Monday, October 25, 2010

எழுத்துக் கலை - மர்மம்


தயவுசெய்து மேலேயுள்ள கதையைப் படிக்காமல் கீழேயுள்ளதைப் படிக்காதீர்கள்.


கதாசிரியர் சார்பிலும் என் சார்பிலும், இது ஒரு வேண்டுகோள். மேலும் இது இவர் எழுத்தைப் பற்றிய ஒட்டுமொத்த அபிப்ராயம் அல்ல, இந்தக் கதை பற்றி மட்டுமே. இதுவே நான் படிக்கும் இவரது முதல் கதை.

இது ஒரு மர்மக்கதை அன்று. கடைசி வரியில் மர்மத்தை வைத்திருக்கும் கதை.

முடிவில் வரும் வாழைமரத்தின் மட்டையைக்கூட அல்ல சிறு நாரையேனும் முன்னால் சொல்லி விட்டு, கண்ணைக் கட்டி ஏமாற்றுவதில்தான் இருக்கிறது கலை. மொத்தமும் புத்தன் கடைசியில் கத்திக்குத்துக் கபாலி. கூர்க் கலாசாரம் தூவப்பட்ட  புத்திசாலித்தனமான  கழிவிரக்க ஒருதலைக் காதல் கதை. இடைவெட்டி வரும் ஃப்ளாஷ்பேக் எதற்கு, சொல்முறை நவீன உத்தியா?

கழிவிரக்கத் தனிமை ஒருபுறம். கல்யாண விருந்தின் ஆரவார குதூகலம் மறுபுறம். இந்தக் கதை நிஜத்தில் நடந்த சம்பவமாகவே கூட இருக்கலாம். கதையில் நிஜமாய் அது நிகழ்த்தப்பட்டு இருக்கிறதா?

சுஜாதா ஒரு ப்ரொபஸர் கதை எழுதியிருப்பார். புத்திசாலி எனத் தொடக்கத்தில் அவர் வியக்கும் போது, அவன் யாரெனத் தெரிவதால் நாம் பதைப்போம். (ஹிட்ச்காக்கின் திறந்த மர்மம்)  ப்ரொபசர், படிப்படியாய் அவன் பேச்சில் அறிவில் ரசனையில் அறிவுஜீவி எனக் கவிழ்ந்து, தம் பெண்ணை அவனோடு அனுப்பிவைப்பார். அவள் அவனைக் காதலிக்கக்ககூடாதா எனக்கூட ஏங்குவார். போலீஸ் தேடி வருகையில்தான், அவன் நக்ஸலைட் என அவருக்குத் தெரியவரும்.  பெண்ணின் பத்திரம் குறித்து பதைப்பார். அவனோடு காலாற நடந்ததை சூழ்நிலையின் பதைப்பறியாமல் அவள் தனது தந்தையிடம் விவரிக்க பதைப்பும் பரிவும் அங்குமிங்குமாய் குரங்காட்டம் ஆடிக்கொண்டே இருக்கும் நமக்கு.

சமூகம் மற்றும் இலக்கியதையெல்லாம் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தபடி, சுவாரஸ்யமாக கதை சொல்வது ஒன்றே குறியாய் எழுதிக் குவித்த சுஜாதாவிடம் இலக்கியவாதிகள் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவு இருக்கிறது!

சஸ்பென்ஸைக் கைக்குட்டைக்குள் எட்டாய் மடித்து மூடிவைத்து கடைசியில் பிரித்துக் காட்டுவது போங்கு. குறைந்தது கைக்குட்டை இருக்கிறது என்றாவது சொல்லவேண்டும். கைக்குட்டைக்குள்  இருக்கலாம் என்பதற்கான ஒரு சாத்தியத்தையும் சொல்லி அதன் பிறகும் கண்கட்ட முடிந்தால் அது உச்சம்.

எழுத்தென்பது,  பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்பட்டக் குழந்தை போல், விரல் பிடித்து ஓட்டமும் நடையுமாய் ஓடிவரவைக்க வேண்டும் வாசகனை.

இது இவரெழுதிய முதல் கதை எனில் கொண்டாடலாம். இதைவிடவும் சிறந்த கதையை இவர் எழுதி இருக்கக்கூடும், அல்லது இனி எழுதக்கூடும்.

வித்தியாசமான பின்னணி இருக்கிறது என்பதைத் தெரிவுக்கான தகுதியாய்க் கொள்ளாமல், மிகச்சிறந்த படைப்புகளை அழியாச்சுடர்களில் வெளியிடுவதுதான் அங்கு படங்களாக இருப்போருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.