Sunday, November 21, 2010

ஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை

இலக்கியம் வாழ்வு பற்றிய தீவிரமான கூர்மையான பார்வைகளை அவதானிப்புகளை முன்வைக்கக் கூடியது. இலக்கிய இயக்கத்தில் நாவல் கதை கவிதை விமர்சனம் என பல பிரிவுகளில் அவரவர்க்கு உகந்ததை படைப்பாளியைப் போலவே வாசகனும் தேர்வு செய்து கொள்கிறான்.

இவை அனைத்திலும் கைவண்ணம் காட்டிய அல்லது காட்ட முனைந்த நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். வெற்றிபெற்றவர் சிலரே எனலாம்.

முதல் மூன்றிலும் கைவரிசை காட்டி நிரூபித்ததோடல்லாது, விமர்சனத்திலும் ஒரு படைப்பாளி இறங்க முற்படுகையில் அவன் முக்கிய கவனத்தை ஈர்க்கிறான். புனைவுகளில் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு கட்டுரைக்கு இல்லை. புனைவு – இணையத்தில் இந்த வார்த்தைக்குக் காழ்ப்புணர்வில் எழுதப்படும் கதை – என்பதான பொருள் துரதிருஷ்டவசமாய் அப்பிக்கொண்டுவிட்டது.


நாவல் கதை கவிதை கற்பனை சார்ந்தவை. பிரத்தியேகமாக ஒரு உலகை நிறுவி அதற்குள் வாசகனை வசீகரித்து அழைப்பவை. கட்டுரை கருத்து சார்ந்தது. கருதுகோள்கள் தத்துவங்கள் சார்ந்தது. அபிப்ராயங்கள் கட்டுரை அந்தஸ்த்தை அடைவதில்லை. கட்டுரை எழுத ஒருவன் படைப்பாளியாய் மட்டும் இருந்தால் போதாது. படிப்பாளியாயும் இருத்தல் அத்யாவசியம். பல்வேறு துறைகள் பற்றிய படிப்பறிவும் தர்க்க ஞானமும் உண்மையை நோக்கி குறைந்தது தனக்கு உண்மை எனப்படுவதை நோக்கி பயணம் செய்யவும் தான் உண்மை என நம்புவதை வாசகன் உணரும்படியாக நிறுவ வேண்டியதும் அதற்கான தர்க்க அறிவும் அவசியம். இவ்வளவு பாடுபடுவதற்கு குறைந்த பட்ச லாபம். ஆளுமை என்கிற அந்தஸ்த்து.

இந்த மொழியில், தான் ஒரு ஆளுமை ஆகிவிடவேண்டும் என்பதுதான் ஓரளவு பெயர் சொல்லிக் கொள்ளும்படியான அனைத்துப் படைப்பாளிகளுக்கும் லட்சியக் கனவு. இல்லையென வெளியில் கூறிக்கொண்டாலும் உள்ளூர இதில் விதிவிலக்கே இல்லை.

ஜெயமோகன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆளுமை என்பதில் அநேகமாக எவருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே எவருக்கேனும் தப்பித் தவறி இருந்துவிடமோ என்கிற ஐயத்தில் ஜெயமோகனே அடிக்கொருதரம் தான் எப்படி தமிழில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை என்பதை எழுதிஎழுதி பதிவும் செய்து கொண்டிருப்பவர். தமிழ் இலக்கியத்தில் இத்துனை காலங்களில் சுயவிளம்பிக்கொண்டதிலும் அவருக்கே முதலிடம். கூச்சம் தன்னடக்கம் என்பதெல்லாம் பாசாங்கு பொய் எனவும், எனவே தான் தன்னை சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை எனவும் நினைப்பவர். அவர் அப்படி நினைப்பதில் அவர் பக்க நியாயமும் இருக்கக் கூடும். அவரைப் புகழ்த்திப் பேச அவரை விடவும் ஒரு பெரிய ஆளுமை இல்லாத போது அட்சதையை அவர் தலையில் அவரே போட்டுக் கொள்வதும் அதை அவர் நியாயப் படுத்துவதும் அதை அவருடைய லட்சோப லட்ச வாசகப் பெருமக்கள் ஆரவாரித்துக் கரகோஷமிடுவதை அவரே எழுதி வரலாற்றில் பதிவதும் சில பக்கங்களில் அடங்கலாம். தவறில்லை. பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒருவருக்கு இந்த சலுகை கூடக் கிடைக்கவில்லை எனில் அந்த மொழி இருந்துதான் என்ன பயன்.

ஆக ஜெயமோகன் ஒரு ஆளுமை. நீங்கள் ஏற்கவில்லை எதிர் ஓட்டுதான் போட்டீர்கள் எனினும் ஒருவர் உங்களை உட்படுத்திய நாட்டை ஆள்வது போல, அவருக்கு நீங்களும் ஒரு பிரஜை என்பதை நீங்கள் மறுத்தாலும் ஜெயமோகன் ஒரு ஆளுமையே.

ஒரு ஆளுமையிடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஆகக் குறைந்த விஷயம் என்னவாக இருக்கும்.

பேச வந்ததை சரியாகப் பேசுதல். மேற்கோள் காட்டுவதை சரியாகக் காட்டுதல். மேற்கோள்கள் பொதுவாகவே ஒரு கருத்தை நிறுவ அதைவிட அபாரமான ஒன்றைக் குறிப்பிடுதல் அல்லது ஒருவர் மிகவும் மதிக்கின்ற ஒரு வாக்கியத்தை அல்லது ஒரு கவிதையை எல்லோருக்கும் பகிர்தல். பகிர்தல் புதிதாகவோ அல்லது மிகச்சிறபாகவோ அமையும் போது சொன்னவனுக்கும் சேர்த்தே கரகோஷம். பல பேச்சாளர்கள் கரகோஷத்திற்காக வேண்டியே பல மேற்கோள்களை நெட்டுரு பண்ணி சரியான இடங்களில் அடிப்பார்கள்.

ஜெயமோகன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட இலக்கிய ஆளுமை ஆதலால் அவருக்கு அடுத்தவரை சொல்லித்தான் ஆரவாரிப்புப்  பெறவேண்டும் என்றில்லை. ஆகவே அவர் ஒன்றைச் சொல்கிறார் எனில் அது உலகத்திற்கு அளிக்கப்படும் செய்தி.

http://www.jeyamohan.in/?p=344

மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி

November 21st, 2010
தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே வந்தார். ”நல்ல கவிதை சார் இது. ரொம்ப அருமையான கவிதை. ஆனா நீங்க முழுசா சொல்லியிருக்கலாம்”

”நான் முழுக்கவிதையையும் சொன்னேனே…”
”அப்படியா? நாலுவரிதானே இருந்தது?”
”ஆமாம்.அந்தக் கவிதையே அவ்வளவுதான்”
அவர் நம்பாமல் பார்த்துவிட்டு ”…அப்படியானால் நீங்கள் அதை ஒரு குட்டிக்கவிதை என்றே சொல்லியிருக்கவேண்டும். வாசகர்களுக்கு குழப்பம் வந்திருக்காது.”
”அப்படியா?நான் அப்படி நினைக்கவில்லை”
”ஆனாலும் இந்தக்கவிதைக்கு ஏதோ ஒரு குறை இருப்பதுபோல இருக்கிறது. என்ன என்று தெரியல்லை. கவிதை முடிவடையாதது மாதிரி”
நான் ”வ்யர்த்தமாமொரு ரசனையல்லோ மர்த்ய ஜீவிதம்” [வெறுமொரு எழுத்தல்லவா மானுட வாழ்வு!] என்று ஒரு வரி சேர்த்திருக்கலாமோ”‘ என்றேன்
”ஆமாம் சார். அதைச் சேர்த்திருந்தால் கவிதை அழகாக முடிந்திருக்கும்”
”ஆனால் இந்தக் கவிதையின் பொருள் அது மட்டுமில்லையே”

மலையாளக் கவிதைகளை தமிழாக்கம்செய்யும்போது வரும் சிக்கலே இதுதான். அவை தமிழ் ரசனைக்கு விரித்துச் சொல்பவையாக, பாடிபாடிச்செல்பவையாக, கவிதைக்குள் கவிதையின் பொழிப்புரையையும் சேர்த்து முன்வைப்பவையாகத் தோற்றம் அளிக்கின்றன. தமிழ்க் கவிதைகளை வாசிக்கும் மலையாளப் பொதுவாசகன் அவை கவிதைகள் அல்ல வெறும் தொடக்கங்கள் என்றே பார்க்கிறான்.

நான் மலையாளக் கவிதைகளுடன் இருபதுவருடங்களாக தொடர்புடையவன். வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் முதல் ஆற்றூர் ரவிவர்மா,சச்சிதானந்தன் வழியாக பி.ராமன் வரை மூன்று தலைமுறை மலையாளக் கவிஞர்களுடன் நேரடியான தொடர்பும் உண்டு. மூன்று தொகுப்புகளாக மலையாளக் கவிதைகளை தமிழில் கொண்டு வந்திருக்கிறேன். என் அனுபவத்தில் சில கருத்துக்களைச் சொல்கிறேன்

இரண்டாயிரம் வருடத் தொன்மைகொண்ட தமிழ் கவிதையின் சிறப்பியல்புகளில் முக்கியமானது என்னவென்றால் நாம் கவிதை என்ற வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை தமிழ்க்கவிதை வழியாகவே காணமுடியும் என்பதே......

இப்படியே கட்டுரை சங்க காலம் வரைக்கும் போய்க்கொண்டே இருக்கிறது. வழக்கமான நான் எனது என்கிற ரீதியிலான ஜெயமோகன் கட்டுரை.

இதில் முக்கியமானது அவரே சொல்வது போல

//தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது//

என்கிற தகுதி கொண்ட ஒரு கவிதையை சொந்தமாக ஜெயமோகன் எழுதலாமா? அதுவும் மாற்று மொழியாம் மலையாளக் கூட்டம் ஒன்றில் தப்பும் தவறுமாகக் குறிப்பிடலாமா? தவறாகக் குறிப்பிட்டதைக் கொண்டுவந்து தமது பதிவாகவேறு போட்டிருக்கிறார்.

ஜெயமோகனை நினைத்தால், அவரது தனிமையையும் ஏழ்மையையும் நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

இடித்துச் சொல்லும் நிலையில் அடிப்பொடிகளும் இல்லை
எடுத்துக் கொள்ளும் நிலையில் எஜமானனும் இல்லை.

கிறிஸ்துவை மனிதனாக சித்தரித்து உயர்வுபடுத்திய படம். http://www.imdb.com/title/tt0095497/ The Last Temptation of Christ Director Martin Scorsese கலையிலக்கிய ஆர்வம் இருப்பினும் பக்திமான் கிறிஸ்துவர்கள் கடைசி பாகம் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்.

சிலுவையில் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தபின் எங்கெங்கோ திரியும் ஏசு கூடியிருக்கும் கும்பலைக் காண்கிறார். அவரது சீடர்களில் ஒருவர் சிலுவையில் நமக்காக மரித்தவனின் அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தில் ஒருவராய் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஏசு, இவன் பொய் சொல்கிறான் அவர் அப்படி எல்லாம் இல்லை என கூட்டத்தைக் கலைக்கிறார். சீடனைப் பார்த்து (தாமஸா மேத்யூவா என நினைவில்லை) நான்தான் ஏசு என்கிறார் சீடனோ அவரை புறக்கணித்து தன் வழி செல்கிறான்.

ஏசுவின் கதி, இயற்கையெய்திய பிரமிளுக்கும் நேரலாம். இனி கவிதை எழுதிய பிரமிளே வந்து இதுவல்ல நான் எழுதியது எனச் சொன்னாலும் ஜெயமோகன பக்த ஜன சபை, இல்லை எங்கள் ஜெயமோகன் இப்படித்தான் சொல்லி இருக்கிறார் எனவே நீங்கள் இதைப் போல உங்கள் கவிதையைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பிவைக்கவும் கூடும்.

http://www.jeyamohan.in/?p=344 ஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை (தலைப்பில்லாதது)

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது


பிரமிள் எழுதிய கவிதை

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது

கவிதையில் ஒலி வடிவம் மத்திய கதியில் இருப்பதை காணலாம்.

தலைப்பைத் தவிர்த்து மூன்றே நெடில்கள். காற்றின்/தீராத/வாழ்வை. அவையும் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும் நெடில் தொடங்கிய வார்த்தைகள் காவியமும் சேர்த்து. எவ்வளவு பொருத்தம். பறந்து கொண்டிருந்த பறவையில் இருந்து பிரிந்து இறகு மேலிருந்து கீழ் நோக்கி அல்லவா வருகிறது

பொதுவாக வல்லின ஒற்றுகள் வன்மை ஏற்றவே உள்ளவை. ஒரே ஒரு க் பக்கங்களில்வந்து, அடுத்துத் தொடரும் ங் காரணமாய் மென்மை அடைந்துவிடுகிறது. மட்டுமன்றி பக்கங்களில் என்கிற வார்த்தையே அலைவளைவில் அமைந்துள்ளது.

ஒரு ச் சந்தியாக வந்து எழுதிச் செல்கிறது. முன்னும் பின்னும் குழைவான வார்த்தைகள்.

அடுத்தது ற் இங்கே காற்று பாடுகளம் எனவே அதில் இருக்கும் ற் தவிர்க்க முடியாதது.

கவிதையின் தலைப்பும் சேர்த்து 13 வார்த்தைகள். எதிலும் வல்லினம் மிகவில்லை. காரணம் மெல்லிய இறகு காற்றில் மிதந்து வருகிற மென்மைக்கே முதன்மை.

புகழ்பெற்ற கவிதை என்று சொல்லிவிட்டு ஜெயமோகனிடம் தலைப்பு தண்டியாத்திரை போய்விட்டது.  

காவியம் என்கிற தலைப்பு கூடுதலாய் இந்தக் கவிதையை அர்த்தப் படுத்த வல்லது. காவியம் என்பது வாழ்வைச் சொல்ல வேண்டுமடா! என்கிறான் கவி.

பறந்து செல்கையில் இறகு ஒன்று உதிரவே அதிக சாத்தியம். அதைக்கூடக் கவிஞன் ‘பிரிந்தஎன்கிறான்.

ஜெயமோகன் தான் எழுத உதவும் ஒரு கருவி போல ஒற்றை இறகு”  ஆக்கிவிடுகிறார்.

தீராத பக்கங்களில் – மேலிருந்து தொடங்கும் ஒலி வடிவ அமைப்பைப் பாருங்கள். குறிப்பாகப் பக்கங்களில் என்பதில் தான் அந்தத் தூரிகைத் தீற்றலின் தொடர்ச்சி இருக்கிறது. சொல்லி மாளவில்லை. எழுதித் தீரவில்லை எனவேதான் தீராத பக்கங்கள் என்கிறார் பிரமிள். ஒரு இசைக் கலைஞனுக்கு தீராதவில் வரும் ரா மனோதர்மப்படி விஸ்தரிக்க இடம் கொடுப்பது. வாசகனுக்கு அதைக் கொடுக்கவே பிரமிள் தீராத தெரிவு செய்கிறார்.

ஜெயமோகன் தன் எழுத்தில் முனைப்பாய் இருப்பவர் என்வேதான் முடிவற்ற பக்கங்கள். 700, 1300, 3500, 12000,

ஒருவேளை புதிய நாவலை முடிவற்ற பக்கங்களில் எழுத முடிவு செய்துவிட்டாரோ ஜெயமோகன். தவறில்லை. அவர் பதின் பதினாயிரப் பக்கங்களில் கனவு காணட்டும். அது அவரது ஜனநாயக உரிமை.  என்னதான் தமிழை வாழ்விக்க அவதரித்த சரித்திர புருஷர் என்றாலும், அடுத்தவன் கண்ட கனவை தன்னிஷ்டத்திற்குத் திரிக்கக் கூடாதல்லவா.

கல்லூரிப் பருவத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்வு.

மாவட்ட மத்திய நூலகத்தில் கூட்டம் முடிந்து, தலைமை தாங்கிய கவிஞர் சுரதா அவர்களுடன் நடந்து வந்தன பேச்சுப் போட்டி கோஷ்டிகள், சஃபையர் பஸ்டாப்பில் அவரது பஸ்ஸுக்காய் காத்திருப்பில் அங்கிருந்த  மாணவன் ஒருவனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்

சுரதா: தம்பி என்ன படிக்கிறீங்க?
மாணவன்: எம்.ஏ தமிழ் லிட்டரேச்சர் சார்
சுரதா: அப்படிங்களா ரொம்ப மகிழ்ச்சி
மாணவன்: (பூரிப்புடன்) தமிழை உயர்த்தணும்னுதான் சார் தமிழ் இலக்கியம் படிக்கிறேன்
சுரதா: அட ஆமா நேத்து நான்கூடப் பார்த்தேன் ரெண்டு இஞ்ச்சு ஒசரமாகி இருந்துது தமிழ். இப்பதான் காரணம் தெரியுது. ரொம்ப நன்றிங்க தம்பி.