Tuesday, September 21, 2010

எழுத்துக் கலை - உதாசீனம்

மணிகண்டன்

கதை ரொம்ப நல்லா இருக்கு மாமல்லன்.நன்றி. எந்த மணிகண்டன் எனத்தேடி. ட்விட்டரில் நடு இரவில் ‘அப்பப்ப அப்படித்தான் செய்யணும்’ அமெரிக்க நண்பர்களுக்குப் பகலல்லவா என்ற ஆள். தேடிப் போய் குழந்தை பற்றி எழுதி இருந்ததைப் படித்து. இலக்கிய மணிகண்டன் நானில்லை தோழர் மணிகண்டன் நானில்லை ஆனால் வினவில் பின்னூட்டம் எழுதும் மணிகண்டன் நான்தான் எனச்சொல்லி அதற்காக ட்விட்டரில் அன்ஃபாலோ போட்டுவிடாதீர் என்ற, யுவாவுடன் சாரு-சுஜாதா சமரில் ஈடுபட்ட ஆள் எனத்தெரியவந்தது. உமக்கு என் கதை பிடித்ததில் மகிழ்ச்சி. பரவாயில்லை கொஞ்சம் கூர்மதிக்குதான் நம்கதை பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

'போர்வை’ - கதை நடந்தபோது ஐந்தோ ஆறோ படித்துக்கொண்டிருந்தேன். எழுதியபோது எனக்கு 21. 1981ல் உமக்கு வயது என்ன?

பாண்டிச்சேரி பெருமாள் கோவில் தெருவில் கோயில் சுவருக்கு எதிரில் ஐந்து  வீடுகளுக்குள்  ஒன்று, பாரதிதாசன்  நினைவு  இல்ல  நூலகம் பத்து பதினைந்து வீடு தள்ளி இருக்கக்கூடும்.

இந்தக்  கதையை  எழுதியபோது  சென்னை  வாசம். பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பில் கோட் அடித்து இருந்த நேரம்.

முதல் வருட தமிழிலக்கியத்தில் 1978ல் இண்டர்னல் ஆங்கிலம் ஃபெய்ல் - சக மாணவனான வெப்பேரி கருப்பனை எருமை மாடே என குருவில்லா ஜேக்கப் என்கிற ஆங்கிலப் பேராசிரியை திட்டிவிட்டார் என்பதற்காக அவர் தனது நாற்காலியில் உட்கார்ந்திருக்கையிலேயே ‘மச்சி ங்கோத்தா வெள்ல வாங்கடா’ என  அறைகூவல்விடுத்து  பேராசிரியையின்  பின்புற கரும்பலகையில் மாஸ் கட் எனத் தமிழில் எழுதி  - இன்க்லீஷில் எழுத ஸ்பெல்லிங் தெரிய வேண்டாமா? - எல்லோரும் வெளியில் வர கதவை மூடி தாப்பாள் போட்டு குச்சி செருகி ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே மன்னித்துக் கதவு திறந்து விட்டதில் எனக்கு மீசையுடன்  -4- மார்க் கூட இருந்த  22 பேருக்கு  0. பிறகு எல்லோரும் மன்னிப்பு கேட்டதில் பூஜ்யமெல்லாம் கீழொரு வளைவிழுத்து a  ஆப்செண்ட் ஆனது. திரும்ப எழுதச் சொல்லி எல்லோருக்கும் பாஸ்மார்க் ஆனது. -4- மீசைக்கிடையில் எதையும் செருக முடியாமல் சாரி மேன். எனிடே யூகேன் இம்ப்ரூவ் யுவர் மார்க்ஸ்  எனச்சொல்லி  தள்ளிவிட, அதற்குப்பின்  நான்கைந்து செமஸ்டர்களிலும் மினர்வா நோட்ஸையே கொண்டுபோய் தொடைக்கடியில் புரட்டிப் பார்த்து - முழுஸ்ஸா பார்த்து எழுதினதை பிட் அடிச்சேன்னு சொல்ல அறவுணர்ச்சி இடம் கொடுக்கவில்லை - எழுதியும் பாஸாக  முடியவில்லை. ஏழாவது செமஸ்டருக்கு பணம் கட்டி குருவில்லா மேடம் பாவப்பட்டு - நான் எதுவும் எழுதாமலே - தர்மத்துக்கு பாஸ்மார்க் போட்டுக்கொடுக்க, அதைக் கொண்டுபோய் மெட்ராஸ் பலகலைகழகத்தில் கொடுத்ததோடு சரி. அப்புறம் அதை வாங்க உள்ளே நுழையவே இல்லை.

சில ஞாயிறு மதியங்களில் பல்கலைக் கழக படிக்கட்டுகளில் உட்கார்ந்து ’வீதி’ நாடகத் தயாரிப்பில் பங்குபெற்றிருக்கிறேன். கேண்டீனில் மதிய ப்ரெட்  ஆம்லேட்  தின்றுவிட்டு,  எம் ஏ வும்  எம்ஃபில்லும் படித்துக் கொண்டிருந்த சிநேகிதிகளிடம் இடைவேளைகளில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பலமுறை வளாகத்தின் பல நிழற்படிகளில் கதைகள் எழுதி  இருக்கிறேன். ஒருமுறைகூட  உள்ளேபோய்  என்  பட்டம்  என்ன ஆயிற்றென்று  கேட்கவில்லை. ஆக  டிகிரி படிப்பை மூன்றைரை ஆண்டுகள் படித்தும் டிகிரி இல்லை.

“படித்திருக்கிறார் எனினும் பட்டதாரியல்லர்” என்று என் முதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதற்காகவே இலக்கிய ரொமேண்ட்டிஸத்தில் டிகிரி வாங்குவதில்லை என்பதை ஒரு மத கோட்பாடு போலவே கடைபிடிக்கத் தொடங்கினேன்.

இந்தக் கதையெழுதிய அடுத்த மாதத்தில் தந்தை இறந்துவிட எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்பது டிகிரி வாங்காமல் இருக்க இன்னுமொரு காரனமாயிற்று.

0 போட்டு பின் a ஆப்செண்ட் ஆகி திரும்ப எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டு பாஸான  22 பேரில்  ஒருவன், அலுவலகத்தில்  2002 முதல் சூப்பிரென்டென்டெண்ட்  ஆக  இருக்கிறான். எல்லோர்  முன்னிலும் அலுவலகத்தில் அவன் எனக்கு சார்தான். எனக்கும் டிகிரி இருந்திருந்தால் என் தந்தை இறந்த தருணத்தில் நான் இப்போதிருக்கும் இன்ஸ்பெக்டர் பதவியில்  அன்றே  சேர்ந்திருக்கலாம்.  அனுதாப  அலைகள்  கருணையுடன் வீசிக்கொண்டிருந்த காலம்.

சேர்ந்து ஆறே மாதங்களில் வேலையை ராஜினாமா செய்து மதுரையிலிருந்து  காவியுடன்  நடந்து, மாட்டுவண்டி, பஸ்ஸெனப் பயணப்பட்டு, வழியில் பட்ட கிராமமொன்றின் தெருவோர கோயில் பூசாரியால்  வடநாட்டு  சாதுவென  வசீகரிக்கப்பட்டு, இரவு விருந்தோம்பப்பட்டு, மறுநாள்  காலை, உள்ளிருந்த  டேண்டெக்ஸ் ஜட்டி பூசாரி கண்ணில் படாதவண்ணம் சமாளித்து, நிலக்கோட்டை எஸ்பிஐக்குப் போய்  வண்ணதாஸனை  சந்தித்து, வீட்டில்  உணவளிக்கப்பட்டு, ஜெயகாந்தனை  ஒரு  கை  வெளியில்  தள்ளிற்று,  வேறுவழியில்லாமல் அவர்  வீட்டைவிட்டு  வெளியேறினார். நீங்கள்  வேண்டுமென்றே வந்திருக்கிறீர்கள், அம்மாவுக்காகவாவது  நீங்கள்  திரும்பிச் செல்லவேண்டும்  என்று  அறிவுருத்தப்பட்டு,  திங்கட்கிழமை  அலுவலகம் போனால் ராஜினாமா கடிதமா வரவே இல்லையே..

அலட்சியப்படுத்தப்படும்  பொறி  எரிமலையாவதும், ஆழ்கடல்  என ஆரவாரப்பட்டது கை நீராவதுமான அபத்த நாடகம். 

டிகிரி இல்லை என்பது பற்றி எனக்கு என்றுமே குறை இருந்ததில்லை. சமீபத்திய அலுவலகப் பிரச்சனைகளில் கீழ்நிலை குமாஸ்தாவிலிருந்து வந்தவன் என்றபோதோ வெற்றுப் ப்.யூ.ஸி என்று அவமானப் படுத்தப்பட்டபோதோ கூட வருத்தமே பட்டதில்லை. யாருன்னு காட்டாமல் சாகமாட்டேண்டா என வைராக்கியம்தான் குமுறியிருக்கிறது.

பலவாரங்கள்  முன்  ஸி.பி.ஐ -  எஸ்பியிடம்  பேசிக்கொண்டிருக்கையில் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பில்லாமல் இப்படி விடுப்பில் இருக்க நேர்ந்திருக்கிறதே என வருத்தப்படுகையில் “ஏன் இங்கு வந்துவிடுங்களேன்” என்றார். அங்குவர  அடிப்படைத்  தகுதியான  டிகிரி இல்லையே என்றதும் பேச்சை வேறு திசைக்கு அவர் மாற்றிக்கொண்டபோது முதல் முறையாக வலித்தது.

வாழ்க்கை எப்போதும் இழப்புகளையே வாரி தந்துகொண்டு இருக்கிறது எல்லோருக்கும். இழப்புகளை, குறைந்தபட்சம்  எழுத்தாளன் இலக்கியமாக்குகிறானா என்று கூர்ந்து பார்த்தவண்ணம் இருக்கிறது வாழ்வு.

எழுத்து -  நிரந்தர இறப்பின்மைக்கான அன்றாட இறப்பு.