Sunday, November 7, 2010

மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா?

கென் Ken னிடமிருந்து ஒரு கடிதம்.

அட்டகாசம் சார், ஒரு உண்மை சம்பவத்தை இப்படி கதையாக்க முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு.

உங்க சிறப்பே காட்சியாய் கதையை நகர்த்துறதுதான் ஒரு படமாக்கிற அளவுக்கு திரைக்கதையாய் எழுதியிருக்கீங்க

சின்ன சின்ன ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கு

கலக்கிட்டீங்க மச்சி சார் எழுத்திலேயும் ரத்தம் கொடுத்து சகமனுசனாவும் ரொம்ப பெருமையா இருக்குங்க கதை


கதை பிடித்திருந்ததற்கு நன்றி கென்.

எனக்கு ஒரு விதத்தில் வருத்தம். தவறிவிட்டது. 

பஸ்ஸில் நான் கடைசியாக எழுதியதை, அதிஷா தலைதீபாவளிக்குக் கிளம்பி விட்டதால், எனக்கு ஃபோன் செய்த போது அவன் படித்திருக்கவில்லை. எனவே ஃபோனிலேயெ படித்துக் காட்டினேன். சார் என்ன சார் இது ஹாஸ்பிடல் ரிசப்ஷன் கெளண்ட்டர் எல்லாம் தெரியுதே சார் என்றான்.


அப்ப இதைப் பதிவா போடலாமா என்றான்.

சார் அவர்.....இதுமாதிரி சின்னச் சின்னதா இருக்கறதைத்தானே சார் பதிவா போடறார். போடுங்க சார் நல்லா இருக்கு என்றான்.

அப்புறம் வழக்கம் போல கொஞ்சம் சுந்தர ராமசாமி புராணம்.

சார். நாங்கள்ளாம் அவரை நேர்ல சந்திக்கக் குடுத்து வைக்கலையே சார்.

அவர் எழுத்து ஒரு பக்கம் இருக்க, ஆளே நம்பளைப் பைத்தியமா அடிக்க வெச்சுடுவார். எழுத்தும் மனுஷணுமா சேர்ந்து பெரிய ஆளுமை. அதனாலதான் ...இவரை மிகச்சிறந்த கதைகள் எழுதியவர் என்றும் அவரை மிகப் பெரிய ஆளுமைன்னும் சொல்றேன். என்றேன்.

அதிஷாவிடம் பேசிய உந்துதலில். பஸ்ஸின் கடைசி பகுதியைக் காப்பி செய்யப் போனவன் எதற்கும் இருக்கட்டும் என ஆரம்பத்தில் இருந்து என் பகுதி பஸ்ஸை எடுத்து நோட்பேடில் ஒட்டி பிறகு WORD ஆக ஆக்கிக் கொண்டேன். 

தொடக்கத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அங்கங்கே இணைத்துக் கொண்டே போக ஆரம்பித்தேன். இடையில் கொஞ்சம் எழுத வேண்டி வந்தது. நான் அந்த காலத்தில் ஜெயகாந்தனுடன் அடித்த கஞ்சா பற்றியும் ஒரு நாள் மாலை அப்போதைய நண்பனுடன் கஞ்சா அடித்துவிட்டு, அன்றைய ஒற்றையடிப் பாதைபோலிருந்த கிண்டி மேம்பாலத்தில் ஏறப்போகையில், தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தவுடன் சைக்கிளைத் திருப்பி, அம்ஷன்குமார் வீட்டிற்காய் விட்டு, விஷயத்தை சொல்ல அவர் சிரித்தபடி பைப் பிடித்துக் கொண்டு பாய் தலயணை கொடுத்ததையும் எழுதிக் கொண்டே போகத் தொடங்கினேன். இடையிடையில் பஸ் பகுதி வர இணைத்து இணைத்துப் போகையில் இது பதிவாக அல்ல கதையாகிக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. சரி விட்றா சவாரி என உற்சாகமடைந்தேன்.தன்மை முன்னிலைப் பார்வையில் வளரத்தலைப்பட்டது. 

முதலில் எழுதிய படிவம் முடிவதற்கு மூன்று பக்கங்கள் இருக்கையில் மனைவியின் நுழைவில் நான் அவராக மாறத் தொடங்கவும், அவருக்கு ராஜ கோபால் ராவ் என பெயர் வைத்து முன்னேறி முடித்தேன். அப்புறம் தொடக்கத்திற்கு ஓடிவந்தேன். கோலத்தைக் கலைக்கத் தொடங்கி படர்க்கையில் ராஜ கோபால் ராவை மதியத் தூக்கத்தில் எழுப்பினேன். படர்க்கைத் தோள் பார்வை துல்லியப்படத் தொடங்கியதால் கதையில் பஸ்ஸுக்கு இடமில்லை. எனவே பஸ் குறுஞ்செய்தி ஆயிற்று. அப்புறம் அவர்மேல் நான் ஏறிகொள்ள அவர் நடக்கத் தொடங்கினார். என் இருப்பில் அவர் நுழைந்து கொண்டார். அவருக்கென்று என் வீட்டைக் கொடுத்தேன். ஏற்கெனவே என் ரத்தம் கொடுத்த அனுபவங்களை அவர் இயல்பாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 

இடையில் நேசமித்திரனிடம் CHATTING போனேன். விஷயத்தை சொன்னேன். அவர் உற்சாகப் படுத்தினார். திரும்ப கொஞ்சம் சுந்தர ராமசாமி.

ஏதோ ஒரு தருணத்தில் யுவகிருஷ்ணா CHATல் வந்தான். அவனிடம் கதையின் முதல் மற்றும் கடைசி பாராக்களை எடுத்து ஒட்டினேன். பாராட்டினான். ஃபோனுக்குப் போனேன். வைரம் என்றொரு கதையைச் சொன்னேன்.

சார் உடனே எழுதுங்கள் சார். பிரம்மாதமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு கதை எழுத வரும் அளவிற்கு விளம்பரம் தெரியவில்லை என்றான். அவர்... என்ன சூப்பராய் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள். 

ஹெமிங்வேவுடைய புத்தகம் வெளிவரப் போவதற்கு முன்னால் அவர் திமிங்கல வேட்டைக்குப் போய் வந்து எல்லா பத்திரிகையிலும் அது ப்ளாஷ் ஆகும். இது புதிதல்ல. அன்று அரசல் புரசலாக பாவனைகளில் நடந்தது. கால மாறுதலில் காசின் பெருங்கூவலில் கூச்சம் கோமணம் அவிழ்த்துக் கூத்தாடுகிறது. 

இன்று எது ஒன்றும் வெளிப்படையாக பிரமோஷன் என்கிற பெயரில் நடக்கிறது. இது வியாபாரம். 

முதலீடு செய்து புஸ்தகம் போடுவது, அலமாரி பீரோக்களில் அடுக்கி வைக்கவா

எழுதியதை பிரமோட் செய்வதற்கும் எழுத்தாளனைப் பிரமோட் செய்வதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. முழுக்க நனைந்தாயிற்று முக்காடு எதற்கு என்று அடுத்த கட்டமாய், பிரமோட் செய்துகொள்வதற்காக மட்டுமே எழுதுவது தொடங்கியாயிற்று. கீழுள்ளில் இருப்பதை முகம் முழுக்க திப்பி திப்பியாய்ப் ப்ளெடரில் அப்பி தெருத்தெருவாய் திரியத் தொடங்கும் அபாயம். சொற்ப காலத்தில் அது இயல்பாகிவிடும் அபாயம். நடமாடும் ஒப்பனை அறைகளாய் மாறிவிட்ட மனிதர்கள்.

கதையை எழுதி முடிந்து விட்டாதாய் நினைத்து அவசரமாக சுமாரனுக்கு அனுப்ப, அவன் கதை ஓகே. ஆனா சரியா அலைன் ஆகாம கொஞ்சம் அல்லாடுது திரும்பப்படி என்றான். திரும்பப் படிக்கத்தொடங்கினால் கட்டி கட்டியாக இருக்கிறது. இழைப்பே இல்லை. மனம் எழுதியது மானிட்டரில் தெரியவே இல்லை. வெல்டிங்கே பத்தலை. அங்கங்கே பெய்ண்ட் இல்லாமல் பேஸ் பட்டி இளிக்கிறது. என்னடா இது கருப்பு குண்டு பேனாவை விட்டு, கணினிக்கு வந்தது தப்போ? என் துரதிருஷ்டம், எவ்வளவு உதறியும், புது பேனா எழுதவே இல்லை. வேறு விதியற்று எதிர்காலம் இதுதானோ என தட்டச்சத் தொடங்கியது தவறுதான் போலும்.

கையில் எழுதிய காலங்களில் இது நேர்ந்ததே இல்லை. 

கையில் எழுதும் போது முழுக்க எழுதிவிட்டு திரும்ப முதலில் இருந்து காப்பி பண்ணத் தொடங்குவேன். கதை புதியதாய், அடுத்தவன் கதையைப் படிப்பது போல இருக்கும். ஈறுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு இருக்கும் கப்பிக் கசடெல்லாம் ஈ என்று இளிக்கும். அடுத்தவனுடையதுதானே என்கிற குதூகலத்துடன் பாத்ரூம் பிரஷ் கொண்டு பல் துலக்கல். துருத்தலையெல்லாம் தூக்கிப் போடு. முடிந்தால் நிர்தாட்சண்யமாய் வெட்டு. அதற்குப் பெயர் ப்ரூனிங்என்று ஞாநி சொல்லிதான் தெரியும். தோட்டவேலைக்காரனின் கத்தரிக்குப் பெயர் தெரியாது, தொழிலாய் அது பாட்டிற்கும் சீர்படுத்திக் கொண்டிருக்கும். அதைப் போலவே, அதுவரை எழுதி முடித்த கதையைக் காப்பி பண்ணி காப்பி பண்ணி இதைத்தான் செய்துகொண்டு இருந்திருக்கிறேனோ. தன்னிச்சையாய் செய்து வந்த காரியம் பெயர் தெரியவரவும், நினைவிலி நிலையிலிருந்து மேலெழுந்து பிரக்ஞைபூர்வமாய் கண்ணுக்குப் புலப்படாத ஒரு அங்கமாயிற்று.

அந்த காலத்தில், அன்று வந்த குங்குமத்தில் வெளியாகி இருந்த, சுஜாதாவின் அரிசி பற்றி கூறி அதில் ஒரு லைன் ஓவர் ரைட்டிங் எது சொல் என்றார் ஞாநி. தேடிக்கொண்டே இருந்தேன். வரியை சுட்டிக் காட்டி இந்த வரி. இவ்வளவு பிரமாதமாய், எழுதிவிட்டு, இது ஏன், இந்த வரி, கதைக்கு இது தேவையா

அவனைச் சுற்றி இருந்த நாங்கள், அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்து கொண்டோம்? சொல்கிறேன். 

பத்திரிகைக்கு அனுப்பும் முன் ஒரு தடவை மறு வாசிப்பு கொடுத்திருந்தால் சுஜாதா இதைக் கண்டிப்பாக வெட்டி இருப்பார் என்றார் ஞாநி. எனக்குக் குழப்பமாக இருந்தது.அந்த வரி உபரியா இல்லையா? தெளிவாக (மடத்தனமாகக்கூட) ஒரு முடிவெடுக்க முடிந்திருந்து சுஜாதா சரியென இப்போது தோன்றுவது அன்றே தோன்றியிருந்தால் மூர்க்கமாய் சண்டைக்குப் போயிருப்பேன். இன்று அந்த வரி, கதைக்கு சுஜாதா போட்ட இடைவேளை கார்டாகத் தெரிகிறது. அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான உந்து கட்டையாக இப்போது புரிந்து கொள்கிறேன். ஞாநியுடைய அபிப்ராயமும் ரொம்பப் பிழை என சொல்லிவிட முடியாது. பொது நோக்கில் ஞாநியின் கருத்து சரிகூடதான். ஆனால் அந்தக் கதைக்கு அதன் நடைக்கு அதில் இருக்கும் எள்ளலுக்கு அந்த வரி சரிதான். (ஞாநிக்கு சுஜாதாமேல் எனக்கிருந்ததை விடவும் பெரிய பதிப்பு அன்று இருந்தது. அவரது சுஜாதா பற்றிய இன்றைய அபிப்ராயம் தெரியாது. எனக்கும் ஞாநிக்குமான நெருக்கம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலாகத் தொடங்கி இறுதியில் பரீக்‌ஷாவை விட்டு விலகுவதில் முடிந்தது வேறு விஷயம்). 

அடுத்தவரின் அபிப்ராயங்களில் இருந்து நாம் அடையும் பயன் என்ன? நம் நிலை சரியாவென உரசிப் பார்த்துக்கொள்ள முடிகிறது. நம்மைக் கூர்மைப் படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் அடுத்தவனைக் கிழிப்பதிலேயே குறியாய் இருக்கும் கூர்தீட்டலாய் போய் முடிகிறது.

அடுத்தவர் அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்வது ஒரு படைப்பாளிக்கு அத்யாவசியம். ஆனால் அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் அவசியமில்லை என்றுதான் சொல்லிக்கொண்டே இருப்பான். அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. அர்ச்சகர் அர்ச்சகராக இருக்கும் வரையில்தான் ஸ்வாமி ஸ்வாமியாக இருக்க முடியும்.

எழுதி முடித்த அந்தக் கதைக்கான அடுத்தவர் அபிப்ராயம் அடுத்து எழுதப் போகிற கதைக்கு உரமாகவும் ஆகலாம் தவிடாகவும் போகலாம். தெளிவானவன் குழம்புவதில்லை. ஆனால் குழம்பி சிந்திக்காதவன் தெளிவடைவதும் இல்லை.

பொதுவாக எழுதி முடித்துவிட்டதாய் மனதில் பட்டுவிட்டால், எந்த எதிர்வினைக்காகவும் மாற்றுவது கிடையாது. (சத்ய நாராயண பூஜையை சங்கர நாயண பூஜை என்று எழுதுவது போன்ற தகவல் பிழைகள் அல்லது ஆரம்ப கால எழுத்தில், வாழ்க்கையில் இருந்த மராட்டி தாத்தாவிற்கு, சதாசிவ ஐயர் எனப் பேக்கு மாதிரிப் பெயர் கொடுத்து, கூடவே பொருந்தாத முறுக்கி விட்ட மீசையும் வைத்து, ஞாநி தவறுணர்த்த புத்தகமாகையில் பெயரெடுத்து தாத்தாவாக்கியது தவிர பெரியதாகக் கதையை மாற்றும் அளவிற்கு மாற்றங்கள் செய்வதில்லை.

ஒரே ஒரு முறைதான் பத்மா (ஞாநியின் முன்னாள் மனைவி) அவளை M80ல் எங்கோ ட்ராப் பண்னப் போகையில்.

கதை படித்தேன் (கைப் பிரதி) நல்லா இருக்கு. அவர் ஏன் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு சாகணும் என்றாள்.

ட்ரைவ் இன் வந்து முழுக்க ஒருமுறை படித்துப் பார்த்தேன். அதானே. ஏன் சாகணும். கதையே ஜாங்கிரி சுத்தல். சுற்றி ஓய்ந்துவிட்டார் என்றுதான் அனுப்பி விட்டார்கள். இதில் சாவு முற்றுப் புள்ளியா? அபத்தம். எஞ்சிய வாழ்க்கையை அவர் வாழ்ந்துதானே தீர்த்தாக வேண்டும். மிஞ்சிமிஞ்சிப் போனால் - தூங்கிதானே கழித்தாக வேண்டும் மீதி வாழ்வை. 25 வருடங்கள் கழித்து, ஜ்யோவராம் சுந்தர் அந்தக்கதை தனக்குப் பிடித்திருப்பதாக சொன்னதற்கு நான் பத்மாவிற்குதான் நன்றி சொன்னேன் மனதிற்குள். ஏன் என்றால் அவள் சொல்லிதானே அவரைத் தூங்கப் பண்ணினேன். கதையை எந்த நிலையிலும் பத்மா எழுதவேயில்லை. நான்தான் எழுதினேன். ஆனால் திரும்ப ஒரு முறை படிக்க வைத்தது அவளால் அடைந்த லாபம்.

எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும் அதனளவில் உண்மையான அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்டதாகவும் கற்பனை எனினும் இயல்பானதாகவும் முழுமையாகக் கண்டு வாழ்ந்த கனவாகவும் அதற்கான உள் ஒத்திசைவுகளோடும் இருக்குமேயானால் கட்டாயம் காலங்களைக் கடக்கும். சந்தேகமே வேண்டாம். கலைக் கொள்கையெல்லாம் இல்லை. அதெல்லாம் நான் படித்ததும் இல்லை தெரியவும் தெரியாது.  ஆனால் பாத்திர மனங்களின் இயல்பும் உண்மையும் இறவாத்தன்மை கொண்டவை. இது சத்தியம்.

கல்லூரி நாட்களில் இருந்து உயிர்த்தெழுந்த 94 வரை, எனது முதல் வாசகன், ஷங்கர் ராமன். (இவன் எழுதியவை இரண்டே கதைகள்தான்). அதில் மீட்சியில் வந்த மாற்றம்என்கிற கதையைப் படித்துவிட்டு அம்பை அனுப்பிய கடிதத்தால், என் வயிற்றிலிருந்து கிளம்பி வாய் வழி வந்த புகையை அணைக்கும் வல்லமை கொண்ட தீயணைப்பு எந்திரம் உலகில் இன்னும் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

அம்பை கடிதத்தில் சொல்லியிருந்தது

– இந்தக் கதையை எழுதிய கை விரலுக்கு மோதிரம் போடவேண்டும். இதற்குமுன் வண்ணநிலவனின் மிருகம்படித்த போது தான் எழுதிய கைக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போலத் தோன்றியது என்று எழுதினேன் –

இதை எழுதுகையில் ஷங்கர் ராமனைத் தொடர்பு கொண்டு நினைவை சரிபார்த்துக் கொண்டேன். அம்பையின் கடிதம் எங்கோ தவறி விட்டதாம். அந்த மட்டுக்குமாவது அது தொலந்து போனதே.கிடைக்காமலே போகட்டும். மீட்சியை யாரேனும் தேடிப்பிடித்து மாற்றம் கதையை வலையேற்றுங்கள். நாலு பேர் படித்துவிட்டு இது என்ன பெரிய கதை என சொல்லுங்கள், மனம் கொஞ்சமேனும் சாந்தமடையும். 

துரதிருஷ்டவசமாக, எதையோத் தேடப்போக மாற்றம் கிடைத்தது. புரட்டிப் பார்த்தவன், படிக்கத் தொடங்கி விட்டேன். அடக் கஷ்டமே இன்னுமா அது மோதிரத்திற்குத் தயாராய் இருக்கும். கவனம் பத்திரிகைக்கு நான் போய் ராஜகோபாலிடம் கொடுத்த அவரவர் ஏமாற்றம் வேறு, விட்டல் ராவ் தொகுத்த கலைஞன் வெளியீடான, இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுதிகளில் ஏதோ ஒன்றில் இடம் பிடித்திருக்கிறதாய்க் கேள்விப்பட்டேன். என்னைய்யா அநியாயம்! இரண்டே இரண்டு கதைகள் அதுவும் 1982ல் எழுதியவன் அதற்கப்புறம் எதுவுமே எழுதாதவன் எப்படியையா எழுத்தாளன் ஆகமுடியும். அதுவும் இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பில் இடம். ம். உலகம் கெட்டு விட்ட்து. அவனவன் டீ காபி சிகரெட் டீ காபி சிகரெட் எனக் கூவிக் கூவி வாழ்வையே பணையம் வைத்து, முழுநேரம் புக்குபுக்காய் அடுக்கி மெனக்கெட்டுக் கொண்டு இருக்கிற காலத்தில். ரெண்டே ரெண்டு கதை.

என் துக்கங்களுக்கும்தான் ஒரு முடிவே இல்லை. கோபி கிருஷ்ணன், காணி நிலம் வேண்டும் போல ஓரிரண்டு கதைகள் எழுதத் தொடங்கியிருந்த நேரம். கையெழுத்துப் பிரதிகளில் படித்திருக்கிறேன் பெரிய அபிப்ராயம் வந்ததில்லை. ஒன்றோ இரண்டோ அப்போதுதான் பிரசுரமாகத் தொடங்கி இருந்தன. ஒரு நாள் கநாசு பைலட் த்யேட்டர் அருகில் க்ரியாவின் கீழே கிடைத்தார். மாட்ணியா மவனெ!

என்ன சார் உங்குளுக்கு ஸ்கூல் பசங்க எழுதறா மாதிரி எழுதற கோபி கிருஷ்ணன் கதைகள் நல்லாருக்கும் என்னப் பத்தி ஒரு வார்த்தைகூட சொல்ல வராது இல்லையா?

தோளில் கை விழுந்தது

மாமல்லன், எனக்கு வயசாயுடுத்து ரசனை போயுடுத்து முட்டாளாயிட்டேன்னு சொல்லுங்கோ தப்பே இல்லை. அது உங்க அபிப்ராயம். அதை சொல்ல உங்களுக்கு ரைட் இருக்கு. உங்களை சொல்லாமல் கோபிகிருஷ்ணனை சொல்லிட்டேன்னு நீங்க சொல்றதுல எனக்கு ஏதோ மோடிவ் இருக்குங்கறாப்பல ஒரு அர்த்தம் வறது. அது மனச சங்கடப் படுத்தறது. எனக்கு வேண்டியவா வேண்டாதவாளே கெடையாது. எனக்குப் பட்டதை சொல்றேன். அதுதான் சரியாயிருக்கணும்னு, கட்டாயம் ஒண்ணும் இல்லையே.

மனதிற்குள் சாஷ்ட்டாங்கமாய் விழுந்தேன். ஆண்டவனே இந்தத் தள்ளாத வயதை, எனக்கும் தருவதாய் உனக்கு அபிப்ராயம் இருந்தால், எல்லா விதத்திலும் இந்தக் கிழம்போல என்னை வாழவை.

இந்தக் கதையை முடித்தபின், எனக்கு இதில் ஒரு வருத்தம் என்னவென்றால், தன்மை முன்னிலைப் பார்வையில் உருவெடுக்கத் தொடங்கியதை save as செய்து தனி பிரதியாக்கி அதில் படர்க்கையாக ஆக்கத் தொடங்கியிருந்தால், கதை உருவாவதை உற்றுநோக்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு உபயோகப் பட்டிருக்கும். இவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எந்தக்காலத்திலும் வந்துகொண்டே இருப்பார்கள். இளமையில் காணும் லட்சியக் கனவுகளை வாழ்வங்காடியில் தொலத்துவிடக்கூடும். பின்னாலேயே வந்துகொண்டு இருக்கும் ஒரு பொடியன் அதைக் கையில் எடுத்துக் கொள்கிறான். அதைத் தன்னுடையதாகவே அடையாளம் காண்கிறான்.

நான் ஒரு திருடனாய் வேசியாய் புத்தனாய் பொய்யனாய் இன்னும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எழுத்தில் கற்பனை என்ற போர்வையில் பொய் சொல்லக்கூடாது. நான் இந்த வாழ்க்கையில் ஒரு புழுவாய் இருந்து நெளிந்த வண்ணம் வாழ சபிக்கப் பட்டிருக்கலாம். நல்லது தங்களைப் போன்ற உயர்ந்த வாழ்வு எனக்கு லபிக்கவில்லை. போகட்டும். குறைந்த பட்சம் எழுத்து, என் விருப்பப்படி வாழ, எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறது. அநேகமாய் எந்த நிர்பந்தமும் இல்லை. அதிலும் போய், புனைவு தானே என்ன போயிற்று என்று பொய்சொல்லி பிழைப்பது ஒரு பிழைப்பாகுமா? உண்மையென நம்பியது பிழையாகக் கூட இருக்கலாம். தவறில்லை நாமெல்லாம் மனிதர்கள்தானே. ஆனால், மனமறிந்து பொய்யைப் பிழைப்பாக்கலாமா?