Thursday, November 18, 2010

குருதேவரின் இஷ்டபதி

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்

வித்தியாசமாய் இப்படி ஒரு தலைப்பில் ஜெயமோகனின் பதிவு இருப்பதை ஜ்யோவ்ராம் சுந்தர் பஸ்ஸில் பார்க்கக் கிடைத்தது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து போகும் மேற்குறிப்பிட்ட வலைப்பூவுக்கு இந்தக் கட்டுரையாளனும் ஒரு வாசகன். தொடர்ந்து தவராமல் படிக்க முடிவதில்லை எனினும் வாசகன்.

தலைப்பே படிக்கிற ஆர்வத்தைத் தூண்டியது. படித்து முடித்ததும் பகட்டின் பளபளக் கூச்சம்தான் கண்ணைக் கரித்தது.

கோவிலில் மாட்டப்பட்டிருக்கும் குழல் விளக்கு கடவுளை வெளிச்சத்தில் காட்டவா அல்லது உபயதார்ரின் பெயரை வெளிச்சமிட்டுக் காட்டவா? இப்போதெல்லாம் உபயதார்ர்கள் பெருமாளுக்கும் வைர அட்டிகை சாத்தும் அளவிற்கு வசதியாகி விட்டார்கள். வருமானவரித்துறை வாசலில் நிற்குமோ என்கிற யதார்த்த அச்சமே அநாமதேயமாக இருக்க வைக்கிறது.
இலக்கியத்திற்கு இந்தக் கவலை இல்லைதானே. இலவசமாய் இளிக்கலாம். பிரபலத்துடன் ஈஷிக் கொண்டு இளிக்கலாம். பிரபலமாவதற்காக இளிக்கலாம். இளித்து இளித்தே பிரபலமும் ஆகலாம். போஸுக்கு இளிப்பு வெளிச்சம் மறைக்கும் குழல் எழுத்து. வணங்க மறந்த இளிப்பு. டாம்பீக வணக்கம்.

ஆடம்பரத் திருமணங்களை விமர்சிப்பது திருமணமே வேண்டாம் என்பதற்காகவா? பகட்டு வேண்டாம் என்பதற்காகத் தானே! போகவும் திருமணங்கள் தனி நபர் நிகழ்ச்சிகள். அவர்கள் செலவு செய்வது அவர்களின் சொந்தப் பணம். அதைப்பற்றி விமர்சிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது. எல்லோருடைய திருமணங்களும் விமர்சனத்திற்கு உட்படுத்தப் படுவதில்லை.

பொதுவாழ்வில் இருப்பவரின் பொதுச் செயல்களில் இருக்கும் தன் முணைப்பு செயல்கள்தான் விமர்சிக்கப் படுகின்றன. காரணம் அவர் சில கொள்கைகளை, த்த்துவத்தை அல்லது குறைந்த பட்சம் கருத்தை வைத்திருக்கிறார். அதோடு அமைதியாய் இருந்தாலும் பரவாயில்லை. அந்தக் கருத்துக்களை, தான் சரி என்று நம்புகிறவற்றை முன்னிருத்தி பேசுகிறார் எழுதுகிறார். அவர் மிக சாத்வீகராகவே இருப்பினும் ஒரு கருத்தை அல்லது கருத்தாக்கத்தை முன் வைக்கும் போதே அதற்கு எதிரானதை மறுக்கிறார். மந்தமான மனிதர் அசமந்தமாகவும் தீவிர எழுத்தாளர் நேரடியாகவும் தீரமாகவும் மறுக்கிறார்.

மந்தமான கோடிபேர் தேர்தல் நேரம் தவிர முக்கியத்துவமற்று இருக்கிறார்கள். இதனை அவர்களும் அவர்களை ஆள்பவர்களும் உணர்ந்தே இருக்கின்றனர். இந்த மந்தர்கள் என்றைக்கும் எதுவுமே பேசுவதில்லை. பேசி என்ன பிரயோஜனம் சண்டைதான் மிச்சம் என சும்மா இருந்து விடுகிறார்கள். உண்மையில் அவர்கள் சும்மா இருப்பதில்லை. தீர்ப்ப்பு நாள் வருகையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத மந்தர்கள் மந்தைகள் போல் ஒரே பக்கமாய் சாய்ந்து தமக்கு சரியெனப் பட்ட்தை சொல்லிவிட்டுப் பஸ் ரயில் பிடிக்க போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதனால தான் கோடிகளில் முதலீடு செய்து கோலாகல விளக்குகளில் உட்காந்து எங்கெ கொலை விழும் எனத் தேடிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் மாந்தர்களின் மெளன பாஷை புரியாமல் திகைக்கின்றன.

ஜெயமோகன், சரித்திரம் பற்றி பேசுபவர். தான் சரித்திரம் தாண்டி வாழும் சரித்திரம், என்கிற ரீதியில் பேசுபவர். பேசுவதையே சரித்திரமாக்கிக் கொண்டிருப்பவர் என்கிற காரணத்தால் அவர் பேசுவதும் செய்வதும் விமர்சனத்திற்கு ஆட்படுகின்றன. அந்த விமர்சனத்தையே - என்னைவிடவும் தமிழ் இலக்கிய சரித்திரத்தில் தூற்றப்பட்டவன் எவரும் கிடையாது எனறு – எத்துனைப் பேரால் தான் தூற்றப்பட்டோம் என பட்டியலிட்டு அதையே தனது மெடல் சரித்திரமாய் மாற்றிக்கொள்ளும் சாதுர்யவாதி.

//ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விழாவில் அறிவித்திருந்தபடி இந்தவருடம் முதல் ஒரு விருது அளிக்க உத்தேசித்திருக்கிறோம். பலவருடங்களாகவே நான் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாத நிலையைப்பற்றி பேசிவந்திருக்கிறேன். தவறான பேர்கள் தங்கள் ‘திறமைகள்’ காரணமாகவும் அரசியல்சார்புகள் காரணமாகவும் விருதுகள் நோக்கிச்செல்லும்போது இவ்வகை விஷயங்களை விட்டு விலகி தன் படைப்பூக்கத்தை நம்பியே செயல்படும் படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அதற்கு எதிராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வந்திருக்கிறேன். நல்ல படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறேன். அவர்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவர்களுக்காக விழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். சில விருதுகளிலும் ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன்.//

இங்கு யாருக்கு விருது அளிக்கப்படுகிறது, அதற்கு அவர் தகுதி உடையவரா இல்லையா என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். ஆ.மாதவனின் இலக்கியத் தகுதி பற்றி விமர்சிக்கவும் பாராட்டவும் அதைப் புத்தகமாக எழுதவும் ஜெயமோகனைவிடவும் சிறந்தவர் யாரும் கிடையாது. இன்றைய தலைமுறையில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய தலைமுறையிலும் கூட எவரும் கிடையாது என்பதில் அநேகமாக இரண்டாவது கருத்திற்கு இடமே கிடையாது. குறைந்த பட்சம் இந்தக் கட்டுரையாளனுக்குக் கிடையாது.

இவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் எழுதிய பிறகும், இன்றைய தேதிக்கு இந்தக் கட்டுரையின் விவாதப் பொருளாகியிருக்கும் கட்டுரையையும் சேர்த்து 9302 எனக் காட்டுகிறது ஜெயமோகனின் வலைப்பூ.

முக்கி முனகி எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையைத் திரும்பப் படித்து, தகவல் பிழை இருக்கிறதா, ஓட்டம் லகுவாக இருக்கிறதா, விஷயத்தை விட்டு விலகாமல் இருக்கிறதா, விஷயக் கடுமை தனிநபர்மேல் ஏறி காழ்ப்பாய் மாறி, கட்டுரையின் நோக்கத்தினின்று தடம்புறளாமல் இருக்கிறதா, என முன்னும் பின்னும் ஓடொயோடிப் பார்த்து, பிழைதிருத்தி அல்லது திருத்தியதாக நினைத்துக் கொண்டு மேல் நோக்கி இதை பதிப்பிக்கையில் ஜெயமோகனின் முகவரிப் பட்டி 9303 அல்லது 9304 ஆகியிருப்பினும் ஆச்சரியமில்லை.

பேசுவதை ஒலித்தட்டிக் கட்டுரையாக்குதல் ஒரு ஆச்சரியம் என்பதுதான் நம் அனுபவச் சிற்றறிவு.

அவர் காடு நாவல் எழுதிய விதத்தை தமிழினி வசந்தகுமார் சொல்லக்கேட்டு உண்டானது மூச்சுமுட்டும் சிலிர்ப்பு.

பத்து நாள்ல எழுதின நாவல்ப்பா அது. சரியாப் பாத்தா பத்து நாள்கூட இருக்காதுப்பா. டெய்லி கொரியர் வரும். எழுத எழுத கொரியர்ல போட்டுருவான். காப்பிகூட வெச்சுக்கற பழக்கமில்லே. முன்னாடி என்ன எழுதினோனு ரெஃபெரெஸுக்குக் கூட ஒன்னும் கிடையாது. இந்தப் பத்து நாளுக்கு எடையில மூனு நாள் திருவனந்தபுரம் போயிருந்தான். அந்த மூனு நாளும் எழுதல. எழுதினதை திரும்ப ஒரு தடவை படிச்சிக் கூடப் பாக்கமாட்டாம்பா. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சரி பண்னக் கூட படிக்கற பழக்கமில்ல. அப்பிடியே அனுப்பி வெச்சிடுவான். எழுதறது ஒரே தடவைதான். நாவல் முழுக்க குறியீடு. ஏகப்பட்ட இமேஜரீஸ். எல்லாம் மைண்ட்ல.

டைனமைட் என்றுதான் தோன்றியது. ஜெயமோகனைப் பற்றி, ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். வயிற்றெரிச்சல் இருக்கலாம். ஆனால் அமானுஷ்யம் என்பதை மறுக்க முடியுமா? இப்படியெல்லாம் ஒரு எழுத்துக்காரன் இருக்கக்கூடுமா? இருக்க வேண்டுமா? இப்படி இருந்தால்தான் இலக்கியவாதியா?

இதற்கெல்லாம் ஏது வரையரை. இப்படியும் இருக்கலாம் இப்படி இல்லாமலும் இருக்கலாம். எப்படியும் இருக்கலாம். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் இல்லாத்த்துதான் இலக்கியத்தின் பெரிய விஷயமே. மனம் போன போக்கு. எழுதப்படும் போதும் வாசிக்கப்படும் போதும் தரம் குறித்து எடைபொடப் படும் போதும், கணக்குப் பிசகாமல் கனகச்சிதமாய் இருக்க அறிவியலா என்ன? அறிவிலிகளின் இயல் எனச் சொன்னால் இன்னும் பொறுத்தமாய்க் கூட இருக்கக்கூடும். அதனால்தானே இலக்கியத்தில் சிகரம் தொட்ட பலர் வாழ்வில் தகரத்தின் விலைகூடப் பெறாமல் தவிக்கிறான். அதற்காக இதை மாற்றிப் போட்டு பதக்கம் கேட்பவர்களும் பரிதாபத்திற்கு உரியவர்களே.

இலக்கியத்தில் என்னுடைய இடம் எதுவென்று எனக்குத் தெரியும். இது ஜெயமோகனின் செல்ல வாக்கியம். யாரும் மறுக்கவே இயலாது. ஆம் எல்லாமே தெரிந்தவர் என்பதுதான் அவரது பிரச்சனையே. அவர் செய்கிற எதையும் நன்கு தெரிந்து திட்டமிட்டே செய்கிறார்.

வாழ்க்கையின் அத்துனை நெளிவு சுளிவுகளும் தெரிந்தவர். எழுத்த்தொடங்கிய நாளிலிருந்து எழுத மட்டும் பயிலாது இயல்பிலேயே எந்த ஏணியை எப்போது பிடித்தால் எதுவரை ஏறலாம் எனத் தெரிந்தவர். அடுத்த உயரத்திற்கான ஏணி கிடைத்த்த்தும் ஏற்றிவிட்ட ஏணியை மறப்பவன் சாதாரண மனுஷன். பழைய ஏணியை உதைத்து, கிடக்கப் போட்டால்தான் அடுத்தவன் ஏறிவர தாமதமாகும், போட்டியின்றி மேலெ இன்னும் மேலே என ஏறிக்கொண்டே இருக்கலாம் என்பதை அறிந்ததோடு இல்லாமல் அமல்படுத்திக் கொண்டிருக்கும் அமானுஷ்யர்.

இலக்கிய விருது ஒருவரை கெளரவிப்பதற்காக வழங்கப்படுவது. பொதுவாக விருது பெறுபவரே விழாவின் நாயகராக இருப்பார். விருது வழங்குபவரும் விருது வழங்க முன்னிலை வகிப்பவரும்தான் விழா நாயகர்கள் எனில் விருது வழங்கப்படுபவர் கெளரவிக்கப் படுகிறார் என்று அர்த்தமா? அல்லது  அ-இலக்கிய காரணத்திற்காக வெறும் முகாந்திரமாக உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகிறாரா? அதைப் பற்றி விருது வாங்கிக் கொள்பவர் அல்லவா கவலைப் பட வேண்டும் நமக்கென்ன போயிற்று என்று இருக்கவேண்டியதுதானே!

இருக்கலாம்தான். ஏகப்பட்ட பேருக்கு எண்ணிறைந்த விருதுகள் பட்டங்கள் பவிஷுகள் வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறோமா என்ன?

சினிமாப் பெயர்களில் ரசிகர் மன்றங்கள் சந்துக்கு சந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவற்றையெல்லாம் லட்சியம் செய்கிறோமா என்ன? அதுவே இலக்கியத்தின் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், கோவை என்றிருந்தால் சற்று விநோதமாக இல்லையா? அதுவும் ஒரு புத்தகப் பெயரில் இருக்கிறது. அதையும் அந்த நாவலை எழுதியவரே  தன் வலைப்பூவில் எழுதிக் கொள்வதை இப்போதுதான் பார்க்கிறோம். முதல் கூச்ச்சம். கவலை வேண்டாம் நாளை காடு கலைக்குழு, டிடி (திருச்சி தஞ்சாவூர்) ரப்பர் நற்பணி மன்றம்,  மதுரை, பிதொநிகு ரசிகர் வட்டம், சென்னை, தலைமை மன்றம் ஜெமோவின் மணிரத்னம் சார் ரசிகர் மாமன்றம், கன்யாகுமரி நாகர் கோவில் என் சினிமா வினியோக ஏரியாக்களாக பரப்பப் படுகையில் எல்லாம் இயல்பாகிவிடும்.

ஆ.மாதவன் பற்றி ‘கடைத்தெருவின் கலைஞன்’ என்று ஜெயமோகன் சார் விடற நூலை வெளியிடறவர் மணிரத்னம் சார். கெளரவம் மட்டும் பாவம் ஆ.மாதவனுக்கு.

இன்றைக்கிருக்கும் சிறு மனக் கிலேசம் கூட எதிர்காலத்தில் இயல்பாகிவிடும். எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கும் தொண்டை  வருங்காலக் காட்சிகளை மாட்டேன் என்றா அடம் பிடிக்கப் போகிறது.

ஆ.மாதவன் என்றில்லை அடுத்து அசோகமித்திரனுக்கும் கூட விருது வழங்கப் படலாம். அவர் சென்னையிலேயெ வேறு இருப்பவர். விருதும் ஆண்டுக்கு ஒருமுறை எனத் தலைமைக் கழகத்தால் தீர்மானிக்கப்பட்டாகி விட்டது. விழாவை நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்தால் கரைந்த நிழல்களை முன்னிறுத்தி ஆளுயர மாலைகள் அணிய வாய்ப்பாய் இருக்கும். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவனே வெல்கிறான்.

வென்றவன் சொன்னதெல்லாம் வேதமல்லாமல் வேறென்ன - கண்ணதாசன்.  

ஆ.மாதவன் எழுதிய நாவல்கள்
1974
புணலும் மணலும்
1982
கிறுஷ்ண பருந்து
1990
தூவானம்.

அ.மாதவன் எழுதிய சிறுகதைகள்

1974
கடைதெரு கதைகள்
1974
மோகபல்லவி
1975
காமினி மூலம்
1984
மாதவன் கதைகள்
1990
ஆனைச்சந்தம்
1995
அரேபியக் கதைகள்
2002
அ.மாதவன் கதைகள்

ஆ.மாதவனின் இலக்கியப் படைப்புகள் இவை. அசோகமித்திரன், லிஸ்ட் போட்டு மாளாத அளவிற்கு எழுதியவர் எனவே அவருக்கு அடுத்த ஆண்டின் விருது தலைமைக் கழகத்தால் வழங்கப் படும்போது, அமானுஷ்ய திறமைகொண்ட ஜெயமோகனும் தெலுங்கு ஹிந்தி என ஏணிகளில் ஏறிக் கொண்டிருப்பார்.

அந்த்துலு மித்ருடு என்கிறவிதமான டைட்டிலில் தெலுங்கு (ஹிந்தியில் வசனம் டப்பிங் வெள்ளைப் பேப்பரில் நாவல் என்னுடையதல்ல அல்லது அதில் இருக்கும் பாத்திரங்கள் தெருவில் இருப்பவர் அல்லது நாவல் எழுதிய ஜெயமோகன் நானல்ல அல்லது வெள்ளைப் பேப்பரில் வெற்றுக் கையெழுத்து) படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தால்,

ராம் கோபால் வர்மாவின் பொற்கரங்களில் இருந்து, ஜெமோ-ராம் இலக்கிய வெளிவட்டம் விருது, வாங்கும் பாக்கியம் அசோகமித்திரனுக்குக் கிடைக்கலாம்.

ஜெயமோகனின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான சிவாஜியும் எம்ஜியாரும் விமர்சனத்திற்கு ஆளாகும் ஈவெராவும் தங்களைத் தாங்களே நடிகர் திலகம் புரட்சித்தலைவர் பெரியார் என அழைத்துக் கொண்டிருந்தால் மக்கள் அவர்களை சிவாஜி எம்ஜிஆர் ராமசாமி என்றே அழைத்திருப்பார்கள் இல்லையா?

நம்மைத் தாங்கும் வரைதான் அது பட்டம். நமக்குப் பெருமை. பட்டத்தை தாங்க நாம் முற்படும் போது, நம் புட்டத்தை நம் கையால் நாமே நம் தலைக்குமேல் தூக்கிப் பிடித்துகொண்டு இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றும். அது பெருமையல்ல ஆபாசம்.  

குழந்தை முதல் குடுகுடு கிழவர்கள்வரை வாசகப் பெருமக்களால் வணக்கதிற்குரிய குருவாகப் பூஜிக்கப்படும் ஜெயமோகனுக்கு, ஆத்தும சரீர சுகமளிக்கும் விசேஷ கூட்டங்களை ஊட்டி கொடைக்கானல் என்று வருடாந்தர குருகுலம் நடத்தி புதிய கீதை உபதேசிக்கும் ஜெமோவிற்குத் தெரியாது என நாம் சொல்லி அவர் தெரிந்துகொள்ள எதுவுமே இல்லை.

காட்ஃபாதர் படம் இரண்டாம் பாகம் இறுதியில் டான் மைக்கேல் கொர்லியோனேவிற்கு உறவென்று சொல்ல ஒருவரும் இல்லை, சொந்த சகோதரன் அவனாலேயேக் கொல்லப்பட்டாயிற்று. அனைத்து எதிரிகளும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டனர். தன் தனிப்பெரும் சாம்ரஜ்யத்தில் தன் வீட்டில் மரத்தினடியில் ஒரு நாற்காலியில் தனியாக உட்கார்ந்து தன் கடந்த காலத்தை அசைபோட்த் தொடங்குவதாய் படம் முடியும். அந்தக் கடந்தகாலக் காட்சியில் மைக்கேல் என்கிற பால்மனம் மாறாத பாலகன், மொக்கு அவிழும் பருவத்தில் தன் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்க தமையனும் தந்தையும் யார் எனக் கேட்கப்போய்க் கைகலப்பில் முடியும்.

கடைசியில் காலம் அவனை வைத்துப் போட்டிருக்கும் கோலம் என்ன? இறுதித் தனிமை, அவன் ஏகசக்ராதிபதி என்பதைக் குறிக்கிறதா இல்லை தனியன் என்பதைக் குறிக்கிறதா? அது ஒருவருக்கு பலமாகவும் பிறிதொருவருக்கு பாவமாகவும்கூடத் தோன்றலாம் இல்லையா?

வெட்ட வெளியில் புஜக்கிரீடங்கள் அணிந்து அஹ்ஹஹ்ஹா வந்தேனிதோ மகராஜன் இதோ வந்தேனே என ஊழிக்கூத்து ஆடினாலும், உள்ளூர நம்மிடமிருந்து நம் நாடகங்களில் இருந்து நாம் தப்பிக்க முடியுமா?

கதை என்னுடையது அல்ல என்பது மட்டுமல்லாது என்னவும் எழுதிக் கொள்ள தயாரிப்பாளருக்கு வெற்றுப் பேப்பரில் ஒற்றைக் கையெழுத்து போட்டுக் கொடுக்க, எந்திரம் போல எத்துனை ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டி இருக்கிறது ஒரு மனிதனுக்கு.

ஜெயமோகன் பற்றி யோசிக்க யோசிக்க அமானுஷ்யமாகத்தான் இருக்கிறது.