Wednesday, November 17, 2010

மனவெளியில் அலையடிப்பு – ஸ்வரன் என்கிற ஸ்வர்னகுமார்

இவனை எப்படி சொல்வது.

பெளதிகரீதியில் சொல்ல முற்பட்டால், பெரிய சைஸில் இருக்கும் நீள அகல உருளைக் கிழங்கு. உருளைக்கிழங்கு, வேகவைக்கும் முன்பாகவும் சரி பின்பும் சரி அதும் பாட்டிற்கும் அமைதியாக வைத்த இடத்தில் இருக்கும். எடுத்து சாப்பிட வாவா என இச்சையுடன் அழைக்கும். சப்புகொட்டி எடுத்து சாப்பிட்டப் பிறகுதான் தன் வேலையை அது காண்பிக்கும்.


போகிற போக்கில் கவனிப்புப் பெறாத வண்ணம் மிகச் சாதாரண தோற்றம் காட்டும் காலரற்ற பனியன் டைப் டி ஷர்ட்டுடன் ட்ரிவ் இன்னில் உட்கார்ந்திருப்பான், கிட்டத்தட்ட தன் நாற்காலியைத் தாண்டி. இது கொஞ்சம் மிகை வர்ணனை, ஏனெனில் நானே இப்போது அவனுக்கு முக்காலுக்கு வந்துவிட்டேன். பலப்பக் குச்சிக்கு பென்சில் தடி. சிறுவயதில் பாஸாதி கோயில் எவ்வளவு பெரிதாகத் தெரிந்தது. இப்போது அது ஒன்றும் அவ்வளவு விஸ்தாரமாக இல்லை. எல்லாமே ஒப்பீட்டு விஸ்தாரங்கள்தானோ? உங்களை வைத்து மற்றதும் அடுத்ததை வைத்து நீங்களும். கேள்வி கேட்டே கொல்லும் இவனது இயல்பிற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் போலும்.

ஒரு விதத்தில் இணையம் கூட ட்ரிவ்-இன் போலவே தோன்றுகிறது. ட்ரைவ்-இன்னில்தான் எத்துனை மேஜைகள். மேஜைக்கொன்றாய் எத்துனை வகையான குழுக்கள். இந்தக் குழுவில் இதற்குத் தக பேச்சு அங்கு தாவினால் பேசுபொருள் மாறிவிடும். பொதுவெளி என்பதனால் இருக்கக்கூடும். மெய்நிகர் பொதுவெளியான இனையத்தில்தான் எத்துனை வகையான ஓட்டங்கள். நமக்குத் தேவையான நமக்கு இசைவான இடத்தில் நம்மை பொறுத்திக் கொண்டு ஆசுவாசமாய் இருக்கலாம். இளைப்பாரலாம். கேள்விகளற்ற ஒத்திசைவு, நம்மை நாகரிக நடைபினமாய், கண்ணாடி கூண்டிற்குள் கைதியாய் ஆக்கிவிடவும் கூடும்.

தன் மனதிற்குள் வைத்திருக்கும் பதிலுக்கு நம்மிடம் கேள்வி கேட்டு, கிடைக்கும் பதிலைக் கொண்டு நம்மைப் பற்றி எடை போட்டுக்கொண்டே இருக்கும் மனவிளையாட்டுக்காரன் என்று சொல்லாம். இதை ஒருத்தன் தொழிலாய் செய்துகொண்டே இருப்பானா என ஆச்சரியமாக இருக்கலாம். அதீதமாகத் தோன்றலாம். சமயங்களில் நம்மை இடறிப் புறந்தள்ளி விடவே பிறந்தவனோ எனக்கூட எரிச்சலாக வரும். நல்ல நாகரிகமான நளினத்துடன் ஒருவன் பற்கள் வெளீரிட சிரித்தபடி நம்மை அக்கு பங்க்சர் செய்துகொண்டு இருப்பதை மனதின் மடிப்புகளில் உணரும் சமயத்தில் நாம் கொலை வெறிக்குத் தள்ளப்படாமல் இருப்பது அசாதாரணம். சில தருணங்களில் நீரடித்த விலகலாய் பேச்சு முறியவும் கூடும். ஆனால் பல நேரங்களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத் தயாரிப்பு இதைத் தனக்காகவே செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தான் அடிதட்டி விடாமல் இருக்க தன்னைத்தானே  சதா குலுக்கிக் கொண்டு இருக்கிறது. இதை உணர்ந்து நட்பைத் தொடர்ந்தால் நமக்கு லாபம்.

ஆங்கிலம். உணவு. மேற்கத்திய இசையின் பல்வேறு பிரிவுகள். ஷேக்ஸ்பியர். ஆங்கில இலக்கியம். ஹாலிவுட் க்ளாசிக்ஸ். 60களின் ஆங்கிலக் கார்ட்டூன்கள். தமிழின் பழம் சினிமாப் படங்கள். கண்னதாசன். பெரியார் என பேசப் பேச, கண்ணெதிரில் ஒரு வண்னமயமான உலகம், ஆல விருட்சமாய் விழுதுக் கூந்தல் சிலுப்பி விகசிக்கும்.

அவன் உயர்ந்தது என தமிழ் இலக்கியத்தில் நினைப்பதெல்லாம் தீவிர வாசகனுக்கு உவ்வே. அவன் உயர்ந்ததாய்க் கூறும் வெகுஜன எழுத்துக்களை விபரீதமான பார்வையில் வைத்து நிறுவப்பார்ப்பது, நம்மை விழுத்தாட்ட வைக்கும் தந்திரமோ எனக்கூடத் தோன்றவைக்கும். எனவே அவற்றைப் புறந்தள்ளி, மென்னிபிடி வராதவகையில் நமது பள்ளங்களை நிரப்பிக்கொள்ளும் சாதுர்யத்தை கடைபிடிக்கத் தொடங்கினால் உலக இசையின் கயிற்று நுணிப் பிரியில் ஓரிழையை ஸ்பரிசிக்க லபிக்கக்கூடும். கயிற்றைப் பிடித்து நீச்சலடித்துக் களித்தலும் கரித்தலும் அவரவர் தேர்வு.

கருப்பர்களின் இசை வரலாறு பற்றி பேசவிட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். படித்ததும் ருசித்ததும் ஏராளம். வீக்கிப்பீடியாவும் ஐஎம்டிபியும் இல்லையெனில் ஒன்றுக்குப் போகவே சிரமப்படும் உள்ளீடற்ற புத்தகக் குவியல்களுக்கு இடையில் அனுபவித்ததை மட்டுமே பேசுபவர்கள் அபூர்வம். அனுபவித்ததுவே போல அல்லாமல் அனுபவித்ததை அனுபவித்துப் பேசுபவர்கள் அதனினும் அபூர்வம். படித்ததைப் பார்த்ததை கேட்டதை அனுபவித்ததை உடலில் ஆன்மாவில் ஜீரணித்துக் கொண்டு அதுவாகத் தான் ஆனவர்கள் அபூர்வம். அப்படி ஆனவர்களுக்கு எழுதுவது இரண்டாம் பட்சம் ஆகிவிடும் போலும். தன்னில் லயித்த ஏகாந்தம், தான் கரைந்ததால் அடைந்த தவிப்பின்மை.

இத்துனைக்கும் தொழில் ரீதியில் பத்திரிகை விளம்பரங்களுக்கான ஆங்கில காப்பி ரைட்டர். ஆகக்குறைந்த வார்த்தைகளில் ஜேப்படி செய்வதே தொழில். இரட்டை விரல் லாவகத்தை மொழியால் ஒற்றைவிரல் முனையில் உருவாக்ககுதல்.

உலகத்தின் மிகச்சிறந்த ஒன் லைனர்கள் அருவியாய் கொட்டும். ஒவ்வொன்றின் பின்னும், சிலாகிப்பாய் கெட்ட வார்த்தைகள் குஞ்சலமாடும்

இசை கேட்டல் சேமித்தல் இன்று ஒரு விஷயமே இல்லை. பெயர் தெரிந்தால் போதும் எதையும் தரையிறக்கலாம். அன்று  தேடித்தேடி கிராமஃபோன் ரிக்கார்டுகளை சேகரித்துக் கேட்டாக வேண்டும். இசை கேட்டலை ஒரு யோகம் போல குருஸ்வாமிகளைத் தேடிப் போய்க் கேட்க வேண்டும்.

இவன் சொல்லி, கேட்கத் தொடங்கிய இசைக் கலைஞர்கள் ஏற்கெனவே சேகரத்தில் இருந்த பிரபலங்களைப் பின்னொதுக்கினார்கள். இசையில் நெளிவும் குழைவும் ஜிலுஜிலுப்பும்  பிரதானமில்லை வாழ்க்கையைப் போலவே உப்பு புளி காரம் எல்லாம் உண்டு என காண்பித்துக் கொடுத்தவன்.

உலக அளவில் மக்களின் ஆன்மாவை உலுக்கி தெருவிற்கு இழுத்தவர்களின் பெயர்கூட அறியாமல் இருந்து கொண்டிருந்த அவலத்தை உணர்த்தியவன்.

அபூர்வமான ஒரிஜினல் கிராமஃபோன் ரெக்கார்டுகளை இன்னமும் ஏராளமாய் வைத்துக் கேட்டுக் கொண்டிருப்பவன். எங்கே, அவை பார்க்கக் கிடைக்குமா? மூச் அதோடு நம் எல்லை முடிந்தது. அதைக் கண்ணால் கூடக் காண இயலாது. அவன் வீட்டிற்குச் சென்றால்தானே அதைப் பார்க்கக் கிடைக்கும். வீடு இருக்கும் ஏரியாகூட எதுவென்று  அறியக்கூடாமலேயே பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது இதை எழுதுகையில்கூட இப்படி ஒருவன் இருந்தானா இல்லை நம் கற்பிதமா எனக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு அவனைப் பற்றி எதுவுமே தெரியாது. உண்மையில் ஸ்வரனைப் பற்றி எதுவுமே தெரியாதா?

பக்கத்து வீட்டுக்காரர் இன்ன அலுவலகத்தில் வேலைபார்க்கிறார். அவருக்கு இத்தனைப் பசங்கள் அவர்கள் இன்னின்னது செய்து கொண்டு இங்கிங்கு இருக்கிறார்கள் அவர் இன்னும் இத்தனையாவது மாதத்தில் ஓய்வுபெற இருக்கிறார் என்பதெல்லாம் தெரியும் என்பது அவரைத் தெரியும் என்பதாய் ஆகுமா? 

தகவல்கள் மட்டும் இல்லையே மனிதன் என்பவன்.