Monday, November 8, 2010

மாற்றம் - ஷங்கர் ராமன் (ஆகஸ்ட் 1983) மீட்சி முதல் இதழ்


மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா? கட்டுரையில் குறிப்பிடப்படும், எனது நண்பன் ஷங்கர் ராமன் எழுதிய இரண்டு கதைகளில் ஒன்று இது.


மாற்றம்

ஷங்கர் ராமன்

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்க முயற்சி செய்கிறேன். அப்போது நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு விடுபட்டு எஞ்சிய சயங்காலத்தை கிரிக்கெட்டில் செலவழிக்க யத்தணித்துக் கொண்டிருந்தேன். பதினைந்து பதினாறு வயதில் உடம்பும், மனமும் கிரிக்கெட்டிற்கு ரொம்ப ஏங்கும். வீட்டில் எவரும் இல்லை. அத்தை வீட்டிற்குப் போயிருந்தனர். பள்ளியிலிருந்து வந்தவுடன் டிபன், காப்பி சாப்பிட எப்பொழுதும் நிர்பந்திக்கும் அம்மா இல்லாதது புது அனுபவமாக இருந்தது. கிரவுண்டிற்கு கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் ஃபேன் கீழ் நின்றுவிட்டுப் போகலாம் என்று இருந்தபொழுது வாசல் மணி அடித்தது. திறந்தவுடன் ஒருவன் கையில் ஏதோ தாளுடன் நின்றுகொண்டிருந்தான். தந்தையின் பெயரைச் சொல்லி, வேண்டும் என்றான். அவர் இல்லை என்றும், இன்னும் சில மணி நேரம் கழித்து, அல்லது நாளைவந்து பார்க்கும் படியும் கூறினேன். அவன் நகைத்தது போல் எனக்குத் தோன்றியது. அவனுக்கு சற்றுதள்ளி மற்றொருவன் நிற்பதை அப்பொழுதுதான் பார்த்தேன். அவன் காலடியில் ஏதோ தோல் கருவி இருந்தது. முதலாமவன் என்னிடம் அந்தத் தாளைத் தந்தான். அதில் எழுதியிருந்தது எனக்கு ரொம்பப் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் பயமாக இருந்தது. தந்தையைக்
கூப்பிட்டு அவர்கள் வருகையைச்சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிவிட வேண்டும் என்று மிகப் பலமாகத் தோன்றியது. அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்த டெலிபோனை அணுகினேன். கிட்டே போனவுடன் தான் ஒரு வாரம் முன்பு சிலர் வந்து அதை டிஸ்கனக்ட்செய்துவிட்டர்கள் என்று ஞாபகம் வந்தது. கழற்றியிருந்த சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு எதிர்ச்சாரியில் இருந்த வீட்டுக்குப் போக கதவை லேசாக சாத்திவிட்டு, சாலையில் இறங்கினேன். நாலு முக்கியமான சாலைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில், ‘போலீஸ்நின்று கொண்டு போக்குவரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். என் வீட்டுக் காம்பவுண்டின் இட்து பக்கத்தில், சுமார் இருபது கஜதூரத்தில் ‘போலீஸ்நின்று கொண்டிருந்தார். சாலையைத் தாண்டுவதற்கு போக்குவரத்து உதவவில்லை. ஒரு வழியாக எதிர் வீட்டினுள் நுழைந்தேன். அந்த வீட்டம்மாள் டெலிபோன் இருக்கும் இடத்தைக் காண்பித்துவிட்டு, “ஸ்போர்ட்ஸ் வீக்வாங்க இப்பலாம் ஏன் வர்ரதில்லை?என்று கூறியது நினைவு இருக்கிறது. நான் அதற்குள் என் அத்தை வீட்டு என்களைச் சுழற்றிக் கொண்டு இருந்தேன். முதுகில் அவ்வப்பொழுது ஜில்லிப்பு வெடிக்க மறுமுனை குரலுக்குக் காத்திருந்தேன். அத்தைப் பெண் எடுத்ததாக ஞாபகம். தந்தையைக் கூப்பிடச் சொன்னேன். தந்தை வந்து நான் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, அவர்கள் யார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “இதோ வர்றேன்என்றார். அவர் குரலில் இருந்த சாதாரணம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போன் செய்ததற்காகக் காசு கொடுப்பதா வேண்டாமா என்று என்னுள் குழப்பம் ஏற்பட்டது நினைவிருக்கிறது. அதன்பின் கொடுத்தேனா இல்லையா என்று ஞாபகம் இல்லை. வெளியே வந்து சேட்டின் நோட்டீசையும், தம்பட்டத்தையும் நோக்கிப் போனேன். பிரச்சனையின் தீவிரம் அப்பொழுதுதான் என்னுள் பரவ ஆரம்பித்திருந்தது. நான் அவர்களை அணுகியவுடன், நோட்டீஸ்காரன், “நாங்க அச்சுடறோம்என்றான். நான் குளறலுடன், அப்பா இப்பொ வந்துடுவார் அடிக்க வேண்டாம்என்றேன். எண்பதாயிரத்துக்கு கிட்டையாமே,என்றான். இல்லை எப்படியும் வந்துடுவார், அடைச்சுடுவார்என்று ஏதோ சொன்னேன். இம்முறை நோட்டிஸ்காரன் நகைத்ததில் எனக்கு ஐயமில்லை. எங்கள் வீட்டின் பின் இருப்பவர் என்னை நோக்கி வருவது போல எனக்குப் பட்டது நான் அவர்களின் எதிரில் இயல்பாக நிற்காமல் இருந்ததாலோ என்னவோ, என்னைத் தாண்டிச் சென்றவர் திரும்ப என்னை நோக்கி வந்தார். நான் அவரை எப்படி அப்புறப் படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தந்தை டாக்ஸியில் வந்து இறங்கினார். அவர் டாக்ஸிக்குப் பணம் கொடுக்க கைப்பையை திறந்த பொழுது, பக்கத்தில் நின்று, எண்பதாயிரம் அதில் இருக்க முடியாது என்று தெரிந்தும், உன்னிப்பாகப் பார்த்தது தெளிவாக ஞாபகம் இருக்கிறது.

அன்று எல்லோரும் வீடு திரும்பியதும் பெற்றோரிடையே பலத்த வாய்ச்சண்டை நடந்தது. திருமணமானதிலிருந்து பரஸ்பரம் ஏற்பட்ட ஏமாற்றங்கள் உரத்த குரலின் வழியாக வந்து கொண்டிருந்தன. தங்கையும் தமக்கைகளும் மூலைக்கொருவராக சிதறியிருந்தனர். வீட்டில் இருக்கும் ஆறு அறைகளில் எந்த மூலையில் எப்படிப் பொருத்திக் கொண்டாலும் சண்டை சத்தத்திலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகு குரல்கள் ஒரு உச்சத்தை அடைந்து, மெல்ல ஓய்ந்தன.

நான் இரவில் தூங்காதது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி அல்ல. என் வயதில் இருந்தவர்கள், இருப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நீண்ட இரவுகளை விரும்புவார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்த இரவு எனக்கு வித்தியாசமாக இருந்தது. பின் வீட்டுக்காரர் என் அருகே வந்த மறு நிமிடமே எல்லாவற்றையும் கிரஹித்துக் கொண்டு விட்டாரோ என்ற பயமும், அன்று மாலை சிறிது நேரமே தட்டப்பட்ட தம்பட்ட ஒலியும், ஒட்டிய மறு நிமிடமே என்னால் கிழிக்கப்பட்ட நொட்டீஸும் என்னுள் ஆழ அழுந்தி இருந்தன. இவை எண்ணற்ற எண்ணங்களை கிளப்பிய வண்ணம் இருந்தன. வீட்டிற்கு அது நாள் வரை செய்யாத சில்லரை உதவிகள், ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், சிகரெட் சபலத்திற்கு தலைசாய்த்தது, ஏதோ ஒரு சின்ன சுகம் அவனுள் பரவுவதாய் நம்பி, அதை தினம் அனுபவிக்க, அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணைத் தினம் வீட்டிற்கு எஸ்கார்ட் செய்யும் நண்பனுடன் பஸ்ஸில் சில லீலைகளில் ஈடுபட்டு, சக பிரயாணிகள் மலத்தை மிதித்துவிட்டது போல முகத்தை வைத்துக்கொண்டது இப்படிப் பல எண்ணங்கள் என்னுள் வந்து போயின. இருந்தும் மேலே குறிப்பிட்ட மூன்று மட்டும் எப்படி எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று எனக்கு தெரியாதோ, அதே போல, உலகத்தில் ஜனித்ததிலிருந்து ஏற்பட்ட எண்தெரியா மனப்பதிவுகளில் எவையெவை சிக்கலாக ஒன்று சேர்ந்து என்னுள் இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியது என்றும் எனக்குத் தெரியாது. சாலையில் சந்திக்கும் பிச்சைக்காரன் என்னுள் பாய்ச்சும் குற்ற உணர்ச்சிக்கும், (அல்லது பயமா?), மேலே கூறிய உணர்வுகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக இப்பொழுது படுகிறது. அந்த இரவின் நடுவில் கழிவறைக்குச் செல்லும் பொழுது வினோதமானதொரு நிலையிலிருந்தேன் என்று ஞாபகத்தில் படிந்து விட்டது. அந்த நிலையை விளக்க நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூற வேண்டியது அவசியமாகிறது.

வெகு நாட்களாக வீட்டுப் பாடங்களைப் பூர்த்தி செய்யாமல் வந்து கொண்டிருந்த என் வகுப்பு மானவன் ஒருவனைப் பிடித்து பலமாக முதுகில் அடித்தார் ஆசிரியர். வாழ்க்கையில் தப்பிக்க முடியாத ஒன்றாக அதை பாவித்து உட்காரும் இடத்திற்குப் போகத் திரும்பினான் மாணவன். இந்த அலட்சியப் போக்கால் ஆசிரியருக்குக் கோபம் அதிகரித்துவிட்டது.  அவனைப் பிடித்திழுத்து முதுகில் திரும்ப அடித்து நிக்கரைக் கழற்றுவேன் என்று பயமுறுத்தினார். அவன் முகத்தில் மெல்லக் கலவரம் பரவியது எனக்கு நினைவில் இன்றும் உறைந்திருக்கிறது. அவன் அவரின் பிடியிலிருந்து விலகிக் கொள்ள முற்பட முற்பட அவர் பயமுறுத்தல் கூடியது. திடீரென்று அவன் விறைப்பாக நின்றான். ஆசிரியரைத் தடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நின்றன. அவனின் குத்திட்ட பார்வை ஆசிரியரை அவனிடமிருந்து விலகச்செய்தது. கிட்டத்தட்ட அந்த மாணவனின் நிலைபோல உணர்ச்சிகள் அடங்கிப்போன, ஜடமா அல்லது உன்னதமான நிலையின் சாயலா என்று சட்டென்று கணிக்கமுடியாத நிலையிலிருந்தேன் என்று இன்று யோசித்துப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

இதற்குப்பின் தொடர்ந்த மூன்று நான்கு நாட்களில், நடக்கும்போது பாவடை, வேட்டியிலிருந்து கிளம்பும் சொடுக்கலைத் தவிர வீட்டில் வேறு சத்தமே இல்லை. மயான அமைதி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிய வைத்த நாட்கள். எதனாலோ நாங்கள் அவரவர் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ மூன்று நான்கு நாட்களுக்குப் போகவில்லை. அதன்பின் எங்களிடையே சகஜமாக பேச்சு துவங்கிய விதத்தில், கொஞ்சம் இரண்டாம்தர சினிமாத்தனம் இருந்ததாகப் படுகிறது. என் தங்கை, அக்கா ஒருத்தியின் பெயரை உச்சரித்து, “இங்க கொஞ்சம் சாதத்தைத் தள்ளேன்என்றாள். யாரும் யாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடாததால் எனக்குள் வேடிக்கையாக உணர்ந்தேன். மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி அவள் கூப்பிட்டது பரஸ்பர சுவாதீனத்தை இருக்கியிருந்த மெளனத்தைச் சற்றுத் தளர்த்தியது. அதன்பின் அங்கொரு சொல், இங்கொரு செயலாக, சுதாரிப்பு விரிந்து, மெல்ல சுமுகம் தலைகாட்டத் துவங்கியது.

நடுவில் சற்று கலைந்துபோன அன்றாடங்களுக்கு அவரவர் திரும்பினோம். தந்தை வெராண்டாவில் உட்கார்ந்து படிக்கும் காலை தினசரியின் படபடப்பு மீண்டும் கேட்க ஆரம்பித்தது. அந்த சாயங்காலத்தில், தன் மானத்தை விலைபேசிய அந்த பயங்கரமான முடையை அவர் எவ்வாறு சமாளித்தார் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்போல் அம்மா மீண்டும் தன் காரியங்களில் ஈடுபடத் துவங்கினாள். எல்லாம் ஒரு சீரான கதிக்குத் திரும்பின. சில நாட்கள் புறக்கணித்திருந்த கிரிக்கெட்டை நான் மீண்டும் ஆடத்துவங்கினேன். ஆனால் ஆட்டமிழக்கும் போது, சட்டென்று எனக்கு பந்து வீசுபவன் மீது குரோதமும், சுயவெறுப்பும் நின்றுபோயிருந்தது என்பது, சமீபத்தில், மேலே விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடந்து, எட்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு மத்தியான வேளையில், அரைத்தூக்க நிலையில், குழப்பமான எண்ணங்களுக்கு நடுவில் திடீரென்று தட்டுப்பட்டது.   

(ஆகஸ்ட் 1983)
மீட்சி முதல் இதழ்