Friday, December 17, 2010

சென்னை உலக திரைப்பட விழா 16.12.2010

உலக திரைப்பட விழாவினை உலகத்தர திரைப்படங்களின் விழாவாக்க் கருதிக் கொள்வது நமது அறியாமையையே குறிக்கும்.

ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிபேசும் நாடுகளிலும் கூட வருதகறிகளை வெட்கப்பட வைக்கும் படங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை விழாவிற்குத் திரையிடத் தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் விழாக் குழுவின் தரத்தைப் பொருத்தே அமைகிறது.

உலக திரைப்பட விழாவில் உயர்ந்த தரமான ஆக்கங்களே காட்டப்படக்கூடும் என்பதும்கூட ஒருவித சுய அனுபவமற்ற மூட நம்பிக்கையே.


உள்ளூரில் விலைபோகாத ஒரே காரணத்தால் மொக்கைகளும் கலைப் பேழைகளாக முண்டியடித்து முன்னால் வந்து நிற்பவையும் உண்டு. நமக்கு நன்கு புரிகிற மொழியில் இல்லை ஆங்கில சப் டைட்டிலில் வருவதானாலேயெ ஆஹா அருமை எனத் தோற்றப் பிழையை ஏற்படுத்த வல்லவைகளும் உண்டு. அது போன்ற விபத்துகள் அவற்றின் தரம் குறிப்பதைக் காட்டிலும் நம் தரமின்மையையேக் குறிக்கின்றன.

உலக திரைப்பட விழாவிற்கு வேலைமெனக்கெட்டுப் பார்க்க வருபவர்கள் எல்லோருக்கும் உன்னத படங்கள் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்று எண்ணுவதும் கூட பாமர நினைப்புதான்.

கலை பார்க்க வருபவன் கதை திருடப்பார்க்க வருபவன் சதையும் பார்க்க வருபவன் சதை மட்டுமே பார்க்க வருபவன் சதை இருக்காது எனத் தெரிந்தால் பார்க்கவே வராதவன் என அடுக்கிக் கொண்டே போகலாம் முடிவில்லாமல். ”ஃபில்ம் சொசைட்டி நெம்பர்னா சென்ஸார் இல்லாமப் படம் பாக்கலாம் இல்லையா” என ஈரம் தெறிக்க இளிப்பவர்கள் அநேகர். அதற்காகத் தீவிர சினிமாக் காதலன் ஸீன் வரும் போது கண்ணை மூடிக்கொள்வான் என்பது அல்ல. வராதாவென வாய்பிளந்து காத்திருக்க மாட்டான் அவ்வளவுதான். 

10 மணி ஆட்டம் ஃபில்ம் சேம்பரில் 

Where the Truth Lies / Dir: Atom Egoyan / Canada / 2005 / 79 Min

கதை விரும்பிகள் கவனத்திற்கு, இரண்டு பங்குதார நண்பர்கள், தம் வியாபாரம் தாண்டி, போலியோ உதவி செய்வதனால் 1957ல் புகழ்பெறுகிறார்கள். புகழ் அளித்த பொது வாழ்வு சேவையின் கெளரவ முகத்திற்கு அடியில் அவர்களின் தனி வாழ்க்கையில் வெளியுலகிலிருந்து மறைக்க விரும்பும் போதைப் பழக்கங்களும், பாலியல் துய்ப்பு ரகசியமும் இருக்கிறது. அவை அம்பலமாக்கப் படும் என அச்சுறுத்தும் பெண்ணின் அகால மரணம் உறைந்திருக்கிறது. கொன்றது யார் என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் இல்லை இந்தப் படம். 15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள். பிரிந்த நண்பர்கள். ஒருவரின் வாழ்க்கை வரலாறு எழுத கொழுத்த பணத்துடன் கிடைத்த ஒரு வேலை என நினைக்காமல் உண்மை அறிய பேச்சுக்களில் பின்னோக்கிச் செல்ல முற்படும் ஒரு எழுத்தாளப் பெண். இரண்டு நண்பர்களில் ஒருவனுடன் வரும் காதல்.  ஒவ்வொருவருக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. உண்மை மெய்யாலும் இவற்றிற்கு இடையில் அல்லது இவை எல்லாவற்றிலுமாக கதா பாத்திரங்களே அறியாத வண்ணம் எங்கோ ஒளிந்து கொண்டு இருக்கிறது.

படம் பார்த்துவிட்டுப் படிக்க http://en.wikipedia.org/wiki/Where_the_Truth_Lies

12 மணி ஆட்டம்

06/05 Sixth of May Trailer / Dir: Theo Van Gogh / The Netherlands / 2004 / 114 Min

சும்மா ஒரு பெண்னை பைக் முன்னால் நிற்கவைத்து போட்டோவாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான் ஒரு புகைப்படக் கலைஞன். அவன் வண்டியை இடித்து விட்டுப் பறக்கிறது ஒரு கார். அதையும் ஃபோட்டோ எடுக்கிறான். பிறகுதான் தெரிய வருகிறது, எதிர்க்கட்சியின் தலைவர் அவன் இருந்த இடத்தில்தான் கொல்லப்பட்டிருக்கிறார்.ஃபோட்டோவில் பந்திந்த முகத்திற்கு உரியவன் காரோடு ஆற்றில் கிடக்கிறான்.அதை ஃபோட்டோ எடுக்கையில் பறிமுதல் செய்யப் படுகிறது. அவன் எடுத்த ஃபொட்டோக்களில் வெவ்வேறு ஆட்கள் கொலை நடந்த சமயத்தில் அந்த வட்டாரத்தில் இருந்திருக்கிறார்கள். இது என்னவெனத் தெரிந்து கொள்ள,  பின்தொடரத் தொடங்குகிறான். எல்லோரும் எல்லோரையும் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர்க்கும் அவரவர் நியாயம். கொள்கையின் பெயரால், நாட்டின் நல்வாழ்வின், எதிர்கலத்தின், பசுமையின் பெயரால், கொலை செய்வதில் கூட தரப்பு சார்ந்த நியாயங்கள் இருக்கின்றன.

மிகச் சிறப்பாக தயாரிக்கப் பட்டுள்ள படம். 
ஆனால் இதன் ஆணிவேராக Z என்கிற காவியம் இருக்கிறது. அதிலும் ஒரு எதிர்கட்சித் தலைவர் திட்டமிட்டுக் கொல்லப் படுகிறார். அதிலும் ஒரு புகைப்படக் கலைஞனே உண்மை தேடிச் செல்கிறான். காட்சி ஒற்றுமைகள் இரண்டிற்கும் இடையில் கடுகளவுகூடக் கிடையாது. இரண்டிற்கும் இடையில் கடந்திருக்கும் வருடங்களோ 40.1969ல் எடுக்கப்பட்ட Z படத்தின் - 40வது ஆண்டு Trailer 

காலத்தின் முதுமை கவியாத காவியம் Z (அவர் வாழ்கிறார்).

2.30 மணிக்கு நாரத கான சபா சங்கீத சீசன் ஞானாம்பிகாவில் மதிய உணவு உண்டுவிட்டு செம லேட்டாகப் போயும் வுட்லண்ட்ஸும் சிம்ஃபொனியும் உள்ளே வருவியா படவா என கடித்து விரட்ட ஐநாக்ஸ் போனதில்லையே என்று பறந்தேன். அடுத்த படம் 4.30. பராக்கு பார்த்துப் பொழுது கழித்தாக வேண்டும். விழாக்களின் சுவாரஸ்யம் சுற்றி உதிர்ந்து கிடக்கும் தூள் பக்கோடாக்களில்தான் இருக்கிறது.

நேற்றைய பதிவை வலையேற்றும் போது விடியற்காலை மணி 5 ஆகிவிட்டது. 8.30 க்கு எழுந்ததில் இருந்து, பின் தொடர்ந்து கொண்டிருந்த தூக்கத்தை ஐநாக்ஸின் அருமையான A/C இதத்தில் தாராளமாகக் கட்டவிழ்க்க வசதியாக எடுக்கப் பட்டிருந்த கொலம்பிய படம் GRAB TRAP. நத்தையடிக்கும் ஒரே காரணத்தினாலேயே நல்ல படமாகத் தேர்வு செய்யப் பட்டது போலும். படம் ஆரம்பத்தில் அட எனப் பார்க்க வைத்தது உண்மைதான். காரணம், அசையாத ஷாட்களில் மனிதர்கள் வந்து போகிறார்கள். சரி அடுத்து என்ன என்றால் அசைந்து கொடுப்பேனா என்றது படம். சர்தான் போடா என்று ஹாயாகத் தூங்கி விட்டேன். அவ்வப்போது விழிப்பு வந்து பார்த்த போதும் அந்தக் கடற்கரைச் சிற்றூர் திரையில் உறைந்து கிடந்தது.

வுட்லண்ட்ஸுக்குத் திரும்ப 7.15 ஆட்டத்திற்கு வந்து THE STORM IN MY HEART  என்கிற நார்வே படம் பார்க்க செட்டில் ஆனால் டிவிடி தேவலாம் போல ஃபிலிம் ப்ரொஜெக்‌ஷனிலேயே தீய்ந்து போன படம். ஒரு குட்டிக் கப்பலின் கீழ் தளத்தில் இருந்து கடும் வெயிலைத் திட்டியபடி துப்பாக்கியுடன் மேலே வரும் கிழவன் சூரியனைக் குறி பார்த்து சுடுகிறான். படம் தொடங்கிய பத்து நிமிடத்திற்குள் மூன்றாவது முறையாக அவன் சுட முனைகையில் பால்கனியிலிருந்து முதல் ஆள் மூச்சா வருவது போல் அவசரமாய் எழுந்தார். ஏகப்பட்ட பேர் உபாதைக்கு உட்பட்டவர்களாய் எழுந்து சாரி சாரியாக வெளியேறத் தொடங்கினர். நானும் வாசல் பார்க்கக் கிளம்பினேன். கதவின் விளிம்பில் ஒரு கூட்டம் திடுப்பென நின்று திரும்பிப் பார்த்தது. என்ன என நானும் திரும்பி திரையைப் பார்த்தேன். ஒரு யுவனும் யுவதியும் நாகரிகமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் முழு முக்தியை தரிசிக்க சாத்தியம் தென்படாததால் சிம்ஃபொனியிலாவது ஏழர மணி ஆட்டம் நன்றாக இருக்கட்டும் என இஷ்ட தெய்வத்தை வேண்டியபடி சின்ன தியேட்டருக்கு முண்டியடித்தது கூட்டம்.

FOR 80 DAYS என்கிற ஸ்பெய்ன் படம். 

பகல் வெளிச்சத்தில் வெளுத்துப் போன கார் ஓடிக் கொண்டிருக்க அதில் ஒரு நடுத்தர வயதுப் பெண் முகம் கோணி அழுது கொண்டிருந்தாள். அழுது அழுது காரோட்டும் கணவனைக் கொஞ்சப் போக டமால் என இன்னொரு கார்மேல் மோதி விபத்து. அவள் இறக்க அவன் கோமாவிற்குப் போகிறான். அவள் அவனுக்குத் தொடுப்பு என்பது பிற்பாடு தெரிய வந்த உபரிச் செய்தி.

வெளுத்த பனியிரவில் வீட்டுக்கு வெளியில் இரண்டு பெருசுகள் உட்கார்ந்து வெறித்தபடி இருக்க ஃபோன் அடிக்கிறது போய் எடுக்க விபத்துத் தகவல். 

ஹாஸ்பிடலில் கிழவி உள் நுழைந்து கோமாவில் இருப்பவர் பக்கத்தில் போய் அமர அங்கு ஏற்கெனவே ஒரு பெண் பெருசு கோமாவில் இருப்பவர்களுக்கு கேக்கில் நடப்பட்ட மெழுகு வத்தி ஊதி பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  நம்மூர் போலவே சிரிக்கத் தொடங்கி கடகடத்துச் சிரித்து மெள்ள மெள்ள அழுகையாக்கி நடித்துத் தள்ளிக்கொண்டிருந்தது. 

ஸ்பெய்னானா என்ன கொய்னானா என்ன படத்தின் மூஞ்சே சரியில்லையே என பதற்றம் கூடத் தொடங்கியது.

போதாத குறைக்கு 1ஆம் நாள் 2ஆம் நாள் 3ஆம் நாள் என கார்டு போட்டு கிழங்கள் நிலத்தில் கிழங்கு வேறு பிடுங்கிக் கொண்டிருந்தன அவ்வப்போது.  படத்தின் பெயர் வேறு 80 நாள் என்பது நினைவிற்கு வர BP எகிறத் தொடங்கி இருந்தது.

மறு நாள் ஹாஸ்பிடலில் கோமாவில் கிடக்கும் பக்கத்துப் பக்கத்து நோயாளிகளைப் பார்க்க வந்ததில் ஒரு கிழம் ஸ்வெட்டர் பின்ன மற்றது என்ன எனக் கேட்க தாங்கள் பால்யகால சிநேகிதங்கள் எனத் தெரிந்து கொண்டு ஒன்றை ஒன்று ஐகோ ஆ ஐகோ ஆ (O may God ஆம்) என ஒன்றையொன்று ஆலிங்கனிக்க நாலா திசையிலிருந்தும் நாற்காலிகளில் இருந்து பிடுங்கப்பட்ட கிழங்கென மக்கள் எழுந்து வாசலுக்காய் விரைந்தனர். 

விரைந்து வெளியே வந்து பார்த்தால் மழை. மழை வெறிக்க மழையை வெறித்தபடி காத்திருப்பது சினிமா உண்டாக்கிய வெறியைத் தணிப்பதாய் இருந்தது.