Tuesday, December 21, 2010

சென்னை உலக திரைப்பட விழா 20.12.2010

எழுப்புவதும் இதோ இதோ எழுந்துவிட்டேன் என்பதும் கனவாய்த் தெரிந்தது.  எட்டரை, ஒன்பது ஒன்பதேகால் என்று நிலைக் கடிகாரமாய் பல்லாண்டு. இந்தியக் கலைப்டம்போல் மெல்ல எழுந்து, காரியம் மூளையில் கமர நிமிடமுள் பார்த்தபடி பரபரவென பல்விளக்கி தினசரி தடவி காஃபி குடித்து அடச்சே எவ்வளவு தினப்படிகள். கிரிபிரியென அனைத்தையும் முடித்து கிளம்பிப் போய் மணிக்கு மணி வெட்டி முறிக்கப் போகிற வேலை என்னவோ மன்னாரு & கம்பெனி.


10.30 மணிக் காட்சி
பரபரத்துப் போய் சேர்ந்ததென்னவோ 11.05க்கு. VITAL SIGNS /Dir: Sophie Deraspe / Canada / 2009 /  86 Min  எட்டிப் பார்த்தேன். இனிமேல் உள்ளே உட்கார்ந்து மட்டும் என்ன ஆகிவிடப் போகிறதென்று தியேட்டருக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டேன்.

12.15 மணிக் காட்சி
கோடீஸ்வரனுக்குக் கழுத்தளவிற்குக் கடன். இருப்பதையும் இழக்காமல் கடனும் கொடுகாமல் தப்பிக்க ஒரே வழி சாவுதான். தன் இறுதிச் சடங்கை செட்டப்பாய் தானே நிகழ்த்தி முடிக்கிறான். 
எழுதி வைத்த உயில் - தன் இறப்பிறகுப் பின் சொத்து முழுமையும் தன் மனைவியின் வருங்காலக் கணவனுக்கே சேரும். ஏகப்பட்டக் கணவர்கள் முளைக்கின்றனர். இண்டர்நெட்காரன் ஒருவன். இன்னொருவன் லோக்கல் மாஃபியாக்காரன். போதாக்குறைக்கு ஒரிஜினல் புருஷன் வேறு.

இப்படி ஒரு கதைக்கு வெறும் பார்வையாளர்களாக நாம் கற்பனை பண்ணினால் கூட படம் எவ்வளவு களேபரமாக இருக்க வேண்டும். ஜாலியான கதையாக இருப்பதை படமாக்கும் போது மோசமான மொழிபெயர்ப்பு போல ஆக்கிவிடுவது இயக்குநரின் அளப்பரிய திறமை. துரதிருஷ்டவசமாக, சிரிப்பன்கள் போட்டு சிரிக்கவைக்க இணையமில்லையே சினிமா.

படம் முடிந்தபின் சமோசாவுக்குள்ள ரொட்டி போன்ற பெயருடன் ஒருவர் இன்னொருவரிடம் சிற்சில இடங்களைப் பற்றி நுணுக்கமாய் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டிருந்தார். உக்ரேனியப் படம் தெலுங்கு வழி தமிழில் அடுத்த ஆண்டு விழாவிற்குள் பார்க்கும் பாக்கியம் கிடைக்கலாம் என எனக்கு ஒரு சந்தேகம். அதிலாவது, மூலத்தை பக்தி சிரத்தையுடன் பெயர்க்காமல் உள்ளூர் டச்சுடன் செம கலக்கல் காமெடியாக இருக்கட்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்ளுவோமாக.

12.15 மணிக் காட்சி
இலக்கியம் படிக்கும் மாணவியை டாவடிக்க என்ன செய்ய வேண்டும். எழுத்தாளனாக வேண்டும். குறைந்தது எழுத்தாளன் போல நடிக்க வேண்டும். முடிந்தால் இன்னொருவர் எழுதியதைத் தான் எழுதியது போல பெயர் போட்டேனும் ஓட்ட வேண்டும்.

ஓட்டல் சர்வருக்கு ஒரு இலக்கிய இளைஞி மேல் ஈர்ப்பு. பின்னாலேயே ஜொள்ளுவிட்டுத் திரிகிறான். குட்டி பார்க்கிறாள் என்பதற்காகவே பழம்பொருள் கடையில், எழுத ஒரு குட்டி டேபிள் வாங்குகிறான் . அறைக்கு வந்து அல்லாடித் தவித்து ட்ரா திறந்தால் பழைய பேப்பர் கத்தை. படிக்கத் தொடங்கினால் 1950ல் ஆல்ஃப்ரெட் துஸ்தர் என்பவரால் எழுதப் பட்ட நாவல். இணையத்து இளம்படை போல ஸ்கேனரில் விட்டெடுத்து கணினியில் ஏற்றி அச்சடித்து அவன் பெயர் இடுகிறான். பிராக்கெட்டுக்காக டாவிடம் கொடுத்தால் அவள் உண்மையிலேயெ பதிப்பகத்திற்குக் கொடுத்து விடுகிறாள். பதிப்பகம் வெளியிட ஒரே நாளில் பப்பரப்பா எழுத்தாளன் ஆகிவிடுகிறான்.
MY WORDS MY LIES, MY LOVE Lilla, Lila / Alain Gsponer / 2009 / 104 Min
விற்பனையில் கையெழுத்துப் போடும் திருப்பணியில் வரிசையாக அவரவர் விருப்பம் சொல்லி அவருடைய இன்னாருடைய பெயரெழுதி என்று அர்ச்சனைக்கு ஆர்டர் கொடுப்பது போல கையெழுத்து கேட்க, ஆல்ஃப்ரெட் துஸ்தர் பெயர் எழுதி கையெழுத்து என்கிறது ஒரு குரல்.

பப்பரப்பா வெளிறிப்போய் ஆல்ப்ரெட் துஸ்தர் என்கிற ஒரிஜினல் ஆசிரியரைக் கூட்டத்தை விட்டுத் தனியே தள்ளிக் கொண்டு போனால் அவர் சொல்கிறார்.

50 வருடம் முன்பு நடந்த கதையை 24 வயது இளைஞன் எழுதுவதில்தான் ஜனக்களுக்கு சுவாரஸ்யம். அதனால் என் பெயரில் வெளியாவதைவிட நீ எழுதியதாக இது இருப்பதால்தான் இதற்கு இப்படி ஒரு மெளசு.

இருவரும் வாழ்ந்துவிடுவோம் என சர்வரின் ஏஜெண்டாக அறிவுருத்துகிறார்.

உள்விஷயம் தெரியாமல், இடையில் வந்தவனுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று காதலிக்குக் கோபம் .

ஊடலில் ஒதுங்கிய காதலியை சரிக்கட்டுவது எப்படி?

இன்னொரு நாவல் எழுதுவதுதான்.

இரவோடிரவாக இந்தா பிடி என ஆல்ஃப்ரெட் துஸ்தர் எழுதிக் கொடுக்கும் நாவல் படித்ததும் சாதாரண சர்வருக்கே தெரிகிறது இது எழுத்தாளனின் எழுத்து இல்லை என. அடி பின்ன ஒப்புதல் வாக்குமூலம் வருகிறது.

நான் ஆல்ஃப்ரெட் துஸ்தர் இல்லை. என்னுடைய விளையாட்டுத் தோழன்தான் ஆல்பர்ட் துஸ்தர். அற்பாயுசாக பைக் விபத்தில் மாண்டுபோனவன்.

உண்மைக் காதலுக்காக போலி பப்பரப்பா ஆனவன் உண்மையிலேயே எப்படி பப்பரப்பா ஆகிறான் திரும்ப எப்படிக் காதல் கைகூடுகிறது என்பதுதான் கதை.

எழுத்தாளன் வேஷம் பொருந்தாமல் அவன் கூத்தடிக்க சந்தர்பங்கள் அனேகம். எதுவுமே காட்சிகளாக்கப்படவில்லை.

மூலஸ்தானத்திடமிருந்து வருகிறது என்கிற ஒரே காரணத்தால், மொக்கை அவதானம் கூட, மூட அடிப்பொடிகளுக்கு திவ்யப் பிரசாதம் ஆகிவிடுகிறது அல்லவா. அதுதான் ஸீரியஸான காமெடி. அது போல ஓரிரு இடங்கள் மட்டுமே உள்ளன.

நேர்காணல் போல கேள்வி: எப்படி எழுதுகிறீர்கள்?
நேர்மையான பதில் போல அடித்து விடுகிறான்: எழுதுவதைவிட எனக்கு எழுதாமல் இருப்பதுதான் கஷ்டம்.

ஆசிரியர் புத்தக வாசிப்பு: ரந்தேவூ எகிற வார்த்தை எவ்வளவு முட்டியும் அவனால் உச்சரிக்க முடியவில்லை. டேட் என்பதே இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமே ஏன் இந்த ரந்தேவூ என்கிறான்.

நீங்கள் எழுதியது தானே படிப்பதில் என்ன பிரச்சனை?

நான் எழுதுவது மனதில் வாசிப்பதற்காக, வாய்விட்டுப் படிப்பதற்காக அல்ல.

இதே பதில்கள் இணையத்தின் எழுத்தாள தளத்தில் எழுதப்பட்டால் ஆராதனைக்கு உரியதாக ஆகிவிடும். அது தற்காலச் சூழலின் குருட்டு வழிபாட்டின் குறியீடு.

நல்ல படம் இல்லை என சொல்லிவிட முடியாத படம்.

5.00 மணிக் காட்சி
கதைச்சுருக்கம் பார்த்த போதே என்னடா கஷ்டகாலம் என்று இருந்தது.

மத்தியதர வர்க்கத்தான் ஒருவன் நடுவயது பிரச்சனையில் குடும்பத்தை சமாளிக்கிறான். கூடுதலாக அவர்களிருக்கும் கட்டிடத்தில் ஓட்டைக் குழாய்களை சரிசெய்து கூடவே தன் வாழ்க்கையையும் செப்பனிட்டுக் கொள்கிறான் என்பது போல எழுதப் பட்டிருந்தது. ப்ளாகைவிட ஓவர் மொக்கையாக இருக்கிறதே என உள்ளூர ஒரு உதைப்பு.
THE BUILDING MANAGER / Greece / Dir: Dir: Hoursoglou / Greece / 2009 / 93 Min 
5.20க்குள் சம்சயம் கன்ஃபர்மாகி சங்கடம் உடல்ரீதியாகும் முன்னால் எஸ்கேப் டு வங்காள சினிமா. சுவரிலடித்த பந்தாக அங்கே இருந்தும் வெளியேற்றம்.

7.15 மணிக் காட்சி
கடலோரக் கவிதைகள் என நமது ஆட்கள் ரொமேண்டிசைஸ் பண்ணக் கூடும். என் அபிப்ராயத்தில் கடலோரக் கடி.
ஃப்ரேம் கம்போஸிஷனுக்காகவே எடுக்கப்பட்டது போன்ற படம். பெரும்பாலான ஷாட்கள் ஒரு புகைப்படத் தொகுப்பில் சேர்க்கத் தகுந்தவை. ஃப்ரேம் பண்ணி மாட்டத் தகுந்தவை.

முழிப்பு தட்டி பார்த்த போதெல்லாம் அருமையான அசையாத ஃப்ரேம் கண்ணெதிரில். காட்சி நத்தையடிப்பதால் கண் அயரும். இந்த முன்னோட்டமே கூட அதற்கு சாட்சி.
VELMA / Dir: Piero Tomaselli / Italy / 2009 / 95 Min
வாழ்க்கையில் நிறைய நேரமும் நிறைய நிறைய பொறுமையும் அடங்கவே மாட்டாத கலைத்தாகமும் உள்ளவர்கள் ஆற அமர காணத் தகுந்த படம்.