Friday, September 24, 2010

கேட்டேளா இங்கே!

எல்லா பிராமணர்களும்  கருவறைக்குள்  நுழைய  முடியுமா? முடிகிறதா?அப்படி இருக்கையில் பிராமணன் பிராமணன் எனக் கூப்பாடு போடுவது பித்தலாட்டமா இல்லையா?

எல்லா பிராமணனும் கருவறைக்குள் நுழைய முடிவதில்லை ஆனால் நுழைபவன் எல்லாம் பிராமணனாக மட்டுமே இருக்கிறான்.

இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்.

கோவிலுக்கு  ஆகமவிதிகள்  சரியா  தவறா? ஆகமவிதிகளையே  தூக்கி எறிவதா  அல்லது  ஆகமவிதிகளை  வைத்துக் கொண்டு  எல்லா இந்துக்களையும் அனுமதிப்பதா அல்லது பூசைசெய்ய சாதி வித்தியாசமின்றி தகுதி பெற்றவர்களை மட்டுமே அனுமதிப்பதா?

இது மக்களிடம் வைக்கவேண்டிய விவாதப்பொருளா சட்டத்தைத் தானே கையில் எடுக்க வேண்டிய சட்டாம்பிள்ளைக் காரியமா?

ஸ்ரீரங்க பூமியிலே கடவுள் மறுப்பாளரான பெரியாரின் சிலையே இருக்கக்கூடாதென்ற எதிர்ப்பை தவறு என்றேன்.

அதை சொல்லக்கூட எந்த தாஸில்தாரிடம் கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க வேண்டும்?
 
அதே போல் கருவறையில் அம்பேத்கர் பெரியார் படங்களை வைத்ததும் தப்பு என்றேன். இதில் என்ன கொலைபாதகம் செய்துவிட்டேன் நான்.

கருவறை, கடவுள் மறுப்பாளரான உமக்கு, ஒரு பொறுட்டல்ல.

கோடானுகோடி ஜனங்களின் உனர்வுகள் மண்.
உங்கள் பத்துபேரின் உணர்வுகள் மட்டுமே பொன்.
ஓ இதுதான் புதிய ஜனநாயகமோ?

உங்கள்  கம்யூனிஸ்ட்  அலுவலகத்தில்  RSS  நிறுவனர்  கோல்வால்கர் படத்தை வைக்கும் போராட்டம் நடத்த அனுமதி எங்கே வாங்க வேண்டும். நீங்களே கொடுப்பீர்களா?

அது உங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதா?

யாருக்கும் யாரும் மன உளைச்சல் கொடுக்கக்கூடாது என்பதுதானே தீர்ப்பு?

ஓ அந்த தீர்ப்பு நரர்களுக்குதான் நாட்டமையைக் கட்டுப்படுத்தாதோ?

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கருப்பர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என விவாதம் எழுந்தது. கூடாது அது நம்மை முழுக்கவும் சதவிகிதத்தில் முடக்கிவிடும் என்ற எதிர் கருத்தை முன் வைத்து கருப்பர் தலைமை இட ஒதுக்கிட்டை நிராகரித்தது.

அதே கருத்து தலித்துகளுக்கு வைக்கப் பட்டபோது, இந்திய சூழ்நிலையில் சட்ட பாதுகாப்பு இல்லை என்றால், கருத்து வெற்றுக் காகிதமாக மட்டுமே இருக்கும், ஒருவனையும் அது கட்டுப்படுத்தாது, எனவே சட்டமாக ஆக்கியேத் தீரவேண்டும் என்கிற, அம்பேத்கரின் தீர்க்க தரிசனமே, இன்று குறைந்தது அரசாங்கத்திலேனும், லட்சக்கணக்கில் வேலை கிடைத்து தலைமுறைகள் நிமிர்ந்து நிற்கின்றன.

பிராமணர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே நுழைய வரையறுக்கப்பட்ட ஒரு விஷயத்தில் ஒட்டுமொத்த பிராமணர்களுக்கான நுழைவு உரிமை இருப்பது பொல் காட்டுவதுதான் பித்தலாட்டம்.

பற்றி எரியும் பிரச்சனைகளை விட்டுவிட்டு ’கருவறை நுழைவு’ என்கிற ’நான்-இஷ்யுவை’ உலக மகா பிரச்சனை போல் ஜோடிப்பதுதான் பித்தலாட்டம்.

அதுதான் சீக்கிரம் பேமஸாக குறுக்கு வழி.

சாதியும் தீண்டாமையும் சட்டப் பிரச்சனை மட்டுமே என்று சொல்லவில்லை.

தலித்துகளுக்கு எதிராக ஊரூராக நடக்கும் வன்கொடுமைகள் யாரால் செய்யப்படுகின்றன.

தலித்துகள் மேல் உண்மையான அக்கறையிருப்பவன், தன் வீட்டிற்குள்  செத்தாலும் ஜாதியை விடவே மாட்டேன் என்கிறவனை எதிர்ப்பானா,  அல்லது பொதுவெளியில் அடிப்படை வாழ்வுரிமையையே மறுக்கும்  ஆதிக்கங்களை  எதிர்ப்பானா? மனமாற்றம்  மெள்ள நிகழ்வது.   எதற்கு  முன்னுரிமை  கொடுத்து  எதிர்க்க வேண்டும்.

எது சுலபமோ அதை செய்வதுதான் புரட்சியா?

குறைந்தது  ஒரு  போராளிக்கு  எது முக்கியமாகப்படும்.  அல்லது  பட வேண்டும்.

கருவறைக்குள் நுழையும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை  இந்த  ஜனநாயக  நாட்டில் ஓட்டெடுப்புக்கு விட்டு பெரும்பாண்மையின் முடிவை ஏற்பதே சரியான தீர்வாக இருக்கும்.

காஷ்மீருக்கு பெல்பிசைட்டை ஆதரிக்கிறவர்கள். கடவுளுக்கும் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஓட்டால் நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுங்கள் சார். அவர் எல்லோருக்குமானவர்.

கோவில் நுழைவுப் போராட்டமும் கருவறை நுழைவுப் போராட்டமும் ஒன்றா சார்.

கோவில் நுழைவுப் போராட்டம் பலகாலம் எடுத்தாலும், சாதி உச்சிக் குடுமியில் நின்னு உலுக்கிகிட்டு இருந்த காலத்துலயே வெற்றி சார்.

படம் வைப்புப் போராட்ட்டம் ஒரு நாள் கூத்து சார். மீசைய மழிச்சபோட சரி சார். என்ன  சார்  சமூகத்துல  இந்த  போராட்டம்  உண்டாக்கின தாக்கம்.  இந்தக் கட்டுரையை எழுத வெச்சுதே அதுவே வெற்றி வெற்றின்னு சொல்ல மாட்டீங்கன்னு ஒரு மூட நம்பிக்கை சார்.

இதற்கு  பதில்  அன்றைக்கே  ஒரு  கேசைத் தாக்கல்  பண்ணியிருந்தால் இந்நேரம்  அட்லீஸ்ட்  ஹைக்கோர்ட்டாவது  பார்த்திருக்கும். சாய்நாத் கட்டுரைகள் போல் விவாதப் பொருள் ஆகி மக்களிடம் தாக்கத்தை கருத்துத் தூண்டலை உருவாக்கியிருக்கும்.

ஒன்றும் குடிமுழுகி விடவில்லை. இன்றைக்குக் கூட ’கருவறை நுழைவு’ அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று ஒரு கேஸ் தாக்கல் செய்யுங்கள். காண்ஸ்டிட்யூஷன்  பென்ஞ்ச்  வரைக்கும்  போகக்கூடிய சரியான கேஸ் சார் அது.

இட  ஒதுக்கீடு  போன்ற  பல  விஷயங்களில்  தமிழகம்  முன்னோடி, இது இன்னொன்றாக  இருக்கட்டும். அகில  இந்தியாவையும்   திரும்பிப்பார்த்து சிந்திக்க வைக்கும் PIL ஆக அது அமையும்.

சொம்மா தொட்டத்துக்கெல்லாம் பாப்பான் பாப்பான்கறது என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். குறைந்தபட்சம்  உம்ம  பர்த் சர்ட்டிபிகேட்டைக்கூட அது மாற்றாது.

சட்டத்தைவிட  சமூக  விழிப்புதான்  முக்கியம்  என்றால், அதற்கான பிரச்சாரத்தை அம்பேத்கரின் மற்றும் பெரியாரின் போதனைகளுடன் செய்யத் தெருவில்  இறங்குங்கள்,  இன்றே  தொடங்குங்கள், ஏழர! அது ஜனநாயகம்.

எடுத்ததெற்கெல்லாம் பாப்பான் சாயம் பூசி உங்கள் கம்யூனிச சாயத்தை இழந்துகொண்டு இருக்கிறீகள்.

எட்டு  கோட்  அடித்தாலும்  என்மேல்  காவி  ஏறாது.  அதற்காக  உங்கள் பேட்ஜோடு திரியவேண்டும் என்கிற முடை எனக்கில்லை.

இது இன்னமும் ஜனநாயக நாடு என்பதால்தான் இதைக்கூட ஒரு கம்யூனிஸ்ட்டிடம் விவாதித்துக்கொண்டு இருக்க முடிகிறது.

இதுவே ’உங்கள்’ நாடாக இருந்தால் இப்படி ஒரு கருத்தை எழுதலாம் என மனதிற்குள் நினைக்கத் தொடங்குவதாக உங்களுக்கு சந்தேகம் தோன்றும் போதே என் தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.

தன்னை  அடிப்பதற்கான  சவுக்கை,  இந்தா   எடுத்துக்கொள்  என  தானே கொடுப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.

தட்டி தூக்கி மாற்றுக் கருத்தாளனை வாடகை வீட்டிலிருந்தும் விரட்டுவதற்குப் பெயர்தான் பாஸிசம் பாஸ்.

ஹிட்லர் மட்டுமில்லெ முஸோலினி மட்டுமில்லே நாம செஞ்சாக்கூட அதுக்குப் பேர் அதுதான் பாஸ்.