Sunday, September 5, 2010

வலி - வெளிவந்த கதை

வலி என்கிற இந்தக்கதை பிரசுரத்திற்குக்கூட லாயக்கில்லை என கல்கியில் நிர்தாட்சண்யமாக மெஜாரிட்டி நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. அதிலொருவர் சிவசங்கரி, பின் ஒரே ஒருவரின் தீர்க்கமான வேண்டுகோளால் போனால் போகிறதென்று மூன்றாவது பரிசாக (மூன்றாவதும் தேர்ந்தெடுத்தாயிற்று அவரின் தலையீட்டினால் அதையே இரண்டாக்கி இரண்டாவது கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தக் கதை) அந்தக் கதை.....

கல்லூரியின் ஆரம்ப நாட்களில், கவிதைப் போட்டிகளில், நீங்கள் நாங்கள் எரிப்போம் கொளுத்துவோம் என்று லெளட்ஸ்பீக்கர் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில், என்  குட்டிபல்லி  போன்ற  ஒல்லி உருவத்தோடு, இந்த ‘வெயிட்டான’ கவிதைகள், யாரோ எழுதிக்கொடுத்துதான் இந்த சிறுவன் படிக்கிறான் என்ற சம்சயத்தை நடுவர்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தமையால்தான், பாராட்டுகள் குவிந்தும் பரிசு கிடைக்காமல் தட்டிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிற சூக்ஷமத்தைக் கண்டுபிடித்ததும், செய்த தந்திரோபாயம், காதி வஸ்திராலயம் போய் ஒரு குடும்ப சீருடைக்குத் தேவையான எருமைத்தோலை வாங்கி, அணிந்துகொண்டால் எருமைக்கும் காற்றோட்டமாக இருக்கும்படியான அளவில் தைத்துக் கொண்டதும், ஜாதகக் கட்டங்களில் கிரகங்களுக் கெல்லாம் கிறுக்குப் பிடித்து விட்டது போல பரிசுமழை கொட்டத்துவங்கிய தருணத்தில், கலையிலக்கிய  டிராகுலா  என்  கழுத்தைக் குறிபார்ப்பது அறியாமல், மத்திய நூலகக் கட்டிடத்தில் ஒரு கவிதைப் போட்டி நடந்து முடிய, தாடி பீடி அற்ற ஒருவர், இவ்வளவு சமூக அக்கறை உள்ள நீங்கள் எங்கள் சந்திப்பிற்கு வரலாமே என அழைக்க, எதற்கும் இருக்கட்டுமென்று துணைக்கு மாநிலக் கல்லூரி மாணவனாயிருந்த ராசி.அழகப்பனையும் அழைத்துக்கொண்டு, 17/2 பீட்டர்ஸ் காலனியின் முன்னறையில் போய்பார்த்தால், ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றவர்களே போலக் கூடி இருந்த எட்டு பத்து பேர் போக ஒருவர், ஜன்னலின் வெளிப்புறம் உள்ளே பார்த்தபடி அமர்ந்திருக்க, நம்மை அங்கே கொண்டு சேர்த்தது நமது எருமைத்தோல் மட்டுமே எனப்புரியவர, ராசி.அழகப்பன் தெளிவாய் இருந்த காலம் என்பதால் அடுத்த கூட்டத்திற்கு அவர்கள் அழைத்தும் அவர் வரவில்லை எனினும் வாசக சாலையே போலக் கிடந்த - ஏற்கெனவே நந்தனம் கலைகல்லூரி மாணவனான, பிற்காலத்தில் சென்னை ஃபில்ம் சொசைட்டி தொடங்கி சினிமா பற்றிய விழிப்புணர்வுக்கு வித்திடப்போகிற சிவகுமார் மூலம் அறிமுகமான - கணையாழியும் படிகளும் ஆர்வத்தைத் தூண்ட, அடுத்த சந்திப்பிற்குப் போக, அப்போது கிடைத்த பல் பதிவு, பற்களாய் மாறி இப்போது குறிபார்த்துக் கொடிருப்பது, யார் கழுத்தை என்கிற போதமின்றி, ஒருவன் எவ்வளவு கமாக்கள்தான் போட்டுவிட முடியும் அல்லது எப்போதுதான் இந்த வாக்கியத்தை முடிக்கப் போகிறான் என்பதை சவாலாகக் கொண்டு கழுத்தை நீட்டிக் காட்டிக்கொண்டிருக்கிற உம்மைப்போலவே ஒரு அப்பிராணியாய் அகப்பட்ட நான், உமக்கு இந்தக் கடியை மாற்றிக்கொடுப்பதன் மூலமே எனது உய்வைத் தேடிகொள்ள சபிக்கப்பட்டிருக்கிறேன்.

ஜிப்பா ஒரு அடையாளம். பல விஷயங்களை மறைத்துக்கொள்ள. பல விஷயங்களை வெளிக்காட்டிக்கொள்ள. அசாதாரனமானவன் என்பதைவிட வித்தியாசமானவன் எனக்காட்டிக்கொள்ள. வித்தியாசமாய் இருக்கப்போய் அணிகிறோமா அல்லது வித்தியாசமாய் இருப்பதனால் வேறு வழியின்றி அணிந்து தொலைக்கவேண்டி இருக்கிறதா. விடுதலையின் குறியீடாகத் தொடங்கியது விலங்காக மாறிவிடும் வினோதம். சுதந்திரமானவன் என்று ஒருவன் ஆயுசுக்கும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டால்  அவன்  சுதந்திரமானவனா? அது  ஒரு  வெட்டவெளித் தனிமைச்சிறை அல்லவா?

டிராகுலா பொதுவாக தன் இடத்தில் ஒன்றும் அறியாதது போல இருக்கும். சந்திக்க நேரினும், தற்செயல் போல தோன்றும்படியாகவே நடந்து கொள்ளும். யாரேனும் ஒருவர்தான் வழிகாட்டுவார் அல்லது விரல் பிடித்து அதனிடம் அழைத்துச் செல்வார். முதல் சந்திப்பிலேயே பல் பதிக்கிற அளவிற்கு அது முட்டாளன்று. நம்மில் ஒவ்வொருவருக்கும் கலை இலக்கியம் எழுத்து சினிமா கம்யூனிஸம் என்ற பன்முகப்பட்ட டிராகுலாவிடம் அழைத்துச் சென்றவர்களாக யாரேனும் ஒருவர் இருந்துகொண்டுதான் இருக்கிறார். காலாகாலமாக வந்துகொண்டே வேறு இருக்கிறார். ஒருவர் மாற்றி ஒருவராக. அதை ஒரு கிடைத்தற்கறிய வரமே போல தவமே போல அவர் செய்துகொண்டு இருக்கிறார். பல சமயங்களில் ஒரு கழுத்தில் கூட நேரடியாகப் அவர் பல் பதித்திருக்கவே மாட்டார். ஆனால் அவரின்றி பல் பதிந்தும் இருக்காது. அன்று அவர் ஒரு ஆளாக இருக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தன, மனித உறவுகள் மலிவாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம். இன்றைக்கு அவர் அருவ ரூபமான இணையமாக இருக்கிறார் போலும். யாரும் யாரையும் நேர் சந்திப்பின்றி இணங்கவும் பிணங்கவும் வாய்த்திருக்கிற மெய்நிகர் ஜாலலோகம்.

கொக்கோகக் கதைதேடி வந்த பலபேர் குறைந்த பட்சம் இணையத்தில் பெயர் எனச்சொல்லும் அளவிற்கு நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் எனச்சொல்லி வந்தவர் இணையத்தின் இளிப்பிற்கு இரையாகிப்போய் அம்மண அரசனாய் அதையே  ஒரு  கின்னஸ்  சாதனையாய்  ஆக்கப்  பாடுபடுகிறார். இரவல் எழுத்தில் தோன்றிய நதி, நரகல் கூவமான கதை.

என் ஜிப்பாவைப்  பார்த்து  அழைத்து  வந்தவர்  அக்கினிபுத்திரன். போய் சேர்ந்த  இடம்  பரீக்ஷா. கல்லூரிக்  கவிஞன்  இலக்கிய  எழுத்துக்கு வசியப்பட்ட கதை. கொதித்த  வார்த்தைகள்  கொந்தளிப்படங்கி வாக்கியங்களாயின. கவிதை  நீண்டு  கதையானது. அசோகமித்திரன் எழுத்துக்களில்  முழுமையாக  அமிழ்ந்து  போனேன். ஞாநியால் ஞானக்கூத்தனை  நெருங்கியவன். சுரேஷ்  குமார  இந்திரஜித்தால்  தருமு சிவராமு  கவிதைகளுக்குள்  நுழைந்தேன், தலைகுப்புற விழுந்தேன் வெளியில் வரவே முடியவில்லை இன்றுவரை.

பரீக்ஷாவில்  தீவிரமாய்  இயங்கத்  தொடங்கியாயிற்று. குறைந்தது, நாடகங்கள் பார்க்க வருகின்ற முன்னூறு பேர் நடுவே மாமல்லன் என்பது ஒரு பெயராக அடையாளப் படலாயிற்று. மார்ச் 1981ல் எழுதிய ’இலை’ கணையாழியில் பிரசுரமாகாமல் பெண்டிங்கில் கிடந்ததால், ஜூன் 1981ல் ஒரு கதை எழுதி, ஒரு  பலவீனமான  தருணத்தில்  கல்கி  நினைவு சிறுகதைப் போட்டிக்குக் கொடுத்தேன். ஆக  அறிமுக  எழுத்தாளர்  என்ற பெயரில் கல்கியில் பிரசுரமான முதலும் கடைசீயுமான கதைதான் ’வலி’.

மூன்றாவது பரிச்சாக இரண்டு கதைகள் அறிவிக்கப்பட்டு அதில் ஒன்றாக என் கதை தேர்ந்தெடுக்கப்பட்டதன் வலி.

அறிவிப்பில் விமலாதித்தன் என இருக்கும் இரண்டு மாதம் கழித்து கதை பிரசுரமாகையில் விமலாதித்த மாமல்லன் என்று ஆனது.

காரணம், முதல்  கதை  பிரசுரமாகும்  முன்பாகவே  பெயர்  களவுபோய் விட்டது, அல்லது இரண்டாந்தாரமாகி விட்டது. முரசொலியில் ’மாமல்லன்’ என்ற பெயரில் முழுப்பக்க கட்டுரைகள் வெளியாகத் தொடங்கின. லெஃப்ட்டு ரவி என்கிற பாண்டிசேரியின் பால்ய சிநேகிதன், பச்சையப்பன் கல்லூரித் தோழனாகவும் வேறு ஆகி இந்த விசேஷ செய்தியை வெளியிட்டான். பரம  சந்தோஷம்  அவனுக்கு. இருப்பது மட்டுமே அடுத்தவனுக்குத் தெரியும்.  ஆகப்போவது  குறித்த  கனவு  அவனவன் மட்டுமே  காண்பது. கனவுகளை  வெளிப்படுத்தும் சக்தி ஒலிக்கு ஒருபோதும் இருப்பதில்லை. பேச்சில்  கனவு  விற்க  பெரும்  பலம்  வேண்டும். விற்றுத் தீர்வதோ பெரும்பாலும் பொய்க்கனவே.

போஸ்ட்கார்டு போன்ற அட்டையில் நீளவாட்டு நெற்றியில் ‘மாமல்லன்’ எனவெழுதி சட்டைப் பாக்கெட்டில் செருகிக்கொண்டு துல்லியமாய் பேர்மட்டும் வெளித்தெரிய பஸ்ஸிலும் டிரெய்னிலும் அலைந்து திரிந்ததில், விருட்டென வேர்கடலை விற்பவனைக் காட்டிலும் வேகமாய் இறங்கக் கற்றுக்கொண்டதுதன் மிச்சம். ’மாமல்லன்’ மெட்ராஸுக்குத் தெரியவே இல்லை. ஒரு கதைகூட அச்சில் பார்க்கவில்லை, அதற்குள் எதிர் கட்சியின் சதியால் பெயர் கடத்தல்.

கணையாழிக்குக் காத்திருந்து கல்கிக்குப் போக நேர்ந்த துரதிர்ஷட்டம். அதனால் விளைந்த குற்றவுணர்வு. புதுமைப்பித்தனின் பேரன் தட்டுவது கல்கியின் கதவையா? தட்டியும் கிட்டியது வெறும் தவிடு. என எல்லாம் சேர்ந்து கொள்ள ஞாநி வீட்டின் வாசலில் நான் ஞாநி பிரபஞன் அல்லது இந்திரஜித் அசோகமித்திரனின் மூத்தமகன் ரவி தியாகரஜன் எல்லோரும் இருக்கையில்

அவர் நடுவராக இருந்தும் கூட எனக்கு மூன்றாம் பரிசா? என்றைக்காவது ஒரு நாள் நிச்சயம் கேட்டே தீருவேன். உங்களின் தனிப்பட்ட கணிப்பில் மற்ற கதைகள் என் கதையுடன் ஒப்பிடக்கூட தகுதி உடையவையா? இவ்வளவுதானா உங்கள் இலக்கிய ரசனை?

ஞாநி கடிந்து கொண்டார் ஒரு எழுத்தாளனாக நீ எப்படி மண்டியிடலாம். உன் கதை சிறந்தது, பரிசு  அதைத்  தீர்மானிப்பதில்லை  என்கிற  சுய கெளரவம் எங்கே போயிற்று?. விசனத்தின்  விளிம்பைக்கூடத்  தீண்டாத வாதப் பிரதிவாத வரட்டுப் பெருந்தீரம்.

என்னதான் கதை எழுதிவிட்டாலும் 21 வயது  இளைஞன், ஒரு  முதிரா சிறுவன்தானே.

பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய பின்னும், பக்கவாத்தியம் சற்றே விலகி வாசிக்கப்பட்டால் விளைவு விபரீதமாவது இன்றும் யதார்த்தம்தானே. தாத்தாவே எந்திரிக்க முடியாமல் தவிக்கும் புதைமணல். எப்போதும் எழுத்து பெருசு எழுதியவனை ஒப்பிட்டால்.

பஞ்சர் போடுபவன், மரத்தடி நிழல்வாசிகள் உதிரி வேலைக்காரர்கள் என எவரும் எங்களிடம் போட்டிக்கு வராதவண்ணம் யாரேனும் அல்லது எல்லோருமாக சேர்ந்து ஞாநி வீட்டின் எதிரிலிருக்கும் அசோக மரத்தடி குட்டைச்  சுவரைக்  குத்தகைக்கெடுத்திருப்போம். பெரும்பாலும்  வெட்டிப் பேச்சு வேதாந்தம்தான்.

மறுநாள் மாலை குட்டைச் சுவரருகில் ரவி தியாகராஜன்

மாமல்லன் இந்த மாதிரி வருத்தப் பட்டுப் பேசிண்டிருந்தார். அவரண்டையேக் கேக்கப் போறேன்னு சொல்லி வருத்தப்பட்டுண்டு இருந்தார்னு சொன்னேன். மாமல்லன் தான் விமலாதித்தன்னு எழுதறானா, சரியாப் போச்சு. அப்பா  உங்களண்டையே  பார்த்தா  சொல்லணும்னு இருந்தாராம். அப்பாவப் பாக்க வந்தவர் கொஞ்ச நேரம்தான் இருந்துருக்கார். ரொம்ப அப்செட் ஆயிருந்துருக்கார் அதனாலதான் அப்பாவையேப் பாக்க வந்துருக்கார். யார்னே தெரியலை. பேரப் பாத்தா ஏதோத் திமுக காரனாட்டமா இருக்கு. விமலாதித்தன்னு பேரு. கணையாழிக்குப் போவேண்டிய கதை. எப்பிடி கல்கிக்கு வந்துதுன்னேத் தெரியல்லை. சிவசங்கரியும் இன்னோரு லேடியும் இதெல்லாம் ஒரு கதயான்னுட்டா. என்ன இருக்கு ஏதோ தாத்தாவப் பாக்கப் போறானாம். என்னதிதுன்னுட்டா. நான் சொன்னேன் பார்த்தேளா கதை ரெண்டரை அடிலயே நகர்ரது. அவா பாத்ததுலயேப் புரிஞ்சுட்டுது, அவாளுக்கு இதுவும் புரியலேன்னுட்டு. ரெண்ட்ரடி ஒசரம் இருக்குற அந்த பையனோடத் தோள்ல கேமராவ வச்சு ஷூட் பண்ணாப்பல அவன் கண்ல என்ன படுமோ அந்த பார்வைலயே எழுதியிருக்கு பாருங்கோ. இதை ஒருத்தன் கதையா எழுதியிருக்கான்னா அட்லீஸ்ட் அவனுக்கு எப்புடியும் 20 வயசவது இருக்கனும். அடல்ட் பாக்கறா மாதிரியே இல்லை பாத்தேளா. அப்சர்வேஷன்ஸ் எல்லாம் ஒரு சின்னப்பையன் பாக்கறாப்பலையே... அவா கன்வின்ஸே ஆகல்லை. தேர்ட் ப்ரைஸுக்குக் கூட லாயக்கில்லேன்னுட்டா. அப்பறம் நாந்தான் இன்ஸிஸ்ட் பண்ணேன். என்னப் பொருத்த வரைக்கும் இதைத்தான் கதைன்னே சொல்வேன். இதுக்கு எந்தப் ப்ரைஸும் இல்லேன்னா நா ஜட்ஜா இருந்ததுக்கு அர்த்தமே இல்லைன்னு ஆயிடும்னு சொன்ன அப்பறம் மூனாவுது பிரைஸுக்கு ஒத்துண்டா.

ஆக நமது வெளிப்பாடே கத்தி கபடாவோடுதான்.

இதற்குள் யூகித்திருப்பீர்களே எவனோ முகம்தெரியாதவனுக்காகப் போராடி, வெற்றிபெற  முடியாமல்  போனதற்காக  நண்பரான அசோகமித்திரனிடம் புலம்பி தன் ஆற்றாமையைத்த் தீர்த்துக் கொண்டவர் வேறு யார் சுஜாதாவேதான்.

இதற்கு சற்றேறக்குறைய  13 ஆண்டுகள்  கழித்து  1994 ல்  சுஜாதா குமுதம் அலுவலகத்தில் என் கதை ஒன்றை படித்துவிட்டு....

 சுஜாதா எடிட் பண்ண முயற்சித்து பிரசுரமாகாத கதையின் கதை