெரியுமா. அப்படி ஒரு நாள் ரொம்ப குஷியா இருந்தப்ப உனக்கு என்ன வரம் வேணும் கேள்னாரு. நம்ப மோகா போல இருந்த உதவியாளனை. அவன் என்ன கேட்டான் தெரியுமா.

ஆழ்வார்பேட்டை தெருவைப் பார்த்த கதவுக்காய் அமர்ந்திருந்த லெனின் அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்தார். நெடுநாளைய அங்கத்தினரான அவர் பலமுறை கேட்டிருப்பாராயிருக்கும் அந்தக் கதையை.

விவேகானந்தர் கேட்டார் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்.

டெய்லி நீங்க காலைல எழுந்ததும் குடிக்கிற டீ என் கையால குடுக்கறதா இருக்கனும் குருவேன்னான் சீடன்.

கெட்டியா புடிச்சிகிட்டான். தான் இருக்கும்வரை அவனைக் கூட வெச்சிகிட்டே ஆகணுமில்ல விவேகானந்தர். 

விவேகானந்தர் வேஷம் போட்டா உங்குளுக்குக் கச்சிதமா இருக்கும். இதை சொன்னது ’உம்ம’ சுந்தர ராமசாமி தெரியுமா ஓய்.

அடுத்த முறை சுந்தர ராமசாமியைப் பார்க்க நேர்ந்தபோது என்னுடைய முதல் கேள்வி வேறு என்னவாய் இருந்திருக்க முடியும். விவேகானந்தர் மாதிரி இருக்கீங்கனு ஜெயகாந்தனை சொன்னீங்களா ராமசாமி.

ம். சொல்லியிருப்பேன். ஆமா ரெண்டு பேருக்குமே சதுரமா வெட்டி வெச்சாப்புல முக அமைப்பு இல்லியோ.

அநேகமாய் ஆழ்வார்ப்பேட்டை மடத்துக்கு வந்து செல்லாத ஒரு காலகட்டத்து இலக்கியவாதிகளே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ஜேகே ஜி நாகராஜனோட… யாரோ ஒருவர் ஆரம்பித்தார் ஒரு நாள்.

நான் கடைசியா அவனைப் பார்த்தது ரயில்ல. சுத்தியும் எச்சியும் கோழையுமா கக்கூஸ்கிட்ட சுருண்டு கிடந்தான்.

சுருக்கென்றது. இவ்வளவு இன்சென்சிடிவா என்று துணுக்குற்றது மனம். ஆனால் ஜி.என்னின் கடைசி காலத்தின் உறைந்த சட்டகம் அதுதான் என்பதை எப்படி மறுப்பது.

என்னா உயரம் என்னா ஆகிருதி. என்னா படிப்பு. ஜீனியஸ். நாகராஜன் வகுப்பெடுக்கிறார்னு மதுரை சினிமா தியேட்டர்கள்ல ஸ்டில் போடுவாங்க. சராயத்தையும் கஞ்சாவையும் அடிச்சிகிட்டு நான் சொல்றேன். எழுத்தாளனுக்கு எதாவது ஒரு போதை வேணும். ஆனா போதை அவனுக்கு அடிமையா இருக்கணும் எப்போ அவன் அதுக்கு அடிமை ஆகறானோ அதோட அவன் ஆட்டம் காலி. அதுக்கு சரியான வாழ்ந்து சீரழிஞ்சி செத்த உதாரணம் நாகராஜன்.

ஆனா அவர் எழுத்து ரத்தமும் சதையுமாய் ஆனதுதில்லையா ஜேகே.

எழுத்து ரத்தமும் சதையும்தான் ஆனா அவர் வாழ்க்கை சொறியும் சிரங்குமா ஆயிடுச்சே.

அவ்வளவுதான். அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள்தான் எதிர் தரப்பின் சதிராட்டம் என்று அமைதியடைய வேண்டியதுதான் என்று தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டேன். என் மெளனத்தைப் படித்தவராய் ஜெயகாந்தன் தொடர்ந்தார்.

எழுத்தாளன், நிஜமாவே எழுதாளனா இருக்கிறவன் சின்ன வயசுலையே செத்துறணும். இல்லாட்டி சீரழிஞ்சி போயிருவான். நல்ல காலம் பாரதி சின்ன வயசுலையே செத்துப் போனான். இல்லாட்டி கோடம்பாக்கத்துல சினிமாவுக்குப் பாட்டெழுத சான்ஸ் கேட்டு சின்னாபின்னமாயிருப்பான்.

ஆல மரம் ஆல மரம் 
  பாலூத்தும் ஆல மரம்
காலத்தின் கோல மெல்லாம் 
  கண்டுணர்ந்து நின்ற மரம்.Friday, April 24, 2015

Wednesday, April 15, 2015

ராகுகாலம் பார்த்த வீரமணிக்கு ஏழரை ஆரம்பம்

வீரமணியின் வாக்குமூலம்
//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி
http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/66060-2013-08-22-10-03-03.html 

Sunday, March 1, 2015

நான் ஏன்?

நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன் https://drive.google.com/open?id=0B2RNbdLo8seoUWdJUmtIQnROQTQ 

ஆளுமை

பொதிகை சேனலுக்காக காந்தி சீரியல் எடுத்தால், அதில் கதாநாயகப் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு என்பது போன்ற தோற்றத்தில் ஜெயா டிவியில் ஒருவர் நடந்தது என்ன என்கிற நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தார். பரிச்சயப்பட்ட குரலாய் இருந்தது.

Saturday, February 28, 2015

பாரதி மணியும் பரமார்த்த எலிகளும்

பாரதி மணியிடம் நலம் விசாரித்து இன்று நிறைய அழைப்புகளாம். வழக்கமான எள்ளலுடன் அதைப் பதிவாகப் போட்டிருக்கிறார் https://www.facebook.com/bharati.mani/posts/10203742830880401 அதற்கு 120 லைக்குகள், வாழ்த்தும் நையாண்டியுமாய் 55 கமெண்டுகள். அவற்றுள் படு நக்கலாய் ஐந்தாறு கமெண்ட்டுகளுக்கு உபயதாரர் பாரதி மணியே. 

Wednesday, February 4, 2015

நரையும் திரையும்

பெயர் குறிப்பிடமுடியாத தெருவொன்றில், நெரிசலுக்கிடையில் வேகமாய் போகையில், எதிரில் வந்தவர் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு வந்த பெரிய பையில் மோதி, பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். தடுப்பான் உருளை முதலில் தரையில் மோத வலது கால் முட்டி அடுத்து மோதிற்று. அணிச்சையாய் இருகைகளும் தரையில் வேகமாய் ஊன்றியதால் அடிபட்டாலும் முட்டி தப்பியது. பின்னால் வந்து முன்னால் போன பெருசு ஸ்கூட்டரை நிறுத்தித் திட்டத் தொடங்கிற்று. அவர் பெண்டாட்டியோ ஸ்கூட்டரைவிட்டு இறங்கி தெருவில் நின்று கழுவி ஊற்றவே தொடங்கிவிட்டது. 

Monday, February 2, 2015

வக்கீல் கிரிமினல்கள்

எக்மூர் கோர்ட்டுக்கான பார் கவுன்சில் தேர்தல் கொண்டாட்டத்தில் வன்முறை. வக்கீல் கொலை. பெண் வழக்குரைஞரும் ரெளடியும் கைது

Thursday, January 29, 2015

ஈகோ சார் வெத்து ஈகோ

லக்ஷ்மியின் அருள் பெற்று இயற்றப்பட்ட புனித நூலான மாதொருபாகனுக்காக சரஸ்வதி கடாக்ஷம் பெற்ற பெருமாள்முருகனை நியாயப்படுத்த, பாவம் இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுக்கள் மெத்தப் படித்த மேதாவிலாசிகளால் காட்டப்படுமோ தெரியவில்லை. 

Wednesday, January 28, 2015

சாரும் ரைட்டரா

ஏகப்பட்ட ஜூனியர்கள் புடைசூழ பெருமாள்முருகனுக்கான சீனியர் கவுன்சிலாய் இணையத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த நல்கை கவுன்சிலிங் அறிஞர் ராஜன் குறை கிருஷ்ணன் தமது கட்சிக்காரர் போலவே தாமும் எழுதியதையெல்லாம் வாபஸ் வாங்கிக்கொண்டு ஃபேஸ்புக் அக்கவுண்டையே மூடிவிட்டாராம் அதி தீவிர நக்ஸலைட்டு ஏழரையாய். 

இதை எழுதி முடிக்கும் கணத்திலிருந்து நான் எதையுமே எழுதாமல்கூட உடனடியாகவோ அல்லது பல காலம் இருந்தோ இறந்துவிடக்கூடும். ஆனால், இலக்கியவாதிகள் பலராலும் எரிச்சலுடன் பார்க்கப்படும் என் பிளாகில் இருக்கும் 'குப்பைகள்' அனைத்தும் இன்னும் பிறக்கக்கூட இல்லாத, முகமறியா பலரும் படிக்க வசதியாய், இருந்துகொண்டு இருக்கவேண்டும் என்கிற ஆசையில் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதற்கான நிதியை என் சொந்தப் பணத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டே இந்த உலகைவிட்டுச் செல்வேன்.

எழுதும் என்றால், அது எழுதியது அச்சாகிப் புத்தக வடிவமும் பெறும் என்றால் சவத்தைக்கூட எழுத்தாளன் என்றுதான் குறிப்பிடும் உலகம். 

என்ன மயிர்ப்பிடுங்கி இலக்கியம் எழுதியிருந்தாலும் எழுதும் முன் யோசிக்காமல், எதிர்ப்பு வந்தால் ஊர் வாய்க்கு பயந்து, எழுதியதையெல்லாம் ஊத்தி மூடிவிட்டு ஓடிப்போகும் எவனையும் எழுத்தாளன் என்று நான் என்றும் மதிக்கமாட்டேன். 

புகழை மட்டுமன்று அவமானங்களையும் கடந்தவனே, எழுத்தாளன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்ளும் தகுதியை உடையவன். மற்றபடி, இணையத்தில் எல்லாப் பயலும்தான் போட்டுக் கொள்கிறான் ஃபேஷனாய் பேருக்கு முன்னால் ரைட்டர் என்று.

Monday, January 26, 2015

அறச்சிக்கலும் அரைச்சிக்கலும்

ஒல்லியாய் பாவமாய் தோற்றமளித்த பையன் சிறுகதை அருமை எழுத்தாளர் என்று கோர்வையில்லாமல் தள்ளாடிப் பேசிக்கொண்டிருந்தான் கால சுப்ரம்ண்யத்திடம். பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த என் பைக்கின்மேல் ஐபோனை நோண்டியபடி உட்கார்ந்திருந்தேன்.  கால சுப்ரமண்யம் சொன்னார் இவர்தான் துறையூர் சரவணன் என்று. எதிரிலிருந்த சந்திரா தங்கராஜ் எதையோ சொல்ல என்னருகில் வரப்பார்த்தார். இடையில் இந்த இலக்கியத் தள்ளாட்டம். அவர் நகருங்க என்றார். வாழும் இலக்கியம் வழிவிட மறுத்தது. யாரோ ஒருவர் இலக்கியத்தைக் கைபிடித்து இழுத்ததில் இலக்கியம் பெயர்ந்து வெற்றிடமானதும் சந்திரா வந்து எஸ்.ரா டார்ச்சர் மெசேஜ் வந்துடுச்சி என்று அப்போது நான் போட்டிருந்த ட்விட் பற்றிக் குறிப்பிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார். அவர் போனதும் பாசிபோல் திரும்பப் படர்ந்தது இலக்கியம். சிறுகதை அருமை எழுத்தாளர் எனத் தொடங்கிற்று என்னிடம்.

Tuesday, January 20, 2015

சரியும் தப்பும் சரியா தப்பா

சாரு நிவேதிதா என்பவர், சாரு என்று குறிப்பிட்டுப் பேசக்கூட அருகதையில்லாத ஆள்தான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இவ்வளவு கலாட்டாவுக்கும் இடையில், இருந்த இடத்திலேயே இருக்கிறாரேயன்றி நகரக்கூட இல்லை என்பது அப்பட்டமாய் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. http://youtu.be/aG0pKCha9NE 

Saturday, January 17, 2015

எடுக்கவா கோர்க்கவா

யாழ் நூலகத்துக்கு அருகில் கைகளைக் கட்டிக்கொண்டு மாதொருபாகனை எரித்ததற்கு கண்டணம் தெரிவித்துப் போராட்டம் நடத்தி Facebookகில் போட்டோ போட்டுக்கொண்டுள்ளனர். எண்ணி ஏழே பேர். குறைந்தபட்சம் போட்டோவாவது போடாது இருந்திருக்கலாம். நிபந்தனையில்லா மன்னிப்பைக் கேட்டு எழுதிப்பெற்ற எதிர் அணி இணையத்திலேயே இருந்து இவையனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் இருத்த வேண்டும். எதையாவது செய்யவேண்டும் என்கிற உணர்ச்சிவேகம் மட்டுமே ஒன்றுக்கும் உதவாது. புத்தகத்தை எரித்ததையெல்லாம் கடந்து விஷயம் எங்கோ போய்விட்டது. உண்மையிலேயே பெருமாள் முருகனுக்கு எதாவது செய்ய நினைப்பவர்கள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது ஒன்றும், கலங்கிப் போகுமளவுக்கு, பெரிய களங்கமில்லை, உலகம் நிலையாக நிற்காது சூரியனைச் சுற்றி வருகிறது என்று, பைபிளில் இருப்பதற்கு எதிராய் kஊறியதற்காக, கலீலியொ கலீலியே சர்ச்சிடமும் பொபாண்டவரிடமும் மண்டியிட்டு செய்ததுதானே, நீங்கள் மேசையில் அமர்ந்துதானே எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறலாம்.

Friday, January 16, 2015

காவியமா இல்லை ஓவியமா

பெருமாள் முருகனின் கருத்துச் சுதந்திரத்துக்குக் காத்திரமாய் கூவும் இஸ்லாமியர்களில் எத்தனைபேர் தஸ்லீமாவுக்காக மியாவ் என்றாவது குரல் கொடுத்திருப்பார்கள்?

Thursday, January 15, 2015

எலிகளும் எழுத்தாளரும்

இணையத்தில் நாங்களெல்லாம் வீராவேசம் காட்டுவதுபோலதானே அய்யா எங்கள் எழுத்தாளரும் எழுத்தில் காட்டினார். 

Wednesday, January 14, 2015

கொலையும் தற்கொலையும்

திருச்செங்கோடு விவகாரத்தில் பெருமாள்முருகனை திராவிடக் கட்சிகள் ஆதரிக்கவில்லை என்பது பெரிய புகாராய் முன்வைக்கப்படுகிறது. முதலில் தன்னை அவர் ஆதரித்தாரா என்பதை எவரும் கேட்டுக்கொள்ளத் தயாராயில்லை.

Saturday, January 3, 2015

தூக்கமும் துக்கமும்

கீழ்க்காணும் FB பதிவில், ஆர்வக்கோளாரில் நிகழ்ந்திருந்த காமெடியை நேற்று பகிர்ந்திருந்தேன். ஆனால் இதை எழுதியுள்ள மனிதர் தெளிவானவர்தான். தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் மட்டுமல்லாது எதையெதையெல்லாம் எதிர்க்கிறோம் என்பதைத் தனித்தனியே சொல்லுகிற அளவுக்குத் தெளிவானவர்தான். இந்தப் பதிவின் மூலமாக, அந்த ஓரிடம் தவிர்த்து, இந்த மனிதர் எவ்வளவு விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார். இவை குறித்து யாரேனும் ஏதேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே காத்திருந்தேன். எதிர்வினைகள் ஏதுமற்ற காரணத்தால் இதை எழுதவேண்டிதாயிற்று.

Monday, December 29, 2014

வெற்றிகரம்

மாதொருபாகன் புத்தகத்தை கிழிப்பது உதைப்பது எரிப்பது போன்ற புறச் சேவைகள் ஒருபுறம் நடக்கட்டும் இந்துத்துவ சிங்கமே, கூடவே 1992ல் வெளியான Immaculate Conception என்கிற பாக்கிஸ்தானில் நடப்பதாக எடுக்கப்பட்ட படத்தை முதலில் பார்த்து விடு. 

Saturday, December 27, 2014

சாதனை

@writerpara: @maamallan /துண்ட கட்டிக்கிட்டு குளிக்கப் போறமாதிரி / சாகும்வரை மறக்கமாட்டேன். குட்நைட்.

Thursday, December 25, 2014

மறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை

அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்ய புத்திரனுக்கு ஜெயமோகனின் இணைய வாழ்த்துரை 
<மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி.> 
இப்படி பல்க்கா கவிதை புக்கு போடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. (என் பரிந்துரையின் பேரில்) ஏற்கெனவே தேவதேவனுக்கு தமிழினி செய்ததுதான்.

Sunday, November 30, 2014

ருத்ரைய்யா மறைவின் வெளிச்சமும் எழுத்தாளர் இறப்பின் இருட்டடிப்பும்

புக்ஃபேர் புற்றீசல் 'இலக்கிய'த்துடன் ஒப்பிடவே முடியாத உயரத்தில் இருப்பவை அவள் அப்படித்தானும் உதிரிப்பூக்களும் பருத்திவீரனும் ஆடுகளமும். 

Tuesday, November 25, 2014

அற்பர் சூழ் உலகு

நீதி கேட்டு நெடும்பயணம் சென்ற கலைஞரிடம் 'நீதி கேட்க' அறிவாலயம்வரை நான் சென்றது தனியாக. அவரை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும் என்கிற தகவலை அறிவாலய வளாகத்தில் இருந்தபடி 'நண்பனிடம்' கைபேசியில் கேட்டது எப்படிக் கெஞ்சியதாக ஆகும்?

Wednesday, July 30, 2014

யாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது

சிலநாள் முன் X நிறுவனத்திலிருந்து அலுவல் நிமித்தமாய் Outlook ஃபைலான .pstயை எடுத்து வந்தேன். அவற்றில் ஒன்று திறந்தது ஒன்று மறுத்தது. திறக்க மறுத்த பைலுக்கு உதவி கேட்டேன் சிலர் சுட்டி கொடுத்தனர் மேலோட்டமாய் முயன்று விட்டுவிட்டேன்.

Wednesday, April 2, 2014

இணைய இலக்கிய வாசிப்பு


பெருமாள் முருகன் காண்டாமணி என்று தவறாகச் சொன்னாரா, இல்லை இவர் அதை எழுத்துப் பிழையோடு மனதில் வாங்கிக்கொண்டாரா என்று தெரியலை. ஆனால் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை காண்டாமணி இல்லை கண்டாமணி 1966ல் கல்கி தீபாவளி மலரில் வெளியானது.

Sunday, March 23, 2014

ஐராவதம் - இறப்பும் துறப்பும்

ஐராவதம் என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.