Wednesday, September 8, 2010

எழுத்துக் கலை – தேடுதல்

பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டு பிரசுரித்தல் பற்றி சில வார்த்தைகள்.

மட்டறுத்தலில் எனக்கு உடன்பாடு இல்லை. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக 19 வது பிரிவின் கீழ் உருதி செய்யப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு எதிரானது. அந்த உரிமை எக்காரணம் கொண்டும் தடைசெய்யப்படல் ஆகாது என்பதே அதற்குக் காரணம்.

பின்னூட்டங்கள் மட்டறுக்கப்படுகையில், தணிக்கை அதிகாரம் கைக்கொள்ளப்படுகிறது. அதிகாரம் பொதுவாக நியாயத் தராசாக முள் நிலை பட்டு நிற்பதில்லை. சுயம் பாதுகாக்க சுயம் துதிக்கப்பட, சுயத்தைத் தூக்கி நிறுத்த சுயத்தை முன் நிறுத்த சுயத்தை போஷிக்க சுயத்தை பூதாகாரப் படுத்திக்காட்ட என்று தணிக்கை துஷ்ப்ரயோகத்திற்கே பயன்படுகிறது.

எதிர் நிலைகள் கொண்ட எண்ணங்கள், எதிர்மறை அலைகளைத் தோற்றுவித்து, வசியக்கட்டு அறுந்துபடுமோ என்கிற அச்சதின் கையறுநிலை வெளிப்பாடுதான் மட்டறுப்பு. கட்டறுத்த காட்டெருமையும் கனவான் லக்கியத்தின் கடைக்குட்டியும் ஒரே விதமாகவே மட்டறுக்கின்றன.

எழுத்தாளன் சூத்திதாரி போலவும் சர்க்கஸ் ரிங்மாஸ்டர் போலவும் இயங்கவேண்டியதற்கு ஏதும் நிஜமான காரணக்கள் இருக்கின்றனவா? ஒரு சுகுவும் (எழுத்துப்பிழயல்ல) கிடையாது. மந்திரிகள் ஒன்றுகூடி நம்மைவிட்டு மாநாடு போட்டுவிட்டால் என்கிற அச்சத்தைத் தவிர ஒரு குசுவும் (இது எழுத்துப்பிழைதான்) கிடையாது. சுயதலப்ரதாப சரித்திரமன்றி.

உண்மையில்லாதவனும் சுயபலத்தில் நம்பிக்கையற்றவனும் மறைக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டங்கள், சுயமாக எழுதப்பட்ட பின்னூட்டங்கள், என மட்டறுத்தலில் மிகுந்த அனுகூலங்கள் உண்டு. அவரவர் போடும் பின்னூட்டங்களிலலிருந்தே அனைவரும் முடிவுக்கு வரலாம். பின்னூட்டம் தூண்டிய கட்டுரகளைக் காட்டிலும், கட்டுரையை எழுதிக்கொண்டு முன் புனைந்த பின்னூட்டங்கள்.

நான் உங்களிடம் எதையும் விற்க வரவில்லை. ஆனால் கடை விரிக்க வந்தேன்.

உங்களின் பிம்பங்களை அவ்வலவு சுலபமாக கலைய அனுமதிக்க மாட்டீர்களென நன்கறிவேன் அனால் அவற்றை உங்களின் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதே ஒரு எழுத்தாளனாக எனது கடமை என நினக்கிறேன். நான் உங்களிடம் அங்கீகாரத்திற்காக யாசிக்க வந்தவனில்லை. யாரையுமே கேள்விகேட்காமல் பூசிக்காதீர்கள் என சொல்ல வந்தவன்.

எப்போதுமே பல்லக்கு சுமப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டியதில்லை. நீங்களும் பல்லக்கில் ஏற உங்களைத் தகுதிபடுத்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு உங்களைத் தயார்படுத்தலே உட்காரும் தகுதியை உங்களுக்குக் கொடுக்கும் எனவும் அந்தத் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்கையில் பல்லக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிறைய தெய்வங்கள் உங்கள் பல்லக்கை சுமக்ககூட தகுதியற்றவர்கள் என்பதை நீங்களே கண்டடைவீர்கள் என்பதையும் கூறுவதே என் வேலை.

ஏனெனில் நானும் ஒரு காலத்தில் பல்லக்குத் தூக்கியாக இருந்தவன் தான். நான் சுமந்த பல தெய்வங்கள் பாதைவழி கற்களாய் இருக்கக் கூட நாதியற்று சரிந்தன. அனாவசிய பாரங்களைச் சுமப்பது அறிவுடைய செயலல்லவே.

நான் உங்களிடம் வருகையில் இருகரம் நீட்டி வரவேற்கப்படுவேன் என்கிற எதிற்பார்ப்பு கிஞ்சித்தும் அற்றே வருகிறேன். மனிதர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அசைக்கப் படுகையில் பிடித்துக்கொள்ள ஏதுமற்று காப்பாற்ற வந்தவனின் கழுத்தையே நெருக்குவது போல இதிலிருக்கும் ஆபத்துகள் அறியாமல் வரவில்லை. நான் அவமதிக்கப்படலாம். உதாசீனப்படுத்தப்படலாம். ஒரு நாள் நான் உணரவும் படலாம் என்கிற எனது உள்ளுணர்வின் பலமே ஒற்றையோராளாக உங்கள் முன் என்னை நிறுத்தியிருக்கிறது.

நான் மட்டறுத்தலை செயலிழக்க செய்திருக்கிறேன்.

அவதூற்றுப் பின்னுட்டம் வருமெனில் அதை சட்டப்படி எதிர்கொள்வதெப்படி என்பது எனக்குத் தெரியும், என்பதை உங்களுக்குத் தெரிவித்திருப்பதே என் தற்காப்பு.

வாசகர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்ளட்டுமே. பேசிப்பேசித்தான் தெளிய வேண்டும். தெளிந்தால் எங்கே நம்மைவிட்டு விலகிவிடுவானோ என்கிற பயம். ஒரு எழுத்தாளன் என்று உன்னை மதித்து வருபவனை, நானல்ல எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன படித்துப்பார் எனச்சொல்லிப் பட்டியல் கொடுத்தாலே போதும். அதைத்தான் காநாசு செய்தார்.

பொஸ்தகம் தண்டியாகணும் நான் வண்டி வாங்கணும், என்பதற்காக அன்றி பொறாண்டி போறாண்டி சொல்லவேண்டிய அவசியம் ஏதுமமிருக்கிறதா? குழந்தையைக் கை பிடித்து அழைத்து செல்கையில் கூட அதை அங்கிங்கு என்று பராக்கு பார்க்க விடாமல் பட்டைகட்டுகிற சட்டாம்பிள்ளைத்தனம்.

எவன் ஒருவனையும் கண்மூடிப் பின் தொடறாதே.

சுற்றிப்பார் சோதி பார்வைதெளி சுடர்ந்தெழுவாய்.

குழந்தைக்கு ஒவ்வொன்றாய் சொல்லி ஊட்டிவிடுதல். ஒன்பதாம் வகுப்புவரை ஊட்டி விடுதல். நாலாப் பக்கமும் பார்க்கவிடாமல் பொத்திப்பொத்தி புடவை முந்தானை வளர்ப்பு. நாலையும் பார்த்தால் நாதாரியாகி சொன்னபேச்சு கேட்காது போய்விடும். கட்டுக்குள் வைத்திருக்கக் கட்டற்ற ஆசை. திருமணமானபின் குடும்பத்திற்குள் உலகப்போரின் அஸ்திவாரம் ஊட்டலில் ஆரம்பித்தது. அதிகாரப் பங்ககீட்டின் அடிதடி அன்பின்பெயரால். நாதாரிக்குதான் நாலும் தெரியும். உண்மையான கட்டுடைப்பு அதுதான். இறுகிய பூமியைப் புரட்டிப்போட்டால்தானே விளைநிலம்?

குழந்தைகள் உங்களிடமிருந்து வரவில்லை

உங்கள் மூலமாக வருகிறார்கள்

                       – கலீல்கிப்ரான்


எந்த ஒரு எழுத்தாளனையும் கேட்டுப் பாருங்கள்.

சார் உங்களுக்குப் பிடிச்ச ஒர்க்குன்னு நீங்க எதை சார் சொல்வீங்க?

யோசிக்காமல் பதில் வரும் அவரது கடைசீ புத்தகத்தைப் பற்றி.

ஒன்று மார்க்கெட்டிங் டெக்னிக் (போயா பொக்கெ வித்தாக வேண்டாமா?)

சார் உங்க ஒர்க்ஸுல ஃப்பெய்லியர்னு நீங்க எதை நெனைக்கிறீங்க?

(கூட்டத்தில் இல்லாமல் தனிமையில் இருக்கும் போது கேளுங்கள். இது அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாதே என்கிற காரணத்தினால் அல்ல உங்களுக்கு காயம் பட்டுவிடக்கூடாதே என்கிற கருணையினால் – பொதுவாகவே எழுத்தாளன் சண்டைகாரனல்ல, காற்றில் கத்தி சுழற்றுவதோடு சரி.

பொதுவில் இதைக்கேட்க வேண்டாம் என்பதன் காரணம். நான்குபேர் சுற்றியிருக்கையில் தன்னைத்தானே ஆதரிப்பார்களளென்ற தைரியத்தில் ஒருவேளை பலப்ரயோகம் ப்ரீட்சிக்கவும் வாய்புண்டுதானே)

சார் உங்க ஒர்க்ஸுல ஃப்பெய்லியர்னு நீங்க எதை நெனைக்கிறீங்க?

புழுவைப்போல் ஒரு பார்வை. எவன், அவன் சொல்லிக்குடுத்தானா?

(அப்போதுதான் அவருக்கும் இவருக்கும் ஆகாது என்பதே உங்களுக்குத் தெரிய வந்திருக்கும். நேற்றைய கூட்டத்தில் கூட ஆரத் தழுவிக் கொண்டார்களே). இப்புடிக் கேக்க சொல்லி, எனக்குத் தெரியும். அவன் வேலையாதான் இருக்கும். சஹஸ்ர நாம அஷ்ட்டோத்திர சத நாமாவளி ஸ்டார்ட்ஸ்.

எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டால் நிறையப் படி. தேடித்தேடி நண்பர்களோடு பேசு. விவாதி, எழுதிப்பார் எழுதியெழுதியெழுதிப் பார்த்துக்கொண்டே இரு. இண்டர்நெட்டில்கூட பப்ளிஷ் பண்ணாதே டிராஃப்டாக வைத்துக்கொண்டு பலமுறை ப்ரிவ்யூவே பார்த்துக் கொண்டிரு. திரும்பத்திரும்ப திருத்தித்திருத்தி எழுதிப்பார்.

முக்கியமாக எழுத்தாளனை எட்ட இருந்து பார். அருகில் போகாதே. நேர் சந்திப்பதைத் தவிர். கூட்டத்திலும் கூட எட்ட இருந்து கேள்.

உண்மையாக இருக்கப் பார். குறைந்தபட்சம் எழுத்திலாவது உண்மையாக இருக்கப்பார். வாழ்க்கைதான் நம்மை உண்மையாக இருக்கவிடாமல் அடித்துக் கொண்டு இருக்கிறதே.

பள்ளியில் சொன்னது எல்லாம் நல்லதுக்கு. யார் நல்லதுக்கு சமூகத்தின் நல்லதுக்கு. சமூகம் என்பது யார்? நாம் தான். அப்படி என்றால் பள்ளியில் சொல்லிக் கொடுத்தது எல்லாம் நம் நல்லதுக்குதானே. அப்படி நடந்தால் அடி விழுகிற்தே. இந்த சரடுதான் நீ பிடிக்க வேண்டிய சரடு.

இது இயல்பாகப் பிடிபட்டால் போஸ்டர் ஒட்டப்போய் நீ போராளியாகவும் போகலாம்.

புத்தகம் படித்து எழுதிப்பழகி எழுத்தாளனாகவும் ஆகலாம். 

உள்மனம் உறங்காது விழித்திருந்தால் இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது புலப்படும். இரண்டிலும் சோரம் போக ஏராள வாய்ப்புண்டு என்பதும் பிடிபடும்.

இத்துனை நாள் குறைந்தது இருபது வயதாவது, வாழ்து பார்த்திருக்கிறாய் அல்லவா. பள்ளிப் படிப்பு வைத்துதான் முன்னேறிக் கொண்டிருக்கிறாயா? உண்மை என்றால் நீ பொய்யன். பொய் என்றால் நீ புத்திசாலி. புத்திசாலிகள் மட்டுமே இன்று வாழ்க்கையில் முன்னேற முடியும். வாழ்க்கையில் முன்னேற இலக்கியத்திற்கு வராதே.

எழுத்தாலேயே ஏகப்பட்டபேர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்களே.

அவனா நீ? நான் இல்லை உனக்கு.

எழுத்தாள எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சுக்குப் போ.

முட்டாள்தான் இலக்கியத்தில் சாதிக்க முடியும். உண்மையை மட்டுமே சொல்லத்தெரிந்த முட்டாள். காசுக்குப் பொறாததை ரசிக்கத்தெரிந்த முட்டாள். பகலில் பைசா பெறாததைக் கனவுகானுகிற முட்டாள். தொட்டால் பட்டுவிடுவோம் எனத்தெரிந்தும் முட்டிக்கொண்டிருக்கிற முட்டாள். 

தோற்பதனால் கிடைக்கிற வெற்றி.

இழப்புகளால் அடையும் இன்பம்
நமக்கு முக்கியம் பயணச் சீட்டு. குழந்தைக்கு முக்கியம் பயணம் முடித்த பழைய கிழிந்த குப்பை.

உள்ளிருக்கும் குழந்தைத் தன்மையை பேணிக் காத்துக்கொள். எதிர்பார்ப்பற்ற கனவு காண்.
இன்றைக்குப் பெரும்பாலான எழுத்தாளர்கள் பைசா பண்ணுவதைத்தான் கனவாகக் கண்டுகொண்டிருக்கிறான்.

பழைய எழுத்தாளர்களைப் தேடித்தேடி படி. போரடித்தால் படிக்காதே. பாரமான இலக்கியம் போரடித்தால் அதைப்படிக்காதே. அந்த இடம் உனக்கில்லை என்பதை அறிந்துகொள். கொஞ்சம் லைட்டாகப் படி அதுகூட போரடித்தால் நீ படிக்கவே லாயக்கில்லை என்று புரிந்துகொள்.

அது அவமானமல்ல. எது நமக்குப் பிடிக்கிறதோ அதை செய்வதுதான் வாழ்க்கையின் பயன். எது நம்மால் இயலுமோ அதை மட்டும் செய். நீ இலக்கியம் செய்யாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடப் போவதில்லை.
காதலில் தோற்றவன் கவிஞனாகிறான்

கவிஞனாவதற்காக வேண்டி காதலிப்பவன்

காதலிலும் ஜெயிப்பதில்லை கவிஞனாகவும் ஆவதில்லை

                                    - கண்ணதாசன்

சினிமா பார். அதிலும் ஸ்ரீதரில் தொடங்கு, ஹாலிவுட் ரொமான்ஸ் பார்.
பல எழுத்தாளர்கள் மேலே சொன்ன எதிர்மறை படிகளில் ஏறிவந்தவர்கள் என்பதை தெரிந்துகொள். எல்லா நதிகளும் எல்லா இடங்களிலும் சுத்தமாக இருப்பதில்லை. அழுக்காக இருப்பதால் அது நதியல்ல என்று ஆகிவிடாது. அழுக்கு நதி அவ்வளவுதான்.

ஓடிக்கொண்டேயிரு வீட்டைவிட்டு அல்ல. ஒன்றுமே செய்யாத காலத்திலும் யோசித்துக்கொண்டே இரு. சிந்தனைகள் பிரமாதம் என்று தோன்றினால் எழுதி வைத்துக்கொள். பேப்பரைத் தொலைத்துவிடு. வலுத்தது தங்கும். அதுவே உனக்கு பலமாமன அஸ்திவாரம்.

தோன்றிய உடனே எழுத்தொடங்கிவிடாதே. பத்தி எழுத்தாளனாகி விடுவாய். எதையாவது எழுத வேண்டும் என்று பரபரத்து பார்த்ததெல்லாம் எழுத்தாக்கி, நீர்த்துப்போய் புகழ்பெற்று. ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதிவிடுவாய்.

சார். என்ன சார் நீங்க அதான வேனும் நெரைய நெரைய புஸ்தகம் போட்டு….சினிமாவுல போயி கலை சேவை செய்ஞ்சி......

நல்லது கைலி தூக்கிக் கக்கூசில் உட்காரு
கார பொகடாவைத் தின்றபடி
பாக்கெட் நாவல் படிக்கத்தொடங்கு
பார் புகழும் எழுத்தாளனாகிடுவாய்

ஒருநாள் திரும்பிப் பார்க்கயில் நீ மரங்கொல்லியாக மட்டுமே எஞ்சி நிர்பதை உணர்வாய். அரிதாரம் பூசி இன்னும் கொஞ்சம் இளமையாய் எழுத இன்னொருவன் கிடைத்துவிட்டால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட விதி முற்றிய விபச்சாரி போல் உணரத்தொடங்குவாய். வந்துபோன எந்த வாடிக்கையாளனுக்கும் உன்னை அடையாளம் தெரியாது. காமம் கலக்காத தனிமையின் தவிப்பு.

பல விபச்சாரிகளுக்கு எழுதத் தெரியாமல் போனது நமது துரதிருஷ்டம் பல உண்மையான வாழ்வனுபவங்கள் கிடைத்திருக்கும்.

பல எழுத்தாளர்கள் விபச்சாரிகளாய்ப் போனது அவர்களது அதிருஷ்டம் போலி வாழ்வை பொங்கிக் கொடுத்து பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாய் இருக்க முயற்சிசெய். உருப்படாமல் போவாய். ஒரு நாள் நீ இலக்கியவாதியாக வாய்ப்பிருக்கிறது. உண்மையான இலக்கியவாதியாக.

இன்னமும் நீ எழுத்தாளனாக விருப்பப்படுவாயானால், இன்னமும் என்னை வாசிக்கும் மனநிலையில் இருப்பாயானால் எழுத்துக் கலை - அனுபவம் போகலாம் வா.