Saturday, September 18, 2010

சுயகெளரவம்

பெஸண்ட் நகரில் விச்ராந்தி என்று ஒரு ஹோட்டல் உண்டு. பெஸண்ட் நகரே பணம் பற்றிய பெரிய கவலைகள் இன்றி பெரிசுகள் விச்ராந்தியாய் வாழுமிடம். வீட்டின்  கொழுந்துகள், வெளிநாட்டில்  பொட்டிதட்டிக் கொண்டிருக்கும். இன்னும்  இளம்  தளிர்கள்  பள்ளியில்  படித்துக்  கொண்டிருக்கும்  போதே, விமானப் படிக்கட்டில் வேகமாய் ஏறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்.  எப்படி  ஸ்ரீரங்கத்தின் அபார்ட்மெண்ட்களில் விச்ராந்திகளை மட்டுமே சந்திக்க முடியுமோ அது போல. பீச்  ஹோம்  அவின்யூவிற்குப்  பின்புறமுள்ள  இண்டு  இடுக்குக் கட்டிடங்களைத் தவிர அனேகமாய் மொத்த பெஸண்ட் நகரும் விச்ராந்தியாகவே வாழ்ந்து கொண்டிருந்தது. வாடகையை விட  அநேக வீடுகள் விலைக்கு மட்டுமே விளம்பரங்களில் இடம்பிடித்தன.

மனைவி, அன்பு கொண்டாடிக்கொள்ள தாம்பரத்திலிருந்த  தாய்வீட்டிற்குப் போயிருந்தாள். டிக்காக்‌ஷன் குளிர்பதனப்பெட்டியில் இருந்தும், காஃபி போட்டுக் கொள்ளுவதை ஒரு வேலையாய் செய்தாக வேண்டும்.  காஃபியை வீட்டில் சுயமாகத் தயாரித்துக் குடிப்பதென்பது தொடர்ந்த பன்முக உழைப்பை, கூர்த்த  கவனத்தைக்  கோரி  நிற்கிற  காரியம். ஆனால்  எழுத்தையும் கணினியையும்  யோகமாய்க்  கொண்டிருப்பவனுக்கோ  காஃபி கட்டாயத்தேவை, கம்யூனிஸ்ட்டுகளுக்கு தேனீர் போல.

குடித்ததன் சுவை நாக்கில் உட்கார்ந்திருக்கையிலேயே சிலிண்டரை ஞாபகமாய் அணைத்து, டம்ப்ளர் மற்றும் வட்டிலை வட்டக்கரை கெட்டிப்படும் முன்னர் துலக்கி, மேடையில் கவிழ்த்து, சிந்தியிருக்கக்கூடிய பால் காஃபி சர்க்கரை இடுக்கி இத்யாதிகளத் துடைத்து, நனைத்த துணியால் மேடையை சுத்தம் செய்து, பின் அதைக் கசக்கி, ஜன்னல் கதவு திறந்து காயப்போட்டு, காகம், புறா போன்றவை கவிதை என்றெண்ணி சமையற்கட்டுக்குள் நுழைந்து களேபரம் பண்ணிவிடாதிருக்கும் பொருட்டு, துணி பாதி காய்வதைக் கண்காணித்து ஜன்னலை மூடி கொக்கி போட்டு திரும்ப வந்து, ஏஸி அறையிலிருக்கும் ரிக்லைனரில் உட்கார்ந்து பக்கவாட்டு சக்கரம் வைத்த தள்ளு டீப்பாயின் மேல் அமர்ந்திருக்கும் மடிக்கணினியில் தமிழ் மொழியை முடிந்தவரை இரண்டு இன்ச்சாவது உலகத்தரத்திற்கு உயர்த்துவது எப்படி என யோசித்து விட்ட இடத்திலிருந்து இலக்கியப் பணியைத் தொடர வேண்டும்.

ஒரு மாஜி எழுத்தாளன் தன் வீட்டில் காஃபி குடிப்பதற்கு படும்பாட்டின் அவலத்தை  எண்ணி, இந்தியாவில்  பிறந்தமைக்காக  நொந்து கொண்டேன்.  அடுத்த ஜென்மத்திலேனும் நான் அனுதினமும் பூஜிக்கும் மகரிஷிமகாயோகி அருள்பாலித்து,  ஐரோப்பிய  எழுத்தாளனாய்   பிறக்க வைக்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன்.  

தமிழை வாழவைப்பதற்கான கருத்துக் கருவூல வழிவகைகள் மட்டுமின்றி, கோடிக்கணக்கில்  மலிந்து  கிடக்கும்  வரி  ஏய்ப்புகளைக் கண்டுபிடிப்பதற்கான  அலுவலக  அத்யாவசியங்களும்  கணினியை, ஆக்கிரமித்திருந்தன. அரசாங்க கஜானாவின் கண்னைக் கட்டி, OMR ல் மட்டுமே தகவல் தொழில் நுட்ப வகையறாவில் ஏகப்பட்ட கட்டிடங்களை கட்டிக்கொடுத்து கோடிக்கனக்கில் சேவை வரி ஏய்க்கப்பட்டுக் கொண்டு இருப்பது அதில் இருந்தது. தேசிய அளவில் கிட்டத்தட்ட பன்னிரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட சேவைப்பதிவுகள் செமிக்கப்படு இருந்தன.  பழைய சர்வர் நிரந்தரமாக முடக்கப்பட்டு புதிய மென்பொருளை அடித்தளமாகக் கொண்ட பதிவு முறைக்கு நிர்வாகம் மாறிவிட்டது. பொருள் மற்றும் சேவை வரி அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வருகையில் இது திரும்பவும் மாறிவிடும்.  தில்லியின் தலைமை நிறுவனமே தலைமை தகவல் ஆணையரிடம், எம்மிடம் அவ்வளவு தகவல் கிடையாது என தகவலறியும் சட்டத்திற்குக் கைவிரித்த டேட்டாபேஸ் எனது கணினியிலேயே இருந்தது. அதுவுமல்லாது கடந்த நான்கு வருடங்களில் சென்னையில் இருக்கும் அனைத்து சேவை நிறுவணங்களும் மாதாமாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டி இருக்கும் சேவைவரித் தொகைகளின் சென்ற மாதம் வரையிலான டேட்டாபேஸும் இதில்தான் இருந்தது. சேவை  வரி  விசாரணைக்கான  அடிப்படைத்  தேவைகளான இரண்டையும்  சேகரிக்க இரவு பகலாக பட்ட கஷ்டத்தில் இடது கையால், நான்கு நாவல்கள் எழுதி இருக்கலாம்.

அறிவு திறமை கடின உழைப்பு இவை மட்டுமே வெற்றியையும் உரிய அங்கீகாரத்தையும் ஈட்டித் தரும் என்பது ஆரம்பப் பள்ளியின் எளிய போதனை. வாழ்க்கைப்  பல்கலைக்கழகத்தின்  புகட்டல்கள் அனந்தம். அவை நேரெதிர் சமரச சாதுர்ய மொழியில் எழுதப்பட்டவை.

அதிவீர பராக்கிரம சூரன் நானென ஆதிமனிதனாய் முஷ்டி மடக்கி மார்பில் குத்தி  நாடகீயமாகக்  காட்சிப்படுத்திக்  கொண்டாலும், ஒருவனுக்கு ஆடுகளம் அவசியம் வேண்டும். அதில் அவனே தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க, அறைக்குள்  அனுசரித்துப்  பாதபூஜை  செய்தாக வேண்டும். சாவி தொலைந்த பூட்டென சமத்தாய் இருத்தல் அடிபடைத் தேவை. பஜனை சத்தம் மட்டுமே பரவசப்படுத்தும் பக்த ஜனசபை.  பஜனை மட்டுமே  பீடத்துக்  கடவுளுக்குப்  புரியும்  ஒரே  பாஷை. தனித்திறன் முனைப்பு அனைத்தும் அடிமைத்தராசில் மட்டுமே அளக்கப்படும்.  அவலத்தை விழுங்கிக்கொள்ள மனமற்றுப் போனதினால் மார்க்கமற்று, தொலைதூர மாற்றலுக்கு எதிர்முகம் காட்டி விடுப்பிலிருக்கையில் காஃபி போடுகிற இன்னோரு காரியத்தையும் சுமக்க மனம் கசந்தது.

ஒரு  நாள்  இந்த  அலுவலகம்  புரிந்துகொள்ளும்,  ஏதேனும்  ஒரு  அதிகாரி ஆட இடம் கொடுப்பார், கோடிக்கணக்கான ஏய்ப்பை கட்டவைத்து 15 லட்சம் வரிவிலக்குடன் கூடிய பரிசும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து சிறந்த அரசு ஊழியனுக்கான விருதும் பெருவேன் என்கிற மெளடீகக்கனவை சுமந்தபடி, காஃபி  குடிக்க அரசு  குடியிருப்பிலிருந்து, சற்றுத்  தொலைவிலுருந்த விச்ராந்தி ஹோட்டலுக்கு சென்றேன்.

வெளியில் வருகையில் சலுகை அறிவிப்பு வந்திருந்தது. கைபேசிக்கு மீள் கணக்கேற்றம் செய்ய ICICI வங்கிக்கு சற்று முன்னே உள்ள பாய் கடைக்கு நுழைய முனைகையில் செம்பட்டை முடியுடன் ஏழெட்டு வயதுள்ள ஒரு பெண்குழந்தையைப்  பார்த்து  விளையாட்டாய்  சிரித்தேன். பதிலுக்கு சிரித்தது. பாக்கெட்டில்  கைவிட்டேன். ஒரு  ஐந்து  ரூபாய்  நானயம் தட்டுப்பட்டது எடுத்து நீட்டினேன். அது திரும்பி தாய் முகம் நோக்கிற்று. வண்ண வண்ண பாசி மணி ஊசி மணி மாலைகளைப் பழைய துணிவிரிப்பில் பரப்பிய நடைபாதை கடைமுன் அமர்ந்திருந்தவள்

மால வாங்க்கோ சாமே

பரவால்லே

என்றபடி காசைமட்டும் குழந்தைக்காய் நீட்டிக் கொண்டு இருந்தேன். குழந்தை  காசை  வாங்கவில்லை. அவளோ  மாலை  வாங்கச்  சொல்லி மட்டுமே  வற்புறுத்தலில்  இருந்தாள். குழந்தை  தாயையும்  என்னையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு இருந்தது.

இல்லம்மா

என்றபடி காசைத் திரும்ப பாக்கெட்டில் பொட்டுக் கொண்டு அன்றைய இலவச திட்டத்தை கைபேசிக்கு ஏற்றியபின் பாதாமில் தயாரித்த பத்து ரூபாய் பர்ஃபி இரண்டை வாங்கிக் கொண்டு வெளியில் வருகையில் அந்தக் குழந்தையிடம் ஒன்றை நீட்டினேன். சொல்லிக் கொடுத்துப் பழக்கப் படுத்தியதைப்  போல  குழந்தை, தாய்முகம்  பார்த்தது. அவள் தலையாட்டினாள். குழந்தை  வாங்கிக்  கொண்டது. மற்றதை வாயில் போட்டுக் கொண்டேன். எப்போதையும் விட ஏகமாய் இனித்தது அல்லது அப்படி எனக்குத் தோன்றியது.