Thursday, December 16, 2010

சென்னை உலகத் திரைப்பட விழா 15.12.2010

எல்லா உலகத் திரைப்பட விழாக்களுக்கும் உள்ள ஒரு பொதுவான அம்சம், பார்க்கும் படங்களைவிட,பார்க்கத் தவறும் திரைப்படங்களே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்.


இந்த முறையும் வுட்லண்ட்ஸ் / வுட்லண்ட்ஸ் சொம்ஃபொனி / ஐநாக்ஸ் / ஃபில்ம் சேம்பர் எனப் பிரித்து ஏறக்குறைய ஒரே நேரங்களில் 10.15, 12.00, 3.00 என குறைந்தது ஒன்பது படங்கள் ஒரு நாளைக்கு. இன்று மட்டும் திரையிடப்பட்ட படங்கள் எட்டு. இரண்டு கண் கொண்ட ஒரு மனிதன் அதிகபட்சம் பார்க்க சாத்தியப்படும் படங்கள் காட்சிக்கு ஒன்றாக நான்கு மட்டுமே. அதுவும் அடுத்த படம் ஐநாக்ஸ் நாம் இருப்பது சேம்பரில் என்றால் ஹெலிகாப்டரில் போனால்தான் முழு படம் பார்க்க சாத்தியம். ஒரு நாளில் நான்கைந்து படம் பார்க்கையில் நடுவில் நம்மையும் அறியாமல் தூங்கி விடுவது போல சென்னை ட்ராஃபிக் நெரிசலிலும் பறந்தாக வேண்டும். இந்த பரபரப்பு கூட இல்லையென்றால் அப்புறம் அது என்ன விழா. பரவசமூட்டும் பரபரப்பு.

முதல்கட்ட அட்டவணை 15லிருந்து 19 வரை

இவற்றில் நண்பன் சம்பத் ராஜகோபாலனின் மெய்லை பார்க்கத் தவறியதால் அரக்கப் பரக்க தற்போதைய முகத்தை ஃபோட்டோ பிடித்துக் கொண்டு வுட்லண்ட்ஸ் போய்ச் சேர்ந்தால் எங்கும் இளைஞர்கள். 500 ரூபாய் கொடுத்து அழைப்பாளர் அட்டை கழுத்தில் மாட்டி நிமிர்ந்தால் மணி 10.45. அரை மணி நேர படம் காலி. ஃபில்ம் சேம்பர் போனால் இன்னும் 20 நிமிடம் காலியாகிவிடும். ஃப்ரான்ஸா / ஹங்கேரியா வுட்லண்ட்ஸா / ஸ்ஸிம்ஃபொனியா? யொசிக்கக்கூட அவகாசமில்லை. வுட்லண்ட்ஸ் பெரிய தியேட்டர் உள்ளே ஓடு.
8 TIMES UP Dir:Xabi Molia France / 2009 / 103 Min  
103 நிமிட படத்தில் ஆரம்ப 20 நிமிடம் தவற விட்ட படம் பற்றி என்ன எழுதுவது? ஆனாலும் பல்லாண்டு படம் பார்த்த அனுபவம் காரனமாக ஓரளவு கதை பிடிபட்டது பிறகு வீட்டிற்கு வந்து எழுதும் முன் http://www.chrisknipp.com/writing/viewtopic.php?f=1&t=1442 இதைப் படித்ததில் இன்னமும் கொஞ்சம் தெளிவாயிற்று. ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்கிற அதிர்ஷ்ட்டக் கட்டைகளின் கதை. தொடர்ந்த வேலை இல்லாமற் போவதின் அலைக்கழிப்பு. ஆணும் பெண்ணுமாக வெவ்வேறு பின்புலங்களுடன். விவாகரத்தாகி வார இறுதியில் பையனை பயணம் அழைத்துச் செல்லும் நடு வயதுப் பெண். வாடகைதர வழியின்றி காட்டில் தகரக் கொட்டகையில் வசிக்க நேரும் ஆண். இருவருக்குள்ளும் உண்டாகும் நெருக்கம். பின்னணி இசை என ஒன்று இருக்கிறதா எனத் தெரியாத அளவிற்கு இழைக்கப் பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.  ஃப்ரான்ஸிலும் விசாரித்துவிட்டேன், இறுதி ஒலிக்கலவையில் இயக்குநரும் ஒலி நிபுணரும்தான் உட்காருகிறார்களாம், நந்தலாலா போலவே. இயல்பாக நகரும் கதை. இது எல்லாம் ஃப்ரெஞ்ச் பசங்களுக்கு தண்ணீர் குடிப்பது போல. அதை தாண்டி பெரிதாய்க் கவரவில்லை.
ONE WEEK / Dir: Michael McGowan / Canada /2008 / 94 Min
ஃபில்ம் சேம்பரில் 12.00 மணிக்கு நல்ல படம் என்று குறுஞ்செய்தி வந்தது. வண்டி எடு ஓடு. அங்கே போன பிறகுதான் தெரிந்த்து டிஜிட்டல் திரையிடல். அடக் கண்றாவியே! அசலின் நிறமிழந்த நீர்வண்ண ஓவியம் போல் பெரிய திரையில் பார்ப்பதை விட வீட்டில் சின்னத் திரையானாலும் இன்னும் துல்லியமாகவும் நிறுத்தி நிறுத்தியும் பார்க்கலாமே என அங்கலாய்ப்பில் ONE WEEK (2008) கானடா படம் பார்க்கத் தொடங்கினால், அட நம்ப நந்தலாலா மாதிரியே ரோடு படம். விலைக்கு வந்த பழைய மோட்டர் சைக்கிளில் பயணம் போகும் இளைஞன்.

ஒரே வித்தியாசம் பையனுக்கு பதில் மோட்டர் பைக். பயணத்திற்கான காரணம்?

கேன்ஸர் காரணமாக இன்னும் ஓரிரு வருடங்கள்தான் வாழ்வு என ஜோசியம் சொல்கிறார் மருத்துவர். கேட்டுக்கொள்ளும் கதையின் நாயகன்,  எழுத்தாளனாகக் கனவு கண்டுகொண்டிருப்பவன். அப்போதுதான் திருமணம் நிச்சயமாகி இருப்பவன். எதிர்கால மனைவியிடம் அவ்வப்போது தொலை பேசியில் தொடர்பில் இருந்தபடி நீண்ட இலக்கற்ற பயணம். பயணத்தில் எதிர்கொள்ளும் யதார்த்த நிகழ்ச்சிகள் தரும் அனுபவங்கள். உயர் கருத்து ஆங்கில ஒன்லைனர் வசனங்களை சிலாகிப்பவர்கள் அதிகம் இன்புறலாம். சாதாரண ஆங்கிலப் பட ஆர்வலர்கள் அசிரத்தையாக இதைப் படித்து வ்ட்டு டிவிடியில் இந்தப் பட்த்தைப் பார்த்து வைத்து என்னைக் கரித்துக் கொட்டினால் அது அவர்களுக்கே மற்றும் அவர்கள் பரம்பரைக்கே.
ஏற்கெனவே இக்கிரு என்கிற அக்கிரா குரசோவாவின் 1952 காவியம் பார்த்திருப்பதால் அடிப்படைக் காரணம் தவிர அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனினும் இந்தப் படம் என்னை மூளையால் மட்டுமே ஈர்த்தது.
BLACK LAMB / Dir: Roman Khroushch / Russia / 2010 / 87 Min
அடுத்து 3.00 மணிக்கு வுட்லண்ட்ஸ் ஸிம்ஃபொனியில் BLACK LAMB (2009-10) ருஷ்யப் படம். குடியிருக்கும் வீடு எத்துனை விதமாக ஏமாற்றி பேராசையால் அபகரிக்க முயற்சிக்கப் படுகிறது. அதை அந்தக் குடும்பத்து நபர்கள் ‘ஒவ்வொவ்வொன்றும் ஒருவிதம்’ என இருப்பவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கிறுக்குத்தனமான காட்சிப்படுத்தலில் இருந்து இம்மியும் வழுவாமல் முழு நீள கருப்பு நகைச்சுவையாக நகரும் படம். நல்ல காமெடி.

6.00 மணிக்கு தோற்கருவிகள் ஆரவாரமாக முழங்கத் தொடங்கின. பழைய போஸ்டருக்கு ரீப்ரிண்ட் போட்டது போல் பளபளக்க முயற்சித்த நடிகைகள் வாயிலில் அதி முக்கிய பிரமுகர்கலை வரவேற்க ஆயத்தமாயினர். நாம் பார்க்க வந்தது படங்களை என்பதால் இந்த களேபரத்திலிருந்து தப்பினோம் பிழைத்தோமென மாடிக்கு ஓடினோம். வெளிச்சம் படாத மாடி வராந்தாவில் பழைய நண்பர்களுடன் ஆரவாரமான விவாதம். விழாக்களைவிட வெளியில்தான் களைகட்டும். எல்லோருமே இவ்வகை விழாக்களில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.  புதியவர்களின் இடமில்லையே என்கிற பதட்டத்தைப் பெச்சுக்கு  இடையிடையே வேடிக்கையாகப் பார்க்கப் பட்டது. எப்போதும், ஜிகினாக்களும் அழைப்பிதழ் பிரமுக சமூகமும் விழா முடிந்ததும் வெளிநடப்பு செய்துவிடும். என்றான் விகடனின் ராஜேந்திரன். விசுவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், குறைந்தது 40% இருக்கைகள் காலியாகிவிடும் இதுவே தில்லி என்றால் 60% காலி எனச்சொல்லி படோடோபமாகச் சிரித்தார். விழா முடிந்து, பின்னால் நின்ற தட்டி எடுக்கப் படுகையில் உள்ளே போய் பொக்கை வாய்ப் பிரதேசங்களில் மூலைக் கொருவராய் சிதறி பொறுத்திக் கொண்டோம்.

இன்றைய தினத்தின் சிறந்த படத்தைப் பார்க்க லபித்தது.
SOUL KITCHEN / Dir: Fatith Akin / Germany / 2009 / 99 Min
கல்லூரிப் பருவத்து நண்பன் நாகராஜ் என்கிற இயக்குநர் நாகா எனக்கு நான்கு இருக்கை தள்ளி இருப்பதைப் பார்க்க நேர்ந்து. அடடே பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று என்றபடி பக்கத்திலிருந்தவர் இசைய பக்கத்து இருக்கைக்கு வந்தான். படம் முடிந்ததும் தியேட்டரே கைதட்டி ஆரவாரித்தது.  நாகாவிடம் கேட்டேன். ஃபீல் குட் ஃபில்ம்ஸுக்கு அழிவே கிடையாதா? சிரித்தபடி ஆமெனத் தலையாட்டினான்.

நல்ல விஷயத்தின் அடையாளமாக முன்னிருத்தப்படும் குட்டி கேளிக்கை உணவு விடுதி நடத்தும் நாயகன், அல்லல் பட்டு காதலியை இழந்து, உடல் உபாதைகளுக்கு உள்ளாகி, இழுத்திழுத்து நடந்தபடி இருக்க, அவனோடு வந்து சேர்பவர்களும் அவதிப்பட நேர்ந்து, திரும்பத்திரும்ப தொல்வியை சந்தித்துக் கொண்டிருக்கையில் பணத்திமிர் எப்படி வெல்ல்லப்படுகிறது என்பதுதான் படம்.

இப்படி எழுதுவதைவிடவும் இந்தப் படத்திற்கு ஒருவன் எழுத்தில் இழைக்கக்கூடிய அநீதி வேறு எதுவுமாக இருக்காது. அருமையான ஹாஸ்யம். என்னென்ன விதமான பாத்திரங்கள். கூடவே கொஞ்சம் போல அப்பட்ட செக்ஸ் அதுவும் கூட தாளகதியோடு இசைந்த காமெடியாக.

பாட்டுப் போட்டிகளில் ஸ்ருதி ஸ்ருதி என்று அடித்துக் கொள்ளும் போது என்ன இழவு இந்த ஸ்ருதி என்பது. அது எங்கே இருந்து கொண்டு இருந்தது. இப்போது அது எங்கே போய்த் தொலைந்தது என்று நடுவர்கள் இநத்க் காய்ச்சு காய்ச்சுகிறார்கள். குரல் சிராய்த்துப் பிசிறிய இடத்திலா? வழுக்கிய இடத்திலா? நன்றாகத்தானே பாடினாள்/னான் இந்த நடுவர்கள் ஏன்தான் இப்படிக் கிராதகர்களாக இருக்கிறார்களோ எனக் கடுப்பாகும். காரணம் கர்னாடக இசையின் உள் நுட்பங்கள் தெரியாது. தொண்டை கொடுக்கத் தவறிய கபோதிக் கடவுள் காதையாவது கொடுத்தானே என்றுதான் கும்பிட்டுக் காலம் தள்ளியாகிறது.

ஆனால் எழுத்தில் ஒரு வாக்கியத்தில் அழுத்தம் மாறி வார்த்தை விழ எழுதி இருப்பதைப் படிக்க நேர்ந்தால் பற்றிக்கொண்டு வரும். மொக்கைச்சாமிகளின் துல்லியமற்ற சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள், ஒரு வாக்கியத்திற்குள்ளாகவே திரும்ப வந்து முட்டும் வார்த்தைப் பிரயோக மொழி வறட்சிகள், மனதிற்குள் படித்தாலும் பல்லுடைக்கும் சொற்கள், மோஸ்தருக்காக பயன்படுத்தப் பட்டிருக்கும் உயர் வார்த்தைகள், கண் நிறைக்கவே தூவப்பட்டிருக்கும் மிகுநெகிழ்ச் சொற்கள் என கரிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தக் குறைகள் களையப்பட்ட எழுத்து இலக்கியமாகிவிடுமா? என்கிற கேள்விக்கு உண்மையான பதில், உத்திரவாதம் இல்லை என்பதுதான். அதேசமயம் கால்கள் கட்டப்படாத பறவைகளே லகுவாக மேலெழும்பும் வாய்ப்பு கூடப் பெற்றவை என்பதும் மறுக்க இயலாத மெய்மை. இறக்கை இல்லாமல் பறக்க இயலாது என்பது போலவே, இறக்கை மட்டுமே பறக்க வைத்து விடுவதில்லை என்பதும் உண்மை.

இந்த சினிமாவில் வரும் காட்சிகள் ஒன்றுகூட தேவையில்லாதது என்று சொல்ல முடியாது. இன்மையை தோல்வியை வறட்டுப் புன்னகையுடன் எவன் சொன்னாலும் எங்கிருந்தோ ஒரு வாஞ்சை வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது. எங்கிருந்தும் வரவில்லை. நாம் அறியாமல் நம்மிடமிருந்துதான் எடுத்து நீட்டிக்கப் பட்டிருக்கிறது அந்தப் பிணைப்பு. நம் ஆதுரத்தை இயக்குநர் தன் பாத்திரங்களின்மேல் வழியவிட்டு நம்மை அவற்றின் ஒரு பகுதியாக்கும் ஜாலத்தைப் புரிந்துவிடுகிறான். அந்தப் கதாபாத்திரம் வெல்கையில், படம் பார்க்கிறோம் என்பதை மறந்து, நாம் வெல்வதாக உணர்கிறோம்.

படத்தின் தொடக்கத்தில் கேளிக்கை உணவு விடுதி நன்கு லாபகரமாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதைத்தான் அடடா எவ்வளவு நீளமான வளைவு நெளிவு கொண்ட ஷாட்டில் மேஜை மேஜையாக மேலும் கீழுமாக கேமரா பயணித்து ஆர்டர் எடுத்தபடி சமையற்கட்டிற்குப் போய்ச் சேருகிறது.

எப்படி உயர்ந்த இலக்கியத்தில் ஒரு வாக்கியம் கூட காரணமின்றி சும்மா எழுதப் படுவதில்லையோ அது போலத்தான் நல்ல சினிமாவின் ஷாட்டுகள்.

இணையத்து நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கக்கூடும் என்பதற்காக. SOUL KITCHEN (2009) டிவிடிக்கு ஆர்டர் கொடுத்தாயிற்று. நல்ல படைப்பிறகு நாம் செய்யக் கூடிய கொண்டாட்டம் நாலு பேரைக் கையைப் பிடித்தேனும் இழுத்துக் கொண்டுபோய் திருட்டு டிவிடியாவது பார்க்க வைப்பதுதான். சினிமாக் கடவுள் மன்னிக்கக் கடவது.