Saturday, September 18, 2010

சுயகெளரவம் - வாக்கு

வக்காளி.. அவனை உடக்கூடாது தோழர். இன்னக்கி ரெண்டுல ஒன்னு பாத்தே ஆவனும்.

என்ன தோழர் இப்புடிக் கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமப் பேசுறீங்க.

பின்னாடியே செருப்புத்தேய அலையறவனுக்கில்ல தெரியும்.

ஏன் நான் உங்க கூட வந்ததில்லையா?

தோழர் அவுரு என்ன இப்ப உங்களையா விமர்சிக்கிறாரு. நீங்க எதுக்குக் கோவப்படறீங்க?

என்ன தோழர் அவுருதான் சின்ன வயசு, ஏதோ கோவத்துல நிதானம் இல்லாமப் பேசராருன்னு பாத்தா..

தோழர் என்னைய முட்டாள்னு கூடத் திட்டுங்க நிதானமில்லாமென்னா எனக்குக் கெட்ட கோவம் வரும்.

பின்ன என்னா தோழர் அன்னிக்கி மீட்டிங் போடறதுன்னு முடிவான ஒடனயெ, அந்தத் ..... பேரைச் சொன்னது யாரு.

உங்குளுக்கு உடன்பாடில்லைனா அன்னிக்கே கடுமையா மறுத்திருக்க வேண்டியதுதானே தோழர்.

நான் சொன்னவங்களைக் கூப்டிருந்தா பிரபலமான ஆளா இல்லாட்டியும், இந்த அலச்சல் இருந்திருக்காதில்ல தோழர்

மீட்டிங்குக்கு வந்த ஹால் நெரஞ்ச கூட்டத்தப் பாத்துட்டு. சூப்பர் தோழர்னு கையப் புடிச்சிக் குலுக்கினது யாரு. எடுத்த முடிவுல முன் பாதி சரி பின்பாதி... அதையும் சக்ஸசா முடிச்சிக்காட்டறேனா இல்லையான்னு பார்க்காம நாக்குமேல பல்லு போட்டுப் பேசறது நல்லால்ல தோழர் சொல்லிட்டேன்.

மேட்டரை வுட்டுட்டு ரெண்டுபேரும் கட்டிப் பொறளுவீங்கப் போல இருக்குதே. நாயர் கடைல நாலு டீ சொல்லுங்க தம்பி...

இவர்களுக்கு முகமில்லை பெரிய பெயரில்லை. சமூகத்தில் இவர்கள் எல்லாம் ஆட்கள் கூட இல்லை. பூமியைப் புரட்டிவிடும் நெம்புகோல் கனவுடன், சார்ந்திருக்கும் கட்சியின் விளிம்பில் இருப்பவர்கள். தாம் செய்யும் ஒவ்வொரு சிறு காரியமும் கனவு மெய்ப்பட ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்கிறதா என தமக்குத் தாமேயும் சக தோழர்களோடும் சதா சர்வ காலமும் சுய விமர்சனம் என்ற பெயரில் உரசிப் பார்த்துக் கொண்டே வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள். யதார்த்த உலகின் அவலங்கள் கண்ணில் பட்ட அளவிற்கு வாழ்வு தூர்ந்து வைத்திருக்கும் ஆழ்மன சூழ்ச்சிகள் பட்டு அறியாத பசுமரங்கள்.

இந்த இளைஞர்கள் என்னிடம் வந்து உலக சினிமாவிற்காக ஒரு விழா எடுக்க வேண்டும் என்று சொன்ன போது, அதற்கு நிதி கேட்டபோது அதை இவர்கள் கேட்டதாக நினைக்கவில்லை, லூயி புனுவலும் த்ரூஃப்வும் வந்து என்னிடம் யாசித்ததாக உணர்ந்து உள்ளூர அவமானப்பட்டுக் கலங்கினேன். இதெல்லாம் யாராச்சும் செஞ்சே ஆவேண்டிய வேல. இழுத்துப் போட்டு செய்யனும். இன்னக்கி உங்களோடத் தோளோடத் தோள் நின்னு செய்யனும்னு நான் ஆச மட்டுந்தான் படமுடியும். என்னால் முடியக் கூடியது ஒன்று உண்டு, சினிமாவின் அந்த உன்னதக் கலைஞர்களுக்காக நான் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறேன், என்பதை தாழ்மையுடன் இல்லீங்க அது அவங்களைக் அவமானப்படுத்தறதா ஆயிடும் எனவே பெருமையோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

விழா முடிந்து இன்றுவரும் நாளை வரும் ஆள் வரும் செக்கு வரும் தபாலில் வரும் என்று காத்திருந்து பூசானம் பூத்ததுதான் மிச்சம்.

காற்றிலே  கலந்து, பேசிய  உடனேயேக்  கரைந்துவிட்ட  பேரோசை அதுவெனத் துலங்கவே மாதம் ஆனது.
விழா முடிந்து சினிமாக்கள் திரையிடப்பட்டு எல்லோரும் அடுத்த வேலை பார்க்கப் போய்விட்ட பின்னும் வைத்த செயின் மேல் வட்டி மட்டும் வளர்ந்து பெரிதாகிக்கொண்டிருந்தது. எதுவெதுவோ விவாதப் பொருளாகி வார்த்தை தடித்த போதிலும் தனி இழப்பு மட்டும் பேச்சில் தட்டுப்படவே இல்லை. மாறாக  செயினுக்கு  உரியவன்  வீட்டிலொரு  பொய்யை நாள்தோரும்  மெருகேற்றி, சண்டை வரும்பொதெல்லாம்  டீ  சொல்லி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தானேயன்றி யார்மேலும் சழக்குரைக்கவைல்லை.

அறிவிக்கப்பட்ட ஐயாயிரத்தை மீட்டெடுக்க முதலில் ஐவரணியாய்க் கிளம்பியது, அவரது அலுவலக இரும்பு கேட் முன்னால் போய்நின்று கைபிசைந்து சலித்து எதிர் கடையில் டீ குடித்துக் கலைந்தது, ஸ்டூடியோ செல்வதென முடிவெடுக்கையில் நான்காக இருந்தது, வாயிலில் சந்திக்கையில் மூன்றானது. போய்நின்ற பொவிஷிலேயெ வாட்ச்மேனால் தடுக்கப் பட்டனர். திரும்பத் தலைப்பட்ட தருணத்தில் ஒருவன் பேசிய வட்டாரச் சொல்லில் வசீகரிக்கப்பட்ட பெரியவர் தன்னூரைச் சொல்லி நெருங்கியதில் உள்நுழைந்து படப்பிடிப்பை வாய்பிளந்து வேடிக்கை பார்ப்பதாய்க் காலம் கழிந்துபோய்க்கொண்டு இருக்கையில், வந்த காரியம் பொறியில் தட்ட, கனவு மீண்டு, பேச கிட்ட நெருங்கையில், முகம் திருப்பி உள்சென்றது அரிதாரம். காத்திருப்பாய்க் காத்திருக்கையில் அவரவரும் தத்தம் பொருட்களுடன் கலையத் தொடங்கையில்தான் புரிந்தது வெளியேற்றம் வேறு திசையில் என்பது.

திரும்ப இரண்டு பேராய் அலுவலக வாயில், அடம் பிடித்து மேனேஜர் சந்திப்பு. அப்படி ஒரு விஷயமே பேசப்படவில்லை எனத் தெரியக் கூனியது உள்ளம்.

இதற்குள் ஆறுமாத காலம் ஓடிவிட்டது.

அவரவர் வேலை, ஒழியக் கிடைத்த நேரத்தில் தான் உலக உத்தாரணம் சினிமா  ரூபத்தில். சந்திக்கப்  பேசி  முடிவெடுக்கையில்  ஒரு  வாரம் ஓடியிருக்கும். எல்லோருக்கும் வேலைதான் தொண்ணை, உள்ளே இருப்பது எண்ணெய் கூட இல்லை என்ற போதிலும். மனதிற்குள் ஒரு மெழுகுவர்த்தி வாழ்க்கைக்காற்றின் அலைகளில் நனைந்தணையா வண்ணம் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

தான்  சொல்லி  அழைக்கப்பட்ட  காரணத்தால், இழப்பை  ஈடுகட்ட வக்கில்லை என்றாலும் தன் கணக்கில் ஏற்றிக்கொண்டு, விட்டேனா பார் என்று புறப்பட்ட அம்பு, இரண்டு பிரமுகர்கள் இருக்கையில் இடைவெட்டி புகுந்ததால் இந்தமுறை இலக்கில் தைத்தது.

என்ன  அங்க  மணி  இல்லியா. நா  என்னிக்கோ  குடுக்க  சொன்னத்தை இன்னமும் குடுக்காம என்ன பண்ணிகிட்டு இருகீங்க, அவர்கிட்ட, செக்... இல்லை  வேனாம்..  கேஷாவே  குடுத்துடுங்க. குடுத்துட்டு  எனக்கு சொல்லனும் என்ன. ம். சாரி தப்பா எடுத்துக்காதீங்க, எல்லாத்தியும் நானே பார்க்கனும், பொறுப்பா  இவங்க  செய்வாங்கன்னு  யார்கிட்டையும்  நம்பி விட்டா இப்புடிதான் ஆகிப் போகுது.

தேய்ந்த செருப்பில் மாயை கலைந்ததால் ஒப்புக்குத் தலையாட்டி அப்போதே அலுவலகம் நோக்கிப் புறப்பட்டது அம்பு.

ஃபோன் பண்ணியிருக்காரு எனச்சொல்ல இரும்புக்கதவு ஒருக்களித்து வழிவிட்டது.

உள்ளே போய் மணி கேட்க மணி சொன்னார்கள்.

மணியைக் கேட்க,  தன்னிடம் பேசவே இல்லையே என்று சொன்னது.

மடையனாக்கப் பட்டுவிட்டோம் என்ற கோபத்தில் கூர்த்தது முகம்

அப்ப ஸ்பாட்டுக்கே திரும்பவும் போகவா

தீவிரம் புரிபட எப்படி ஃபோன் பொடுவது யார் போடுவது என்று எல்லோரும் கைபிசைய, பெரிசொன்று வந்து பேசியது. இங்கேதான் அம்பு இருக்கிறது, விட்டால்  இரவு  வாசலில்  படுத்துவிடும்  என்ற  செய்தி மொழியற்று தொலைகடந்தது

தம்பி உங்குளுக்கு செக்கு...

இல்லை கேஷாவே குடுக்கதான் என் எதுர்லயே சொன்னாரு வேனும்னா இன்னொருக்கா ஃபோன் போட்டு கேளுங்க.

வந்த பணத்தை அனைவரெதிரிலும் வாசலில் வைத்து எண்ணியபோது கோட்டையைப் பிடித்ததைப் போல், மனம் குதூகலித்து கோஷமிட்டது.

இவன் வயதொத்த ஏராளமான இளைஞர்கள் தாறுமாறாக வாசலில் நின்றிருந்தனர், தலைவனின் கார் பார்க்க.