Tuesday, October 5, 2010

கல்கிமேல புதுமைப்பித்தனுக்கு காண்டு


இது  முழுக்கவும்  என்  பக்க  எழுத்து  மட்டுமே. முழு  விவாதம்  மேற்கண்ட பஸ்ஸில் காண்ககாலம் யாரைத் தூக்கித் தலையில் வைத்திருக்கிறது? கல்கியையா?

ஜனரஞ்சக எழுத்து, என்றும் பரவலாகத்தான் பளபளப்பாகத்தான் இருக்கும். புதுமைப்பித்தனின்  வம்சாவளி  நூற்றாண்டுகளைத் தாண்டும். கல்கிக்கு லீகல்  ஹேர்  சர்ட்டிஃபிகேட்டோடு  ஓவர். கல்கியைப்  பார்த்து புதுமைப்பித்தனுக்கு வயிற்றெரிச்சலா?

பாதம் நனைக்கத் துப்பற்ற நீர்வரத்தைப் பார்த்து அகண்ட காவிரிக்கு வயிற்றெரிச்சல்?!

பாரதியை மகாகவி அல்ல எனப் பழித்துவிட்டு, விமர்சன அடிகிடைத்ததும் அவரைப் பிரபலமாக்க வேண்டுமென்கிற நோக்கத்தில், அவர் கவிதைகள் பரவலாகப் பேசப்படவேண்டும் என்பதற்காகவே அப்படி சொன்னேன் என சமாளித்த, விகடன்  குமுதம்  கல்கி  என்கிற  கலை  இலக்கியதிற்கு சம்பந்தமற்ற குப்பைகளின் முன்னோடி வியாரிதான் கல்கி.

வயிற்றில் கனன்ற பசியுடன் மனதின் அலையடிப்பை அலட்சியமாகக் கலையாக்கியவன் புதுமைப்பித்தன்.

மிஸ்டர்  பேசுமுன்  பல்துலக்கிவிட்டுப்  பேசுங்கள், விஷயம்  இல்லை எனினும், குறைந்தது வீச்சமாவது இருக்காது
எல்லாமே ஒன்றெனப் பார்க்கும் சமரச சன்மார்க சமிதிகளிடம் இலக்கிய விவாதம்  வீண். புதுமைப்பித்தன்மேல்  வீசப்பட்டப்  புழுதிக்கு  என் எதிர்வினை அவ்வளவே. மற்றபடி ஊத்தை தொடரலாம் நான் ஊமை


நான்  இங்கே  இலக்கிய  விவாதமெல்லாம்  செய்ய  வரவில்லை. கல்கி பற்றிய புதுமைப்பித்தனின் விமர்சனத்தை ”கல்கிமேல் புதுமைப்பித்தனுக்கு வயிற்றெரிச்சல்” என்கிற சித்தரிப்பு நாகரீக வார்த்தைகளில் சொல்லப்பட்ட கீழ்மை. அதற்கான  எதிர்வினையை  முடிந்த  அளவு  நாகரீகமாக செய்திருக்கிறேன். என்  நாகரீகம் சபைக்கூச்ச போலித்தனமற்றது. பழியேற்க அஞ்சாதது. குருக்களைப் போலத்தான் சிஷ்யர்கள் இருக்க முடியும்


கரிச்சான் குஞ்சுவிடம் நேர் பேச்சில் அறிந்து கொண்டது உட்பட ஏதும் தெரியாமல் பேசவந்த பில்லக்கா பையன் என நினைத்தீரோ! இதைத் தவிர என்றேனும் ஏதேனும் பேசக்கூடும் என்கிற பாலத்தையும் எரித்துக்கொள்ள இஷ்டம் எனில் எனக்குக் கஷ்ட்டம் இல்லை. கல்கியின் எழுத்து குப்பை. அது  அவருக்கு  வாரா  வாரம்  வந்த  தீட்டு. அதை  விமர்சிக்காமல் இருந்திருந்தால் புதுமைப்பித்தன் என் மதிப்பில் உயர்ந்திருக்க மாட்டான். கல்கியின் எழுத்தை உயர்வாக எண்ணுபவனுடன் பேச எனக்கு ஏதும் இல்லை. அரிச்சுவடிப் பாடம் அயர்ச்சி அளிப்பதுபுண்ணாக்குக்குப் புண்ணாக்காட்டம் பதில் சொன்னாதான் புண்ணாகும். கல்கிக்கு  புபி சொன்னார். உமக்கு நான். வரப்போகும் வெத்துக்கு வருங்கால வெடி சொல்லும்.

ஆடைதூக்கிக் காட்டவில்லை எனவே ஆபாசமில்லை என்பதல்ல ஆபாசத்தின்  விளக்கம். கூர்தீட்ட  வேண்டிய  மூளையை மொண்ணையாக்குதல் ஆபாசம். தடவிக்கொடுத்தல் அன்புமய எழுத்தல்ல சரியில்லா இருத்தலை இருக்கும்படி இருக்கவைக்கும் குரூரம்

குழந்தைகளுக்கல்ல குமர இளைஞிகளுக்குக் கதை எழுதிக்கொண்டிருந்தார் கல்கி. வளர்ந்தவனுக்கு  எழுதும்  விஷயத்தை  குழந்தைக்குப்  புரிகிறதா எனப்படித்துக் காட்டிப் பார்ப்பதிலேயே புரியவில்லையா புத்தி தீட்சண்யம். கல்கியுடையதும்

மேலோட்ட  நுணிப்புல்  எழுத்து  கல்கியுடையது. சுதந்திர  வேட்கையை வியாபாரமாகப் பயன்படுத்திக் கொண்டது அலை ஓசை. 47க்கு  பதில்  57 சுதந்திரம் கிடைத்திருந்தால் அலை ஓசையின் பாகங்கள் பத்தாகக் கூட ஆகியிருக்கும். வாரா வாராம் சுவாரஸியம் திருப்பம்.

புதுமைப்பித்தன்  சுதந்திரத்தை  ‘வைத்து’  கதை  பண்னவில்லை. காலகட்டத்தைக்  கதையாக்கினான். சுதந்திரப்  போராளியையும் கேள்விக்குள்ளாக்கினான்.

காலத்தை வெல்ல விதிக்கப்பட்டவன் வந்து போகிறவனுக்கெல்லாம் வெந்ததை சாப்பிடும் வேதாந்தம் அருளிக்கொண்டிருக்க மாட்டான்.

வார்த்தைகளால் முதலில் கல்கியின் எழுத்தைத் தூக்கிப் பிடிக்காத சாமர்த்தியம்  அப்போதே  பிடிபட்டது. அடுத்ததிலேயே  பல்லிளித்து வெளிப்பட்டது. முதலில் இருந்து படிக்கும் மூடனுக்கும் இது புரியும்.

சாத்வீக சாம்ராட்டுகளுக்கு நிறைய விஷயம் பிடிபடாது பட்டாலும் பிடிபடாததுபோல்  நடிப்பார்கள். நடிப்பு  சுதேசிகள்  என்று  பாரதி  சாடியது இவர்களைத்தான். வேட்டி நலுங்கா வேஷதாரிகள்.

உயர்வு  என்பது  உயர்ந்ததைத்  தூக்கிப்  பிடிப்பது  மட்டுமல்ல. மட்டத்தை மட்டப் படுத்துவதும்தான். மட்டம் தட்டுவதும்தான்.

கல்கி சாண்டில்ய கருமாந்திரத்தைப் பேசுபவனோடெல்லாம் என்னை விவாதிக்க வைக்கிற வீனாப்போன கடவுளே நீ நாசமாய் போக.

மாட்டுக்கு சொறிந்து கொடு மனுஷனுக்கு சொறிந்து கொடுக்காதே - ஜேஜேவில் சுந்தர ராமசாமி

சொறிதலின் மூதாதை கல்கி அவன் வழித்தோன்றல்கள் ஆயிரம். அவர்களோடு சண்டையே இல்லை. குறுக்கிடாதவரை.

எந்திரன் போன்ற வியாபாரங்கள் ஒழிக்கப்பட முடியாதவை இருந்துகொண்டே  இருப்பவை. கலை உன்னதம் கொண்டாடும் நாடுகளிலும் எந்திரன்கள் உண்டு.

எந்திரனை அடித்து நொறுக்கி விமர்சனப் பெருந்தகையாவது விவேகமல்ல. அதற்கு சிறந்த பட விருது அளிக்கும் போதுதான் பிரச்சனை. அதை கலையின் சமூகத்தின் வருங்கால ரசனையாக அங்கீகரிக்கப்படுகையில்தான் பிரச்சனை.

வியாபார எழுத்து முனை மழுங்க வைக்கும் ஆனால் மழுங்கின முனைகளுக்கு  உணவளிக்க வேண்டாமா. ஜீவ  காருண்ய  ரீதியில்  அது இருந்துவிட்டுப் போகட்டும்.

கூர்முனை தன்னை மொண்னையாக்க சம்மதியாதிருப்பது மட்டுமல்ல மொண்னைகளையும் கூர் தீட்டப் பார்க்கும். இது சிறுபாண்மை என்பதால் சதா சீறிக்கொண்டே இருக்கும் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள.
.
மொண்ணைக்கென்ன  கவலை. சகலமும்  தன்னகத்தே  கொண்ட பெரும்பாண்மை. புன்சிரித்துப்  போவது  அதன்  மெளடீக  மேன்மை. கருவறுத்தல் அதன் வெளிக்காட்டிக்கொள்ளாத வேள்வி.

பாண்டிச்சேரி  அம்மா  சகல  செளபாக்கியங்களும் அருளட்டும், கூடவே கொஞ்சூண்டு மூளையும்.

கல்கியும்  புதுமைப்பித்தனும்  கருப்பும்  வெள்ளையும். சாத்தானுக்கும் தெய்வத்திற்குமான சமர் முடிவற்றது.

ங்கோத்தா முடிஞ்சிதா ஒருவழியா!