Monday, August 30, 2010

பிழையின்றி பிழைப்பது எப்படி?

தமிழ்ப்பறவை said...

மவுனமாக நகர்ந்து விடுகிறேன் இப்போது...

August 29, 2010 11:53 PM


இதற்குப் பொருள், முழுக்க தவறில்லை என்றில்லை. பரவாயில்லை பாசாகிவிட்டேன் என அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். கற்களுக்கிடையில் பல் என்பதற்கு பதிலாக பற்களுக்கிடையில் கல் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தானே.

"க. நா. சுவுக்கு ப்ருஃப் பார்க்கவே தெரியாது. ப்ருஃப் பார்த்தால் ஒரிஜினலில் இருப்பதை விட பிழைகள் கூடுதலாகிவிடும். அவரால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆனால் செல்லப்பா அழகாகப் பிழை திருத்துவார். எழுத்து நடத்தியபின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு விஷயங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தார்."

http://sundararamaswamy.com/Ninaivodai_Chellappa1.htm (நன்றி)திரும்ப எழுதுவது என முடிவெடுத்ததும், முதலில் செய்தது என் குண்டு கருப்புப் பேனாவைத் தேடியதுதான். பல காலங்கள் அது என்னோடே இருந்தது. அலுவலகம்  விசித்திரப்  பிராணியாக  என்னைப்  பார்த்தது. பார்க்கவேண்டும் என்பதற்காகவே வைத்துக் கொண்டிருந்தாகக் கூட இருந்திருக்கலாம். இல்லை. கிடைக்க வழியில்லை என திடப்பட்டதும், புதிதாக ஒன்றை வாங்கிவிடலாம் என்று, வண்டியை எடுத்துக் கொண்டு, தாஜ் பென் செண்டர், மைலாப்பூர் நோக்கிப் போனேன்.

போன  நேரம்  பார்த்து  அபசகுனமாக  ஷட்டர் இழுக்கப்பட்டு, கடை மூடியிருந்தது. முன்னால்  பழக்கடைக்காரன்  விச்ராந்தியாய் விற்றுக்கொண்டு  இருந்தான். பெரிய  வியாபாரமில்லை. மதிய  நேரம். பக்கத்தில்  நோஞ்சான்  நாய்,  நான்  வந்த  காரணத்தை  உள்ளுணர்வில் உணர்ந்து கொண்ட சக எழுத்தாளன் போல் அசிரத்தையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு  தலை  தொங்க  கண்மூடிக்கொண்டது.  இருக்கறவனுக்கே கெதியில்ல, இதுல  இவன்  வேற.  எல்லாரும்  எளுத  வந்திட்டா எவன் புக்கை எவன் வாங்கறது,  எவண்டா படிக்கிறது.

அதைக் கலவரப்படுத்த வரவில்லை என்கிற ஜாக்கிரதை உணர்வோடு, தாழ்ந்த குரலில்,

கடெ இன்னிக்கி லீவா?

இல்ல தொளுகைக்குப் போயிருக்காரு

எப்ப வருவாரு

முடிஞ்சதும்

இப்ப  வேண்டும்  என்றால்  இப்போதே  வேண்டும். கச்சேரி  ரோடெல்லாம் குறுக்கும்  நெடுக்குமாக  பைக்கில்  அலைந்தேன். போலீஸ்  ஸ்டேஷன் எதிரில் ஒரு காலத்தில் மோகன் பிரஸ் இருந்த சந்தை ஒட்டி ஒரு ஸ்டேஷணரி வந்திருந்தது. நல்ல  அம்சம்தான். இலக்கியம் தழைத்தது பிரஸ் படுத்தது. சிலருக்குதான் வியாபாரம் வருகிறது. வேறு சிலருக்குதான் இலக்கியம்  வருகிறது. இரண்டும்  சேர்ந்து  வரப்பெற்றோர்  மிகச்சிலரே. இரண்டையும் தலைமாற்றி செய்கின்ற வித்தை எல்லோருக்கும் சித்தித்து விடுவதில்லை. இலக்கிய ரீ எண்ட்ரிக்கு பேனா வாங்க இதைவிட பூர்ண கும்ப  வரவேற்பு  ஏது? ஆனால் நிச்சயமாக எனக்குத் தெரியும் நான் கேட்கிற பேனா இங்கே கிடைக்காது.

கருப்பு குண்டு ஃபெளண்டன் பேனா....

கேமலின் கொடுத்தான்

இல்ல இதவிட குண்டா...

என்னை  ஒருமுறை  பார்த்தான். நல்ல  வேளையாக  பெரும்பாலான கடைகளில் கண்ணாடியிட்ட காட்சிப்பொருள் பெட்டிகள் இடுப்புயரம் வரும் விதமாகவே   இருக்கின்றன. அல்லது  சராசரி  இந்தியனுக்கு  இதுவே எதேஷ்ட்டம் என்கிற கச்சிதமான உயரத்தில் ஆசாரிகள் வடிவமைக் கின்றனர். கடைக்காரன்  கண்  வைக்காத வண்ணம்  உபரி  உறுப்பைக் காப்பாற்றிக் கொண்டு சடக்கெனத் திரும்பி படியிறங்கினேன்.

துல்லியமாக தெரியும் நான் தேடும் பேனா இங்கே இருக்கவே இருக்காதென்று. ஆனாலும்  ஏன்  போனேன். முஸல்மான்  மதியத் தொழுகையை  முடிக்க  வேண்டாமா. (மர்ம  வீரன்  வந்துவிடுவாரே பின்னூட்டம்  போட, இதையே  தாஸ்  என்று  ஏன்  வைக்கக்கூடாது   என்று. எங்கெல்லாம் ஊடுருவல்) பொழுதோட்ட வியாபாரம். இதுதான் இந்தக்கால அம்மிணிகளின் (விண்டோ ஷாப்பிங்க்) ஜன்னல் கடைநடப்பு.

என்  காசு  என்  கையில், உன்  தோசை  உன்  கையில், சாவகாச  இலவச சப்புக்கொட்டல்.

பேனா  புதிதாக  வாங்கினால்  அதை  பழசாக்க  வேண்டும். இல்லை யென்றால்  பட்டையடிக்காது. மெல்லியதாக  எழுதுகிற  பேனாக்கள், மேன்மக்கள்  கையெழுத்திற்குதான்  லாயக்கு. பட்டையடித்தால்தான் பத்திரிகையாசிரியர் பண்பட்ட  எழுத்தாக  நினைக்க  ஏதுவாயிருக்கும். இல்லாத  பொருள்கூட மேலெழுந்து  தெரியும். எல்லாவாற்றிலும்  அலங்கரிப்பு  அவசியம். இலக்கியப் பத்திரிகைகளில் பெரும்பாலான சமயம் அவரேகூட அடித்திருக்கவும் வாய்ப்புண்டு.  கருத்தைக்  கவரும்  முன்னால்  கண்ணைக்  கவர்ந்தாக வேண்டும். பள்ளியிலேயே பயிற்றுவிக்கப்படும் பாடம். பாதி நேரம் மகர்க்கு தந்தைதாய் ஆற்றும் உதவி.

உடனடி  பட்டைக்கு,  தரையில் சிமெண்ட்டுப்பால் உறைந்து  குழைந்த மொழுக்கில், மொசைக் தரையில் இருக்கும், துண்டு துண்டாய் மினுங்கும் துளியூண்டு சில்லுகளில், மேலும் சுவரில் (இதன் வேர்ச்சொல் சுவர் அது சுவரில் ஆகுமே தவிர சுவற்றில் ஒருநாளும் ஆகாது. இப்போல்லாம் எவன் இலக்கனத்தைப் பத்தி கவலைப்படரான் சுப்பிரமணியன் என்கிற இரா.திருமுருகன் மாதாக்கோயில் தெருவிலிருக்கும் வ.உ.சி உயர்நிலைப் பள்ளியில் எனது பத்து பதினொன்றாம் வகுப்பு எடுத்த தமிழாசிரியர். இவர் பற்றி தனியாக)

சுவற்றில் என்று எழுதுபவர்கள் இலக்கணத்தை மீறவில்லை. புதிதாய் உருவாக்கி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பேனா பட்டையடித்து கனமான இலக்கியமாவது போல வல்லினம் சேர்த்து ஒரு எச்சரிக்கை. சுவற்றில் நோட்டீஸ் ஒட்டாதே, சிறுநீர் கழிக்காதே, மக்களின் கீழ்படிதலில் அவநம்பிக்கை  கொண்டோர்  மூத்திரம்  அடிக்காதே. இதை  அழுத்திச் சொல்லவே சுற்றில்.

ஆக சுவரில் தொங்ககும் முகம் பார்க்கும் கண்ணாடியில் என்று தரையில் குனிந்து உட்கார்ந்து புது பேனாவைத் தேய்த்துதேய்த்து பொற்கொல்லன் கெட்டான். அன்றைக்கே  அது  ஐந்து  வருடம்  பழகிய  பேனா  போல் பட்டையடித்தால்தான் ஆச்சு.

15 வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள். ஏகப்பட்ட விஷயங்கள் இல்லாமலே போய்விட்டன. சிமெண்ட் தரைபோய், மொசைக் தரைபோய் டைல்ஸ்  வந்தாயிற்று. நான்  மேட்டுக்குடி  மில்லினர்  ஆகிவிட்டேனா, இல்லை  மத்திய  அரசுக்  குடியிருப்புதான். ஆனால்  எடுத்து  இடித்து பூசி நட்டு அறுத்து என்று எப்போது பார்த்தாலும் ஜரூராய் வேலை நடந்து கொண்டே இருக்கிறது. வசிப்பவன்  குவார்டர்சில்  இருக்கும்  நேரத்தைவிட கான்ராக்டர்கள் இருக்கிற நேரம் தான் ஜாஸ்தியாக இருக்கிறது.

காலையில் எழுந்து நம்மைப் புதுப்பிக்க அரிதாரம் பூசிக்கொள்வது இல்லையா, அது போல வீட்டிற்கும் பூசப்பட்டுப் புதுப்பிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. எல்லோரும் க்ஷேமமாய் இருக்கிறார்கள். ஒன்றிரண்டுமுறை திருட்டு போயிருக்கிறது. ஒரு முறை போலீஸ் ஆபீஸில் வேலைபார்க்கும் பெண்மணி வீட்டிலேயே. ஏதோ ஒரு டிவியில் ஜாக்பாட் அடித்ததாம். பத்திரிகையாளர்திட்ட கத்துக்குட்டி நிருபர் போலும் ஆர்வக்கோளாரில் அட்ரஸ்ஸைப் போட்டுவிட்டான். மெட்ராசில்  இரண்டு வருஷம் இருந்துவிட்டவனுக்கு அட்ரஸ் கிடைத்துவிட்டால், கதவிலிருக்கும் பேட்லாக்கையேக் கழட்டிவிட முடிகிறது. பொல்லாப்பு மெட்ராஸ்காரன்  மேல். இதில்  விஷயம்   என்னவென்றால்  இழந்தவரும் வந்தேறி எடுத்தவனும் வந்தேறி. ஆனால்  பழி  மெட்ராஸ்  தலையில். எல்லோருமே ஏதேதோ ஊரிலிருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

என்னைக்கூட ஆராய்ச்சிக்கூடத்தில் போட்டு வதக்கினால் வந்தேறியாகவே முடியும். சோதனை முடிவுகள் விபரீதமாகக் கூட போகலாம். தந்தை வழியில் பால் தாக்ரேவிடமும் தாய் வழியில் வாட்டாள் நாகராஜிடமும் கொண்டு சேர்த்தாலும் வியப்பில்லை. ஒட்டுச்செடிதான் ஒசத்தி என்று பாடத்தில் படித்தது. மராட்டிய - கன்னட தம்பதிகளுக்குப் பிறந்தவன் என்று ஓட்டிப்பார்த்தேன் கொஞ்சம் எடுபட்டாற் போலத்தெரிந்தது. கண்ணெதிரில் கன்னட மராட்டிய மேப்பெல்லாம் விரிந்தன.

தீய்வதற்கு முன் எடுத்துவிட்டால் தேவலாம். ஏனெனில் தில்லக்கேணியில் இது  எதுவும்  செல்லாது. நெற்றிப்  பொட்டில்  சந்தனம்  குத்தியவர்க ளெல்லாம்  கன்னட-கன்னட  மராட்டி-மராட்டி. ஒட்டுச்செடி  கொஞ்சம் கம்மிதான். நான் கன்னடத்தில் பேசப்போனால் கர்நாடகத்திலிருந்து வந்து அட்டித்துவிட்டுப்  போவார்கள். மகாராஷ்ட்டிரத்தைப்  பற்றி  கேட்கவே வேண்டாம்  வந்து  அடித்துவிட்டு, போக  விமான  செலவை  வேறு  நானே ஏற்க வேண்டிவரும்.

தமிழ் எழுத்தாளர்களில் பலர் தமிழர்களே இல்லை. சுந்தர ராமசாமி ஒரு முறை தமிழராய் பிறந்த, தமிழை வீட்டில் பேசிகிற அல்லது வேறு மொழி பேசுகிற தமிழ் எழுத்தாளர்களை கணக்கெடுத்து பட்டியல் போட்டார். பட்டியலுக்காக வேண்டி அகிலன் சாண்டில்யனிலிருந்து கருணாநிதி உட்பட அத்தனை பேரையும்  கணக்கிலெடுத்தார். என்ன  இருந்தாலும்  அவர்  ஒரு  சிறந்த  ஜனநாயகவாதி. யாரையும்  விட்டுவிட்டார்  என்கிற  அவப்பெயருக்கு ஆளாகாத  வண்ணம்  பட்டியலிட்டார். பட்டிமன்றத்தில்  விஞ்சி  நின்றது  வேற்று மொழியாரின் கொடியே. அந்தப்   பட்டியலை (கலவரம் வந்துவிடும்பட்சத்தில் என்கிற முன்னெச்சரிக்கையோடு) எழுத்தாளர் நலன் கருதி அவர் வெளியிடவில்லை. கண்ணனும் அதையே கடைபிடித்து புத்தகமாய் வெளியிட்டுவிடக் கூடாதென வேண்டிக் கொள்கிறேன். அட்ரஸ்  கிடைத்தால்  பேட்ல்லாக்  உடைப்பவர்கள் மெட்ராசுக்கு  வெளியிலும்  பரவ  ஆரம்பித்து  விட்டர்கள். எல்லா  ஊர் கதவுகளிலும் பேட்லாக்குகள் இருக்கின்றன.

எனக்கென்னவோ இப்படித்தரம் பிரித்து கூறு கட்டினாலும் கரப்பை போல நான் மட்டும் தப்பித்துவிடுவேன் என்றே படுகிறது. எனக்குத் தெரிந்து நான் ஒருவன்தான்  மெட்ராஸ்காரன். தில்லக்கேணி  கோஷாஸ்பித்திரியில் பிறந்தவன். ஆதாரம் கேட்டால் நிரூபிப்பது கஷ்ட்டம். நான் பிறந்ததை நான் கண்ணால் பார்க்கவில்லை.

எல்லாவற்றையுமே நிரூபித்தால்தான் ஆயிற்று என்றால் எதையுமே யாராலுமே நிரூபிக்க முடியாமல் போகக்கூடும். முன்பெல்லாம் கடவுள் இருக்கிறாரா என்பதை மட்டுமே நிரூபிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அநேகமாக  அவர்  கண்டுபிடிக்கப்  பட்டுவிட்டார் போலும்.

இப்போதெல்லாம்,  நீ   பிராமணன்   இல்லை   என்று   நிரூபி  என்று  ஒரு கோஷ்ட்டியும்,  இல்லை  நீ  பிராமணன்தான்   என்று   நிரூபித்து அடயாளப்படுத்திக்கொள்  நாம்  அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்  என்று   இன்னொரு  கோஷ்ட்டியும்  பயமுறுத்த  ஆரம்பித்து  விட்டார்கள். 

பெஸண்ட்நகர்  பிள்ளையார்  கூட  உனக்கு பக்தி இருக்கிறதா என்று கேட்டு விடுவாரோ என்று பயந்துதான் வீட்டிலிருந்து கிளம்பும் போது நேர் எதிர்புறம் போகவேண்டி இருந்தால்கூட அவரைப் பார்த்துவிட்டுதான் போகிறன். ஆனால்  கோவில்  உள்ளே  போவதே  இல்லை. மாத்வனாகப் பிறந்துவிட்டு  என்  பேரையும்வேறு  வைத்துக்கொண்டு  அவனையா கும்பிட்டுக்கொண்டு இருக்கிறாய் என்று நரசிம்மர் வேறு கோபித்துக்கொள்வாரோ என்கிற பயம்தான் காரணம்.

கடவுளிடம் பக்தி போய்விட்டது பயம்தான் எஞ்சி நிற்கிறது. எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்து விட்டது அவர் இல்லை என்று. வெட்டவெளிச்சமாகி  விட்டது.  அவரிடம்  இருப்பதுகூட  ஒருவேளை அவர் இருந்துவிட்டால் என்கிற பயம்தான் போலும்.

கோவிலுக்கு உள்ளேயே வராமல் ஒரு கும்பல் இருக்கிறதே அதனிடம் இருக்கிற   பயம்தான் இன்னும்  அதிகம்.  இன்னின்னதை  செய்யலாம் இன்னின்னதை செய்யக்கூடாது என்பதை எல்லோருக்கும் பொதுவாக வைப்பதற்காகவே ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன. இதை யாரேனும் மீறினால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் அதற்கு உட்பட்டு, அதையும் அதுவே சொல்கிறது. கும்பல்  கும்பலாக  வருகிறார்கள்.  அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானதா இல்லை அவனவனுக்கானதா என்பதில் மூளையேக் குழம்பிவிடும்போல் இருக்கிறது. எதைத் தொட்டாலும் எதைப்பேசினாலும் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து பயந்தே பேசவும் எழுதவும் வேண்டும் என்று ஆகிவிட்டது.
நாங்கள்  யார்  என்பதை  தெளிவாக  சொல்கிறோம். நிலைப்பாட்டை  தெரிவு செய் என முகத்தருகில எச்சில் தெறிப்பு.

நீ என்ன சொன்னாலும் கடைசீல யார்னு புத்தியக் காட்டிட்டியே என்று அடி.

இந்தாத்துலப் பொறந்துட்டு அவாளோட என்ன ஈஷிண்டாறது சண்டாளா என்று தாடையில் ஒரு இடி.

(பாட்டு நன்றாக இருக்கிறதே என்றால்கூட) உனக்கு தேசாபிமானமே இல்லையா நீயெல்லாம் தூ எனக் காறித்துப்பல்.

இன்னாதான் சொன்னாலும் வேலைக்காவாது நீங்க்கோ அவுங்களதான் ஸப்போர்ட் பண்வீங்கொ.

பேனா நிப்பை வழிக்குக் கொண்டுவருவதற்குள் மைக்கூடு கவிழ்ந்து நாமே வழுக்கி விழ வேண்டியதுதான். 

முன்னேறிக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டு நிற்கிற இடத்திற்கே பிடிப்பின்றி நிர்கதியாகிவிட்டதே. இது எப்போது நடந்தது. தொடர்ந்து ஏதாவது செப்பனிட்டுக்கொண்டுதானே இருந்தார்கள். தொடர்ந்து செப்பனிட்டதாலேயே இப்படி ஆகி விட்டதோ.


பேனா கிடைக்கவேயில்லை. தாஜ் பென் செண்டர் திறக்கவே இல்லை. வாழைப்பழ கடைகூட காணவில்லை. போலீஸ்காரன் துரத்தியிருக்கலாம். வியாபாரம் சுகமில்லை என வேறு நல்ல இடம் தேடி அவனாகவேக் கூட போயிருக்கலாம். சுவாரசியமே இல்லாத அந்த நாய்கூட நகர்ந்து விட்டிருந்தது.

இருட்டி விளக்கெல்லாம் போட்டு சாயங்கால பரபரப்பிற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டதில் அந்த இடம் மதியம் விட்டுச்சென்ற இடமாகவே தெரியவில்லை.

நாளைக்கு வந்தால் கடை திறந்திருக்கலாம். இன்று சுயமாக கற்கப் பார்த்து கணினியிலேயே தட்டச்சக்கூட முயற்சிக்கலாம். வண்டியைத் திருப்பி ஜனப்பிரவாகத்தில் நீந்தத் தொடங்கினேன். பிரவாகம் என்னை வழிநடத்தத் தொடங்கியது.