Friday, October 8, 2010

தாம்பத்யம் (ஜூன் 1994)

புகை  ஊதியபடி  வந்துகொண்டிருந்தார்  சுப்ரம்மண்யம். தமது  பெயர் இப்படித்தான்  உச்சரிக்கப்படவேண்டும்  என்பதில்  கறாரானவர்.  வாய்க்கும் இதே கண்டிப்பைக் கடைபிடிக்கத் தவறிவிட்ட காரணத்தால் அவரது தொந்தி அவருக்கு சற்று முன்பாகத் தனியே நடந்து கொண்டிருந்தது. கையிலோ உதட்டிலோ பீடி சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்கள் ஏதும் இல்லாமலேயே மூக்கும் வாயும் புகைந்து கொண்டிருந்ததன் காரணம் வசித்துவந்த  பிரதேசம்தான். காட்டு  மரங்களால்  மட்டுமே உருவெடுத்திருந்த அந்தச் சிறிய மதுபானக் கடையைக் கடக்கும்போது திடுக்கிட்டு விலுக்கென நின்றார் சுப்ரம்மண்யம்.

அடப்பாவீ. இவன்  திருநாவுக்கரசு  அல்லவா. கணவன்  என்று  லலிதா தாரிணி அறிமுகப்படுத்தி வைத்த ஆளாயிற்றே இவன். என்ன இது எதிரில் இளித்தபடி எவளோ ஒரு உள்ளூர்க்காரி. சபாஷ் ஆளுக்கொன்றாய் கண்ணாடிக் குடுவையில் வேறு குடித்தாகிறதா, அயோக்ய ராஸ்கல், ஆயிரமாயிரம் மைல்கள் தாண்டி வந்தும் ஈனபுத்தி மாறவில்லையே. சும்மாவா சொல்லி வைத்தார்கள்  பெரியவர்கள்,  குலத்தளவே  ஆகுமாம்  குணம்  என்று. பனிப் பிரதேசத்திற்கே வசிக்க வந்தாலும் பரம்பரை புத்தி எங்கே போய்விடும்.

காதல் கீதல் அது இதுவென்று தத்துபித்தென அவசரப்பட்டு ஆழம் தெரியாமல் காலை விட்டு விடுகின்றன இந்தக்கால சிறுசுகள். கிரகசாரம். எல்லாம்  காலத்தின்  கோலம். இந்தப்  பிராம்மணப்  பயல்கள்  வரதட்சணை வரதட்சணை  என்று  பிச்சுப்  பிடுங்குவதால் வந்த  வினை. அதுகளைச் சொல்லியும்  குற்றமில்லை. கதியற்றதுகள்  வேறு  என்ன  செய்யமுடியும் பாவம். வேலை பார்க்கிற ஆபீஸில், போட்டிருப்பதுடன் வந்தால் போதும் என்பவனுக்குக்  கழுத்தை  நீட்டி  விடுகின்றன. குலம் கோத்திரம் எதையும் பொருட்படுத்தாமல் பதிவுத் திருமண அலுவலகத்தின் படியேறி விடுகின்றன. அவன்களும்  அடித்தது யோகம் என்று சொர்ண விக்ரகங்களை சுருட்டிக்கொண்டு விடுகிறான்கள். வயிற்றில் புரண்டு புரண்டெழுந்து வாய் வழியே புஸ்ஸு புஸ்ஸென்று வந்து கொண்டிருந்தது புகை.

மடித்து  அணிந்திருந்த  குரங்கு  குல்லாவைக்  கழற்றினார். இழுத்து  நீட்டி விட்டு நெடுக்காய்த் தலைவழியே மூக்கும் முழியும் மட்டும் தெரியும்படியாக  அணிந்து  கொண்டார். விரித்துப்போட்ட பாய்போல பரந்து கிடந்த ஐஸ் பாறை பொடியப்பொடிய மரப் படிகளில் ஏறி மதுபானக் கடைக்குள்  நுழைந்தார். யாரையோ  தேடுபவர்போல அங்குமிங்குமாய் நடை போட்டார். இருந்ததே எட்டு டேபிள்கள். அவையும் எங்கிருந்து பார்த்தாலும் எல்லாம்  தெரியும்படி  வட்டமாய்ச்  சுற்றி  இருந்தன. பக்கவாட்டிலேயே அவன்  முகம்  தெரிந்தது. எதிரில்  மங்கோலியக்  குலுங்கல். பச்சைத் துரோகம்.  இவன்களுக்கெல்லாம்  ஏன்  கல்யாணம்  கார்த்தி  எல்லாம். ஜாதி விட்டு  ஜாதி. அதுவும்  எங்கிருந்து  எங்கோ. கலப்புத்  திருமணம்  என்கிற பெயரில் நடக்கிற கபடத்தனத்திற்கு இன்கிரிமெண்ட்டாக அரசாங்க அட்சதை வேறு. அக்கிரமம்.

கடையில்  இருந்ததே  ஏழெட்டுப்பேர்கள்தான். இரண்டு  டேபிள்கள்  வேறு காலியாய்க்  கிடந்தன. உள்ளே இருந்து வந்தவன் என்ன வேண்டும் என நாகாவில்  கேட்டான். ஓரக்கண்ணால்  நோட்டம்  விட்டபடி, வருவதாய்ச் சொன்ன சிநேகிதர் வந்திருக்கிறாரா என்பதைப் பார்க்க வந்ததாய் இங்கிலீஷ்  கலந்த  நாகாவில்  தமிழ்போலக் கூறிவைத்தார்.  கால்  வலிக்காத வண்ணம்  உட்கார்ந்து  காத்திருக்கலாமே  நண்பரின்  வருகைக்கு, என்ற கடைக்காரனின் உபசரணையைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட திருப்தியுடன் விறுவிறுவெனக் கீழே இறங்கினார் சுப்ரம்மண்யம்.

மனம் பறந்த வேகத்திற்குக் கால்களும் அவை நடந்த வேகத்திற்குப் பனிப்பாலையும்  ஒத்துழைக்கவில்லை. பாண்ட்  பாக்கெட்டிற்குள் நுழைத்திருந்த முறம் போன்ற கரங்களை வெளியிலெடுத்துப் பரபரவென தேய்த்து  சூடேற்றிக்  கொண்டார். குவித்து  வாயருகில்  வைத்து  உஃப் உஃப்பென  ஊதிக்கொண்டார்.  ஹிதம் கூடி இருப்பதாகப் பட்டதும் இரண்டு கைகளாலும் ஸ்வெட்டரைக் கீழ் நோக்கி இழுத்து விட்டுக்கொண்டார். பழையபடிக்  கைகளைப்  பாண்டில்  நுழைத்துக்  கொண்டார். தொடுவானம் போலத் தொலை தூரத்தில் மூட்டமாய்த் தெரிந்த பிரதான சாலையை நோக்கி  மேடேறத்  தலைப்பட்டார். மேடேற  ஏற  உள்ளம்  சூடேறிக் கொண்டே போயிற்று.

லலிதா தாரிணியை நினைக்க நினைக்கப் பாவமாய் இருந்தது சுப்ரம்மண்யத்திற்கு. திருவல்லிக்கேணி  வெங்கட்ரெங்கம் பிள்ளைத் தெருவில் இருக்கும் மர தொட்டியை ஒட்டிய ஓட்டு வீட்டில் பரம்பரை பரம்பரையாய் வசித்து வரும் மராத்தி பேசும் ராயர் குடும்பத்துக் குத்துவிளக்கு போன்ற குழந்தை அவள். அவளுடைய தாத்தா ஹனுமந்த்த ராவை, சுப்ரம்மண்யம் சுப்புணியாக இருந்த பருவத்தில் பார்த்திருக்கிறார். ஆச்சார சீலர். அவருடைய பேத்திக்கு இப்படியொரு துரதிருஷ்டம். அவள் தகப்பனார் சேஷகிரி ராவை ஹிண்டு ஹைஸ்கூல் காலத்திலிருந்தே தெரியும். சிநேகிதர்  என்று  சொல்லிக்  கொள்ளும்படியான   நெருக்கம் இல்லை எனினும் நல்ல பழக்கம்தான். இன்றைக்கும்  தெருவில், பாசாதி கோயிலில், வைத்தா  காப்பிக்கடையில் என்று எங்கு பார்த்தாலும் நின்று நாலு வார்த்தை பேசாமல் போகமாட்டார்.மகளின் திடீர் கல்யாணம் பற்றி அவரும்  கண்டுகொள்ளவில்லை. இவரும் கேட்டுக் கொள்ளவில்லை. சுரத்து கொஞ்சம்  குறைந்து, சோர்வாக  நடமாடிக்கொண்டு  இருப்பதாகத்தான் தெரிகிறது. இருக்காதா  பின்னே. இமை போல வளர்த்த இலவம் பஞ்சை எதுவோ வந்து பிடுங்கிக் கொண்டதைப் போல என்னவோ நடந்து விட்டது. அறியாமல் நிகழ்ந்துவிட்ட அசட்டுத் தனமாய்த்தான் தோன்றியது. கொள்ளையே போனாலும் குலத்திற்கு உண்டான குணத்திற்குக் குறை உண்டா  என்ன? லலிதாவிற்குதான் என்ன ஒரு தங்கமான குணம். இந்த ஊர் பார்க்கில் வைத்து தற்செயலாய்ப் பார்க்க நேர்ந்த போது சட்டென அடையாளம் கண்டு கொண்டு வாய்க்கு வாய் மாமா மாமா என்றழைத்து எப்படி  அன்பொழுகப்  பேசினாள்.  கணவன்  எனக்கூறி  இந்தக்  கட்டையில் போகிறவனையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். இந்தப் பயல் ராயபுரமாம். சொல்ல வேறு வேண்டுமா? அதுதான் எழுதி நெற்றியில் ஒட்டியிருக்கிறதே இன்னார் என்று. இருவரும் மெட்ராஸில்  ஒரே  அலுவலகத்தில் இருந்தவர்களாம். இவன்  என்னத்தையோ  எக்ஸாம்  என்று  எழுதி  வைக்க இங்கேக் காட்டிலாக்காவில் உயர்பதவி கிடைத்ததாம். நாட்டையேத் தூக்கிக் கொடுத்தாகிவிட்டது  இந்தப்  பயல்களின்  கையில். இதில்  காட்டிற்கென்ன கேடு. இவன்  மெட்ராஸ்  வேலையை  ராஜினாமா  செய்ய  இவள்  மாற்றல் வாங்கிக்கொண்டு  இங்கு  வந்துவிட்டார்களாம். ’ஆத்துக்கு  அவஸ்யம் வரணும்  மாமா’  எனச்சொல்லி  அட்ரஸ்  எழுதிக்கொடுத்தாள். இந்தக் கல்லுளிமங்கன்  ஒரு  வார்த்தை, எண்ணி  ஒரே  ஒரு  வார்த்தைதான் பேசினான்  ’ஹாலோ’  என்று.  இங்கே   என்னடா  என்றால்  இளிப்போ இளிப்பு, நெளிப்போ நெளிப்பு. இந்த சாம்பிராணிக்குப் பெரிய சட்டைக்காரத் துரை  என்று  நினைப்பு. விடைபெறும்போது  கைநீட்டிக்  குலுக்கல்வேறு. அதுவரை அயர்ண் பண்ணியது போல விட்டேத்தியாய் இருந்த முகரக்கட்டை அப்போது மட்டும் ஒரு ஒட்ட வைத்த சிரிப்பை உதிர்த்து விட்டுப்போனது. சரியான  அமுக்கன்  என்று  அப்போதே  பட்டது. இதோ குட்டு வெளிப்பட்டு  வெட்டவெளிச்சமாகி  விட்டதே.  ஏதோ  எலுமிச்சைக்குக்  கை கால் முளைத்ததைப் போல் இருப்பதுடன் பீர் கும்மாளி போட்டாகிறதே. நாலு பேர் நடமாடும் இடத்திலேயே பட்டவர்த்தனமாக இப்படி என்றால், நான்கு சுவர்களுக்குள் என்னவோ ஏதோ யாருக்குத் தெரியும்?

பனியில்  பாதம்  புதையப்புதைய  நடப்பது  கஷ்டமாக  இருந்தது.  உள்ளே வியர்த்து விறுவிறுத்ததில் சட்டை ஒட்டிக் கொண்டு உடம்பு சில்லிட்டது. குல்லாவைக் கழற்றி முகத்தில் பொங்கிய வியர்வையைத் துடைத்துக் கொண்டார். ஓரங்களைப்  பட்டையாய்  மடித்துத்  தலையில்  கவிழ்த்துக் காதுவரை இழுத்து விட்டுக் கொண்டார்.

இதை  இப்படியே  சும்மா  விடக்கூடாது.  கட்டியவளுக்குத்  துரோகம் செய்வதென்பது  கேடுகெட்ட  அயோக்கியத்தனம். இன்று  ஒருத்தியுடன் குடிப்பவன். நாளை எத்தனை பேருடன் கொட்டமடிப்பானோ. கையில் ஒரு குழந்தையும் கொடுத்து விட்டுக் கூசாமல் டாடா காட்டிவிட்டுப் போய்விடுவான். இது ஒன்றும்  அறியாமல்  அந்த  அப்பிராணி  மாத்வப் பெண் கைநிறைய சம்பாதித்துக் கொடுத்துவிட்டுக் கணவனே கண்கண்ட தெய்வம்  என  இருக்கிறது. இதை அவளுக்குத் தெரிவித்து உடனே உஷார் படுத்தியாக  வேண்டும். இப்படியான  துர்நடத்தையை  முளையிலேயே கிள்ளி எறிய  வேண்டும். இதற்காகத்தான்  மெட்ராஸிற்கு  டிரான்ஸ்பர்  கிடைத்தும் இன்னும் ரிலீவ் பண்ணாமல் வைத்திருக்கிறான் போல் இருக்கிறது ஈஸ்வரன்.

சாலையை அடைந்ததும் முதல் காரியமாகப் பர்சை எடுத்துப் பார்த்தார் சுப்ரம்மண்யம். அட்ரஸ் பத்திரமாக இருந்தது. அங்கிருந்து குறைந்த பட்சம் இரண்டுமணி நேரமாவது பிரயாணம் செய்தாக வேண்டும். பரவாயில்லை. இப்படியான காரியத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றப்படுமேயானால் அதைவிடப் புண்ணியம் வேறேதும் இல்லை.

எதிர் சாரியிலிருந்த மெடிக்கல் ஷாப்பிற்குப் போய் அலுவலகத்திற்கு போன்  அடித்து  அரைநாள்  லீவ்  சொன்னார். காசு  கொடுத்துத்  திரும்பிய சமயத்தில் கடவுளே பார்த்து அனுப்பி வைத்ததைப் போல அவளிருக்கும் இடத்திற்கு  செல்கிற  பஸ்  வந்து நின்றது. உள்ளே ஏறினார். போய் இறங்கவும் அலுவலகம் முடிந்து அவள் வீட்டிற்கு வரவும் சரியாக இருக்கும். இந்தப் பயலும் கூட இருக்கிற தளுக்கியும் இளிக்கிற இளிப்பைப் பார்த்தால் இப்போதைக்கு முடிகிற வியவகாரமாய்த் தெரியவில்லை. குளிருக்கு அடக்கமாய் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்தார். கண்டக்டரிடம் இடம் வந்தால் எழுப்பச் சொல்லிக் கண்களை மூடிக் கொண்டார் சுப்ரம்மண்யம்.

XXX   XXX   XXX

இருட்டி  வெகுநேரமாகிவிட்டிருந்தது. கதவைத்  திறக்கும்போதே  கேட்டாள் லலிதா தாரணி.

எத்தன பீர்.

ஏண்டா  ரொம்ப  நாறுதா - என்றபடி  அவளுடைய  ஸ்வெட்டருக்குள்  கை நுழைத்து இடுப்பை அழுத்தினான் திருநாவுக்கரசு.

ம். இல்லே  செண்ட்  போட்டாப்ல  ஆளையேத்  தூக்குது - என்றபடி விரல்களின் விஷமத்தால் நெளிந்தாள்.

கதவை மூடினாள்.

ஸ்வெட்டரைத் தலை வழியே கழற்றியபடி கூறத் தொடங்கினான்.

குங்தே வந்திருந்திச்சி...
தெரியுமே.
தெரியுமா! எப்படி?
தெரியும்னாத் தெரியும்.
கம்மான் ஐஸே சும்மா கப்ஸா உடாதே. அருணாச்சல்லேந்து வந்து எறங்கி, குங்தே  நேரா  என்னதான்  பாக்க  வந்திச்சி. அப்றம்  எப்பிடி  நோக்குத் தெரியும்.  சும்மா உடான்ஸுதானே.

அவளைத் தனக்காய் இழுத்தான்.

பேம்பூ  பிளாசாலதானே  மிஸ்டர்  நீயும்  குங்தேவும்  பீர்  அடிச்சீங்க.  ஆம்  ஐ கரெக்ட் யுவர் ஹானர்.

அவன் தோளை நகத்தால் சுரண்டினாள் கண்களைச் சுழித்தபடி.

அடிப்பாவி எதுனாப் பட்சி கிட்சி வெச்சிருக்கியா இன்னா?

அவளது தோள்களிரண்டையும் பற்றி சற்றுத் தள்ளி நிறுத்திக் கண்களில் துழாவியபடி எப்படி எப்படி என வியந்தான்.

ஏய் அவ எதுக்கு வந்தானு மொதல்ல நீ சொல்லு. எனக்கு எப்பிடித் தெரிஞ்சிதுன்னு அப்புறம் நா ஷொல்றேன்.

தோளைச் சிலுப்பித் தன்னை விடுவித்துக் கொண்டவள் அவன் மீசையை ஒரு இழுப்பு இழுத்து விட்டு சமையலறை நோக்கி ஓடினாள்.

சோபாவில் உட்கார்ந்து நீளமான ரப்பர் பூட்ஸ்களைக் கஷ்டப்பட்டுக் கழற்றியபடி சொன்னான்.

என்கேஜ்மெண்ட்  ஆகியிருக்குதாம். அதச்சொல்லத்தான்  வந்திருந்துச்சி. அதுக்கு ட்ரீட்டுதான் பீர். நாளைக்கு சாயங்காலம் நம்ப வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்குது.

சமையலறையில் இருந்தபடிக்கேத் தனக்குக் கதை வந்து சேர்ந்த கதையைச் சொன்னாள். தேநீருடன் வந்தவளைக் கேட்டான் திருநாவுக்கரசு.

வாட் வாஸ் யுவர் ரியாக்ஷன்.
கெஸ்.

தெரியவில்லை என்கிற விதமாய்த் தனது கருகருவெனத் திரண்டிருந்த தோள்களைக் குலுக்கினான்.

சிரித்துக் கொண்டே கூறினாள், தான் சிரித்துக் கொண்டே கூறியதை.

இத்தனை கன்சர்னோட சிரமம் பாக்காம இவ்ளோ தூரம் வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் மாமா. நாந்தான் பணம் குடுத்து, கார்த்தால இங்கேந்துதான் அவா ரெண்டு பேரையும் அனுப்பி வைச்சேன். அவோ என் சிநேகிதிதான் மாமா.

அப்டிப் போட்றீ எம் பட்லீன்னானாம்.

அவளை அப்படியே வாரியெடுத்து முத்தமிட்டான்.

அன்றைய இரவின் முக்கால்வாசிப் பொழுது முன்விளையாட்டிலேயே கழிந்த வண்ணம் இருந்தது.

பொதுவாகவே தேநீர் தயாரிக்கையில் தேயிலைத் தூளும் பாலும் மிகச் சரியான பாங்கில் கலந்து நிற்பதென்பது ரொம்ப அபூர்வமாகவே நிகழ்கிறது. எப்போதாவது  இப்படித் தற்செயலாய்  அமைந்து  விடுகிறது என்பதாகவே சராசரி அபிப்ராயம். உன்னத சிருஷ்டியாய் அமைந்து விடும் தேநீரின் உண்மையான சங்கம சூக்ஷுமம்  அதைக் கலக்கிற கரங்களுக்கும் பருகுகின்ற அதரங்களுக்கும் இடையே உள்ள அன்யோன்யத்திலேயே இருக்கிறது.

அவர்களின் மூன்று வருட திருமண வாழ்வில் அன்றைய இரவே முதல் முதலாக அப்படி அமைந்திருந்தது.

(ஜூன் 1994)
குங்குமம்
உயிர்த்தெழுதல் தொகுப்பில் உள்ள கதை