Monday, November 1, 2010

காஞ்சனையின் பரிகாஸம்

காஞ்சனை - புதுமைப்பித்தன் 

கதையைப் படிக்க விரும்புவோர் மேலிருக்கும் சுட்டியை சொடுக்குக.

அடிக்குறியிட்டுக் கோடு போடுவது அல்லது அடைப்புக்குறி இட்டுக் காட்டுவது எனத் தொடங்கினால், ஆரம்பத்தில் ஒன்றும் கடைசியில் ஒன்றும் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்கிறபடியான கதை காஞ்சனை. எவன் போடும் அடைப்புக் குறிக்குள்ளும் அடங்காத பிடாரி அல்லவா புதுமைப்பித்தன்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் முதல்முறையாகக் காஞ்சனை ’படித்தது’. திட்டு வாங்கிப் படித்தது. திட்டியது, இன்று தெரிந்தவர்கள் தெரியாமலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் எனக் கருதும் அளவிற்குக் கார்ட்டூனாகிப்போன கவி. அன்று ஒரு கெளரவமான கவிஞர் பத்திரிகையாளர். மாதக்கடைசியின் மாலைப் பொழுதில் – மாமல்லன் என்று ஒரு கிக்கிரி பிக்கிரிக் கதை ஒரு வாரப் பத்திரிகையில் பிரசுரமாகிப்போக அதைப் படித்துவிட்டு அவர் கேட்ட கேள்வி

புதுமைப்பித்தனைப் படித்திருக்கிறீர்களா?
ஒன்றிரண்டு...
என்னங்க எவனையும் படிக்காம எழுத வந்துட்றீங்க!

சுஜாதாவின் பதினாலு நாட்கள், பாண்டிச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நூலகத்தில் புதிய வரவுகள் எனப் பார்வைக்காய் வைக்கப்பட்ட அன்றே நின்றுகொண்டே வாசித்தவன். சரித்திர சாம்ராட் சாண்டில்யன் 22 புத்தகங்களில் மேடான பிரதேசங்களையும் பிருஷ்டங்களையும் தடவி பேண்டிருக்கையில் 19 ஐ சப்புகொட்டி ருசித்து முடித்திருந்தவன். எஸ்எஸ்எல்ஸி பரீட்சைக்குப படிப்பதான போக்குக் காட்டி பாரதியார் நினைவு நூலகத்தில் பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் ’படித்திருந்த’ மதர்ப்பெல்லாம் மண்ணானது. 

பின்னாளில் படிக்கிற பழக்கம் கைவரக் கிடைத்த பயிற்சிதானன்றி அவை படிப்பல்ல எனப்புரிந்தது. ஜெயகாந்தனும் சுஜாதாவும் துண்டாக வேறு வேறானவர்கள் எனத் துலங்கிற்று ஆனாலும் ரெண்டும் பிடிக்கிறது எப்படி என்கிற குழப்பம். விஸ்வநாதனையும் ஒதுக்க முடியாமல் ராஜாவையும் தவிர்க்க முடியாமல் தராசுமுள் தவிப்பு போல.   

எழுதுகிற மற்றும் அச்சில் பார்க்கிற ஆசை இரண்டையும் ஏறக்கட்டிவிட்டு படிக்கத் தொடங்கிப் படித்த பல கதைகளில் ஒன்று காஞ்சனை. புரியாமல் இருந்தது, புரிந்தது போல் இருந்தது. பார்வை முதிர்வுக்கு ஏற்றார் போல் விரிவைடையும் கதைகளையே இலக்கியம் எனச் சொல்கிறார்கள் பொலும் என மூட்டம் விலகத் தொடங்கிற்று.

இன்றைக்கு ஐம்பத்தியேழு வருடங்களுக்கு முன் கலைமகள்ஜனவரி 1943 ல் எழுதப்பட்டு வெளியானது காஞ்சனை. இரண்டாம் உலகப்போர் முடிய இன்னும் இரண்டரையாண்டுகளுக்கும் மேல் இருக்கையில் எழுதப்பட்ட கதை. அதைப் பற்றி ஒற்றைவரி உதட்டுச்சுழிப்பு கூட ஹதைக்கு உள்ளே இருக்கிறது, வெவ்வேறு கதைகளில் சுதந்திரப் போராட்டத்தின் சமூகத் தாக்கங்கள் முழங்கப்படாமல் விரவிக் கிடப்பதிப் போல.  

இந்தக் கதையை எழுதியவன் இறந்து போனான். அப்போது படித்தவர்கள் இறந்து போயினர். இதைப் படித்துவிட்டு வந்தவர்கள் பின்னாளில் எழுத்தில் பெரும் ஆளுமைகள் என்று ஆனார்கள். அத்துனை பேரையும் வசீகரித்து விசாரிக்கும் அளவுகோலாய், புதிதாகவே இருந்துகொண்டிருக்கிறது இந்தக் கதை.

இன்றைய இளைஞர்களில்,

எழுத்திற்குள் அடி எடுத்து வைக்கும் போதே லத்தீன் அமெரிக்கா பேசியபடி இறுமாந்த வண்ணம் நுழைபவர்கள் இருக்கிறார்கள்.

ஆண்டாண்டுகால அயோக்கியத்தனம், பரவலாக்கப்பட்ட விழிப்புணர்வால் அம்பலப்பட்டு, கல்வியறிவால் கைநிறைய சம்பாதிக்கும் தன்னிறைவு கண்கொண்டு பார்க்கும் காரணத்தால், அடுத்திருப்பவனும் அவன் மூதாதையாகத்தான் இருப்பான் என்கிற பின்-ஜாதீய முன்முடிவுடன் அணுகுபவர்கள் இருக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் மட்டுமே மக்கள் மற்றவர்களெல்லாம் அவர்களைச் சுரண்டும் அயோக்கியர்கள் என்று அதிதீவிரமாய் உழைப்பாளிகளைத் தவிர அனைவரிடமும் உபதேசிக்கும் பிரச்சார உழைப்பாளிகள் இருக்கிறார்கள்.

இந்த இளைஞர்கள் வளர்ந்துகொண்டு இருக்கிறார்கள், பல்முளைக்கும் பரபரவில் கண்டதையெல்லாம் கையில் அகப்பட்டதையெல்லாம் கடித்தபடி. கவலைக்கிடம் இல்லை. கடந்துவர வாய்ப்பிருக்கிறது. காலம் கற்றுக்கொடுக்கும். திறந்த கண்கொண்டு தெளிவாய்ப் பார்க்கத் தொடங்கினால், மனம் முதிருந்து மனிதம் தட்டுப்படக்கூடும்.

காஞ்சனை இருந்து கொண்டிருக்கிறாள் அனைத்தையும் பார்த்து 'களுக்' என்று சிரித்தபடி.

தன்மை ஒருமையில் சுய எள்ளல் விமர்சனங்களுடன், எழுத்தாளனைப் பற்றி எழுத்தாளனால் எழுதப்பட்ட கதை. எழுத்தாளர்களுக்காக எழுதப்பட்ட கதை என்று சேர்த்துக் கொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சரி, ஆச்சா போச்சா எனக் கொண்டாடும் அளவிற்கு இதில் அப்படி என்னதான் இருக்கிறது? முதலில் இது ஒரு கதைதானா?

யாருமே தமக்குப் பழகிய சூழல் தரும் பாதுகாப்பில் பலசாலிதான் தைரியவான்தான். அங்கு அவன் விருப்ப்பட்ட  முகம் காட்டி பாந்தமாய் வாழ்ந்துவிட்டுப் போய்விட முடியும். தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி பெரிய சண்டப் பிரசன்டன்தானே!

எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் எழுத்தாளனை எவன் கேள்வி கேட்பது? கனகச்சிதமாய்க் கட்டி எழுப்ப்பட்ட பிம்பத்தை அடித்து நொறுக்கி சாதாரணமாய்த் தரையில் போட்டுப் பொறுக்கிக்கொள் என்று பரிகஸிக்கிறான்.

அமானுஷ்யத்தில் தன்னையே இருத்திப் பார்த்து அப்படியான சந்தர்பத்தில் தான் எப்படி நடந்து கொள்வோம் என்று தன்னைத்தானே பரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொள்வதோடு கூடவே என்னையும் உங்களையும் இன்னும் வரப்போகிற மனிதகுலத்தையும் பார்த்துக்கொள் எனக் கூறி அலட்சியமாய் இருந்துகொண்டு இருக்கிறான் புதுமைப்பித்தன்.