Monday, November 22, 2010

மொக்கு அவிழும் தருணம்

கவிதை என்பது அது தரும் அனுபவம்தானே? மத்யகதி, மெல்லினம் இதெல்லாம் என்ன?

இது ட்விட்டரில் கவிராஜன் என்கிற நண்பர், ஜெயமோகன் எழுதிய பிரமிள் கவிதை என்கிற கட்டுரையில் நான் எழுதியிருந்தமைக்கு அவரது பிரதிபலிப்பாய் கேட்ட கேள்வி. 

அந்தக் கட்டுரையில் காவியம் கவிதையில் பிரமிள் உபயோகித்திருக்கும் வார்த்தைகள், அவற்றின் வடிவங்கள், எப்படி அந்தக் கவிதையைக் காட்சிரூபப் படுத்துகின்றன, அல்லது காட்சிரூபப்படுத்த கவிஞன் எப்படி மொழியைக் கையாள்கிறான், என்பதை என் பார்வையில் கொஞ்சம் விலாவாரியாக விளக்க முற்பட்டிருந்தேன். 13 வார்த்தைகளில் உள்ள கவிதைக்கு இவ்வளவு ஆய்வாலஜி அவசியமா?

அவர் சொல்லிவிட்டார். பலர் சொல்லாமல் இருக்கக்கூடும். இன்னும் சில குறிகள் இதை ’இலக்கியத்திற்குப் பஞ்சர் ஒட்டும் வேலையாக'வும் பார்க்கக்கூடும். ஆனால் ஒரு படைப்பாளியின் வேலை பத்துபேர் பத்துவிதமாய் சொல்கிறார்கள் என்பதற்காகப் பதறுவது அல்ல. மனதிற்குப் பட்டதை பிரதிபலிப்புகள் பற்றிய சாதக பாதக கவலையற்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டு இருப்பதுதான்.

சமூகத்தைப் பிரதிபலிப்பவன் மட்டுமல்ல படைப்பாளி, சமூகம் எப்படிப் பிரதிபலிக்கும் என்கிற கலையுமற்றவனே உண்மையான படைப்பாளி. அதனால்தான் கலையுடனான அவனது தீராத காதல், வாழும் காலத்தில் அவனைப் பைத்தியமாக அடிக்கிறது. சமூகம் அவனைப் பைத்தியம் என்று அடிக்கிறது.

வ.உ.சி உயர்நிலைப் பள்ளி, பாண்டிச்சேரியில் படிக்கையில், புலவர் புகழேந்தி சார் தமிழ் வகுப்பு எடுப்பார். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதம். பாடம் எடுக்கிற பாங்கு பலவிதம். 9 ங்கிளாஸ் பசங்களுக்கு வருஷாவருஷம் அதே பாடம் தானே. பசங்கள் மாறலாம் வாத்தி அவர்தானே. தமிழ் வகுப்பில் எல்லாப் பாடங்களையும், தண்டச்சம்பளம் எனும்படிக்கு கிட்டத்தட்ட அவனவனே படிக்கும்படிக்கு எவனாவது ஒருத்தனை எழுப்பி அன்றைய வகுப்பிற்கான பாடத்தை அன்றைய தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை - இதில் பெரும்பாலும் ஒன்றா ராஜ்குமார் அல்லது நான் – தேர்ந்தெடுக்கப் படுவோம் என்பதில் எங்கள் இருவருக்குமே பெருமை – அழைத்துத் தன் அருகில் நிற்கவைத்து  வாய்விட்டு பட்டிக்கச் சொல்லி அவர் தமது நாற்காலியில் தேவே கெளடா ஆகிவிடுவார். பதவியில் இருந்த போதும்  இல்லாதபோதும், கெளடாஜி ஆழ்சிந்தனையில் இருக்கிறாரா இல்லை ஆழ்நிலை உறக்கத்தில் கிடக்கிறாரா என யாரேனும் சோதித்து இருக்கிறார்களா என்ன? ஆக வாய்விட்டுப் படிப்பவன், எச்சில் விழுங்குதல் அல்லது மூச்சுவாங்க பத்திகளுக்கு இடையில் ஆசுவாசப் படுத்திக் கொள்ளுதல், இவற்றிற்கான உரிய அளவு இடைவெளி தவிர்த்து மெளனமானால், பாடம் முடிந்ததாய் அவருக்கு எப்படியோ தெரிந்து கண்விழித்து விடுவார். 

இதற்கு நடுவில் சமயத்தில் அவரது குரட்டை ஒலி வெளிக்கேட்கும்படியாய்க்  கொஞ்சம் மந்த கதிக்கு என் வாசிப்பொலியைத் தாழ்த்திக் கொள்வேன். பசங்கள் அவருக்கு முழிப்பு வந்துவிடா வண்னம் பர்ர்ர்ர்ரென வாயால் குசுவிடுவார்கள். பையன்கள் சத்தம் அளவு மீறும் நேரங்களில் அவர் காதில் விழுந்துவிடாதபடி கொஞ்சம் சத்தமாய் படிப்பேன். இதில் ஒரு வித ஒத்திசைவு இருக்கும். அன்றைய எங்களின் ரகசிய ரசனைக்கு இன்று நான் குறிப்பிடும் சொல் ஒத்திசைவு. அன்று அது ஒரு அற்ப விளையாட்டு.

ஒலித்தட்டில் இசை கேட்கையில், குறும்பாய் தொலைக்காட்சியை மெளனப்படுத்தினால்,  வாயசைப்பு தவிர வேறு காட்சியும் வேறு பாடலும் ஏதோ ஒரு விதத்தில், பாட்டின் ஒரு சில இடங்களில் வாயசைப்பு தவிர்த்து ஒரு சில அசைவுகளோடு ஒத்திசையும். எட்டெட்டு கணுக்களாய், உதவி இயக்குநர் துண்டங்களாக்கி எழுதியதையே, நடண மாஸ்டர் சில பல எட்டுகளால் ஆன அசைவுகளாக்கி, நடிக நடணிகளுக்குக் கொடுத்து பாடல் காட்சி அமைக்கிறார். அவரவர் மனோதர்மப்படி இதில் வித்தியாசப் படுத்திக் கொண்டாலும் அடைப்படை ஒன்றுதான். 

ராஜாவின் மேலேரும் வயலினுக்கு மகேந்திரன் எடுத்துக் கொண்டு வந்த ஷாட்டுகளில் இருந்து, எடிட்டர் லெனின், குடையுடன் துரத்தும் குட்டிப் பையன் முன்னால் பிரியும் ஆட்டு மந்தையில் ஒன்று துள்ளிக் குதிப்பதை கனகச்சிதமாய் வெட்டி சேர்த்திருப்பார். இதில்  ’பல’ வயலின்களுக்கு ’கனத்த’ ஆடு துள்ளுவதைத் ’தற்செயல்’ எனலாம். ஆனால் ஷாட் தொடங்குவது வேறு இடத்தில். இசை தவழ்ந்து கொண்டிருக்கும், இரண்டு சிறுவர்கள் ஆடு துரத்தும் ஷாட்களை இடைவெட்டி உருத்தாமல் போட்டு, அடுத்து நீள ஷாட்டை இசைவுடன் இணைத்திருப்பார் உண்மையில் சொன்னால் முடிவிலிருந்து ஷாட்டின் முதலுக்கு இசையின் தாளத்துடன் அளந்து வெட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் மந்தையில் இருந்து பிரிந்து ஒற்றை கனத்த ஆடு துள்ளுவது ஷாட்டின் இறுதியிலேயே வருகிறது. சிறுவன்  பாரைக்குப் பாரைத் தாவும் ஒற்றை ஷாட்டெல்லாம் இசைகேட்டு எடுத்திருக்கக்கூடும். அதை முன்கூட்டி முடிவு செய்தல் மகேந்திரனுக்குப் பெரிய விஷயமுமில்லை. ராஜாவின் சின்ன சின்ன ஓரசை ஒற்றலுக்கெல்லாம் பிஞ்சு முகமும் மஞ்சுப் பூக்களுமாய் ஒத்திக் கொண்டு போயிருப்பார் லெனின். 

புகழேந்தி சார் நகைப்புக்குரிய தூங்கு மூஞ்சி என்றுதான் ஒரு சித்திரம் உருவாகியிருக்கக் கூடும். அவருக்குப் பிடித்தமான கம்பராமாயணம் எடுக்கும் போது தான் அவர் முன்னாள் பிரதமர் இல்லை, அவர் புரிசை கண்ணப்பத் தம்பிரானின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பது புலப்படும். முதல் முதலில் பெரியவரின் ஆட்டம் பார்த்த போது புகழேந்திசார் விஸ்வாமித்திரனாய் வந்து போனார்.

வந்துமுனி எய்துதலும் மார்பில்மணி ஆரம்
அந்தர தலத்திரவி அஞ்சஒளி விஞ்ச
கந்தமல ரில்கடவுள் தன்வரவு காணும்
இந்திரனெனக் கடிதெழுந்தடி பணிந்தான்

தந்தனன தந்தனன தந்தனன தான 
இதுதான் கம்பனின் சந்த மந்திர மாயாஜாலம். கம்பீர முன்கோபி விஸ்வாமித்திரனுக்கு எண்ட்ரி என்ன சும்மாவா கொடுக்க முடியும்?

பாண்டிச்சேரி கம்பன் கழகத்தின் முக்கியத் தூணான, புகழேந்தி சாரின் கனத்த சரீரம் வகுப்பறை வாசலில் இருந்து காலகட்டி திங்கு திங்கென நடந்து வரும். மார்பின் ஆரங்களின் ஜொலிப்பு பசங்களுக்குக் காக்காக் கண்ணாடி காட்டியதைப் போல கண்கூச வைக்கும். அவரே தசரதனாகவும், க்ஷணத்தில் மாறி பவ்வியப்படுவார். 

பின்னாளில் ப்ரீக்‌ஷாவில் வீதி நாடகக் குழுக்களில் மைமிங் பற்றி அறிய நேர்ந்த போது புகழேந்தி சார்தான் வந்துவந்து போனார். ஓ இதைத்தான் நம்ப சார் செய்தாரா என உரசி உரசி ஸ்வீகரிக்க முடிந்தது. கலைஞர்கள் அவரவர் கொள்கைக்கும் தத்துவங்களுக்கும் ஏற்ப கட்டியக்காரனில், கண்ணுக்குத் தெரியாத போஸ்டரை இல்லாத சுவரில் ஒட்டியும், பெல்ச்சியில் கையுயர்த்தி கூரையாக்கியும் விரற்கைகளசைத்துத் தீயாக்கியும் பார்வையாளனை பல்வேறு உணர்வுகளுக்கு வசப்படுத்துவர். அவரவர் சார்ந்த இயக்கம் வசியமும் படுத்தும்.

பரதன் வருவதைக் கேள்விப்பட்டு. நாட்டைவிட்டு விரட்டியதோடல்லாமல், ராமனைக் காட்டிலும் துரத்தி வருகிறான், எனத் தவறான புரிதலில்  உணார்ச்சிக்கடலாகும் வேட்டுவ குகன், பாமரக் கோபத்தில் கொந்தளிக்கிறான். வார்த்தைகள் கோர்வையாய் வருவேனா என்கின்றன. ஒரே பொருள் குறித்த ஆனால் ஒன்றோடொன்று இணைவதில்லை.

அவன் என்ன பெரிய பிஸ்தா? வர்ரானாக்கேளு ஒண்டிக்கொண்டி, மவனே கைவெச்சிடுவானா, வெச்சிதான் பாக்கட்டுமே என்கிற ரீதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?
(கம்ப. குகப்படலம். 2405)

உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கிறது. 

புதிய விஞானக் கண்டுபிடிப்பு போல, ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வார்த்தைக் கொடிகளுடன், சொர்க்கவாசல் திறப்புக்கு ஸோல் ப்ரொப்ரைட்டர்ஸ் என சொல்லிக் கொள்பவர்கள் அடித்து பெண்டெடுக்கும் வாக்கியம். பாவம் கம்பநாட்டாழ்வான் இந்த அறிவு இல்லாமல் ஏனோதானோவென கவியெழுதிப் போய்ச்சேர்ந்தான்.

ஒருநாள் யுவகிருஷ்ணா அதிஷாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களிடம் கேட்ட ஒரு கேள்வியை, பிறகு ஜ்யோவ்ராம் சுந்தருடன் கைபேசியில் பேசுகையிலும் கேட்டேன்

ஜேஜே சில குறிப்புகள் நாவல் எப்படித் தொடங்குகிறது? நினைவிருக்கிறதா?
சுந்தர், ஃபோனில் ஒப்பிக்கவேத் தொடங்கிவிட்டார்.
ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி, தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யூ விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான்.
நான் கூறினேன், 1960 இல் 39 ஐக் கழியுங்கள் பாரதி இறந்த ஆண்டாகிய 1921 வரும்
சுந்தர் அடடா என்றார் அதற்கு முந்திய நாள் யுவகிருஷ்ணாவோ  இதை சொன்னவுடன், சே இவ்ளோ நுட்பமான, விஷயத்தை உள்ள வெச்சா சார் எழுதுவாங்க என வியந்தான்.

தமிழ் நவீன இலக்கியம் இங்கிருந்து மேற்கத்திய மேன்மைக்காய் நீட்சிபெற வேண்டும் என்பதற்காகவே ஜேஜே வின் வாழ்காலம் நமது இலக்கிய சிகரமான பாரதியின் மறைவிலிருந்து காம்யூவின் மறைவிற்குள்ளாக வைக்கப்பட்டது. இது என் கண்டுபிடிப்பன்று. சுந்தர ராமசாமியே ஒரு நடைப்பேச்சில், க்ரியா ராமகிருஷ்ணனின் அபிராமபுரம் வீட்டிலிருந்து,  அடையார் ஆவின் பாலகம் பின் அங்கிருந்து திரும்புகாலில் கூறியது.

எத்துனைபேர் கண்டுபிடிப்பார்கள் அல்லது எத்துனை வாசகனுக்கு இது தட்டுப்படும் என்பதல்ல கலைஞனின் கவலை. கிடார் வாசிப்பின் கார்டு தட்டலையும்கூட பதிக்கும் ரஹ்மான் போல ஆனமட்டுக்கும் நுணுக்கங்களைக் கொண்டே ஒரு படைப்பு நுட்பாமக சிருஷ்டிக்கப் படுகிறது, உயர்ந்த கலைஞர்களால். நாம் வளர வளர ஆறு ஆழியாகும் அற்புதம். 

கலைஞன் இழையிழையாய்ப் பின்னுவது முதலில் அவனது லயிப்பிற்காகவே. ஒரு எட்டு பார்க்க முடிந்தால் அனுபவிக்க முடிந்தால் அணுஅணுவாக ரசிக்க முடிந்தால், காசுள்ளவன் வாங்கிய உயர்ந்த சரக்கை முகர்ந்து பின் மெல்லப் பருகுதல் போல, ருசிக்க முடிந்தால் ஜீவிதம் பூரணம். 

ஆங்கில சாம்ராஜ்யத்தில், மாட்டுத் தொழுவத்தில் ஒரு கருப்பு அடிமை ஜோடி கட்டியணைத்து முத்தமிடுவதைக் கண்ணுற்று, பிரபுத்துவ சீமாட்டி ஒருத்தி தன் காதலனிடம் ஆச்சரியமாகக் கேட்டாளாம். “கண்ணாளா, இந்த அடிமைகளுக்கும் நம்மைப் போலவே காதல் என்கிற உணர்வு உண்டா?’

இசை கேட்டு அசையும் புவி, அதன் இழைகளை ஸ்பரிஸிக்க நேர்கையில் கூத்தாடத் தொடங்குகிறது. 

மொக்கை, தான் செய்யப்பட்ட விதத்தை, அம்மணமாய்க் காட்டி நிற்கிறது முலாம் இளித்த பாத்திரம்போல். 

சிறந்த சிருஷ்டியின் நுட்பத்தை அறிய முன்னுகையில் மொக்கு அவிழும் தருணத்தை தரிசிக்கும் பாக்கியம் லபிக்கக்கூடும்.