Friday, September 17, 2010

எழுத்துக் கலை - அனுபவம் தெரிவு பார்வை

சு.சிவக்குமார்.

ரொம்ப நல்லாருக்கு சார்...கதையோட ப்ளோவும், அதற்கான நடையும் ரொம்ப நல்லாருக்கு.ஒரு குறும்படத்தை பார்த்த மாதிரி கதையின் காட்சிகள் அவ்வளவு நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.. இதுமாதிரி சிறுவர்கள் கதையை படிக்கையில் பஷீர்,அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி இவர்களின் ஞாபகம் தான் வருவதை தவிர்க்க முடிவதில்லை...முதல் தொகுதியிலையே சேர்த்திருக்க வேண்டியது. தரம் குறித்த தயக்கத்தில் தவிர்த்தது. இதைத் தட்டச்சும் போதுதான் கவனித்தேன் 40 வருஷத்து அனுபவம். முப்பது வருஷம் முன்னால் எழுதப்பட்டது.

தெரு கோவில் சிறுமி என்னில் ஒரு சிறுபகுதி பெரிய சிவன் கோயில் குளம் இப்போதும் எனக்குப் பெரியதாகத் தோன்றுமா என்று தெரியவில்லை. பாண்டிச்சேரி (புதுவை) போயிருக்கீங்களா?

புத்தகம் இல்லாததால் வகுப்பில் சேர்க்கமாட்டேன் என வ.உ.சி உயர்நிலைப் பள்ளியில் சொல்லிவிட்டதால் அறுபத்துமூவருக்கு ஆடையுடுத்தும் அசிஸ்டெண்டாக இருந்ததைப் பார்த்து கடிந்து கொண்டு புத்தகம் வாங்க காசு கொடுத்த தர்மகர்த்தா.

அம்பேத்கர் படத்தை முதலில் காட்டிய புகைப்பட கலைஞர் மற்றும் ஓவியர். வாசலுக்காய்த் தொங்கவிடப்பட்ட கருப்புத் தடுப்புத்துணி அவர் கை விலக்க, அவ்வப்போது வெளிச்சமாகும் அவரது குட்டி இருட்டு அறை, அர்த்தமற்ற ஆசையில், அங்கிருந்த தூரிகை ஒன்றைத் திருடி உபயோகிக்கவே தெரியாமல், இரவெல்லாம் தூக்கம் வராமல் மறுநாள் அவரிடமே திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்க,  நீ இதை செய்வாய் என எதிர்பார்க்கவில்லை கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்று அமைதியாக சொன்னதக் கண்டு அவர் முன்னாலேயே அழுதது.

செய்யாத தப்புக்கு திட்டி அடித்த டியூஷன் வாத்தியின் புது பேனாவைத் திருடி உப்பளத்துக் காவாயில் உடைத்துப் பொட்டது. 

இப்படி சின்ன சின்ன கேன்வாஸில் சிறுகதைகளாய், மனம் சப்புகொட்டி எழுத எழுத ஓட்டைப் படகு என்கிற சுயசரிதை நாவல் எழுதப்படாமலே மூழ்குவதைக் கண்டதில் கையறுநிலையில் உள்மனம் குமுற, காலம் கடந்து கொண்டிருந்தது கன்னத்தில் அறைய, திருமணத்திற்காய் ஜாதகம் தூக்கப்போய், அறைகுறையாய் ஜோசியம் கற்று அதுவே சூனியமாகி துவள வைத்து இஸ்லாமிய சாமியாரிடம் தஞ்சமடைந்து எழுதத் தலைப்பட, ஆறுமாத எழுத்தென்னை உயித்தெழுந்து மீட்டெடுக்க, ஆன்மீகக் கானலைத் துறத்தத் தொடங்கி, குழந்தையின் இழப்பில் கருப்புச் சங்கிலியின்  கள்ளத்தனம் தெளிந்து கனவு உடைபட்டு ஊசியும் உள்மன உந்துதலுமே உன்மத்தத்துடன் எழுதவைத்தது தெரியவர, எழுத கைவந்த இருமாப்பும்  இருட்டடிப்பில் உடைந்த மனம்  எழுதவராமல் எழுதாமல் இருந்த காலம் போய் எழுத வேண்டாம் என்ற மனக்குரங்கின் மந்தகாசத்துடன் அலுவலகத்தின் ஆரவாரப் பரபரப்பிற்கு முகம் கொடுத்து அழியப் போவது தெரியாமல் எம்ஜியார் கட்சியை விட்டு விலக்கப்படப் போவதற்கு இரண்டு நாள் முன்பாக, இன்றிலிருந்து நாற்பது வருடங்கள் முன்னால், வெளுத்துக்கொண்டு பனிவிலகாத காலையில், எவர்சில்வர் பாத்திரத்தை வலது கையில் பிடித்தபடி, எங்கள் வீட்டிற்கு எதிர் பக்க கொரடில், வீட்டோடு ஒட்டிய ஓடுவேய்ந்த கூரை மூடிய நடைபாதயில் வீட்டுச் சுவரில் இடது கையால் உராய்சியபடி,   பால் வாங்கப் போய்க் கொண்டு இருந்தேன்.

காலை நேரம் பாண்டிச்சேரி மெதுவாகவே எழுந்திரிக்கும். எல்லோரும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுத் தூங்குவதாக கம்பன் விழாவில் பங்குபெரும் மெட்ராஸ்காரனின் அறியாமை ஜோக்கிற்காக அல்ல. அது அந்த ஊரின் தாமஸப்புன்னகை. நீள்வட்டத் தட்டில் மைசூர் பாகைக் கிழித்ததைப்போல், இருபத்தியெட்டுக்கு மூன்று அல்லது முப்பத்தி இரண்டிற்கு மூன்றான தெருக்களில் ஊரே முடிந்துவிடும். எந்தப் பக்கம் திரும்பினாலும் இரண்டேகால் கிலோமீட்டர்கூட இருக்குமா என்பது சந்தேகம். ககூகுள் மேப்பிறக்கி, மூட அனானி பாண்டிசேரியின் நீல அகலம் சொல்லிப் பின்னூட்டம் போட்டு புரட்சி முடித்த பூரிப்பில் கெக்கெலிக்கும். நாற்பது வருடம் முன்னால் அனானி அதன் அப்பன் ஜட்டிக்குள் திரவமாய் இருந்த காலம். நான்கு புலவார்துகள்  (boulevard)  கோழிமுட்டையைப் பொத்திக்கொண்டிருந்த காலம். முத்துமாரியம்மன் கோவில் (பாரதி பாடியது தாகூர் கலைக்கல்லூரி செல்லும் பாதையில் சுடுகாட்டிற்கு முன்னால் வரும்), தெருவிலிருந்து இடதுகைக்காய்த் திரும்பி மகாத்மா காந்தி சாலையில் - கோழி முட்டையின் முதுகுத் தண்டு - திரும்பினால் எதிரில் சிவன் கோயில் பக்கத்தில் சோடா தயாரிப்பு - அந்த காலத்து கோலி மற்றும் பன்னீர் சோடா தயரிப்பு. தாளகதியில் ஏழெட்டு டிர்ரிட்ட கைச்சுற்றல் அப்புறம் ஒரு ப்ஸ்ஸ் பாட்டில்கள் விரலிடுக்கில் ஊஞ்சலாடி க்ளிக்ளிங்கிட்டு ஒதுங்கும் கடைதிறக்க மூறு மணியாகும், பொதுவாகவே சில்விஷமிகளின் கை சும்மா இருக்காது. வலது கையில் பாத்திரம் இடது கைக்கு என்ன வேலை கொடுப்பது. மாரியம்மன் கோவில் சுவரில் உராய்சத் தொடங்கிய கை. தெருமுனை கடை திறக்கப் பட்டிருக்கவில்லை. இங்குதான் இன்னும் இரண்டு வருடம் கழித்து   குமாரி பிரேமலதாவும் டபிள் யூ ஆர் சொர்ணலதாவும் ஓசியில் வாசித்து, அதற்கான என் உழைப்புப் பங்களிப்பாய் ஆனந்த விகடனும் குமுதமும் மெயின் ஏஜெண்டிடம் இருந்து வாங்கி, மார்புயரம் வரும் றாலி சைக்கிள் ஓட்டத் தெரியாமல், பெரிய தொளதொள முட்டி மறையும் காக்கி டிரவிசருக்குக் கீழே வெளேரென்ற வெற்றுக்கால் பெடலில் உராய்ந்து சிராய்க்க, பத்திரிகைக் கட்டுடன் வந்து சேர்ந்து கடையில் கீழ் வரிசைக் கொடிகளில் கொஞ்சம் போல தொங்கவிட்டு அந்தப் படிக்கட்டிலேயே, ஓரமாய் உட்கார்ந்து, புரிந்து புரியாத மேற்படிப் பெயர்களில் எழுதிய - பெண் பெயரில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்  இக்கால ப்ளாகுகளுக்கு, முன்மாதிரியான, தாமரைமனாளனை -  படிக்கப் போகிறேன் என்பது தெரியாமல், இடது கையால் அந்தக் கடை அப்புறம் தன் பையனை விட கொஞ்சமே வயசு கூடி இருந்த பெண்னை இரண்டாந்தாரமாய் கட்டிக்கொண்ட வேட்டியை எப்போதும் மடித்து மட்டுமே கட்டும் மாவுமெஷின்காரர் கதவில் சுவரில் அடுத்து ஒரு வீடோ இரண்டு வீடொ தள்ளி தார்ப்பாலினால் மறைக்கப்பட்ட மாட்டுத் தொழுவம் வர சுவராகவே பாவித்து இடது கையால் தடவியபடி வந்தவன் மாட்டுவாலைத் திருக முயல வாலுக்கு பதில் பள்ளம் தட்டுப்பட மா.. என்ற மாட்டுக் கத்தலுக்கு பதில் டேய் யார்ராது என்கிற பெண்குரல் அலற அந்தக் குரடிலிருந்து அடுத்த கணம் எதிர் சிவன் கோயில் வாசலில் தஞ்சமடைந்து கோடு பிசகாது நேர்க்கோட்டில் சாவதான  நடைபோட்டு, பால்காரர் கடை நோக்கி இன்னும் மூன்றாண்டுகள் கழிந்த பிறகு, வீட்டிலிருக்கும் ஹிந்து பேப்பரைத் திருடி பழைய பேப்பர் கடையிlல்  போட்டு, அதில் வரும் காசுக்கு ரத்னா டாக்கீசில் ஒரு வார்த்தைகூடப் புரியாத ஹாலிவுட் படம் பார்த்து, உலக சினிமா ஆர்வத்திற்கு வித்திட்டுக்கொள்ளப் போகிற விஷயம் தெரியாமல், தார்ப்பாலினைத் தட்டுத் தடுமாரித் தூக்கி, குட்டை விளக்குமற்றுடன் வெளியில் வர, வேலைகாரியோ வீட்டுக்காரியோ  - பல்தேய்க்கும் முன்னால் பரட்டையாய், எல்லாம் ஒரெ மாதிரிதானே இருக்கிறார்கள், கையிலிருந்த பாத்திரத்தை துடைப்பது போலும் ஊதுவது போலும் போக்குகாட்டி முன்துருத்திய கூநெஞ்சு அல்லது கோழி நெஞ்சு படபடக்க ஒன்றுமே தெரியாமல் பாவ முக பாவத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில் - சமுதாய முன்னேற்ற சமரர்களையும், தீவிர ப்ளாகர்களையும், ஆய் சாஸ்த்திரிகளையும், உன்னத இலக்கியரையும், ஆடு மாடு மரம் மட்டை என அனைத்தையும் தடவிக் கொடுத்தபடி பெரிய கை கொண்டு பிரபஞ்சத்தைத் தழுவி மனிதம் வளர்க்கும் சாத்வீக சாந்தங்களையும் ஆண்மையற்ற அனானிகளையும் தந்திரோபாயமின்றி, ஒரே சமயத்தில் எல்லா திசைகளிலும் போர்முனைகளை திறந்து கொண்டு நாற்பது வருடம் கழித்துத் திண்ட்டாடப் போகிறோம் என்பது அன்றைக்கே தெரிந்திருந்தால் நீண்ட கால்களுடன் வாழைப்பழ சுப்பிரமணி நெடுந்தூரம் பொனதுபோலவோ அல்லது த்ரூஃபோவின் நானூறு அறைகளில் சீர்திருத்தப் பள்ளியைவிட்டு ஓடும் சிறுவனைப் போலவோ ஓடியிருக்கலாம்.

ஓடினாலும் வாழைமண்டியின் குலக்கொழுதை வில்லியனூரைத் தாண்டும் முன்பாகவே திரண்ட சொத்து, விரட்டிப் பிடித்து விட்டது.

நானூறு அறை பட்ட சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடும் சிறுவனுக்குக் கட்டற்ற கடல் விரித்தான் த்ரூஃபோ.

வாழ்க்கையை வாழ்ந்து படித்தவன்தான் இலக்கியம் படைக்க முடியும்.

இலக்கியத்தைப் படித்த பயிற்சியினால் உருவாக்கும் எழுத்து இலக்கியம் போல தோற்றமளிக்கும் - தார்ப்பாலின் தடுப்பிற்குப் பின்னால் இருந்தது மாட்டுடையதா மனிதனுடையதா எனத் தடவித் தெரியாதது போல மொண்னையாகவே போய் முடியும்.

வாழ்க்கையைப் பார். வாழ்ந்து பார். வாழ்ந்ததைப் பார்.

எழுது.

வயிறார உண்டு காலாற நடக்கும் வழிபோக்கனிடமெல்லாம் வழிகேட்டுக் கொண்டிருக்காதே.

நடந்துகொண்டிருப்பாய் எனினும் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டிருப்பாய்.

திருகித்திருகி எழுதுவதல்ல, திருகுவதற்காக எழுதுவதுதான் எழுத்து.

எழுத்தாளன் கால்கள் பாதையில் நடப்பவை அல்ல. கால் உருவாக்கும் பாதை அது.

இலக்கியம் தீவிரமான விஷயம்.