Saturday, December 18, 2010

சென்னை உலக திரைப்பட விழா 17.12.2010


10.30 மணிக் காட்சி
தேவதை போலொரு இத்தாலியச் சிறுமியின் பார்வையில் இரண்டாம் உலகப் போர் மனிதர்கள்மேல் செலுத்திய கொடூரங்கள். நேரடியாக யதார்த்த பாணியில் கதை சொல்லும் படும். இத்தாலியின் குக்கிராமத்தின் மேல் நாஜிப் படையினரின் தாக்குதல்கள். உள்நாட்டு இளைஞர்களின் எதிர்த் தாக்குதல்கள்.
THE MAN WHO WILL COME / Dir: Giorgio Diritti / Itly / 2009 / 115 Min
கையில் வைத்திருந்த குழந்தை இறந்ததிலிருந்து அவள் பேசுவதில்லை. சிறுமியின் தாய்க்கு இன்னொரு குழந்தை பிறக்கிறது, அதைக் கூடையில் தூக்கிக் கொண்டு ஒளித்து மறைத்துப் போர் முடியும் வரை காப்பாற்றுகிறாள். நல்ல படம். ஆனால் இது போல் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன என்பதும் ஒரு விஷயம். இந்தப் படம் பற்றிய விரிவான பார்வைக்கு இது உபயோகப் படலாம் http://www.screendaily.com/reviews/the-man-who-will-come-luomo-che-verra/5007240.article
12.30 மணிக் காட்சி
பத்து வயது போலந்து பையனின் பார்வையில் இரண்டாம் உலகப் போர். முந்தைய படம் போலல்லாது இடையிடையே படிமங்களாக ஷாட்டுகள் வரும் படம். 
VENICE / Dir: Jan Jakub Kolski / Poland / 2010 / 110 Min
இந்தப் படம் மாய யதார்த்தவாத நாவலை அடிப்படையாகக் கொண்டது. Venice is based on the novel by the venerated Polish novelist Włodzimierz Odojewski, often mentioned as the next candidate for the Nobel Prize in literature.  மேலதிகத் தகவலுக்கு இது உதவும் http://www.filmneweurope.com/production/news/gdynia-polish-film-festival-competition-spotlight-venice 


இந்த நாவலாசிரியரின் நாவல்களைப் ’பற்றி’ எழுதி இருக்கும் புத்தகங்களை இணைய இலக்கியவாதிகள் சீக்கிரம் படித்துக் கட்டுரைகள் எழுதி ரெக்கார்ட் செய்து கொள்ளவும். அப்போதுதான் என்றைக்கேனும் ஒரு நாள் இவருக்கு நோபல் பரிசு கிடைக்கையில் இவரைப் பற்றி இத்துனை வருஷங்களாக நான் தொடர்ந்து எழுதி வந்தது நோபல் கமிட்டிக்குத் தெரியவந்து இவ்ருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது எனப் பதிவெழுதிக் கொள்ள ஏதுவாக இருக்கும். ஒழிந்தால் அவர் எழுதிய புத்தகங்களையும் புரட்டிப் பார்க்கலாம். இந்த எழுத்தாளரின் பேரை வாய்விட்டுப் படிக்க முயற்சிப்பது நாக்கு சுளுக்கிக் கொள்ளும் விபரீதத்தில் முடியலாம். கடைசிப் பெயர் கொஞ்சம் பரவாயில்லை ஒடச்சகள்ளை பொல சொல்லிக் கொள்ளலாம்.


படத்தின் காட்சிப்படுத்தல் பல இடங்களில் அசத்தியது. இடையிடையில் தூக்கம் சொக்கியதில் மாய யதார்த்தவாதம் கொஞ்சம் தூக்கலான அர்த்தங்களையும் கொடுத்திருக்கலாம்.

2.45 மணிக் காட்சி
இந்தப் படம் வுட்லண்ட்ஸில் என்பதாலும் அடுத்த படம் சிம்ஃபொனியில் 3.00 மணிக்கு என்பதாலும் முதலில் இதில் நுழைந்தேன். பெரும்பாலான படங்களின் மூஞ்சி முதல் பத்து நிமிடங்களில் தெரிந்துவிடும். ஆகவே அதை உபயோகித்துக் கொள்ளும் சாதுர்யமும் தொடர் பழக்கத்தில் வந்துவிடும். சரியில்லாவிட்டால் கபால்னு பக்கத்துலத் தாவு என்பது தாரக மந்திரம்.

ஜப்பான் படம் நம்மைப் போலவே ஓலு ஓலுனுக் கத்திக் கொண்டு கிடப்பான்கள் என்பதாலேயே முடிந்தவரை சாய்சில் விட்டுவிடுவேன். போதாக் குறைக்கு பின்னணி இசையிலும் நந்தலாலா எஃபெக்டோடு காது கிழிய இருந்தது. மேலும் ஆரம்பத்தில் வரும் ஏகப்பட்ட மீன் தொட்டிகள் அடுக்கப் பட்ட கடையின் நீளமான காட்சி வேறு கட்டுரைப் படமோ என பயமுறுத்தவே சிம்ஃபொனியின் ஸ்பெய்னின் STIGMATA விற்குத் தாவினேன்.

கருப்பு வெள்ளைப் படத்தில் கட்டுமஸ்த்தான தாடிக்காரன் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்துவிட்டு மெல்ல தலை நிமிர்த்தி அசுவாரசியமாகப் பாத்திரம் எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனதைப் பார்த்ததும் ஜம்ப் கட்டில் எகிறி வுட்லண்ட்ஸின் இருட்டில் இடம்தேடி செட்டில் ஆனேன்.

கொஞ்ச நேரத்தில் அடடா நல்ல வேளை சரியான படத்திற்குதான் வந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் நேரம் ஆனதும் ஐயையோ சர்ர்ரியான படத்திற்குதான் வந்திருக்கிறோம் எனத் தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் இதுதான் இன்றைய தினத்தின் சிறந்த படம் எனத் தோன்றியது. அடுத்த சில காட்சிகளில் இவன் பெரிய மாஸ்டர் இந்த விழாவின் ஆகச் சிறந்த படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்ற உனர்வு ஏற்பட்டது. பக்கத்து சீட்டுக்காரர் நான் யாரிடமோ நேற்றுப் பேசியதைக் கேட்டு ப்ளாக் பற்றிச் சொல்லவும் உற்சாகத்துடன் இந்த சீன் அந்த சீனோடு சேர்த்துப் பாருங்கள் என தழைந்த குரலில் பிரமித்த பாராட்டோடு பார்க்கத் தொடங்கினோம். கிழ நாயகனின் நடிப்பை சிலாகிக்கத் தொடங்கி சொக்கத் தொடங்கினோம். இதன் பிறகு தொடர்ந்த மானாவாரியான குத்துக் கொலைகளில் ங்கோத்தா என்று கடுப்பாகி முக்கால் மணிநேரம் முன்னால் முடித்திருந்தால், ஏற்கெனவே பார்த்த திரைக் கதைதான் எனினும் நல்ல படமாகவாவது இருந்திருக்கும் எனத் தோன்றியது.

அடக்கம் அல்ல அடுத்தவன் மேல் ஆக்கிரமிப்பே சிறந்த வழி என்பதாக போதித்தபடி கொல்லப் பட்ட உடல்களை வாழை மரத்தை வகுந்து எடுப்பது போல ஹ்யூமன் 65 ஆக்கும் படம். கிட்டத்தட்ட படத்தில் வரும் ஐந்து முக்கிய கதா பாத்திரங்கள் ஹ்யூமன் லாலிபப் போல பிளாஸ்டிக் பைக்குள் போகிறார்கள்.

எலும்புகள் ட்ரம்மில் எரித்து மாவு போல் ஆக்கப் பட்டு ஏதோ தேசத்தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே போல ஆற்றுப் பாலத்தில் காற்றில் தூவப் படுகின்றன.
COLD FISH / Dir: Sono Sion / Japan / 2010 / 144 Min
கன்னாபின்னாவென செக்ஸும் குரூரமும் தேகத்தின் மீது வாதை யாகுமளவிற்குப் போய் கடைசியில் அட சனியனே என்பதாக முடிகிறது.

படம் பார்த்தவுடன் அதற்குப் பிறகு தோன்றிய எண்ணம் எல்லாம் கூட இதுதான். ஆனால் இன்றைய தினத்தின் ஐந்து படங்களும் பார்த்த பிறகு இப்போது இதை எழுதிக் கொண்டு இருக்கையில் இந்த அதிகாலை 4.15 மணிக்கு தனிப்பட்ட முறையில் என் சாய்ஸாக இல்லாவிட்டாலும் அதி முக்கியமான படம் என்றே தோன்றுகிறது. இது ஒரு நிஜக் கதை. இதையும் படித்துப் பாருங்கள் http://japancinema.net/2010/10/04/fantastic-fest-2010-cold-fish-review/ பலஹீன ஹிருதயர்கள் படத்தின் பேரைக் கண்டிப்பாக சரியாகப் படித்து நினைவில் நிறுத்தவும், தப்பித் தவறிக்கூட இதைப் பார்த்துவிடாமல் இருக்க வேண்டி.

5 மணிக் காட்சி
பழைய பையன்கள். படம் பெயரே சரியில்லையே. கிழடுகள் கால்பந்துக் குழு. கிழிஞ்சிது கிருஷ்ணகிரி என நினைத்து டென்மார்க்கு ஏமாத்திடுவானா என்ன என்று துளிர் நம்பிக்கை வைத்து உட்கார்ந்தால், இன்றைய தினத்தின் மிகச்சிறந்த படம்.

ரோடு படமங்கள் பெரும்பாலும் தப்பாவதில்லை. நெடுஞ்சாலைக் குறுந்திருடனான இளைஞனுக்கும், கால்பந்து பெருசு ஒன்றுக்கும், இடையில் வந்து சேரும் கவர்ச்சிகர இளம் தாய்க்கும் இடையில் ஏற்படும் உறவு பிரிவு காதல் ஊடல் முறிவு சுப முடிவு என அநாயாசமாக அள்ளிக்கொண்டு போகிற படம்.
OLD BOYS / Dir: Nikolaj Steen / Denmark / 2009 / 97 Min
ஒரு கலையாக்கம் சிறந்த உனர்வெழுச்சியைக் கொடுக்கிற ஆகச்சிறந்த கலைப்படைப்பாய் உயர்வதற்கு சிந்தனை தத்துவம் சித்தாந்தம் வேதாந்தம் ஆன்மீகம் கோட்பாடு என எந்த ஜாக்கியும் தேவையில்லை என்பதைத் திரும்பவும் சொல்லியபடி நெடுநாள் நினைவில் நிற்கும் படம். எல்லாமே சாதாரணமாக நடக்கிற, பார்த்த விஷயங்கள்தானே, அப்புறம் ஏன் இந்தப் படம் இப்படி பிடிபிடி என பிடிக்கிறது என படம் பார்த்துவிட்டு யோசிக்கத் தலைப்பட்டால் கலைவெற்றியின் ஆதாரக் கூறுகள் பிடிபடலாம்.

7.15 மணிக் காட்சி
வரலாற்றுப் படங்களுக்கு என தனி மெளசு உண்டு. அவை விடும் சவால்கள் அசாதாரணமானவை.

16ஆம் நூற்றாண்டின் பிளவுபட்ட ஃப்ரான்ஸை ஒன்றாக்க முனையும் 4வது ஹென்றியின் கதை. போப்பும் ராணியும் உட்பகைகளும் கையாலாகா அலங்கார ராஜாவும் என எல்லாப் பக்கமும் இழுப்புகள். சதிகள் சாகஸங்கள் மற்றும் பிரம்மாண்டம்.

HENRY 4 / Dir: Jo Baier / Germany / 2010 / 153 Min
இந்தப் படத்தைப் பார்த்தால் அரசர்கள் ஒரு நிமிடம் கூட சும்மாவே இருக்காதவர்கள் எனவும், சிட்டுக்குருவிகள் போல் அத்துனை சுறுசுறுப்பாக இருப்பவர்கள் என்கிற பிரமிப்பும் தோன்றக் கூடும்.

நிறைய பேர் சொந்த டிவிடி வைத்துக் கொண்டு குலாவ ஆசைப்படக் கூடும். கொஞ்சம் வரலாறும் போனால் போகட்டும் எனப் படித்தும்தான் வைப்போமே என்பவர்களுக்கு http://writingren.blogspot.com/2010/02/film-henri-iv.html மற்றும் http://stelagheorghe.blogspot.com/2010/10/movie-review-henri-iv-2010-or-where.html

நல்லிரவு / நற்காலை.