Wednesday, September 15, 2010

எழுத்துக் கலை - தேர்வு

shankar 

சார் ,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...,உங்களின் அனைத்து இடுகையும் இன்று தான் வாசித்தேன் ...,இப்படியும் எழுத முடியுமா என்று வியந்து போய் உட்கார்ந்திருகிரேன்..,நிறைய எழுதுங்கள் ..என்னை போல் ILLITERATE OF LITERATURE க்கு சொல்லி குடுங்கள்



வியப்பதற்கு இது ஒரு விஷயமே இல்லை.

ஒரு எழுத்தாளன் ப்ளாகில் எழுதுவதற்கும் ஒரு ப்ளாகன் எழுத்தாளனாய் நினைத்துக்கொண்டு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம். பின்னதை மட்டுமே படித்துக் கொண்டிருந்ததால் உமக்கு வந்த பரபரப்பு.

எழுத்தாளனுக்கு இது ஒரு இடம் மட்டுமே. எழுத ஒரு இடம். இது இல்லை என்றால் பேப்பரில் எழுதுவான். பிரசுரமே ஆகாமற்போனாலும் சாகும்வரை எழுதுவான். எழுத வேண்டும் என நினைக்கும் வரை எதைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டு இருப்பான். எவன் மிரட்டலுக்கும் அவன் பணிவதும் இல்லை. எந்த கீழ்மைக்கும் அவன் இறங்குவதும் இல்லை.

இணையம் இல்லையென்றால் ஏகப்பட்ட ஃபாலோயர்களுடன் கோலோச்சிக் கொண்டிருப்பதாய் இருமாந்து திரியும் இவர்களில் எத்துனைப் பேருக்கு எழுதக் கைவரும். இணையத்தில் தொண்ணூற்றெட்டுபேருக்கு விகடனும் குமுதமும்தான் மக்கா மதினா. கொஞ்சம் இங்கிலீஷ் தெரிந்துவிட்டால் சுஜாதா, பாலகுமாரன், ஸிட்னிஷெல்டன், ஐயன்ராண்ட், ஜெப்ரி ஆர்ச்சர் மகத்தான ஆதர்சங்கள். ஒட்டுமொத்த ப்ளாக் ஃபாலோயர்சையும் எடுத்து ஆராய்ந்தால் மாயபிம்பம் அழிபடும்.

டவுசருக்கு பட்டன் போடாததையே பெரிய இலக்கிய சாதனையாய் பீற்றிக்கொள்ளும் நாற்றத்திற்கு அள்ளிக்கொடுக்க நாலு பேர். பைத்தியத்திற்குப் பின்னால் பத்து பேர் என்பது பழமொழி. ஆவேச ஆபாசப் பைத்தியம் ஆகவே ஆயிரம் பேர் பின்னாலே போகிறதுகள், அவ்வளவுதான்.

உங்கள் மொய்க்கு என் மொய் என் கணக்கிற்கு உங்கள் மொய் என்கிற காற்றிலே கட்டப்பட்ட காகிதக் கோட்டை இந்த இணையம்.

எங்களுக்கும் அவங்களுக்கும் வம்சாவளித் தகராறு அதனால அவர்களை கை இறக்கி இவர்களை கை ஏற்றுவோம். ஒரு மொழுக்காண்டிச் சிலையை ப்ளாக்கிலே போட்டுகொள்ள போட்டி பொறாமை பொச்சரிப்பு.

ஒரு ப்ளாகனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்கிற துடிப்பைவிட வேறு எத்தனையோ காரணங்கள் முன்நிர்பந்தமாய் நிற்கின்றன. ப்ளாகன் இங்கே ஓடிப்பிடித்து விளையாட வந்த சிறுவன். சிறுவன் எனக் கூறியது, சிறுமியரையும் சேர்த்துத்தான். இருபதையும் அறுபதையும் சேர்த்துத்தான். விளி செளகர்யமே வேறுபாடின்றி அவனாக நிற்கிறது. அவனுக்கு அறுபதுக்கும்மேல் கூட வயதாகி இருக்கலாம் ஆனாலும் அவன் முதிராச்சிறுவன். அவன் பெரும் வாசகனாய் இருப்பானேயாகில் அபத்தத்தை சீண்டலை சினுங்கலை எழுத அவன் கை அனுமதியாது.

கும்மாளியிட வந்தோரே ஏராளம். ஆஃபீசில் வேலைக்கு வேலையுமாச்சு அந்த நேரத்திலேயே இணையத்தில் லீலைக்கு லீலையுமாச்சு என மெய்நிகர் பழக்கத்திலேயெ நேர்ப்பழக்கம் கூட இல்லாமல் நெகிழ்ந்து நனைந்து கொண்டிருப்பவர்கள் எத்துனைபேர்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு திரும்பத்திரும்ப அடிப்படையைத் தாண்டி வராததன் காரணம் ஈர்ப்பு அடிப்படையானது என்பதுதான். அப்படியெனில் எல்லோரையும் அம்மனமாகத்தான் பார்க்கிறாயா என ஒரு அசடு வந்து மூக்கைத் தூக்கிக் கேட்கும். ஒரு வேளை ஆடை கண்டுபிடிக்கப் படாமலே போயிருந்தால் இவ்வளவு சிடுக்குகள் இல்லாமல்கூட இருந்திருக்கலாமோ என்னவோ. மூடிகிடப்பதைத் திறக்கத்தானெ மூர்க்கமாய் உந்தித் தள்ளுகிறது மூளை.

எதிர் செக்ஸை ஆளுமை கொள்ள சொல்லப்பட்ட பொய்கள் எண்ணிமாளுமா. இதில் கட்சி கட்டி ஏதும் மீளுமா?

யூஜியில் நடந்த விபத்துக்களால் தஞ்சம் கொடுத்த எத்தனைக் குடும்பங்கள் சின்னாபின்னமாயின.
அது மட்டுமே அந்தத் தோழர் என்பது எவ்வளவு சரியில்லையோ அதற்கு இணையான தவறுதான் சட்டத்திடம் போகாமல் இணையத்துத் தறுதலைகளிடம் சரிக்கு சரி நிற்பதும்.

மெமாயர்ஸ்ஸில் ஒரு பகுதி சிலோனில் இருக்கிறான் பாப்லோ நெரூதா, வீட்டைக் கூட்டும் வேலைக்காரிமேல் கண்வைத்துவிடுகிறான். என்னென்னவோ விதமாக வளைக்கப் பார்த்தும் வலையில் விழவில்லை. கடைசியில் காஸ்ட்லியான புடவைக் கவிழ்த்துவிடுகிறது.

லீனா மணிமேகலை பாவப்பட்ட மார்க்ஸ்ஸையும் மற்றபிறவர்களையும் விடுத்து நெரூதாவை மட்டுமே கவிதையில் ’நக்க’ச் சொல்லி இருந்தால் ஆஹா என்று சந்தோஷமாகிப் போயிருப்பான்.

எழுதப்பட்ட கவிதையைக் கேவலம் எனசொல்லிக்கொண்டு கவிதை எழுதிய ‘பெண்ணுக்கு’ அதே கேவலத்தை செய்தாயிற்று. ஓ இதுதான் நீ கிள்ளினே நா கிள்ளினே சரிக்கு சரி அட்டை கிளாஸ் இபிகோ.

லீனாவின் கவிதைகளின் தரம் என் கருத்தில் கருத்தாக நின்றுவிடுகிறதே அன்றி அல்லது ஒரு அதிர்ச்சி மதிப்பாக நின்றுவிடுகிறதே அன்றி கவிதையாக ஆகவில்லை. எல்லோருமே ஒரு பேண்ணை மாம்ஸமாக மட்டுமே பார்க்கிறார்கள் என்று சொல்ல அவளுக்கு உரிமை இல்லையா? எவ்ளோ காலம்தான் எல்லோரும் இதையே சொல்லிக்கொண்டிருப்பது. இப்படிச் சொன்னது சலித்துப்போய் மாற்றிச் சொல்லுகிறார். என்னை இப்படியாக மட்டுமே எல்லோரும் பார்ப்பதால் எல்லோருமே அது மட்டும்தான் என்கிறார். என்ன தப்பு. அவருக்கு அப்படி தோன்றுகிறது சொல்லிக்கொண்டு போகட்டும்.

ஆதிவாசிக்கு நீதி கிடைப்பதை விடவா இது ரொம்ப அவசியம்?

நமது காதும் நமது கண்ணும் நம்மிடம்தானே இருக்கின்றன? என் எதிர்ப்பை நான் லீனாவைப் புறக்கணித்தலின் மூலம் காட்டுவேன். அதுதான் மிகப்பெரிய எதிர்ப்பாய் இருக்கக்கூடும்.

இனையத்தில் இருக்கும் பேர் என்று ஒன்றைக்  கொண்ட ஆயிரக்கனக்கான அநாமதேயங்களில் ஒன்று இதேபோல் எழுதியிருந்தால் எங்கு போய் முட்டிக்கொள்வது. எப்படி அதை தனிப்படுத்தித் தாக்குவது? அது எது என்றுகூடத் தெரியாதபோது?

ஆனால் லீனாவின் எழுத்தைக் கருமாந்திரம் எனத் தலையில் அடித்துகொண்டு விமர்சிக்க ஒருவருக்கு இருக்கிற உரிமை அதைப் போன்ற பத்து நூறு ஆயிரம் ‘கவிதைகள்’ எழுத லீனாவுக்கு உண்டு.

லீனா அதே மாதிரி ’கவிதைகள்’ தான் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார். நாமும் அதைக் காணாமல்தான் போய்க்கொண்டு இருக்கிறோம்.

இதற்கு எழுத்தாளன் ஜடம் எனப் பொறுளன்று. அவனுக்கும் சமுதாயப் பொறுப்பு உண்டு. அதே நேரத்தில் அது எந்தக் கட்சியின் அஜண்டாவிற்குள்ளும் அடங்காது.

பைத்தியக்காரப் பரதேசியாக இருந்தால் தான் அவன் பெயர் பாரதி. பதவி கொடுத்துப் பார் அவனுக்கு. இது பாரதி இல்லையே என நீயே பரிதாபப்படும்படி ஆகிவிடுவான்.

அறச்சீற்றம் காட்டி ய்ந்த்ர தந்த்ர மந்த்ர என்று காகிதத்தில் கத்தி சுழற்றி கடைசியில் சினிமா கதை டிஸ்கஷனுக்குப் போய் பேரில்லாட்டாலும் பரவால்லேன்னு சீன் சொல்லி காசு பாப்பான் இலக்கியக் கொழுந்து

நிறுவணப்படுகையில் சாரமிழந்து நீர்த்துப் போகிறது - ஜேகே

வேலை செய்யும் கணினி காலாவதியானது - Marshall McLuhan

எழுத்தாளன் எழுத எடுத்துக்கொள்ளும் கருத்திலோ கனவிலோ மட்டும் அல்ல அவனது தேர்வு. எழுத்தாளனாக இருக்கவேண்டும் என அவன் மனதில் ஏதோ ஒரு கை விதையை ஊன்றிற்றல்லவா, அதை அவன் ரகசியமாய் வேர்விட நீர்விட்டு போஷித்தானல்லவா அன்று தொடங்கிய பயணம் அது. அதுவே தேர்வுதான்.

எழுத்தாளனுக்கு முண்டாசும், புரட்சிக்காரனுக்கு மீசையாகவும் கூட இருந்திருக்கலாம் விதை. விடலைக்கு நட்சத்திரத் தொப்பியாக இளைஞனுக்குக் குறுந்தாடியாக நடுத்தரத்து நடுவனுக்கு வெற்று வெள்ளைக் குர்த்தாவாக சொல்லிக்கொண்டே போகலாம் பட்டியல் முடியாது இரவு முடிந்துவிடும்.

எவன் ஈர்த்து இவன் வந்தான் என்பது கூட இலக்கை தீர்மானிக்கிறது.

எத்துனைபேர் தன்னை ஃபாலோ பண்ணுகிறார்கள் என்ற தீராத கவலையில் இருப்பவன் ப்ளாகன்.

எவனையும் ஃபாலோ பண்ணி தன்னை இழந்துவிடக்கூடாதே என்கிற அச்சத்தில் இருப்பவன் எழுத்தாளன்.