Sunday, December 19, 2010

சென்னை உலக திரைப்பட விழா 18.12.2010

வண்டியெடுக்கப் போனால் முன் வீல் பஞசர். ஒட்டியபின் ஓட்டிப் பறந்தாலும் கிட்டத்தட்ட 30 நிமிடப் படம் எள்ளு. இத்துனைக்கும் கடைசியாகத் தொடங்கும் சிம்ஃபொனிக்கே இந்த கதி.

10.30 மணி
பாலஸ்தீனத்தில் நிரந்தப் போர்ச் சூழலுக்கு நடுவே படம் எல்லாம் கூட எடுக்கிறார்கள் என்பதே முக்கியம் அல்லவா? 51 நிமிடமே பார்க்க முடிந்தாலும்  பரவாயில்லை. பாலஸ்தீனம் கொந்தளிப்பில் மட்டும் முன்னணியில் இல்லை. முக்கோணக் காதலை ஏகப்பட்ட படங்களில் மொக்கையாக எடுத்துத் தள்ளியிருக்கிறோம். போராட்டத்தை வாழ்நாளின் அன்றாட அம்சமாய்க் கொண்டவர்கள், அதன் இடையிலும் வாழ்தலின் அத்துனை பின்னல்களுடனும் கலைகளைப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் படம்.

இதை கோஷப் படமாக எடுப்பது இயக்குநருக்கு எவ்வளவு சுலபமான காரியமாய் இருந்திருக்கும். இதை கோஷா படமாகக்கூட எடுக்கவில்லை. எல்லா நாடுகளையும் போலவே பாலஸ்தீனத்திலும் பெண்களை தமக்கென தனி மனமும் சுய முடிவுகள் எடுப்பவர்களாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கிறார்கள்.
POMOGRANATES AND MYRRTH / Dir: Najwa Najjar / Palestine /2009 / 98 Min
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நண்பர் ஏமாற்றமாக இருந்தது என வருத்தப் பட்டார். பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு படம் தயாரிக்கப் பட்டிருப்பதே பெரிய சாதனை என்பதே என் கருத்து. ரமல்லாவை செய்தியைத் தவிர எங்கேனும் பார்த்திருக்கிறோமா என்ன? படத்தில் ஒரு டாங்க்கும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய ராணுவ வீரர்களும் வருகிறார்கள். அந்தக் காட்சியின் துணுக்கு இந்த முன்னோட்டத்திலேயே கூட வருகிறது. இந்தப் படம் பற்றி சில விமர்சனக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. http://www.screendaily.com/pomegranates-and-myrrh/4042465.article  மற்றும் http://electronicintifada.net/v2/article11139.shtml

இந்த சினிமாவின் இயக்குநர் ஒரு பெண் என்பது விசேஷத் தகவல். http://english.aljazeera.net/programmes/fps/2009/06/2009626124413202611.html 
 
இயக்குநர் Najwa Najjar  அவர்களின் தம் முதல் படம் பற்றிய பேச்சு

12.15 மற்றும் 12.30 மணி வுட்லண்ட்ஸ் & சிம்ஃபொனி
இரண்டு படங்களையும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன். தூங்கப் பார்த்தாலும் போரடிப்பேன் என பயமுறுத்தின. வெளியில் வந்து சும்மா உட்கார்ந்தால் போதும் என்றாகிவிட்டது. இந்த மாதிரி திரைப்பட விழாக்களில் அங்கங்கே சிறு கூட்டங்கள் கட் அடித்த கல்லூரி மாணவர்களின் பஸ் நிறுத்த கும்பல் அரட்டை என கும்மாளி அடித்துக் கொண்டிருக்கும். 

ஆக, மதியம் நீண்ட உணவு இடைவேளை.

2.45 மணி
எப்படியாகிலும் ஒரு இசைக்குழுவாய் ஆகிவிடத் துடிக்கும் நான்கு பசங்கள். ஒருவனின் தந்தை போலந்து கம்யூனிச ராணுவத்தில் இருப்பவர்.  தொழிற்சங்கங்களில் வேர்பிடித்த லீ வலேசாவின் சாலிடாரிட்டி மாணவர்களிடம் விழுதுவிட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம். தந்தையின் சிபாரிசில் ராணுவத்தின் இசை மற்றும் ஒலிக்கருவிகள் கொண்ட மேடை பயிற்சிக்குக் கிடைக்கிறது.

பார்க்கத் தொடங்கி கொஞ்ச நேரத்திற்கு கம்பிகள் சரிவர முடுக்கப்படாத இசைக் கருவிபோல் நிலையில் நிற்காமல் அலைந்து கொண்டே இருந்தது படம். எவ்வளவு வகுப்புகள்தான் கட் அடிப்பது. சரி இருந்த இருக்கையில் இருந்தபடிக்கே ஸ்ஸ்ஸ்ஸ்.

எங்கோ டொக்கு டொக்கு என்கிற தட்டலில் முழிப்பு. காலியான பக்கத்து இருக்கையைக் கதவெனக் கருதி பின்சீட்டு வருங்கால திரையுலக சாதனை ஒன்று காலால் டொக்கு டொக்கு என தட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

தம்பி இப்படிக் காலாலத் தட்டி தூக்கத்தைக் கெடுப்பது நியாயமா?

தட்டதுதல் நின்றது என்றாலும் தட்டிப் போன தூக்கம் அவ்வளவு சுலபத்தில் திரும்ப கிடைக்கக் கூடியதா என்ன? சரி வேறு வழியில்லை என வேண்டா வெறுப்பாக இருண்ட வகுப்பின் நொடிக்குநொடி மாறிக்கொண்டிருக்கும், கலர்ப் பலகையைப் கவனிக்கத் தலைப்பட்டால், வண்ணதாசனின் தனுமை. தனுமை அளவிற்குக் கருப்பு வெள்ளையாக இல்லாத கொஞ்சம் பின்னலான கதையோட்டம். 

ALL THAT I LOVE / Dir: Jacek Borcuch / Poland / 2010 / 95 Min
குட்டிப் பையன் ஒரு குட்டியைக் காதலிக்க நடுத்தர வயதுக்காரி நாயகனிடம் நாட்டம் வைக்கிறாள். பையனும் சபலப் படுகிறான். அவன் எதையோ எதிர்பார்க்க அவள் என்னென்னத்தையோக் கொடுக்கிறாள். கிளுகிளுத்து சந்தோஷிக்காமல் சல்லாபத்திற்காக சங்கடப்படுகிறான்.

சங்கடம் இங்குதான் தொடங்குகிறது. நாயகனின் அப்பனுக்கு வில்லனான  மற்றொரு ராணுவ அதிகாரியின் தொடர்பில் இருப்பவள்தான் இந்த நடுத்தர வயதுக்காரி. பையனுடன் அவளுடைய ஆர்வத்தை சந்தேகிக்கும் அதிகாரி பையனைப் பழிவங்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறான்.

விழா நாள் அன்று அரங்க பொறுப்பாளரிடம் பையன்களின் பாடல்கள் ராணுவத் தலைமையால் மட்டறுக்கப் பட்டபின்பே பாடப்பட வேண்டும் என் முட்டுக் கட்டை போட, போடா பொக்கே என இள ரத்தங்கள் எதிரிலிருக்கும் இளைஞர்களின் ஆரவாரம் பார்த்துப் பாடி பெடலெடுக்கிறார்கள். சாலிடாரிட்டி சாலிடாரிட்டி என எதிரிலிருக்கும் இளைஞர் படை குதூகலிக்கிறது. அவமானப்படுகிறார் கமிஷணர்

கமிஷணருக்கும் இளம் காதலனுக்கும் இடையிலான தொடுப்பு குறித்த தனி வன்மம் தத்துவ முலாமுடன் தலைமையிடம் வத்தி வைக்கப் படுகிறது.  காதலியின் தந்தையான சாலிடாரிட்டி ஆதரவாளன் குடும்பத்தோடு ஊரைவிட்டே காலி செய்ய நேர்கிறது. காதலனின் தந்தைக்கு ராணுவ வேலை போய்விடுகிறது சிற்றூருக்கு குடியேற வேண்டிய கட்டாயம்.

மேலே சொல்லிய எதுவும் இவ்வளவு நேரடியாகவோ தெளிவாகவோ படத்தில் இருக்காது. அப்படி இருந்திருந்தால் மிஞ்சி மிஞ்சி நம்மூரின் நல்ல மொக்கை என்கிற தகுதியைப் பெற்றிருக்கும். பதிவெழுத வைக்கும் அளவிற்கு நல்ல படமாக இருந்திருக்காது. மேலதிகம் வாசிக்க http://www.variety.com/review/VE1117942040?refcatid=31

5.00 மணி
அற்புதம்.
 
THE QUEEN OF HEARTS / Dir: Valerie Denzelli / France / 2009 / 84 Min
 இரண்டாவது யோசனையே இல்லாமல் இதுதான் இதுவரையிலான இந்த திரைப்பட விழாவின்  ஆகச்சிறந்த படம். 

துள்ளிக் குதிக்கும் கவிதை பின்னணிப் பாடலுடன் வீடு செல்கிறது. காதல் முறிவை அறிவிக்கிறது கடிதம். கழிவிரக்க சோகம் கப்பிக் கொள்கிறது. இழந்த காதலை எப்படியேனும் அடைந்துவிட அலைக்கழியும் பெண்மனம். புதிய காதல் தேடுவதே (ஃப்ரான்ஸ் அல்லவா நேரடி அறிவுரை - புதிய ஆணுடனான கலவியே பழைய உறவில் உடைந்த வாழ்வை மீட்டெடுக்கும்) புத்திசாலித்தனம் என போதிக்கும் முதிர்பெண்ணின் உதவிகள். 

எதற்கும் லாயக்கற்றவள் எனத் தன்னைத்தானே கழிவிரங்கி நிந்தித்துக் கொள்பவள் மூன்று புதிய ஆண்களை சந்திக்கிறாள். உடல் ரீதியில் காட்சிப்படும் அப்பட்ட செக்ஸ் அர்த்தபூர்வமாய் உயரங்களை எட்டுகிறது. சொல்லில் சொன்னான் அற்பமாய்ப் படும் விஷயங்கள் அற்புதமான உணர்வுகளாய் மாறும் அதிசயத்தைக் காணலாம்.

உடல்ரீதியில் சுய இன்பமாக இருப்பது வாழ்வைக் கட்டமைத்துப் புதுப்பித்துக் கொள்ள வழியற்று அலைபவளுக்கு நிகழ்த்தியுரைக்கும் காட்சியில் சுயநிறைவாக உச்சத்தைத் தொடுவ்தை ஒரு உதாரணமாய் சொல்லலாம். ஆயிரம் பதிவு எழுதிச் சொன்னாலும் எழுத்தில் அது அல்ப அர்த்தத்தையேக் கொடுக்கும். ஒரு முறை படம் பார்ப்பதால் கிடைக்கும் அனுபவத்தை  எந்த எழுத்தும் தந்துவிடாது.

உறவுக்காரிக்குக் கண்நோயும். சந்திக்கும் ஆண்கள் அனைவரும் புதுப்புது ஆட்களாய்த் தோற்றமளிப்பதும், இணைய வாணலியில் கிண்டிக் கொண்டிருக்கக் கிடைத்தவை.

மண்ணில் கலந்து கிடக்கும் பலவகைப்பட்ட இரும்புத் துகள்கள் காந்தம் கண்டதும் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு ஒட்டிக் கொள்வது போல அத்துனைப் பாத்திரங்களும் குவிமையத்தில் ஆலிங்கணிக்கும் திறமையான திரைக்கதை? http://www.variety.com/review/VE1117943883?refcatid=31 

இநத மாதிரிப் படங்களைப் ’பற்றி’ எழுதியதைப் படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு அல்லது டிவிடியில் பார்த்துவிட்டு எழுத்து வடிவில் வரி வரியாய் சூடு பொட்டுக்கொண்டு, அவன் எவ்விதமாக சிரமபரிகாரம் செய்து கொள்கிறானோ நானும் அப்படியே செய்வதால் நானும் அவனும் ஒன்று. ஆனால் என் தலையெழுத்து நான் இங்கே பிறந்தது. அங்கே மட்டும் பிறந்திருந்தால் அந்த நாடு என்னைத் தலைமேல் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என்கிற போத்தலின் பேத்தல் கோமாளிகளுக்கும் கலையின் உச்சங்களுக்கும் சம்பந்தமே இல்லை.

இது நிர்வாண உடல்மொழியின் நினைவை விட்டு அகலாத புன்னகை. 

தற்செயலாகப் படிக்கட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட தத்துவார்த்த சிந்தணையாளரிடம், ’இது படம்’ எனப் புல்லரித்தேன். இதுவா என்றார். வெறும் எழுத்தாளனாய் என்னை ஆக்கியக் கடவுளுக்கு நன்றி.

மொட்டு விரிக்கும் பூவையும் கைக்குழந்தையின் விகசிக்கும் நித்திரை முறுவலையும் நிலவில் எழுத முடிந்தால் அவன் கலைஞன்.

ஃப்ரென்ஞ்சின் எந்தக் குப்பையும் நம் மாணிக்கத்தைவிட உசத்தி என்கிற என் ஆண்டாண்டுகால அபிப்ராயத்தை அட இன்றைக்கும் அதுதான் சரி என அடித்துச் சொல்லும் படம்.

ஊத வேண்டிய வாதையின்றி இயல்பாய் இலவம் பஞ்சு போல மேலெழும்பும் அழகு.

23ம் தேதி விழா நிறைவுறுகையில் இந்தப் படமே இந்த விழாவின் ஆகச்சிறந்த படமாக எந்தப் போட்டியும் இன்றி நின்றாலும் ஆச்சரியமில்லை.

கூடுதல் தகவல் நன்றி சம்பத் ராஜகோபாலன்:  இயக்குநர் வெலரி டான்ஸெல்லியே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதோடு படத்தில் வரும் பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இணை திரைக் கதை எழுதி இருப்பவரும் அவரே. 
படத்தின் தொடக்கம்

இந்தப் படத்தில் சில பாடல்கள் வருகின்றன.அவற்றில் இது ஒன்று.


7.30 மணி
இத்தாலி - சிசிலி - மாஃபியா கதை. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உண்டாக்கி ஏமாற்றிய படம். எதிர்பார்ப்பின்றி பார்த்தால் நல்ல படம் என்கிற உணர்வை உண்டாக்கக் கூடும்.
THE SICILIAN GIRL / Dir: Marco Amenta / Italy /2009 / 115 Min
உண்மைக் கதை என்பதால் உபரி மரியாதை. சிறுமியின் டைரிகளில் உறங்குகிறது தந்தை தமையனின் குருதி. பல வருடங்கள் கழிந்த பின், கட்டவிழ்ந்த கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் காலத்தின் சாட்சிகளாய் நிற்கின்றன அந்த டைரிகள். பெரிய கூட்டம் கம்பிகளுக்குப் பின்னால் தண்டனைக்குக் காத்திருக்கிறது. சுயம் அழித்து பழி துடைக்கும் பல கதைகள் ஏற்கெனவே பார்த்தவைதானே. 

கீழே இருக்கும் காமத்தைப் பல படிகள் உயரத்தில் கண்டதினம்.