Friday, November 12, 2010

பின் தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்

நவம்பர் 1999ல் வெளியான பின் தொடரும் நிழலின் குரல் பற்றி இன்று கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்தது.

//அருணாசலம் என்ற தொழிற்சங்கவாதியிடம் வீரபத்திரப் பிள்ளை என்ற இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட, இயக்கப் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட குடிக்குத் தன்னை இழந்து சக்கடையில் மரிக்கும் ஒரு முன்னாள் தோழரின் கைப்பதிவுகள் கிடைக்கின்றன. அவையே மேற்சொன்ன புனைவுகளாக நாவலில் அமைகின்றன.// http://kaalapayani.blogspot.com/

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாக, இணையத்தில் சாரு நிவேதிதாவிடம் யானையைப் புணர்ந்த கொசுவாக நான் மாற்றப்பட்ட பிறகு, இதைவிடக் கேவலப்பட இனி ஏதுமில்லை என்ற முடிவோடு தனு உண்டு காண்டீவம் அதன் பேர் எனக் களம் இறங்கிய பின்னர் ஜெயமோகனின் வலைப்பூவில் படிக்க நேர்ந்தது இது.

அண்ணாச்சி 3 June 15th, 2009
பின் தொடரும் நிழலின் குரல்நாவலில் குடிகாரன் குறிப்புகள் என்று ஒரு பகுதி வரும். கட்சியிலிருந்து நீக்கபப்ட்ட வீரபத்திரபிள்ளை குடிகாரனாகி தெருவில் இறப்பார். அவரது முழுமைபெறாத டைரி அது. அந்தக் குறிப்புகளைப் பற்றி அண்ணாச்சிஎன்ன சொல்கிறார் என்ற ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாதென எண்ணியிருந்தேன். அண்ணாச்சி நாவலை வாசித்துவிட்டு குமுதத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்று சொல்லியிருந்தார். http://www.jeyamohan.in/?p=2945

தமிழினி வஸந்தகுமாரிடம் இது பற்றி கெட்டேன் அவனோ,

இப்புடி இது வரைக்கும் யாருமெ சொல்லலியேப்பா மாமல்லா அதுல ரஷ்யா பத்தி டால்ஸ்டாய் தாஸ்தாவெஸ்கின்னு ஏகப்பட்டது வருமேப்பா என்றான்.

பகுதிதான் போலும் ஒழிந்து போகிறது என வாளாவிருந்தேன்.

குறுகுறுப்பில் சுகுமாரனிடம் கேட்டேன்.

இத, நாவல் வெளிவந்த சமயத்துலையே, மாமல்லன் இது மாதிரி முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் எழுதி இருக்கானே வி.கே என்றேன். கவிஞரே.. என சிரித்து விட்டுவிட்டார் வி.கே என்றான் சுகுமாரன்..

பின் தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் என்னுடையது என்பதில் நான் – வேறு வழியின்றி பெருமைப்பட்டுக் கொள்ளவா? வயிற்றெரிச்சல் படவா? இந்தக் கேடுகெட்ட இலக்கிய உலகத்தை சபிக்கவா?

அதை அப்புறம் பார்க்கலாம்.

சொந்தக் கதையை சொல்கிறேன். நீங்கள் முடிவு செய்யுங்கள். முப்பது வருடத்தில் முக்கி முக்கி மொத்தம் முந்நூறே  பக்கங்களில் முப்பதே கதைகள் எழுதிய இந்த ஈனப்பயல் காழ்ப்புணர்ச்சியால்தான் ஜாம்பவான் மேல் சாணி அடிக்கிறான் என நீங்கள் நினைத்தால், இது ஜெயமோகனுக்கு எதிரான அபாண்டக் குற்றச்சாட்டென உங்களுக்குப் பட்டால், தண்டியுங்கள். வஞ்சிக்கப்பட்டவன் தண்டிக்கவும் படுகிற காப்பிய சோகமாகவாவது ஆகட்டும்.

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் என்கிற இந்தக் கதையை – இது சிறுகதையா நெடுங்கதையா குறுநாவலா என்பதை கல்லூரிப் பேராசிரியர்களிடமோ அல்லது அவர்களால் குருவே என நமஸ்கரிக்கப்படும் நாகர் கோயிலிலோ கேட்டுக் கொள்ளுங்கள். நான் ஒரு தற்குறி. கனவில் கதை தேடும் தற்குறி. எனக்குக் கொஞ்சம் கற்பனை வறட்சி, நான் வாழ்ந்ததிலிருந்து அல்லது நான் பார்க்க நேர்ந்த அடுத்தவர் வாழ்விலிருந்துதான் கதை எழுதத் தெரியும். தெரியும் என்பது கூட நானாக சொல்லிக்கொள்கிற வார்த்தை. இதையெல்லாம் இன்றைய இலக்கியப் பகுப்புகளில் யாரேனும் கதையாகப் பொருட்படுத்துவார்களா என்பது கூட சந்தேகம்தான். இது போக ஜூன் மாதப் பிறப்பாய் ஒரு ஜெமினியாய்ப் போய்விட்ட எனக்கு ஸ்திரமின்மையே ஸ்திரத்தன்மை என்றாகிவிட்டது. ஒரு இடமாய் உட்காரத் தெரியாத  ஓடுகாலி. அவ்வப்போது லீவ் போட்டுவிட்டு ஓடிவிடும் உணர்ச்சிகரம். எப்போ வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் டூ விடத்தயாராய் இருக்கும் தான்தோன்றி. சக ஊழியனிடம் அதிகாரியிடம் டூ விட்டால் இலக்கியம் இலக்கியம் ரொம்ப வெறுப்பேற்றினால் லீவ் போட்டு குமாஸ்தா. மிக சமீபத்திய லீவ் கொஞ்சம் கூடுதலாகிப் போய்விட்டது 1994 முதல் 2010. 16 வருஷம் பாதி ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய சர்வீஸ். துரதிருஷ்டவசமாய் இந்த விடுப்பு இலக்கியத்திற்காய் போய்விட்டது. அதுதான் பென்ஷன் கிடைப்பதற்கு பதில், கோமணமே உருவப்பட்டுவிட்டது. உருவியமுகத்தில் இரவல் கோமண இளிப்பு.

நான் இந்தக் கதையை எழுதியது செப்டம்பர் 1986ல். சங்கு சக்ர சகலங்களுடன் தோற்றமளிக்கும் சக்கரத்தாழ்வார் போல பிறக்கையிலேயெ பேனாவுடன் பிறந்தவர் என்ன செய்து கொண்டு இருந்தார் 1986ல். விரல் சைஸில் தன் நாவல்களை தத்துபித்தென எழுதிவிட்ட அசோகமித்திரன் பலநூறு பக்கங்களில் எழுதி இருக்கவேண்டும் என்கிற மனதிற்குள்ளான விமர்சனத்துடன் வாசித்தபடி இரண்டு கைகளாலும் கல்கி குமுதம் ஆனந்தவிகடனில் பல்வேறு பெயர்களில் இப்போதைய சினிமாக் கதைகளுக்கு அப்போதே பயிற்சியாக இருக்கட்டுமென மசாலாக் கதைகள் எழுதிக் கொண்டிருந்திருந்தார். அதையும் அவரே சொல்லி இருக்கிறார், வேறு யாரும் சொல்லிவிட முடியுமா? உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொல்லுவதெல்லாம் சுயம் சொல்லல்.

1977 மார்ச் நாடாளுமன்ற தேர்தல். தாகூர் கலைக் கல்லூரியில் PUC படித்த நேரம். பாண்டிச்சேரியில் முத்துமாரியம்மன் கோவில் தெரு, காசுக்கடைத் தொகுதியில் வரும். அன்சாரி துரைசாமி என்கிற ஒல்லியான கொஞ்சம் கூன் போட்ட பழைய காங்கிரஸ்காரர்தான் அந்தத் தொகுதியின் நினைவு தெரிந்த காலத்திலிருந்து, நிரந்தர எம் எல் ஏ. தூய்மைக்கும் நேர்மைக்கும் பேர்போன எளிய மனிதர். பக்கத்துப்  பெருமாள் கோவில் தெருவில் மாதாக் கோவில் தெருவுக்கும் காந்தித் தெருவுக்கும் இடைப்பட்ட கதுப்பில் – தற்போதைய பாண்டிசேரி டவுனை அல்லது அப்போதைய பாண்டிச்சேரியை படுக்க வைத்த மாம்பழ வடிவமாகக் கொண்டால் கொட்டைக்கு ஒரு பக்க நீள வெட்டாக மாதாக் கோவில் தெருவும் மறுபக்க நீள வெட்டாகக் காந்தி தெருவும் வரும். இப்படியான ஒரு கதுப்பில் ஜீவரத்தின உடையார் வீட்டுக்குப் பக்கத்தில் அன்றைய தேர்தல் சாவடி. 100 அடி தொலைவில் நிற்கும் சிலருடன் வெள்ளைக்கோடு போட்டு தெருவிற்குக் குறுக்கே கட்டப்பட்ட கயிறுக்கு உள்புறம் போலீஸ்காரர்களும் வெளிப்புறம் சிலருடன் நின்று, ஓட்டுப்போட வருவோரிடம் பன்னீர்த் தூவலாய், சார் சார் 20 மாத அநியாயம் அக்கிருமம் போதாதா ஜனதாவுக்கு ஓட்டுப் போடுங்க சார், அன்சாரி சார் நல்லவர் சார், என்று குழைவுக்குரலில் கும்பிடு.

அதற்கு சில வருடம் முன்புவரை காந்தித் தெரிவிலிருந்த சிவன் கோவிலில் சுண்டலுக்கோ அல்லது 100 – 200 அடி தள்ளி இருந்த பெருமாள் கோவிலில் பொங்கலுக்கோக் கூட இவ்வளவு கெஞ்சியதில்லை. முன்னால் நிற்பவருக்கு இடுப்பு இடைவெளியில் இரண்டு கையையும் இரு புறமும் நீட்டி மாமா மாமா என்ற கெஞ்சு கத்தலில் ரெண்டு தொண்ணை அபேஸ். திரிசமங்களைத் திறமைகளாய்ப் பெருமிதப் படுத்திக்கொண்டு திரிந்த பருவம்.

17 வயதிற்குள் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த பிள்ளையாரை கடவுள் இல்லையென நிரூபிக்கிறேன் பார் என எட்டி ஒரு உதை. பீடத்திலிருந்து சாய்ந்தவரை ஒழுங்காக உட்கார்த்திவிட்டு ஜூட். அன்றிரவு குற்ற உணர்ச்சியில் ஜுரம். எஸ்எஸ்எல்ஸியில் 58% பிள்ளையாரால்தான் என உள்ளூர ஒரு வதங்கல். பெருஞ்சித்திரனார் பின்னால் தட்டாஞ்சாவடி தமிழ்மணியோடு தீச்சுடர் அல்லது தீப்பொறி என ஒரு கையெழுத்துப் பத்திரிகை. வட்டத் திகிரியில் மண் குழந்து கொண்டிருந்த காலம். வடிவெடுக்க இன்னும் வருடங்கள் இருந்தன.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட அன்று வ.உ.சி உயர்நிலைப் பள்ளியின், தமிழாசிரியர் சுப்பிரமணியன் என்கிற இரா.திருமுருகன் வழக்கத்திற்கு மாறாக, மேஜையின் மேல் உட்கார்ந்தார். சயின்ஸ் வாத்தியார் பி.டி. மாஸ்டர் ட்ராயிங் மாஸ்டர் என எல்லோரிடமும் கொஞ்சம் திராவிட வெற்றித் தளும்பல். கடவுள் இல்லவே இல்லை என கறைவணக்கத்துடன் வகுப்பு தொடங்கும் தீவிர தி.க. நாமதேவன் என்கிற அரிமதி தென்னவன். கம்பன் விழாப் புகழ் புலவர் புகழேந்தி. இவர்களுக்கிடையில், பழைய காங்கிரஸ் நாஸ்திக திருமுருகன் சார், மூக்குப் பொடி போடாமல் வாடிய முகத்துடன்

இன்னக்கி நான் பாடம் எடுக்கப் போகறதில்லெ. யாருக்காச்சும் பத்திரிகை படிக்கிற பழக்கம் இருக்கா.

சுவர் பார்த்து அடுக்கப் பட்ட பத்திரிகைகளின் முதுகெண்ணி மட்டுமே பழக்கம். பத்து பேப்பர் நாலு ஞாயிறு இணைப்புகள் சேர்ந்தால் ஒரு கிலோ. ஒரு கிலோ எடையுள்ள ஹிண்டு பேப்பர் ரத்னா டாக்கீஸில் புரியாவிட்டாலும் ஆங்கிலப் படங்களாகும்.

நேத்து நடு ராத்திரியில நம்ப நாட்டோட பெரும் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண் மொரார்ஜி தேசாய் போன்ற ஏராளமானபேர் கைது செய்யப் பட்டிருக்காங்க. நம்ப  நாட்டுக்கு இன்னக்கி கருப்பு தினம்னு சொல்லணும். மிகுந்த கவலைக்கும் சஞ்சலத்திற்கும் ஆளாயிருக்கேன். இந்த மனசோட என்னால பாடம் நடத்த முடியாது.

எனப் பேசி புரிந்து புரியாத கிலேசத்தை உண்டாக்கிப் பையன்களைப் பேப்பர் படிக்கவைத்தார். படித்தவர்கள் டாக்டராகவும் என்ஜினியராகவும் ஆகியிருப்பார்கள். ஃப்ரென்ச் குடியுரிமை உள்ளவர்கள் ஃப்ரென்ச் மட்டும் நன்றாகப் படித்து ஃப்ரென்ச் ராணுவத்தில் சேர்ந்து சொல்தா ஆகி ஃப்ரெஞ்ச் தரைகளை நீள் துடைப்பத்தில் பெருக்கி புகைப்படம் பிடித்துக் கொண்டு பீர் தொப்பையுடனும் முப்பத்தி ஐந்து வயதில் மூன்று மாத பென்ஷனுடனும் வாழ்க்கையில் தங்க சட்டமிட்ட படங்களாகியிருப்பர். நான் வர்ஜாவர்ஜமின்றி, தனித்தமிழ்க்காரன், திககாரன், திமுககாரன், வலது இடது சாரிகள், கம்பன்கழக கவி பட்டிமன்றக்காரர்கள் பாரதி கல்கி சாண்டில்யன் நாபா சுஜாதா ஜெயகாந்தன் கண்ணதாசன் எனக் கலவடையாய் படித்தபடி பெரும்பாலான நேரம் படித்தவன் போல் தோற்றமளிக்கும் எவனையும் உதிரும் முத்து சிதறிவிடப் போகிறதே என வாய் பார்த்து பிற்காலத்தில் ஓயாமல் பேசப் போகிற எழுத்தாளனாகிக் கொண்டிருப்பது தெரியாமல் நாக்கு தொங்க நாய் ஓட்டத்தில் பரபரத்துக் கொண்டு இருந்தேன்.

திருமுருகன் சார் வருத்தப்பட்ட 13 ஜூன் 1975 முதல் வகுப்பிலிருந்து 21 மாதம் வளர்ந்து, அரவிந்த ஆசிரமத்தில் வேலை பார்த்த, இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரிக்கு வந்து விடுதியில் தங்கி தலை மொட்டை அடித்துக் கொண்டு இரத்தப் புற்று நோயில் இறக்கப் போகிற எதிர்சாரி வீட்டிலிருந்த நண்பன் சுப்பிரமணியின் தகப்பனாருடன் அந்த நெருக்கடி நிலை தேர்தல் முடிவுகளை இரவு தூங்காது வால்வ் ரேடியோவில் கேட்டு நோட்டுப் புத்தகத்தில் கட்டம் போட்டு குறித்தபடி எங்களைப் புறக்கணித்த தமிழகத்தை நாங்களும் புறக்கணித்து ஆரவாரித்திருந்தோம். மீசையிலும் ஹிட்லராக இருந்த அப்பா அன்று மட்டும் அடிக்காமல் அனுமதித்து இருந்தது ஜேபி மொரார்ஜிக்காக வேண்டி. மணியின் தந்தைதான் சி.கே.சக்ரபாணி ராவிடம் ஜோசிய ரீதியாகவும் தமிழில்தான் இவனது வருங்காலம் எனக்கூறி அண்ணா படித்த பச்சையப்பன் கல்லூரியில் அதுவும் தமிழ்தான் படிப்பேன் என்கிற அடத்திற்கு ஹிண்டு உபாசகரை அடுத்த வருடம் உடன்பட வைத்தார். பூணூல் போட்டுக் கொள்ள மாட்டேன் மீறிப் போட்டால் பெரியார் திடலில் போய் அறுத்துக் கொள்வேன் என திடமாய்க் கூற காலம் இருந்தது. அருமந்த பிள்ளையின் திடம் பார்த்து அவரொன்றும் சும்மா இருக்கவில்லை. குதிரையின் குண்டிக்கே கடன் வாங்கவேண்டி இருந்த காசில் வெள்ளிப் பூணூல் தங்கப் பூணூலுக்கெல்லாம் சொந்தப்...யே அடகு வைத்தாலும் தேறாது என்கிற தன் கை தடம் பார்த்தே அந்த மாத்வ ஹிட்லர் அமைதிகாத்து நெருக்காமல் இருந்தார்.

நெருக்கடி நிலை முடிவிற்கு வந்து, நடந்து கொண்டு இருந்த தேர்தல் கோட்டில் நின்று, ஓட்டே இல்லை எனினும், நம்பிக்கையின் பேரால் வாக்காளர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கையில், ஒரு புறத்தோளில் விரித்த, காசித்துண்டுடன்  கருத்துக் காய்ந்த மனிதர் வர இயந்திர கதியில் புறுபுறுவென குள்ள நண்டு ஓடிற்று. சார் சார்...பற்களைக் கடிப்பது பக்கவாட்டில் தெரிகிற அளவிற்கு இறுகி ஒட்டிய கூடுமுகம். துண்டு போடாத கையால் குறுக்குக் கயிற்றைத் தூக்கிவிட்டு குனிந்து உள்ளே நுழைந்தவர் திரும்பி, ஒரு முறை முறைத்துவிட்டு சாவடி நோக்கிப் போனார். வறட்சியாய் நகைத்தது போலும் இருந்தது. ஆனால் தூணில் அஞ்சடியேறியபின் சிறுவன் குறி விருவிருக்கும் பயமாகவும் இருந்தது. பக்கத்தில் இருந்தவர் பரவாயில்லை என்பது போலத் தோளில் கை வைத்தார்.  அவர் முகம் நினைவில் இல்லை. அன்சாரி அவர்களுடன் பார்த்திருக்கலாம். பழைய காங்கிரஸ் அன்றைய ஜனதாகாரரோ என்னவோ. ஓட்டு போட்டுவிட்டு துண்டு திரும்பி வந்தது. வீட்டிற்குப் போகிறவர்களிடம் நமக்கென்ன வேலை என்பதாலோ அல்லது இந்த ஆள் பயமுறுத்தும் விதமாக இருந்ததாலோ சற்றுப் பின்வாங்கல். கயிறு தூக்கி குனிந்து வெளியே வந்தவர்,

என்னா வயிசு ஒனக்கு
பப்பப் பதினேழு
ம்.

துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்ள முற்பட்டார். வெயில் மண்டையைப் பொளிக்கத் தொடங்கியிருந்தது. துண்டு கையோடு சரிய கை தோளிலேயே மொழுக்காகி விட்டிருந்தது.

கொதிக்கிற அண்டா வெந்நீரைத் தூக்கி மேல ஊத்தினா எப்பிடி இருக்கும்னு தெரியுமா? ஓட்டுப் போடச் சொன்னியே அவனை எத்தினி நாளாத் தெரியும்?

மூடிய வாயின் ஒரு பக்கம் சினுங்கி மேல் ஏற மூக்கு சுருங்கி ம்ஹ்ம் என்ற சத்தம் வெளிப்பட தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

பின்னால் தெரியவந்த்து அவர் ஒரு கம்யூனிஸ்ட். காங்கிரஸ்காரர்களால் தொழிற்சங்கப் போராட்டத்தில் வெட்டப்பட்ட கை. அப்போது அவர் இயக்கத்தில் இல்லை. மாஜி கம்யூனிஸ்ட். நடமாடும் காந்தியாய் தூய எளிய காங்கிரஸ்கார்ராய் ஓட்டுக் கேட்க வைத்தவர் கொள்கை ரீதியில் மூர்க்கரும் கூட.

17ல் தைத்த முள். உள்நின்று உறுத்திக் கொண்டிருந்தது   கோஷங்கள் நாடகங்கள் வாசிப்புகள் இலக்கியம் உடன்பிறவா ரத்தங்களாய் ஒரே தட்டில் உண்ட தீவிரர்கள் பிளவில் குரோதப்பட்டு கொள்கை ரீதியானது எனக்கூறி துரோக முத்திரைகள் குத்திக்கொண்டு பார்க்கப் பார்க்க  முறுக்கேறி முற்றிக்கொண்டிருந்தன.

1982ல் அலுவலக முறைப்பில் ஈரோடில் ஆறுமாதத் தனிமை.  பரீக்‌ஷா வாயிலாகத் தெரிய வந்த, மயக்க மருந்து நிபுணரான ஞானபானு ஜீவா, வக்கீல் சிதம்பரம், ஜீவா வீட்டில் இருந்த, பெரியாரின் இறுதிவரை சிஸ்ருஷைகள் செய்து கொண்டு இருந்தவரான கருஞ்சட்டைத் தாத்தா, சிக்கையா நாயக்கர்  கல்லூரிப் பேராசிரியர் தேவிபாரதி எனப்பேசிப் பகிர்தலில், பகிர்வறை படுக்க மட்டுமே என்றானது.

சிதம்பரம் அவர்கள் எதோ கட்டிட காண்ட்ராக்ட் எடுத்து மைய ஆஸ்பித்திரி வளாகமாக இருக்க வேண்டும் கீற்றுக் கொட்டகை ஆபீசில் உட்கார்ந்திருப்பார். மாலைகளில் அங்கு பேச்சு. ஒரு நாள் புறாக்கள் வளர்த்த ஒருவனைப் பற்றி யாரிடமோ அவர் விவாதித்ததைக் கூட இருந்தது கேட்க நேர்ந்தது.

ஈரோடிலும் அம்மா மெட்ராஸிலுமாக இரண்டு தனிக் குடும்ப நிர்வாகத்தால் காசு பற்றாக்குறைக்கான வெறுப்பில் சாராயம். கூடவே, குடித்து குடல் வெந்துவிடுமோ என்ற பயத்தில் மாட்டுக்கறி தின்று, ஏதாவது ஒரு தமிழ் சினிமாக் கருமாந்திரத்தைப் பார்ப்பதை வாராந்திர திவசமாக செய்த ஒரு நாளில், பின் இருக்கையில் இருந்த இரு இளைஞர்கள் சினிமா முடிந்து வெளிவருகையில் நீங்கள் மாமல்லன் தானே என விசாரிக்க இலக்கியப் பிசிராந்தை என்கிற நினைப்பில் ஆம் எனவும் விசாரிப்பு அதிதீவிரர் விசாரணையாக மாறுவதைக் காண நேர்ந்தது. அவர்களின் தலைமையைப் பற்றி தாறுமாறாகப் பேசப்பட்டுவிட்டது என்கிற தவறான அனுமான நடுநிசி மிரட்டல். உன் தலைவர் என் ஜேபியில் அவரை எனக்குத் தனிப்படத் தெரியும் வேண்டுமெனில் அவரை விசாரித்துவிட்டு வா எங்கும் ஓடும் ஆளில்லை. இந்தா அலுவலக மற்றும் அறை முகவரி குறித்துக்கொள் எனக்கொடுக்க மழைக்கொதுங்கிய சிகரெட் பரிமாறலாய் மழையோய்ந்த பின்னும் பேச்சோயவில்லை.

இவையும் இன்னும் எழுத்தில் வராதவை என எல்லாம் மனதாழத்தில் உருண்டுகொண்டிருக்க 86ல் ஒரு நாள் திடீரெனப் பிடறி பிடித்து உந்த எழுதத் தலைப்பட்டதுதான் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்.

அதெல்லாம் சரி கதை என்ன?

நான்கு பகுதிகள் கொண்ட கதை. இளம் குமாஸ்தா எழுத்தாளன், பழைய பேப்பர் விற்கும் நாடார் கடையில் ஒரு நோட்டுப் புத்தகம் கிடைக்கப் பெறுகிறான். அதில் நல்ல கையெழுத்தில் ஒரு கதை உள்ளது. ஆனால் அது அரசை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதால் தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோவென அஞ்சி தன்னுடையதில்லை எனப்புலம்பி புலம்பி இலக்கிய ஆர்வத்தால், வாசகராகிய உங்களிடம் படிக்கச் சொல்கிறான், இது முதல் பகுதி. அந்த நோட்டுப்புத்தக எழுத்தைப் பற்றிய பெளதீக விவரணை பகுதி இரண்டில். மூன்றாவது பகுதி சிறுகதை. நான்காவது பகுதி இந்தக் கதையை எழுதியவனுடைய மோசமான கையெழுத்தில் கழிவிரக்க, சுய விமர்சனக் குடிகாரப் புலம்பல். அவன் ஒரு மாஜி கம்யூனிஸ்ட். தற்போது வெற்றுக் குடிகாரன். புலம்பித்தள்ளி எழுதியிருப்பதிலிருந்து ஒரு சித்திரம் புகைமூட்டமாக உருவாகிறது நெருக்கடிநிலை காலகட்டம் பற்றி. போதையின் நிர்பந்தத்தால் புழுவிற்கும் கீழாகப் போனவன் நடுங்கும் எழுத்தில் தன்னைத் தானே கட்டி எழுப்பிக் கொள்வதை நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இன்று இந்தக் கதையை இளம் எழுத்தாளன் ஒருவனிடம் ஒன்றும் சொல்லாமல் மின்ன்ஞ்சலில் கொடுத்தேன்.

அவனுக்கும் எனக்குமான மின்பேச்சின் சிறு துண்டம் கீழே:

கதை படிச்சிட்டேன்
எஸ்
உங்க வழக்கமான பாணியில்லாமல், நிறைய இடத்தில நையாண்டி நுணுக்கமா, அதே நேரம் வாழ்வோட இயலாமையை சுய வலியோட, வெறும் நக்கல்ன்னு விட்டுட்டு போக முடியல
உனக்குப் படிக்கக் குடுத்தது உனக்காக இல்லை என்க்காக
இட்லிக்கார கிழவி பத்தி, புரட்சி, கம்யூனிசம் பெந்தோகோஸ்தே
அதாவது எனக்குத் தெரிய வேண்டியது, நீ பின் தொடரும் நிழலின் குரல் படிச்சிருக்கியா?
ஹஹா நினைச்சேன்
நெனச்சியா மவனே
ஆனா ஒரு வாசகனா எனக்கு தோணினதை சொல்லிடுறேன். உங்க கதைகளோட சிறப்பே காட்சியமைப்பில் நகர்ர எழுத்து தான். நீங்க திரைக்கதையாவே எழுதிடுற ஆள் இப்படிதான் எனக்குத்தோனும், வாசிக்க வாசிக்க கதைக்குள்ள நாமளும் போய் அவங்க நடுவில உட்கார்ந்து, எல்லாத்தையும் பாக்கிற உணர்வு, ஆனா இந்த கதை மொத்தமா பின் தொடரும் நிழலோட ஒரு அங்கதமா, எனக்கு தோணிச்சு, பட் இடையில உங்களையும் மீறின யதார்த்தம் இருக்கு, கொஞ்சம் எடிட் பண்ணனும்னும் தோணிச்சு, குமாஸ்தா வர்ணனை, நிறைய இடத்தில வர பீலிங்க்
இப்ப எழுதிகிட்டு இருக்கிற பதிவோட தலைப்பு// பின் தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் // 1986ல் எழுதியது மிஸ்டர்
ஹஹா, நான் சொல்ல வந்தது ஜெமோ உருவின பின் தொடரும் நிழலின் குரல்
நான் வெச்ச புள்ளியில் போட்ட கோலம்தான் பின்...
அதேங்க. அவர் இதை படிச்சிருப்பாரா? முன்னாடியே, அவரோட பின் தொடரும் நிழலின் குரல் படிச்சப்போ, என்னமோ தோணிச்சு எனக்கு, இது ஜெமோவா எழுதினதா இல்லை யாராச்சும் எழுதி கொடுத்திட்டாங்களான்னு
13 வருட இடவெளியில் திருட்டு, 1986 செப்டம்பர் நான், 1999 நவம்பர் அவன்
ம்ம்ம் இடையில நீங்க எழுதாம போனது வசதியா போயிருக்கும்
26 பக்கம் நான் 700 பக்கம் அவன் மூலக்கதை யாருது
10 பக்கம் கிடைச்சா ஜெமோ 10000 பக்கம் எழுதுவார், சாரு திட்றது சமயத்துல பொருத்தமா இருக்கு
பதிவைப் பார் நிறைய எழுதிக் கொண்டு இருக்கிறேன், சாருவும் இதைப் படிச்சிருக்க வாய்ப்பில்லையான்னு தெரியலை, தெரிஞ்சிருந்தா விட்டிருக்க மாட்டான். ஆனால் எஅனக்கு பேக்கிங் கிடையாது
ம்ம்
பரவாயில்லை சொல்றதை நான் சொலிடுவேண்
ஹஹா எழுதிடுங்க
கொஞ்ச நேரத்துல பதிவை ஏத்திடுவேன்னு நெனக்கிறேன்
ஏன்னா இது ரொம்ப அநியாயம், ஜெமோ பெருசா நேர்மை காந்தியம்னு பெனாத்திட்டு இப்படி பண்ணலாமா
அதுதான். என் கதையை படிக்கிற புது ஆள் நீ அதனாலதான் முக்கியத்துவம்
இது யார் படிச்சாலும் சொல்லிடுவாங்க
நெஜமாவா
என்ன பின் தொடரும் நிழலின் குரல்ல நீங்க சுட்டுட்டீங்கன்னு சொல்வாங்க
இது போதும்
ஹஹாஹாஅ
1986 புக் இருக்கே
புது ஆளுங்க ஜெமொ பிதொகுநிழல் படிச்சிருப்பாங்க. உங்க கதை வந்தது தெரிஞ்சிருக்காது, ஆமாங்க, ஆனா விளக்கமா சொல்லனும்
என் வலையிலையெ இருக்கெ
ஆமாங்க இருக்கு
நன்றி
ஆனா தேடி படிக்கிற ஆளுங்க கம்மி வெறுமனே, ஜெமோ கடவுள்னு கொண்டாடுற ஆட்கள் நிறைய
எழுதிடறேன்
சினிமா புகழ் வேற, கேட்கவா வேணும்
இதை உனக்கு முன்முடிவு ஏற்படுத்தாமல் இருக்கணும்னுதான் முன்னலயே சொல்லாஇ
பாதி படிச்சப்போ
எனக்கு உண்மையான் உண்மௌ வேண்டும்னுதான்
எனக்கு டவுட் ஜெமொ சைட்ல காப்பி பண்ணிட்டீங்களான்னு, இப்போ ரீசண்டா கூட பின் தொடரும் நிழலின் குரல் பத்தி ஜெமோ பெருமையடிச்சிருந்தார், அவர் சைட்ல

தமிழின் தலை சிறந்த இளம் ஆளுமை தன்னிகரற்ற தரமான விமர்சகப் பெருந்தகை முன்னோடிகளை மட்டுமின்றி, தனக்குச் சற்று முன்னே எழுதியவர்களைக் கூட விமர்சித்து அவரவர்க்குரிய இடத்தில் அவரவரை அமர்த்தி வைக்கும் அறிவாசான், திலீப் குமாரைப் பற்றியும் சுரேஷ் குமார இந்திரஜித்தைப் பற்றியும் கட்டுரை எழுதியவர் ஏன் விமலாதித்த மாமல்லனைப் பற்றி எழுதவில்லை. குதிருக்குள் இருக்கும் அப்பனை என்ன செய்வது என்பதுதான் பிரச்சனை. முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் தவிர்த்து மாமல்லனைப் பற்றி எழுத முடியாது. அதைத் தான் சுட்டிருக்கிறோம் அதுவே ஆரம்ப பீஜம் எனபதை சொல்ல முனைந்தால் சொந்த பீஜங்கள் தெரித்துவிடும்.

கை நீள வைத்த தைரியம் கணக்கு வழக்குகளோடு கூடியது. முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் எந்த சிறு பத்திரிகையிலும் வரவில்லை. பரந்த கவனிப்பிற்கு ஆளாகவில்லை. நேரடியாக புத்தகத்தில்தான் வந்தது.

தனக்குத் தானே பேசி நொந்து கொள்வதை மனோவியாதியின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகச் சொல்வார்கள். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். கோடிப்பேர் அப்படிப் பேச நாம் ஏன் இப்படிப் பேசுகிறோம். உண்மையில் யார் சரி? இது ரொம்ப சிக்கல். அதுவும் இரவு ஏறிக்கொண்டே போகிற இந்த நேரத்தில் இதற்குள் புகுந்தால் காலையில் அலுவலகத்திற்கு  நிச்சயம் தாமதமாகப் போக நேரிடும். காரணம் கேட்டு முறைக்கிற அதிகாரியிடம் கதை எழுதிக் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியாது. முஷ்டி மைதுனம் செய்தேன், எனவே காலையில் சீக்கிரம் எழ முடியவில்லை என்கிற காரணத்தைவிட கதை எழுதினேன் என்பது அபத்தமாகப் படும் அவருக்கு. உண்மையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது என் அனுபவத் தெளிவு.

என எழுதி, இலக்கியவாதிகளின் முகச்சுளிப்பிற்கு ஆளாகி புறக்கணிக்கப்பட்ட புத்தகம்.

அந்த நாய் எழுதியதை நான் படிக்கவே இல்லை அல்லது என் மேக்னம் ஆப்பஸ்ஸான பின் தொடரும் நிழலின் குரல் நவம்பர் 1999ல் எழுதிய பின்புதான் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் என்கிற கருமாந்திரத்தையேப் படிக்க நேர்ந்த்து என ஜெயமோகன் சொல்லவும் கூடும். தன் வாழ்வையே பொஸ்தகங்களாக வாசகன் முன் விரித்துப் போட்டவர். இதே விஷயத்தை எனக்குப் 13 ஆண்டுகள் முன்னால் ஒருவன் 26 பக்கங்களில் எழுதி இருக்கிறான் ஆனால் அதன் முழுவீச்சில் சொல்லவில்லை எனவே நான் இதை எழுதி இருக்கிறேன் என சொல்லி இருந்தால் உத்தம சிரோண்மணி.

26 பக்கத்தில் எழுதியதை 700 பக்கமாய் எழுத எவ்வளவு படிப்பு உழைப்பு தேவை. திருடியதைத் தேய்த்து இழுக்க ஒரு திறமை வேணாமா சார்.

எஸ்.ராமகிருஷ்ணனைப் போலவே ஜெயமோகன் அவர்களும் நூறில் சிறந்ததாக எனக்கும் ஒரு அட்சதை ‘சிறுமி கொண்டுவந்த மலர் கதைக்காகப் போட்டிருக்கிறார். முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் என்கிற 1986ல் வெளியான எனது இரண்டாவது தொகுப்பில் இருக்கும் ஒன்பது கதைகளில் ஒன்றுதான், சிறுமி கொண்டு வந்த மலர்.

வாழ்வின் வர்ணஜாலங்களை நம்மால் கனவு கூடக் காண முடியாத அளவிற்குக் கற்பனாதீதக் கோலங்களாக்குபவர் ஜெயமோகன் எனப் புகழ்த்தப் படுபவர்.

யார் வைத்த புள்ளி என்பதற்கு கொஞ்சூண்டு முக்கியத்துவம் கூட இல்லையா?

கேபியும் கமலும் பாலுமகேந்திராவும் வேற்று மொழிப் படங்களில் இருந்து சுட்டால் மட்டும் திருட்டு. உள்ளூர்க் கதையைக் காதை ஆக்கினால் சுருட்டா?

எவனெவன் விந்திலோ மூழ்கி முத்தெடுக்கும் இடம்தான் சினிமா உலகம். சேர வேண்டிய இடத்திற்குதான் விதி கொண்டுபோய் சேர்த்துக் கொண்டு இருக்கிறது அவனவனையும்.


*****
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்