Thursday, October 14, 2010

இழுத்தா கோடு வளைச்சா எழுத்து [சிறுகதை]

செம்மண் தரையில் கட்டைவிரல் அழுந்தி இழுக்கப்பட்டது கோடு. பக்கத்துக் கால் அனுசரணையாக நொண்டியடித்து பின் நகர்ந்து கொண்டிருந்தது. அந்தக் கோடியில் இன்னும் இரண்டு கால்கள் அதே காரியத்தை செய்யத் தொடங்கின. இரண்டு ஜோடிக் கால்களும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளாமலே ஒத்திசைவோடு வந்து ஓரிடத்தில் சந்திக்க, பெரிய செவ்வகம் உருவாகி இருந்தது.
குறுக்காக ஒரு கால் கோடிழுக்க ஒன்றாயிருந்த நிலம் இரண்டானது.

கொஞ்சம் கொஞ்சமாகக் கால்கள் குவியத் தொடங்கின. சில உள்ளே வந்தன பல வெளியே நின்றன. இருபுறமும் பெட்டிகள் நிறையத் தொடங்கின. கால்கள் உதறிவிட்டுக் கொள்ளத் தலைப்பட்டன. மடங்கி உயர்ந்தன. தசைநார்கள் இளகின. கெண்டைகள் திரளத் தொடங்கின. பயிற்சியில் உரமேறத் தொடங்கின.

பயிற்சி போதுமெனத் தோன்றிய தருணத்தில் ஆட்டம் தொடங்கிற்று. ஆட்டமாய் தொடங்கிற்று. எடுத்த பயிற்சியின் பலம் பரிசோதிக்க இடைக்கோடு தாண்டி பாய்ச்சல் காட்டத்தொடங்கின. கால்களுக்கு உதவியாய்க் கைகள் நீண்டன. 

தொட்டால் ஒன்று காலி. தொடாவிட்டால் மற்றது காலி என சட்டங்கள் வகுத்துக் கொள்ளப் பட்டன. தொடப் பாய்வதும் தொடவிடாமல் பதுங்குவதுமாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது ஆட்டம். 

கால் வலிக்கும் வரை ஆடிக்கொண்டிருப்பது கணக்கின்றி நீண்டுகொண்டு இருந்தது. வலியில் வாய் முணுமுணுத்தது. வாய் முணுமுணுப்பு சட்டமாயிற்று. மூச்சுவிடாமல் முணுமுணுத்தல் சட்ட திருத்தமாயிற்று. உரக்கவும் பேசிக்கொள்ளலாம் என முணுமுணுப்பின்றி ஒத்துக்கொள்ளப் பட்டது.

பேச்சு கத்தலாக மாறி வார்த்தைகள் வண்டையாயின. வண்டையே பேச்சு என்றாயிற்று. எப்போது இப்படி ஆயிற்று என யாருமே கவனியாமல் ஆட்டத்தில் தங்களைக் கொடுத்துவிட்டு இருந்ததால், வண்டை சண்டையானது அறியாமலேயே அங்கீகரிக்கப்பட்டும் விட்டது.

சண்டை சட்டமாக இயற்றப்பட்டது. சட்டம் என்றானபின், சமரசப் பேச்சு சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் உக்கிரத்தை அடைகையில் கண் உருட்டிக் கொள்ளலாம் கண் சிவக்கலாம் நகத்தால் பிறாண்டலாம் கைகளால் அடிக்கலாம் குத்தலாம் மென்னியைப் பிடிக்கலாம் அழுத்தலாம் இறுக்கலாம் நெரிக்கலாம் என தேவையான திருத்தங்கள் ஆவனப்படுத்தப்பட்டன.

சாகடித்தலும் செத்துப்போதலும் கூட சாதாரணமாய் ஆகிப்போனது. எதிர் அணியில் எத்தனைபேர் கொல்லப் பட்டனர் என்பதே வெற்றியின் அடையாளம் என்று ஆகத் தொடங்கியது. ஒவ்வொன்றாய்க் கொல்வதில் அசுவாரஸியம் தட்டத் தொடங்கிற்று. 

கோட்டுக்கு வெளியில் நின்றவர்கள் அடித்துக் கொள்ளாமல் அணி பிரிந்தனர். உள்ளே இருந்தவர்களின் குருதியும் நிணமும் அவ்வப்போது வேடிக்கை பார்ப்பவர்கள் மேல் வீசி விழத் தொடங்கின. அவர்கள் அதை அணிச்சையாய் வழித்துவிட்டு ஆரவாரத்துடன், கூர்ந்து நோக்கத் தொடங்கினர். குஷிப்படுத்தியது போதாமல் குறிப்புகளை எடுத்துக் கொண்டு கூவிக்கூவி ஆயுதங்களை வாங்கி உட்புறத்தில் குவிக்கத் தொடங்கினர். 

சொந்த அணியில் எவரேனும் முணுமுணுக்கத் தொடங்கும்போதே சுட்டுக் கொன்றனர். கோடு தாண்டாத உயிர் பறிப்பைக் கொலைகளென்றும் கோடு தாண்டியவற்றைப் போர் என்றும் பரஸ்பரம் அறிவித்துக் கொண்டனர்.

எல்லை தாண்டிக் கொல்லல் தேசாபிமானம் ஆயிற்று. எல்லை தாண்டி இருப்பவன் எதிரி என அறிவிக்கப்பட்டது. எதிரி என்று அதிகாரபூர்வமாய் அறிவித்தபின் இப்படித்தான் கொல்ல வேண்டும் என்றில்லை என்று காற்றில் அறிவிக்கப் பட்டது. கொல்வது மட்டுமே குறிக்கோளா என்று எழப்பார்த்த குரல்வளைகள் தேசாபிமானத்தின் பேரால் நெரிக்கப்பட்டன. 

ஒரே குரலில் மட்டுமே போரிடவேண்டும் என இரண்டு பக்கங்களிலும் சட்டம் இயற்றப்பட்டது. எதிர்க்கேள்வி வாதம் விவாதம் விமர்சனம் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கேள்வி கேட்பவன் விரோதி என அறிவிக்கப்பட்டு விலங்கிடப்பட்டான். விரோதிகள் இருக்க வேண்டிய இடம் சிறை ஆயிற்று.

சிலசமயம் போரிடும் பாவனையில் கோடு தாண்டிப் போனவன் சுடுவதை விடுத்துத் திரும்பிப் பார்க்க துரோகியாகிப் போனான். குறிவைத்து சுடப்பட்டு பிணமானான். சொந்த அணியைக் குறிபார்க்கத் திரும்பினானா அல்லது சொறிந்து கொள்ளத் திரும்பினானா என்பதெல்லாம் பரிசீலிக்கப் படவேண்டிய விஷயமே இல்லை என இரு தரப்பும் அறிவித்தன.

தனியாய்க் கொல்வது குற்றம் மொத்தமாய்க் கொல்வது சட்டம் என்று அங்கீகரித்துக் கொண்டனர். 

அணிசேரா பார்வையாளன் அநாமதேயமானான். பார்வையாளன் என ஒருவருமே இல்லாமலாகிப் போயினர். ஒன்றா கொலையாளியாய் இருந்தான். இல்லையேல் கொலையை ஊக்குவிப்பனாக இருந்தான். வெறுத்துப் போய் தவமிருக்கப் போனவன் மேல் தோளுக்கிரண்டாய் நான்கு சடலங்கள் வந்து விழுந்தன. சம்பந்தமே இல்லை என்றவனும் சுமந்தே போகவேண்டி இருந்தது அல்லது சுமந்தபடி சாகவேண்டி வந்தது.

கொல்வது தவறு என சொன்னவனை, கொன்றுகொண்டிருந்த இருவரும், ஒருசேரக் குறிவைத்தனர் நடுவுநிலை என ஒன்று இல்லவே இல்லை என்றாகிப்போனது. நியாயம் என ஒன்று தனியாக எங்கேனும் தொங்கிக் கொண்டிருக்கிறதா என தேடவேண்டிய பொருளாகிப் போனது.

கோட்டு சூட்டு மாட்டி கொலைக்கள செம்புழுதி மேலே படப்பட தட்டிவிட்டபடி நோட்டுக்களை எண்ணிக்கொண்டு இருந்தவன், எதிரெதிராய் சமர் புரிந்து கொண்டிருந்த இரண்டு கோஷ்டிகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சமாய் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது அமைதி அமைதி என்று அறிக்கைவிட்டபடி இருந்தான். கணக்கெடுத்துக் கொண்டு, இளைப்பாறி, புதிய தளவாடங்களுடன் போரிடுங்கள் என அறிவுரைத்து, கோட்டுக்கு வெளியிலும் அணிகளை ஊக்குவித்துக் கொண்டு இருந்தான்.

தளவாட சப்ளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டது. 

போர் புரிவதற்காக தளவாடங்களா தளவாட உற்பத்திக்காகப் போரா என்பது கோழியும் முட்டையும் என்றாகிப்போனது. 

வெட்டப்பட்ட பாகங்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு போதுமடா சாமி என செங்குருதிக் களம் விட்டு வெளியேறப் பார்த்தவனை பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இருக்கட்டும். பைத்தியமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இறக்கிற காலம்வரை இங்காவது நிம்மதியாக இருந்துவிட்டுப் போகலாம் என இருந்தவன் எதிரில் இரண்டு பைத்தியங்கள் சாக்பீஸால் கோடு கிழிக்கத் தொடங்கின.

நீள தாடிப் பைத்தியமொன்று யார் கேட்கிறார்கள் அல்லது கேட்கவில்லை என்கிற கவலையே இல்லாமல், தலைமேல் கையாட்டியபடி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது

இழுத்தா கோடு வளைச்சா எழுத்து

(14 அக்டோபர் 2010)