Tuesday, November 23, 2010

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

சுவர்கள் – சுகுமாரன்
(ஜூன் 1981)
வந்த வழிகளெல்லாம் அடைபட்டன
புறங்கள் நிமிர்ந்து சுவர்களாயின.
விவரங்களற்று
அகப்பட்டேன் நான்.

வானம் சதுரமாய் சிறுத்தது
இரண்டு எட்டில் கால்கள் திரும்ப
என் உலகம்
நொடியில் சுருங்கியது.
மீண்டும் மீண்டும் நானே சுவாசித்து
காற்று விஷமாயிற்று.

வெளியேற வழியற்றுத் திகைத்தேன்.
பறவை நிழல் தரையைக் கடக்க
அண்ணாந்தால்
நீல வெறுமை.

ஆதரவுக்காய் அனுப்பிய குரல்
சுவர்களில் மோதிச் சரியும்
வீணாகும் யத்தனங்கள்.

தளிர்ப் பச்சைக்கோ
சிரிப்பொலிக்கோ
மழைத்துளிக்கோ
பூக்களுக்கோ ஏங்கும் புலன்கள்.

நாள்தோறும் சுவர்கள் வளரக்
கையளவாகும் வானம்.
சுதந்திரம் நகர்ந்து போகும்.

கதவுகள் இல்லையெனினும்
வெளியைக் காண
சுவருக்கொரு ஜன்னலாவது அனுமதி –
நிச்சயம் வெளியேறி விடுவேன்.

(ஜூன் 1981)
(கோடைகாலக் குறிப்புகள் தொகுதி - மார்ச் 1985)ஆரம்ப வரிகளிலேயே, கவிதை நிகழ் உலகின் யதார்த்தத்தில் இல்லை. சினிமாவில் ஆஃப் வே ஓப்பனிங் என்பது ஒரு உத்தி. துண்டத்தின் இடையிலிருந்து தடாலெனத் தொடங்குதல். இருட்டுச் சிறைக் கைதி வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் படும்போது வரும் தடுமாற்றத்துடன் தீவிரத்தை உணர்த்த

வந்த வழிகளெல்லாம் அடைபட்டன
 
எனத் தொடங்குகிறது கவிதை. திரும்பிப் போக மார்க்கமில்லை என்பதை சொல்லாமல் உனர்த்துகிறது. 
புறங்கள் நிமிர்ந்து சுவர்களாயின.
திசைகளின் எல்லை கண் புலணுக்குக் காட்சிப் படாமையால் கிடந்த தோற்றத்தில் இருந்ததான ஃப்ரேமுக்கு வெளியினின்று நிமிர்ந்த வண்ணம் திரைக்குள் வருகின்றன. அமானுஷ்யத்தின் புலப்படாத கை அறைந்து உள்ளே தள்ளுவதான சித்திரம் எழுகிறது. 
விவரங்களற்று
அகப்பட்டேன் நான்.
ஊழ் கண்கொட்டி முடிக்கும், முன் சடசடவென எழுந்து சிறையிட்டு விடுகிறது. என்ன நேர்ந்த்து என நிதானிக்கும் முன்பாகவே சிறையிடப்பட்ட கைதி. பொறியில் அகப்பட்ட எலி. தேங்காய் பத்தைகூட காட்டப்படாத எலி. ஒரு அழுத்தம் கவிகிறது கவிப்பொருளின்மேல்.
கவிதை வளர 
வானம் சதுரமாய் சிறுத்தது
புறங்கள்தானே பாரதூரமான எல்லை. அவை நிமிர்ந்து சுவர்களாகிப் பின் வானம் சிறுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? நாற்புறமும் புறச்சுவர்கள் நெருங்கி நெருக்குகின்றன என்பதை சுவர்களைப் பார்க்க வைக்காமல் கேமரா மேல் நோக்கும் சஜஷன் ஷாட்டில் சிறுத்துப் போன வானத்தின் மூலம் புறச் சுவர்களின் நெருக்கல் உணரவைக்கப் படுகிறது.
இரண்டு எட்டில் கால்கள் திரும்ப
என் உலகம்
நொடியில் சுருங்கியது. 
காலாற நடக்கக்கூட நாதியில்லை.
மீண்டும் மீண்டும் நானே சுவாசித்து
காற்று விஷமாயிற்று. 
பெளதிக ரீதியிலான நெருக்கடி, அந்த நெருக்கடியின் அடிப்படை நோக்கி நகர்கிறது. கதைக்கே லாஜிக்கா எனக் கேட்கும் காலம். கற்பனைக்கு லாஜிக் தேவையில்லை. ஆனால் அந்தக் கற்பனைக்குள் லாஜிக் தேவை அய்யா. இல்லையென்றால், மனதோடான சம்பாஷனை ஏது. உரையாடல் என்பதே என்ன? நீ ஒன்று சொல்ல அதை ஒட்டியோ வெட்டியோ நான் ஒன்று சொல்ல அதன் மீது உன் நிலையிலிருந்து நீ பிறிதொன்று சொல்ல இப்படியாகச் செல்வது தானே. நான் மேல் முன்புறத்தினின்று சொல்வதற்கு நீங்கள் கீழ் பின்புறத்திலிருந்து சொன்னால்தான் கற்பனை, மாய யதார்த்தம் எனப் புரிந்து அடிக்கிற கூத்திற்கு அளவே இல்லை.
இறுதியின் குவிமுனையாக, வரப்போகும் விஷயத்திற்கு இங்கே நிர்பந்த அழுத்தம். ஜீவன் பிழைத்திருக்கவும் முடியா அவலம். நெருக்கடியின் தீவிரம்.
வெளியேற வழியற்றுத் திகைத்தேன்.
மூச்சுவாங்க முன்னுவதெ உடனடி காரியம். ஆனால் மார்க்கம்தான் புரியா திகைப்பு
பறவை நிழல் தரையைக் கடக்க
அண்ணாந்தால்
நீல வெறுமை.
சின்ன்ஞ்சிறு வெற்றிடம்தான் அதற்குள்ளும்கூட நிழலாய் சிறு அசைவும் கூட குறுகியதொரு சலன விடுதலையைக் கொடுக்கக்கூடும், தொலைதூர வெளிச்சத்தின் அசட்டு கதகதப்பு போல. அடடா கண்ணிலான் பெற்று இழந்தான் போலதலை தூக்கிப் பார்த்தால் வெறுமை.
ஆதரவுக்காய் அனுப்பிய குரல்
சுவர்களில் மோதிச் சரியும்
இடிபாடுகளில் அகப்பட்ட மனிதன் அடுத்து என்ன செய்வான் உதவிக்கு தீனிப்பான். கேவலம், அழைப்புகள் கூட வெளியேற வழியில்லை. பீதியுற்ற மனிதனின் சன்னக் குரலல்லவா அது கோஷமல்லவே. அந்தக் குரலால் இரக்கமற்ற எஃகுச் சுவர்களில் மோதி எதிரொலிக்கக்கூட முடிவதில்லை. சரிகின்றன.
வீணாகும் யத்தனங்கள்
எட்டுக்கால் பூச்சியின் வாழ்வில்தான் எத்துனை முயற்சிகள் உழைப்பாய் சக்தியாய் வியர்த்தப்படுகின்றன.
தளிர்ப் பச்சைக்கோ
சிரிப்பொலிக்கோ
மழைத்துளிக்கோ
பூக்களுக்கோ ஏங்கும் புலன்கள்.
ஸ்தூலங்களாய்ப் பட்ட அவஸ்தைகள் நுண்ணுனர்வுகளுக்குமாய் துலக்கம் பெறுகிறது. மேல்திறப்பு இருக்கின்ற ஒரே காரணத்தால் மட்டுமே காற்றுள்ளதாய் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு இடம். அதில் கண்ணுக்கும் காதுக்கும் ஸ்பரிசத்துக்கும் வழியேது. ஏங்குதல் மட்டுமே யதார்த்த சாத்தியம்.
நாள்தோறும் சுவர்கள் வளரக்
கையளவாகும் வானம்.
சுதந்திரம் நகர்ந்து போகும்.
மாய விதியின் கை இருப்பதை இருப்பதாகக் கூட விட்டுவைக்க மாட்டேன் என்கிறபடிக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்று தீர்த்தவண்ணம் இருக்கிறது. வாழ்வென்ற வெல்லக்கட்டி சுபிட்ச திசை நோக்கி வளர வேண்டாம் கையின் நசநசப்பில் தின்னும் முன்பாகவேக் கரைந்து கொண்டல்லவா இருக்கிறது.
வானுயர் கட்டிடங்கள் அடித்தள அளவிற்கே நீள அகலங்களில் இருக்கவும் கூடும். தரை நின்று அண்ணாந்தால் முகடு புள்ளியாகிறதல்லவா அது போல, கிடைமட்டத்தில் நெருக்கிய சுவர்கள் நெட்டுக்குத்தாகவும் வளர்ந்து தாவியேறி தப்பிக்கும் மார்க்கத்தையும் கனவுக்கதையாய் ஆக்குகின்றன. தலைக்குமேல் கையளவு வானம் எனில், இருப்பின்  நெரிசலில் சுதந்திரம் என்பது ஏது. தொடர்ந்து தூரப் போய்க் கொண்டேதான் இருக்கிறது நகர்ந்தபடி, இதோ பிடித்துவிடலாம் என்கிற நயவஞ்சக நம்பிக்கை ஜாலம் காட்டியபடி.
கதவுகள் இல்லையெனினும்
இவ்வளவு நிம்மதி பிடுங்கப்பட்ட்ட நெருக்கடிக்கிடையிலும் பெரிய சுவரிடிப்புப் போராட்ட பிட் நோட்டீஸ் கொக்கரிப்பெல்லாம் இல்லை.
வெளியைக் காண
சுவருக்கொரு ஜன்னலாவது அனுமதி –
மத்தியதர வர்க்கத்தின் யதார்த்த விண்ணப்பம். இறைஞ்சுதல். ஆரம்ப அமானுஷய வடிவத்திலிருந்து எந்தப் புள்ளியில் இது யதார்த்த்த்தை நோக்கித் திரும்பிற்று. ஆரம்பத்திலிருந்தே அது அமானுஷ்ய தோற்றம் காட்டியவண்னம் யதார்த்தத்திலேயேதான் இருந்து கொண்டிருக்கிறது.
கொஞ்சம் பெரியமனது பண்ணி இந்த பாரத்தை இறக்க கொஞ்சம்  ஒத்தாசை. பெரிய உதவியெல்லாம் கூட, கதவெல்லாம் கூடக் கேட்கவில்லை. ஒரு ஜன்னல். சிறிய சாளரம் அதுகூட நீங்கள் வைக்கத் தேவையில்லை நான் வைத்துக் கொள்ள நீங்கள் அனுமதித்தால் போதும்.
நிச்சயம் வெளியேறி விடுவேன்.
நசிவுப்பாறை வாழ்க்கையில் ஒரு நம்பிக்கைத் துளிர்.

இவ்வளவு செரிவான ஒரு கவிதையை தமிழின் தனிப்பெரும் ஆளுமையான  ஜெயமோகன் சார் அவர்கள் ’ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே’ என்கிற ரீதியில் எப்படித் திருடி தனதாக்கிக் கொண்டிருக்கிறார் எனப் பார்க்கலாம். அதற்குமுன் சில வார்த்தைகள்.
இதை 1994ல் அன்றைய ஆர்.எஸ்.எஸ்.ஸும் தனிப்பெரும் ஆளுமையின் அன்றைய அடிப்பொடியுமான ஒன்றிடம் கோடம்பாக்கம் பாலத்தின் அடியில் நின்றபடி மோகனத்திருட்டை சொல்லப் போய்க் கண்ட பலன், என்னுடைய 8 கதைகள் தமிழ் இண்டியா டுடேயில் நிராகரிக்கப் பட்டன. இணையத்தில் வெளியிடப் பட்டிருக்கும் பந்தாட்டம் சோழிகள் உட்பட அனைத்தும் நிராகரிக்கப் பட்டன. காரணம்? ஒரு கதைக்கு உயிர்த்தெழுதல் எனப் பெயர் வைத்ததோடல்லாது முஸ்லீம் சாமியார் பற்றியும் நீள விவரணை வரும் கதை, அவரென்ன பரித்ராணாய சாதூ நாமா சொல்ல முடியும். அவர் அவருக்குத் தெரிந்த 786 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் சொல்லுவார். ஒரு, கதையில் கூட முஸ்லீம் சாமியார் பற்றி எழுதிவிடக் கூடாதா அய்யா? 
அந்த இஸ்லாமிய சாமியாரைப் பின்னொரு நாளில், அவரது திரிசம சாதுர்யம் கண்டு, விட்டு விலகி நான் வந்துவிட்டேன். ஆனால் உயிர் போகிறது எனச்சொன்னலும் மருந்துக் கடையின் போர்டைப் பார்த்து பாய் கடை இல்லையா என உறுதி செய்து கொண்டு உள்ளே நுழையும் தேசாபிமானிகளின் ஊதுகுழலின் அடிப்பொடியிடம் முதிர்ச்சியையும் நியாயத்தையும் எதிர்பார்த்தது எனது மூட நம்பிக்கைதான். வர வர தீவிர கம்யூனிசம் பேசுகிறவர்களும் அதே ரீதியில் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு நிதர்சனம்.
இலக்கிய விமர்சனங்களும், திருட்டுகளை அம்பலப் படுத்துதலும் கூட காழ்ப்பாகவும் பொறாமையாகவும் சித்தரிக்கப்படும் சீருடை சீடமனச் சூழல். கம்யூனிஸ்ட் பேட்ஜும் ஆர்.எஸ்.எஸ் பேட்ஜும்  அபத்தப் பைத்தியக்காரனாய் அர லூசாய் ஓரணியில் நின்றாலும்  எவனது அச்சுருத்தலுக்கும் அஞ்சாமலும் எவன் ஆசீர்வாதத்திற்கும் அலையாமலும் எனக்கு சரியெனப்  பட்டதைச் சொல்லுவேன். என் வார்த்தைக்கும் செவிமடுக்க தனித்துவம் வாய்ந்த வாசகர்கள் இருக்ககூடும் என்கிற மூட நம்பிக்கையிலேயே இதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
எவ்வளவு பறவைகளின் சிறகுகளிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்ட எத்துனை இறகுகள் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாக இணையத்தின் தீராத பக்கங்களில் இனி காணலாம். 
எப்படி இதை எழுதுவது மட்டுமே என் வேலை இல்லையோ அதே போல இதை எழுதுவதும் என் கடமைகளில் ஒன்றெனவேக் கருதுகிறேன்.