Wednesday, November 24, 2010

சுகுமாரன் கவிதையிலிருந்து ஜெயமோகன் சுட்ட மொக்கை

கைதி – ஜெயமோகன்

என் அறை சிறியது,
நிறைய ஜன்னல்கள்.

என் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன.

மேஜைக்கு கீழே காகிதக் குப்பை.
கறைபடிந்த காபி கோப்பை.
ஓயாது சஞ்சலிக்கும் சுடர்.
என்னை விட பெரிதான நிழல்.


கோடையில் சூடான தென்றல்
உள்ளே வருகிறது.
மாலையில் பச்சிலை மணமும் குளிரும்.
இரவில் நிலவும்,
தூரத்து சங்கீதமும் கனவும்.

எனக்கு அலுத்து விட்டது.
என் ஜன்னல் பார்வைகளுக்கெல்லாம்
ஒரே கோணம்.
வெளியே போக விரும்புகிறேன்.

உடை மாற்றி செருப்பணிந்து
தேடினால்
வாசல் இல்லை
நாற்புறமும் சுவர்கள்.
ஜன்னல்கள்.
வெளிக்காற்று உள்ளே வருகிறது
எனினும் இதற்குள் என் உடல்சூடு
புழுங்குகிறது.

இந்த ஜன்னல் வழியாக
நான் வீறிட்டலறினால்
எத்தனை பேருக்குக் கேட்கும்?
துண்டு வெண்தாளில்
என் துயரை ஒற்றி
தெருவுக்கு விட்டெறிகிறேன்
இதயத் துடிப்புடன் காத்திருக்கிறேன்.

அதன்மீது மனித காலடிகள்
இரக்கமின்றி மிதித்துச் செல்கின்றன.

(1988-89)
(தெற்கிலிருந்து சில கவிதைகள் ஜூன் 1992)

இந்தக் கட்டுரையில் என்ன எழுதப்படப் போகிறது என்பதில் எந்த ரகஸியமும் இல்லை. அனேகமாக எல்லோருக்கும்  தெரிந்ததே. எப்படி எழுதப்படப் போகிறது என்பதுதான் குறுகுறுப்பு இந்தக் கட்டுரையாளனுக்கும் சேர்த்து.

பெரும்பாலும் நல்ல கவிதையை அல்லது கவிதையே அல்லாததை அடையாளம் காட்டுவது மிக எளிது. பிரச்சனை போலிகளை அடையாளம் காட்டுவதும் அவிசாரித்தனத்தை அம்பலப் படுத்துவதும்தான்.செய்தது பேரம்பலம் எனில் அம்பலத்தின் முன் வைத்தல் மகா நொம்பலம்.

காரணங்களாவன

ஒன்று பிரதியை மறைக்கும் பிம்பம்.

இரண்டு பிம்பங்களைப் பின்தொடரும் நிழல்கள்.

மூன்று நல்லதைப் பார் அல்லதைத் தவிர் – அட்வைசர்கள்.

முதலாவது: உண்மையின் ஒளிக்கற்றைக் குவிப்பில் எரியத் தத்தளிக்கும் காகிதம். வெளிச்சம் வரும் திசையைப் பார்த்து அப்பிய ஒப்பனைத் தத்தளிப்பைக் காலடி நோக்கிய ஆன்மீகத் தவிப்பாய் முன்னிருத்தும் தந்திரம். எடுத்துவைக்கும் காலடியே எத்திசையில் என்பதற்கு இறுதி உரை எழுதிவிடும்.

இரண்டாவது: அறிவுக் கதிர் வீச்சில் காணாமல் போகவேக் வாய் பிளந்து நிற்கும், பிம்பத்தின் வெற்றுப் பிரதிநிழல்கள். மூளை திறக்கா மூடங்கள். திறந்தால் உள்ளீடின்மை அம்பலப்பட்டுவிடம் என்கிற பயத்தில், குப்பைக் காகித கசங்கல் மடிப்புகளை மூளை என்பதுபோல் ஷோக்காக்கித் திரியும். பெயர் பார்த்து பீ எனினும் நம்மவர் போட்டதல்லோ பேஷ் பேஷ் எனக் கூடிநின்று கும்பலாய் கோஷிக்கும் உருவிலிகள். சினிமாக்காரனுக்கு சீழ்க்கையடித்தல் கீழ்மை, என அறுவறுப்பாய் சித்தரிக்கும். இலக்கியத்தின் பெயரில் இடைசேவல் செய்தல் மேன்மையென இறுமாந்து இளிக்கும்.

மூன்றாவது: நல்லெண்ண நாகரீகர் என்பதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

தவறுகள் எல்லாமும் தண்டிக்கப் படவேண்டியவை அல்ல. முதல்முறை, கவனக் குறைவு, தற்செயல் எனில் மன்னிக்கப் படலாம். ஆர்வக் கோளாரெனில் அறிவுரைத்துக் கண்டிக்கப்படலாம். தவறுக்கு வருந்தினால் தாண்டிப் போகலாம்.

சாரி சொல்ல மறுப்பது குழந்தை எனில் முகம் திருப்பி மறைவாய் மகிழவும் செய்யலாம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது சத்தியமான வார்த்தை. இருவரும் சாரி சொல்வதே இல்லை.

தவறும் இழைத்து குற்றவுணர்ச்சியும் அற்று ஒருவனால் தருக்கியும் திரியமுடிகிறது என்றால் அரசியல்வாதியாகவோ அல்லது மறைவுலக அதிபனாகவோ இருக்கவேண்டும் இரண்டும் இணைந்த ஒருவன் இலக்கியவாதியாகவும் இருக்க முடியும்.

கடவுளின் கிறுக்குக் கடாட்சம் இப்படியான எழுத்தாளனின் மேல் விழுந்தால் இலக்கிய ஆளுமை என்றும் தோற்றமளிக்கலாம். 

குள்ள நரி கட்டி இருப்பது முண்டாசு எனக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உலகம். உருவி அதை உதறிக் காட்டும் போதுதான் இரவல் கோமண இளிப்பெனப் புலப்படும். 


ஏற்கெனவே ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்கிற கட்டுரையை  வாசிக்காதவர்கள் தயவு செய்து அதை முடித்து இதைத் தொடரவும்.


கைதி – ஜெயமோகன்

என் அறை சிறியது,
நிறைய ஜன்னல்கள்.

என்ன இது? ஒரு சிறிய அறையில் நிறைய ஜன்னல்கள் இருக்க இயலுமா? குறைந்தது ஒரு சுவருக்கு ஒரு ஜன்னல் என வைத்தால் கூட நான்கு ஜன்னல்கள் கொண்ட அறையை எவரேனும் கண்டதுண்டா? எங்கேனும் இருக்க சாத்தியமா? மணல் கொள்ளையைவிட மகத்தான கட்டிட ஊழலைப் பற்றிய கவிதையா? மண்ணு சிமெண்டை மிச்சப்படுத்த எந்த ஒப்பந்தக்காரன் கட்டியது இந்த ஜன்னல்லால் ஆன அறை?

கவிதையில் கற்பனையாகக் கட்டப்பட்ட அறைக்கு இத்துனைக் கறார்த்தனம் தேவையா? ‘கவியைக் காப்பாற்ற, கல்லுளிமங்கன் எவனேனும் கேட்க்க்கூடும்.

எல்லாக் கேள்விகளுக்கான பதிலையும், கிருஷ்ணனின் ஆவெனத் திறந்த வாயெனத் தனக்குள்ளே கொண்டிருந்தால்தான், அதன் பெயர் சிருஷ்டி இல்லையென்றால் அது சுருட்டி. அதைத்தான் கட்டுரை பிரித்து ஆயத் தலைப்படுகிறது.

கவிதை, முழுக்கவும் கட்டப்பட்டிருப்பது யதார்த்த தளத்தில்.அதில் காணக்கிடைக்கும் எந்தக் காரணியும் அமானுஷ்ய தடம் காட்டவில்லை. தொத்தலாய் ஒன்றை இட்டுக்கட்டிக் கொண்டு வந்தால், அது எப்படி இயல்பில் ஒட்டாது பல்லிளிக்கும் என்பதை விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

என் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன.

நிம்மதியினமையைக் காட்சிப்படுத்த, ஏகத்திற்கும் படித்ததனால் பிடுங்கப்பட்ட அமைதி. ஒழுங்கு குலைந்த பதற்ற உள்ளம். நல்லது. நல்ல கவிதைக்கானத் தொடக்க வரியாகக் கூட இது இருக்கலாம்.

மேஜைக்கு கீழே காகிதக் குப்பை.

ஓ படிப்பாளன் மட்டும் இல்லை எழுத்தாளனும் கூட.

கறைபடிந்த காபி கோப்பை.

கழுவ மறந்த்தாய் இருக்கலாம். கவனம் தவறி அலையும் மனம். கோப்பைக் கறை வறுமையைக் கூடக் குறிப்பதாய்க் கொள்ளலாம், எப்போதோ குடித்த காபி போலும்.

ஓயாது சஞ்சலிக்கும் சுடர்.

நிறைய ஜன்னல்கள் கொண்ட சிறிய அறையில் தத்தளிக்கும் தனியன். அனைத்து ஜன்னல்களும் திறந்து கிடக்கின்றன.  மூடப்படாத அல்லது மூட முடியாத கதவுகளைக் கொண்ட ஜன்னல்கள் போலும்.

என்னை விட பெரிதான நிழல்.

சிறிய அறையில் பெரிய நிழல். ஆளைவிட பெரிய நிழல் விழ வேண்டுமானால், சுடர் அருகாமையிலும் நிழல் விழும் சுவர் நன்கு தள்ளியும் இருக்க வேண்டும். சிறிய அறை என்பது கவிதை தரும் தகவல். பொதுப்புத்தி, பெருசு என்றால் நிற்கவைத்தே அளக்கும். கிடக்கவைத்து அல்ல. 

நேரடியாய் சொல்லா விட்டாலும் சுடர் மேஜையில் இருக்கவே சாத்தியம். மேஜை ஏற்கெனவே காட்சிக்குள் வந்துவிட்ட பொருள் அதன் அடியில்தானே காகிதக் குப்பை. கறைபடிந்த காபி கோப்பைக்கூட தரையில் இருக்கக்கூடும். சுடர் தரையில் இருந்தால் ஓயாது சஞ்சலிக்க வாய்ப்பில்லை. அதைவிடவும் முக்கிய அவதானிப்பு, தன்னைவிட பெரிய நிழல் விழ வாய்ப்பில்லை. இருக்கக் கூடும் என்றால், ஒரே சாத்தியம் கவியின் சீர்தூக்கிப் பாரா சீடக் கவிகளின் மனங்களே. புல்லரிப்பு இலக்கியக் கவலை அல்ல. முதல் ஓட்டை என்பதை கவனத்தில் இருத்தி மேல் செல்லலாம்.

கோடையில் சூடான தென்றல்
உள்ளே வருகிறது.

கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு போன்ற உன்னத வரி. அடடா இந்தக் கவித்துவத்திற்கே அக்ஷர லக்ஷம் கொடுக்கலாம் போல இருக்கிறதே. அடுத்த தயாரிப்பாளருக்குத் தெரிவித்துவிட வேண்டியதுதான். கவிஞர் பாடலாசிரியரும்கூட ரேட்டைக் கொஞ்சம் கூட்டிப் போட்டு நன்கு உபயோகித்துக் கொள்ளுங்கள் சார். 

சூடான தென்றல் ‘சலவை நிலாவுக்கு சபாஷ் சரியான போட்டி (சலவை நிலாதான் முரடன் முத்து முதலில் உதிர்த்த முத்து. ஜனங்கள் அடிக்க வந்துவிடப் போகிறார்கள் என தயாரிப்பாளர் கெஞ்சவும், ராஜாவிடமிருந்து   இளைய நிலா உதித்ததாக இண்டஸ்ட்ரி உள்தகவல்.

மாலையில் பச்சிலை மணமும் குளிரும்.

அட அறைக்கு வெளியில் மரமும் உண்டு போல. அதற்கு வாடகை இல்லையே. நல்லது.

இரவில் நிலவும்,

உள்ளே வருகிறதாமே, சபாஷ் இதற்கும் எழுத்துக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கொஞ்சம் பெரிய மனம் வைத்து இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் இருக்கும் ஸ்பேஸையும் கேரெக்டராகக் கணக்கில் கொண்டு ஒரு லட்சம் எக்ஸ்ட்ரா கொடுக்கலாம், இந்தக் கேரெக்டருக்கு.

தூரத்து சங்கீதமும் கனவும்.

கொஞ்சம் கவிதை வந்துவிடும் போல இருக்கிறதே. எங்கிருந்தோ கேட்கும் இசை தூரத்து சங்கீதமாகிறதே நல்லது. அறை பரவாயில்லை நன்றாகவே இருக்கிறது.  வாடகை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆட்கள் எனக்கு உனக்கு என்று வரிசையில் நிற்கும் அறை போல இருக்கிறதே.

அடடே கனவு கூட உள்ளே வருகிறதாமே?

கனவு மெய்ப்படாமல், வானம் வசப்படாமல், தொலைவில் ஜன்மங்களுக்கு அப்பால் இருப்பதைப் போலல்லவா இருந்தது, ஆரம்ப வரிகளில் இருந்த அவஸ்தை. கலைந்த புத்தகம் கறைபடிந்த காபி கோப்பை அடியில் காகிதக் குப்பை.

கனவும் உள்ளே வந்துவிட்டால் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? சும்மா சொல்ப்ப சொல்ப்பா இஷ்டத்துக்கு இட்டுக்கட்டிய மொக்கை என்றல்லவா ஆகிவிடும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அப்புறம் ஏன் நோ பீஸாஃப் மைண்ட். என்ன பிரச்சனை?

எனக்கு அலுத்து விட்டது.

இருக்காதா பின்னே, பொறக்கும்போதே பேனாவோட பொறந்தாப்புல பில்டப் குடுத்து, எக்கச்சக்க பேர்ல பத்திரிகைக் கதைகளை எழுதி, அப்படி எழுதியதை,  ஏதோ கார்கில் போர்முனைக்குப் போனாப்புல சீன் போட்டு, அப்படிதான் எழுத்து என் வசப்பட்டுதுன்னு என்ன ஒரு ஆன்மீக உண்மை விளம்பல். மொதல்ல நான் பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜேஷ் குமாரோடதான் போட்டி போட்டு ஆளாவப் பாத்தேன். சினிமாவுல வெறும் டிஸ்கஷ்னுக்குதான் சான்ஸ் கெடைக்கும் போலத் தெரிஞ்சிது. வேலைக்காவாதுன்னுதான் சீரியஸ் ரைட்டர் ஆனேன். சீரியஸா எழுதறாமாதிரி காட்டற ரைட்டர் ஆனேன். எல்லாத்தையும் குறியீடுன்னு சொல்லி எழுத ஆரம்பிச்சா இந்த எடுவெட்டப் பயலுக, எழுதின எல்லாத்துலையும் குறியீடு தேடிப்பிடிக்கக் குண்டி சொரிஞ்சிகிட்டுத் திரிவானுவ. எந்திர மூளையின் தந்திர எழுத்து.

என் ஜன்னல் பார்வைகளுக்கெல்லாம்
ஒரே கோணம்.

நிறைய ஜன்னல்களுக்கு எப்படி ஒரே கோணம் இருக்க முடியும் சார். என்னதான் சிறிய அறை எனினும் சுவர்கள் உண்டுதானே. நான்கு சுவர்கள் இருந்தால்தானே அது அறை. திசைக்கொன்றாய் இருப்பவைதானே சுவர்கள். இந்த திசைகளின் நடுவே அல்லது சுவர்களின் நடுவே சுவருக்கு ஒன்று எனினும் நான்கு ஜன்னல்கள். நான்கிற்கும் நான்கு கோணம் இல்லையா? நான்கு வெவ்வேறு பராக்கு காட்சிகள் இல்லையா? 

மணி சார் பார்த்துக்குங்க. நீங்கள் ஏற்கெனவே மொழித்தெளிவு உள்ளவர். கேபி சார் கிட்ட வேலைக்காரிகூட விவரமாப் பேசறாப்பல உங்ககிட்ட எல்லாக் கேரெக்டரும் ஒன் லைன்ல பேசறவங்க.

நாலு தெசை ஜன்னல்லையும் ஒரே கோணம் தெரியுதுங்கறாரு ஜெமோ. கேமரா மேன் கொழம்பிடப் போறாரு. உங்ககிட்ட இருக்கற ஒரே உருப்படியான விஷயம், ஆனா ஊனா கேமராவத் தூக்கிகிட்டு வெளிநாட்டுக்கு ஓடாம, மேரா பாரத் மக்கான்னு பார்ட்பார்ட்டா பாரத தேசத்தைப் படம் பிடிக்கிறீங்க. பப்பரப்பா கைவரிசை பிப்பிரிப்பீன்னு ஆயிடப் போவுது.

வெளியே போக விரும்புகிறேன்.

ஓ இதான் மேட்டரா. எவ்ளோ எம்பினாலும் பென்ஞ்சு டேபிள்மேல ஏறி நின்னாலும் சுசுந்தர ராமசாமியவிட ஒசரமா ஆகமுடியாது போல இருக்கே. ஆவி குமுதம் ரைட்டர்னு போறத விட இலக்கிய ரைட்டர்னு வெளிய போனா கதை ஜெயமோகன்னு கிரெடிட் குடுக்காட்டாலும் வசனம்னு பேர் போட்டு துட்டு கெடச்சிடும். ரேட்டைக் கூட்டத்தான் இவ்ளோ இலக்கிய ச்ர்வீஸ். கடைசீல நம்ப மேட்டர் வெறும் ‘கரிக்குலம் விட்டேதானா’.

சரி சரி எனக்கு ஏன் பொல்லாப்பு. யார்கிட்டயும் சொல்லலை. தொழில் ரகசியம் காப்பாற்றுதல்தானே சக எழுத்தாளனுக்கு தர்மம். ஜெமோ சார் ‘சிறுமி கொண்டுவந்த மலரைவேற பெரிய மனசு வெச்சி மாஜி எழுத்தாள காலத்துலையும் நூத்துல ஒன்னா சேர்த்ததுக்கு விசுவாசமா இருக்க வேண்டாமா? மூச். யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.

உடை மாற்றி செருப்பணிந்து
தேடினால்
வாசல் இல்லை

டிஸ்கஷனுக்குக் கெளம்பும்போது இப்புடி ஆயிடுச்சா? ஐயையோ. அபசகுனம். அதுசரி மொதல்ல எப்புடி உள்ள வந்தீங்க? எப்பிடியோ வந்துட்டீங்கன்னு வெச்சிக்கணுமா. சரி ஒழியுது விடுங்க? இதுவரை 50,000 பக்கங்கள் எழுதி இருக்கும் ஒரு ரைட்டருக்கு இந்த சலுகை கூட இல்லாட்டி எப்படி? எனக்கு மட்டும் சொல்லுங்க இந்த அக்கவுண்டுல ஆவி குமுத கல்கி அசட்டுக் கதைகளின் பக்கங்களும் சேர்ந்துருக்கா இல்லையா? நம்மைப் போன்ற உன்னதங்களோட காலத்துக்குப் பிறகு எழுதின எல்லாமே இலக்கியம்தான். ஏதோ நம்மால் ஆனது பையனுக்கு பப்ளிகேஷன். 

நாற்புறமும் சுவர்கள்.

அதுதான் ஏற்கென்வே தெரியுமே. ஆரம்பத்துலையே சிறிய அறைன்னு சொன்னீங்களே? நீரால் சூழப்பட்டதுதான் தீவுன்னு கார்ப்பரேசன் இஸ்கூல்லக் கூட சொல்லிக் குடுக்கறாங்களே. அது மாதிரி, செவுர் இருந்தால்தானே அது அறை ஆகும்.

ஜன்னல்கள்.

நிறைய ஜன்னல்கள்னே சொல்லிட்டீங்க. இப்ப வெறும் ஜன்னல்கள் சொல்றீங்க. ஆரம்பத்துல சொன்னது வாசகாளுக்கு மறந்துட்டிருக்குமோங்கற டவுட்ல சொல்றீங்களோ.

ஜெமோ சார் ஸ்மால் அட்வைஸ். மணி சார் கொஞ்சம் முசுடு டைப். ரிப்பீட்டேய் எல்லாம் அவுருக்குப் பிடிக்காது. ரஜினி சார் மட்டும்தான் விதிவிலக்கு. ரஜினி சாரை ஆரம்பத்துலேந்து கடைசி வரைக்கும், எல்லாக் கேரெக்டரும் கிராஸ் பண்ணும் போதெல்லாம் சூர்யா நல்லவன் சூர்யா நல்லவன்னு சொல்றதுக்காகவே தளபதின்னு ஒரு காவியம் எடுத்தாரு. அதை விட்டா நோ ரிப்பீட் வசனம். என்னதான் எலக்கியத்துல நீங்க ஒரு ரஜினின்னாலும், சினிமாவுல சின்னப்புள்ளதான. பாத்து சேஃப்ட்டியா இருந்துக்கோங்க. VRS  வேற குடுத்துட்டீங்க.

வெளிக்காற்று உள்ளே வருகிறது

கேக்க மாட்டேன்கறீங்களே. அதுவும் ஏற்கெனவே சொல்லிட்டிஙக். கோடையில் ஜூடான தென்றல் உள்ள வருதுன்னு சொன்னீங்களே. ஓ இப்ப வெறும் காத்தா. சரி சரி.

எனினும் இதற்குள் என் உடல்சூடு
புழுங்குகிறது.

இருக்காதா பின்னே. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவும் போதும் வகுத்துல நெருப்பில்லே. ரெண்டு படம் அடுத்தடுத்து காலின்னா ’தோஸி’ன்னுடுவானுங்க சினிஃபீல்டுல. பஞ்சு சாருக்கே கல்யாணமாம் கல்யாணம் வரிக்கும் ஆறேழு படம் ஃப்ளாப்பு. நின்னவரைக்கும்தான் நெடுஞ்சுவர். புட்டுக்குனா தெலுங்கு டப்பிங் வசனம் எழுதி ஆவணும். அதுக்கே இப்பல்லாம் ஏக டிமாண்டு.

இந்த ஜன்னல் வழியாக
நான் வீறிட்டலறினால்
எத்தனை பேருக்குக் கேட்கும்?

என்ன சார் எஸ்.ராமகிருஷ்ணன் சார் ஸ்டைல அடாப்ட் பண்ணி இருகீங்க. அவருக்குதான் பாவம் வாக்கியமே அமைக்க வராது. உங்களுக்குமா?

எதுல சார் அழுத்தம் குடுக்க விரும்புறீங்க? ஜன்னலுக்கா? வீறிட்டு அலற்றதுக்கா? அலற்றதுக்காதான் இருக்கும். மரி இன்னா பின்ன ரைட்டர் சார், ஒருத்தரையே நம்பிகிட்டு இருந்தா வேலைக்கு ஆவுமா? எல்லாப் ப்ரொட்யூஸர்ஸுக்கும் டைரக்டர்ஸ்ஸுக்கும் கேக்கணும்னா வீறிட்டு அலறினாதானே முடியும்.

அப்பிடின்னா, கொஞ்சம் இப்புடி மாத்தி, 

நான் வீறிட்டு அலறினால்கூட 
இந்த ஜன்னல் வழியாக 
எத்துனை பேருக்குக் கேட்கும்?

இந்த ரீ ஒர்க் ஓகே இல்லையா? ஜுனூன் மாதிரி இருக்கா. நல்ல செண்டிமெண்ட் சார். ஹிட்டு சீரியல் இல்லியா. இப்புடி எழுதிப் பழகினா இண்டஸ்ட்ரீல சீக்கிறம் முன்னேறலாம். நீங்கதான் எதை மாதிரியும் எழுதி பழகறதுலக் கில்லாடி ஆச்சே. யாரும் கண்டுகாட்டா உங்களுது. எந்த நாதாரியாவுது கண்டுபிடிச்சிட்டா எழுத்துப் பயிற்சி.  

மொதல்ல நிறைய ஜன்னல்கள்னு சொல்லிட்டு இப்ப ஜன்னல்னு சொல்றீங்க. கண்டின்யூட்டி அவுட்டு. உன்னத கலை சினிமால கண்டினியூட்டி எல்லாம் ரொம்ப முக்கியம் சார். பதேர் பாஞாச்லி பாருங்க, ஓ பார்த்துட்டிங்களா, பாட்டி கைகழுவும் போதெல்லாம் செடி மேலையேக் கைகழுவும். செடியும் வளரும் டைம் லேப்ஸ்ல. இன்னா ஒன்னு பசங்க பானைக்குள்ள பூனையப் பாக்கும். கொண்ட்டர் போட்றேன்னு, கேமரா முன்னாடி பானைக் கழுத்தை புடிச்சிகிட்டு, பூனைக்கு ஒரு பாய்ண்ட் ஆஃப் வ்யூ ஷாட் போட்டுட்டிருப்பாரு. மொதல் படம். பாவம். ஒரு ஷாட் தப்பு பரவால்ல விடுங்க.

அதே மாதிரி உங்குளுக்குமா? உங்க ரூம்பே சினுக்கூண்டு. அதுல எங்க இருந்து கத்தினாலும் எல்லா ஜன்னல்கள்லையும்தானே கேக்கும்.

இன்னா ஜெமோ சார், 90 வார்த்தை கவிதைல முன்னுக்குப் பின் பெண்டாகி இவ்ளோ சைடு வாங்குது.

துண்டு வெண்தாளில்
என் துயரை ஒற்றி

இங்க கொஞ்சம் எட்டிப் பாக்கட்டாங்குது சார் கவித. துயரை ஒற்றி.

பிரச்சனை இன்னான்னா உங்க துயர் இன்னா என்கிறதுதான்? 

ரூம்புக்குள்ள நல்லாதான இருக்குறீங்க. உடை மாற்றி நெறைய ட்ரெஸ் இல்லாட்டியும் ஒரு டெஸ்பாட்ச் குமாஸ்தாவுக்கு இருக்கற அளவுக்கு ஏதோ மாத்திக்க இருக்குதுதானே.

சரி அறை கொஞ்சம் சின்னதுதான் அப்பிடீன்னாலும் நிறைய ஜன்னல் வெச்சிக் காதோட்டமா இருக்குது. சுடர் சஞ்சலப்பட்டு அலைஞ்சாலும் நெழல் உழற அளவுக்கு வெளிச்சம் இருக்குது. ஜூடான தென்றல் வருது. நெலா கூட உள்ள வருது. மரத்தோட வாசம் வருது. குளிரும் வருது. தூரத்து லேடியோவுல பாட்டு கேக்குது. கனவு கூட வருது.

இது இன்னாது காணி நிலம் வேண்டும் பராசக்தி அப்ளிகேஷனுக்கு, ஆத்தா உங்குளுக்கு அருள்பாலிச்சி ஓவராவே சாங்க்‌ஷன் ஆயிருக்கு போல தெரியுதே. டாவு மட்டும்தான் மிஸ்ஸிங். நீங்களோ நோ சரக்கு ஆன்மீக ஒழுக்கவாதி. ஸோ ரெஸ்ட்ரிக்ட்ட்.

தெருவுக்கு விட்டெறிகிறேன்

காயம் தொடச்ச காட்டன் பேண்டேஞ் கிளாத்தை, ஜன்னல் வழியா வுட்டுக் கெடாசறா மாதிரி கெடாசிட்டீங்க. கலீஜ் ஃபெல்லோ. போவட்டும்.

இதயத் துடிப்புடன் காத்திருக்கிறேன்.

வெய்ட்டிங் ஃபார் வாட்? பேண்டேஜ் வேஸ்ட் பாத்துட்டு யார்னா எதுனா குடுத்து ஹெல்ப் பண்ண மாட்டாங்களான்னுதானே ஹார்ட் பீட்டிங். இதையேதான் திருவோடுன்னு ஃப்ராங்கா இன்னோண்ணு சொல்லிடுச்சி. உங்குளுக்கு எதுக்கு இவ்ளோ கெளரவ லஜ்ஜை.

அதன்மீது மனித காலடிகள்
இரக்கமின்றி மிதித்துச் செல்கின்றன.

ஓ ஸோ ஸேட். வாட் எ பிட்டி. புவர் கவிஞா. ஈவன் தோஸ் மென் ஹூ ஆர் வாக்கிங் ஆன் த ரோட் ஆர் பேர் ஃபுட்டட்.

கதவு இல்லை என்கிற ஒன்று தவிர இந்தத் தொன்னூறு வார்த்தைகளும்  குப்பையாக யதார்த்த பூமியில் சிதறிக் கிடக்கின்றன்.

வார்த்தைகளில் இருக்கும் துயரம், அவஸ்தை எல்லாம் வார்த்தகளாக மட்டுமே இருக்கின்றன. வார்த்தைகளுக்கு உள்ளே இடையே வெளியே என எங்கேனும் துயர் இருந்திருந்தால் இது கவிதை ஆகி இருந்திருக்கும். மனத்தின் அடக்கவொண்ணா துயர் மட்டுமல்ல எந்த உணர்வும் கெளரவத் தளைகளை உடைத்துக் கொண்டு பீறிட்டால் மட்டுமே கலையாகும். 

சுகுமாரனின் சுவர்கள் கவிதையில் வார்த்தைகளில் சொல்லப்படாமல் ஆனால் கவிதையைப் படித்தவுடன் கைதி போல் நம்மை உணர்கிறோம் அல்லவா அது கவித்துவம். 

இது சுட்ட பழம் இல்லை. சுட்ட மொக்கை. கனிந்த பழத்திலிருந்து சுட்ட மொக்கை. அதுதான் கவித்துவ தீதி. சுட்டது சோபிக்காது.

எது ஆக்கம் எது மொக்கை.

உள்ளக் கொதிப்பு வார்த்தை மீறுவது முன்னது.

உள்ளீடற்ற அனுபவம் திரளாத உப்புப்பெறா வார்த்தைச் சக்கைகள் பின்னது.

பாத்திரப் பாலில் விரல் ஒற்றி வீழும் துளி பாக்டீரியா பக்குவப்பட்டு கெட்டித்தால் தயிர்.

கள்ள மூளைக் கண்ணடித்தால், பாலாக இருந்தது திரித்திரியாகி நீரொதுங்கி சாக்கடைக்கே சமர்ப்பணம்.

விட்டெறிந்த வெண்தாள் ஜன்னலிலிருந்து எவ்வளவு தூரம் சென்றுவிழக்கூடும். அதிகபட்சம் நான்கடி ஐந்தடி. அதுவும் கம்பியுள்ள ஜன்னல் வழி கை நீட்டி அதிகதூரம் வீசவிட முடியாது, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஓரடி இரண்ட்டி. 

கம்பி உள்ள ஜன்னல் என்று கவிதையில் சொல்லவில்லை என நிரக்ஷரகுக்ஷிகள் பஸ் ஓட்டும் (கம்பியில்லாத திறந்த ஜன்னல் எனில கதவில்லை என்றாலும் ஜன்னல்வழி கவிதையும் சேர்ந்தே வெளியேறிவிடலாமே எனவே அது கம்பியுள்ள ஜன்னல் என்றே காண்)

இரண்ட்டி தூரத்தில் ரோடு இருக்கையில் வீறிட்டு அலறினால் கேட்காதோ. இல்லை ஓயாது பேசி அன்று தொண்டை கட்டிவிட்டதோ?

சுகுமாரன் கவிதை, சுவர்களால் மனிதன் நெருக்கப்பட்டு மூச்சுமுட்டும் நிலையில் வாழ நேரினும் ஒரு ஜன்னலாவது அனுமதி வெளியேறி விடுவேன் என்கிறது. அனுமதி என்பதாலேயே அதிகாரத்தின் கீழ் நசுங்கிக் கிடக்கும் அவதி தொனிக்கிறது. நாடோடி வாழும் மக்கள், ட்விட்ரையே ஜன்னலாக்கி தப்பிக்கும் இன்றைய வாழ்வுக்கும் 81ல் எழுதிய கவிதை பிரதிபலிக்கிறது.

ஜெயமோகனால் சுடப்பட்டது பொய்ப் புலம்பலாய், அப்போதுதான் கதவில்லை என்பது தெரியவந்து, இருக்கிற ஜன்னல்களில் ஒன்றில் உதவி கூவி மிதிபடுவதான கவிதை ஃபோட்டோவுக்கு போஸ்கொடுக்கத் துடித்துத் துவளும்
அபத்தக் களஞ்சியம். 

ஆரிஜின். சுகுமாரனின் சுவர்கள் மார்ச் -1981ல் எழுதப்பட்டு சிறுபத்திரிகையில் வெளியானது. 1985ல் கோடைகாலக் குறிப்புகள் என்கிற புத்தக வடிவம் பெற்றது. 

சுடப்பட்ட சுண்டை 1988-89 வாக்கில் ஏதோ ஒரு சிறு பத்திரிகையில் ஜெயமோகனின் கைதி வெளியானது. ஏதோ ஒரு முறை பால பருவம் எனில் பரவாயில்லை. தெற்கிலிருந்து சில கவிதைகள் என்கிற தொகுப்பில் ஜெயமோகனின் 8 கவிதைகளில் ஒன்றாக ஜூன் 1992ல் வயல் வெளியீடாக  வெளியாகி இருக்கிறது.

எந்த அரங்கனால் திருத்தப் படக்கூடும் இந்தப் பிழை. 
முடிந்தால் சிரிக்கச் சொல் ஜெயமோகனை.