Tuesday, October 12, 2010

எழுத்துக் கலை - ஏமாற்றும் எளிமை


மிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன். தொட்டியில் வாளியைத் துழாவும் மொக்கை இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்பட வாசிக்கவும் வண்ணநிலவனின் எஸ்தர் மிருகம் சாரதா....
பட்டுக்கோட்டையின் கண்ணதாசனின் எளிய வார்த்தை பாடல் இலக்கியம் போல வண்ணநிலவன் சாதாரன வார்த்தைகளில் அசாதரண மனுஷ நிலைகளை  உக்கிர  ஓவியங்களாக்கியவர். எழுத்திலும்  படாடோபமற்ற எளிய மனிதர்.
இதைப்போல் எளிய மொழியில் காற்றாய்க் கண்ணுக்குப் புலப்படாத மனங்களை நான் என்ன பெருசா சொல்லிவிட்டேன் என்பது போல எழுதிச் செல்வது எளிய காரியமல்ல.

உரத்துப் பேசாத எளிமை பலசமயங்களில் உயர்ந்த இலக்கியமல்லவோ என்கிற தோற்றப்பிழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும்.

எல்லாம் வியாபாரமாகிப்ப்போன சுய விளம்பர உலகம். சுதந்திரத்திற்கு முன் காந்தியைக் காப்பியடித்து எளிமை விளம்பரப் பொருளாகிப் பல்லாண்டுகள் கோலோச்சியதுபோல், புரட்சிகரத்திலிருந்து புண்ணாக்கு இலக்கியம் வரை, எல்லாமே எளிய விளம்பரமாகிப் போய்விட்டது. கூச்ச நாச்சமற்று கூவிகூவி விளம்பரம். மேடையில்லாமல் மைக்கில்லாமல் பாண்டி பஜார் பூக்கடையில் தொங்கும் மாலையில் தலை நுழைத்து ஃபீஸ் கொடுத்து, போஸ்  கொடுத்து  போட்டோ  எடுத்து  தன்  சட்டையில் பேட்ஜாகக் குத்திகொண்டு திரியும் பேமானம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை வாழ்க்கை ஆகிவிட்டது.

கல்கி தேவன் போன்ற சுவாரஸ்ஸிய அம்மாஞ்சி கேளிக்கையாளர்களில் தொடங்கி சுஜாதா என்கிற பிரம்மாதமான மேலோட்ட கதை சொல்லி, பாலகுமாரன் என்கிற காம ஆன்மீக பம்மாத்து மற்றும் கதை முடிவில் புரட்சி  பீறிடும்  முற்போக்கு  மூட  எழுத்துக்கள்  வரை  எவராலும், ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எஸ்தர் போன்ற கதையின் இலக்கியத்தின் ஒரு வரி கூட எழுத முடியாது.

எது இலக்கியம் ஏன் இவை மட்டும் இலக்கியம் ஏன் எழுதுவதெல்லாம் இலக்கியமாவதில்லை போன்ற பற்பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் கதை, தெரிந்துகொள்ள திறந்த மனம்தான் வேண்டும்.

”அண்ணே, எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். இலக்கியத்தை எந்த அளவுகோல்  வச்சு  கணக்கிடுறது? இலக்கியம்ன்னு  முன்னாடி  சொல்லி வைச்சவங்க சொன்னது போக அடுத்த கட்ட இலக்கியத்தை புதுசா கண்டுபிடிச்சு படிக்கறதோ அல்லது படிச்சு கண்டுபிடிக்கறதோ எப்படி?
மத்தபடி எனக்குப் பிடிச்ச கதை - எஸ்தர்”

காலாகாலத்துக்கும் ஒரே ஸ்கேல்தான். ஆரம்பத்தில் இரவலாகப் பெற்று உருக்கியழித்து தனக்கேதனக்கானதாய் தன் மனதில் உருவாக்கிக் கொள்ளும் ஸ்கேல்.

கர்வம்  அழி  கவிதையைக்  காணலாம். எக்குதப்பாக  துளைமாரி  பட்டன் நுழைத்த சட்டையை எத்துனை நீவி விட்டாலும் நேராகுமா?

படிக்கப்படிக்க படிச்சுபடிச்சு தாண்டித்தாண்டி கண்டடைகிற விஷயம். தானாவும் தனியாவும் கண்டடைகிற சமாச்சாரம். பார்க்கிறதுல எல்லாம் பரவசப்பட்டுடாம புல்லரிக்கப் போதுமான இடைவெளிவிட்டு கடைஞ்சி குடைஞ்சி பார்த்தாக் கடைசில கலை இலக்கியம் கொஞ்சம் பர்ஸனல் காரியம்தான் காதல் போல

பொஸ்தகம் படிச்சிட்டு காதலிக்கப் போறவன் இருக்கான்

தத்துபித்துன்னு காதலிக்கறவன் இருக்கான்

காமத்தைக் கணக்குப்போட்டு காதலிக்கிறவன் இருக்கான்

கரைந்துபோய்க் காதலிக்கிறவன் இருக்கான்

காதலிக்கிறதா நெனச்சிகிட்டு மட்டுமே இருக்கிறவனும் இருக்கான்

நீள  அகல  அளவுகளிலா  இருக்கிறது,  நெஞ்சில்  அல்லவா  இருக்கிறது காதல்.