Wednesday, December 22, 2010

சென்னை உலகத் திரைப்பட விழா 21.12.2010

விழிப்பு வந்தபோது நன்றாகத் தூங்கியதான உணர்வுடன் எழ நேர்ந்தது ஆச்சரியமாக இருந்தது. பின்னுமொரு ஆச்சரியம் ஆள் வைத்து எழாமல், தானாகவே எழுந்து கொண்டது. பிள்ளையாரைப் பார்த்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால் பகீலென்றது.

என்னை எழுப்பாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
நீ தானே சொன்னாய் என்னால் இன்று ஆகவில்லை எல்லாம் மெள்ளப் போனால் போதும் என்று
நான் எங்கே சொன்னேன்
சொல்லுவதையும் சொல்லிவிட்டு கடைசியில் பழியை என்மேல் தூக்கிப் போடு எப்போதும் போல
இல்லை நான் சொல்லவே இல்லை
எட்டு மணியிலிருந்து நானும் எத்துனை முறை எழுப்பிக் கொண்டிருக்கிறேன். என்ன விளையாடுகிறாயா

டோட்டல் ப்ளாக் அவுட். வலுக்கட்டாயமாக மறுத்தாலும், உடலுக்குத் தேவையான ஓய்வை அது எடுத்துக் கொண்டு விடுகிறது. பெண்டதால் / மெஸ்மரிஸம் போல அப்படி ஒரு தூக்கம். வாய்திறந்து சொன்னதன் கனவுக்காலடி கூடக் காணவில்லை. பத்து மணிக்குப் பதற்றப் பட்டால் பரவாயில்லை, பரபர ஓட்டம் பத்தரைக்காவது போய்ச்சேர உதவக்கூடும். பதினோரு மணிக்குத் தலையைப் பிறாண்டி என்ன பயன் இருக்கும் கொஞ்ச முடியும் கொட்டிவிடும்.

மலைக் குடைவில், சுற்றியிருக்கும் எல்லாத் திசைகளிலும் கம்பிக் கதவுகள் சரட் சரட்டென கீழிறங்கி சிறையாகும். அதுவரை ஓருடல் ஒருநூறு பிம்பங்களாய் சுழன்று கொண்டிருந்த ப்ரூஸ்லீ அமைதியாய் யோக சம்மணம் இட்டு உட்காருவார். அமெரிக்கன் எடுத்த, சீனன் நடித்த, திரை பாஷை நாளை பிறக்கப் போகும் இந்தியனுக்கும் எப்படிப் புரிகிறது. திரைமொழி திசை கடந்தது. 

Bruce Lee - Enter The Dragon - The Best Fight Scene Ever


எத்தத்தனங்களை எதிர்த்துப் போராடிய எத்தனங்கள் எல்லாம் தோல்வியுற்று, எதிரில் நிதர்சனம் இளிப்பதைப் பார்க்கையில் நிதானம் கைகூடிவிடுகிறது. 27.12.2010 முதல் அலுவலகம் போக முடிவு செய்திருப்பது போல. இனி செய்ய ஏதும் இல்லை என்றானபின், அமைதியாய் 12.15 காட்சிக்குப் போய்க் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

12.15
CERTIFIED COPY / Dir: Abbas Kiarostami / France Italy UK /2010 / 105 Min
இப்போதும் கூட எவன்டா உன்னை வரச்சொன்னது எனச் சொன்னது படம். எத்துனை நாடுகளின் கூட்டுத் தயாரிப்பாய் இருந்தால் என்ன காரோட்டிக் கொண்டு ஆம்பிளையும் பொம்பிளையும் பேசிக் கொண்டே பெங்களூருவுக்குக் கூட்டிக் கொண்டு போனால் ஸ்ரீபெரும்புதூர் தாண்டும் முன்னாலேயே வண்டியை விட்டுக் குதிப்பீர்களா மாட்டீர்களா?

சினிமா பேசவேக் கூடாது என்பது எதிர்நிலைப் பேத்தல். இதுதான் செய்யலாம், இது செய்யக் கூடாது என்று சட்டமெல்லாம் இல்லை. என்ன வேண்டுமானால் செய்யலாம். ஒரே விதி, செய்வது சிறுபான்மை பார்வையாளர்களுக்கேனும் பொருட்படுத்தக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

நான் எழுந்து வெளியே வந்ததை இருட்டில் என்கிருந்தோ இன்னொரு ஆத்மா கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறது க்கீய்ங் க்கீய்ங் குறுஞ்செய்தி ‘Bore’ விசுவிடம் இருந்து . வெளியில் உட்கார்ந்திருந்த பார்வையாளர்கள் சிலர் வினோதமாய்ப் பார்ப்பது கவனத்தில் உறைத்ததும்தான் நான் கட்கடவென சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

உட்லண்ட்ஸ் எதிர்க்கடை பிரட் ஆம்லேட்டில் மதிய உணவு.

2.45
3.00 மணி படத்திற்கு இப்போதே சிம்ஃபொனியில் முண்டியடிப்பு. தள்ளு முள்ளு கண்டு அடச்சீய் என்றாகிவிட்டது. பெரிய பொக்கை படம் போங்கடா என்று உட்லண்ட்ஸில் நுழைந்தேன்.
PACK / Dir: Franck Richard / France / 2010 / 85 Min
நெடுஞ்சாலைப் பயணியான பெண் ஒருத்தி சில பைக் ஆசாமிகள் பின் தொடர்வதைப் பார்க்கிறாள். வழியில் லிஃப்ட் கேட்கும் ஒருவனை ஏற்றிக் கொள்கிறாள். 

ஏறிக்கொள் ஆனால் மவனே, ஜிப்பை கிப்பைத் திறந்தால் மண்டையை உடைப்பேன்.

அவன் ஏறிக்கொள்கிறான். இதைக் கண்டதும் மெத்தனமாய் பின் தொடர்ந்த பைக்குகள் ஆய் ஊய் என ஊளையிட்டு வண்டியைத் தாண்டுகிறார்கள்.

அப்புறம் அவள் இவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி வண்டியோட்ட, இவள் பார்க்காத போது அவன் பார்க்க, பார்வைகள் சந்திக்க நேர்ந்தால் வழிய என வாய்பேசாமல் வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது. தூக்கக் கயிற்றின் சொடுக்கலில் கண் திறந்து பார்த்தால் அவள் தூங்க இவன் வண்டியோட்டிக் கொண்டு இருந்தான். ஆக்ஸிடெண்ட் ஆகாமல் நல்லபடியாய் பயணத்தைத் தொடருங்கள் என்று ஆசீர்வதித்து திரும்ப சிம்ஃபொனிக்குத் தாவினேன்.
BLACK HEAVEN / Dir: Gilles Merchand / 2010 / 104 Min
திரைக்குச் சில வரிசைகள் முன்பாக சுவரோரம் ஒரு இருக்கை எனக்காகக் காத்திருந்தது. முண்டியடித்தலின் காரணம் சின்ன தியேட்டர் என்பது போக படத்தின் கதை ஆன்லைன் கேமை அடிப்படையாகக் கொண்டது.

இளம் காதலர்கள், தனி அபார்ட்மெண்ட், நண்பர்கள் அரட்டை என இருக்கிறது கோடைகால ஃப்ரான்ஸ் வாழ்க்கை.

நிஜ வாழ்வில் ஒரு அண்ணன் தங்கை. ஆன்லைனில் சித்திர பாத்திரங்கள். ஆன்லைன் ப்ளாக் ஹோல் என்கிற ஆட்டத்திற்கு ஆட்கள் இழுக்கப் படுகின்றனர். வலையில் வீழ்பவர்கள் விளையாட்டில் விட்டில் பூச்சியாய் தற்கொலைக்குத் தூண்டப் படுகிறார்கள். 

ஆன்லைன் விளையாட்டு மற்றும் க்ராஃபிக்ஸ் இரண்டையும் நீக்கிவிட்டால் படம் பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. அதற்காகப் படம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

டிவிடியில் நிறுத்தி நிறுத்தி தூங்காமல் பார்த்தால் இன்னமும் கூட ரசிக்கும்படி இருக்கக் கூடும்.

5.00
இது படம். சபாஷ். 
படத்தின் முதல் ஷாட். லாங் ஷாட்டில் பெரிய பேஸ்மெண்ட். நீலநிறத் தரை. சிவப்பு நிற லிஃப்ட். ஐரோப்பிய நளினம். கடைசிவரை உன்னைப் பார்க்க வைப்பேன் எனக் கட்டியம் கூறியது.
JUST BETWEEN US / Croatia / Dir: Rajko Grlic / 2010 / 89 Min
பதினெட்டாம் படியைத் தாண்டியவர்களின் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஒரிஜினல் சினிமா ட்ரெய்லர்கள் 2மற்றும் டிவி ட்ரெய்லர்கள் 3 http://www.justbetweenusmovie.com/trailer/

அண்ணன் தம்பிகள் இருவர் லிஃப்டில் போய் தந்தையைப் பார்க்கிறார்கள். கட் பண்ணினால் இடுகாட்டில் இறுதிச் சடங்கு. படம் முடிகையில் திரும்ப இடுகாடு. ஓராண்டு நினைவஞ்சலி. க்ரேன் ஷாட்டில் கேமரா வழக்கம் போல மேலே எழுகிறது. எங்கு பார்த்தாலும் கல்லறைகள்.பின்னணியில் தம்பிக்காரனின் முன்னாள் மனைவி சொல்வதாக ஒரு டயலாக் ஒலிக்கத் தொடங்கி தேய்கிறது.

இந்த எலும்பு அந்த எலும்பு என்று எல்லா எலும்புகளும் ஏமாற்றிக் கொண்டு இருந்த எலும்புகள்தான்.

இந்த ஓராண்டு காலத்தின் Zagrebன் நல்ல வசதியான பூர்ஷ்வா வாழ்வின் மனித உறவின் செக்ஸ் தில்லுமுல்லுகளே படம். பெண்கள் ஏமாற்றப் படுகிறார்கள். பெண்களும் ஏமாற்றுகிறார்கள். 

திருமண உறவுகளையும் பாலியலையும் குழந்தைகளின் ஒட்டுறவு இன்மையையும் அநாயாசமாக சொல்லி இருக்கையில் அமைதியாக இருந்து பார்க்கவிடாத அட்டகாஸமான சூழ்நிலை-நகைச்சுவை. இதை நகைச்சுவைப் படம் என்று சொல்வது அநீதி. இது போல வாழ்வின் துடிப்போடு படம் பார்க்கக் கிடைப்பது பெரிய பரவசம்.

7.30
1993 டெல்லி விழாவில் அக்கி குரிஸ்மிக்கியின் தி மேட்ச் ஃபேக்கடரி கேர்ள் பார்த்தேன். நண்பர் விசுவும் செர்பியன் ஒருவனும் சொல்லவில்லை என்றால் சத்தியமாக இந்த இயக்குநரைத் தவற விட்டிருப்பேன். ஹாலிவுட்டின் ரிட்லி ஸ்காட் டோணி ஸ்காட் சகோதரர்கள் போல குரிஸ்மிக்கி சகோதரர்கள். இன்றைய படம் மிக்கா குரிஸ்மிக்கியுடையது.

பொதுவான சினிமா சம்பிரதாயம், மூவ்மெண்ட் டு மூவ்மெண்ட் கட் பண்ணுவது. கார் போய்க் கொண்டிருப்பதான மூவ்மெண்ட் ஷாட்டிற்கு அடுத்து ஒருவர் உட்கார்ந்திருப்பது போல இருக்கும் ஷாட்டை இணைத்தால் இசைவு இல்லாமல் ஜெர்க் அடிக்கும்.

மயிறே போச்சென்று கட் பண்ணுகிறான் நிறைய இடங்களில். உறுத்தவே இல்லை. ஒருத்தன் கழுத்தை தூக்கி உயரப் பார்த்தால் அடுத்த ஷாட் உயரத்தில் இருக்கும் கட்டிட ஜன்னல் போன்ற எதையாவதுதானே எதிர்பார்ப்போம். அப்புறம் ஜன்னலுக்கு உள் இருக்கும் அறையில் இருக்கும் காட்சி. மாடி ஜன்னல்லேந்து விழுந்ததைதான் அப்பவே காட்டியாச்சில்ல. விழுந்தவள் ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகையில் அருகில் இருப்பவன் அண்ணாந்து பர்க்கிறான். நேரே அறைக்குள் காட்டுகிறது கேமரா. 

நிறைய விஷயங்கள் உங்களுக்குப் புரியும் என்று அனுமானித்துக் கொண்டு, மனோவேகத்தில் ஒன்றிவிட்டு ஒன்றென வரிசை தாவும் ஷாட்டுகள்.

இந்தக் கதையை சீரியஸ் காமெடியாய் ஒற்றைத் தட்டைப் பார்வையில் எடுத்த ஹாலிவுட் படம் WAR OF THE ROSES என்றால் அதையே பல பாத்திரங்களுடன் பல பரிமாணங்களில் எடுத்த சூப்பர் நகைச்சுவை இந்தப் படம். காட்சிகளின் ஒற்றுமை காத தூரம்.
THE HOUSE OF BRANCHING LOVE / Dir: Mika Kaurismaki / Finland / 2010 / 102 Min
முதல் ஷாட்டில், ஆணும் பெண்ணும், இரவில், வீட்டிற்கு வெளியில் போகி கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ பொருட்கள், எரிந்து கொண்டிருக்கும் போகியில் போடப் படுகின்றன.அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படமும் போடப்படுகையில் ஒரு வார்த்தி பேசப்படாமல் நமக்குப் புரிகிறது. 

விவாகரத்து. இதுதான் விஷயம். விவாகரத்தான பின்பு ஒரே வீட்டில் இருவரும் இருப்பதைப் பற்றிய ஒப்பந்த ஷரத்துகள் தயாரிக்கப் படுகின்றன. ஏட்டிக்குப் போட்டியாய் அவை மீறப்படுகின்றன.

மனைவியின் அம்மாக்காரி பிராத்தல் நடத்துபவள். கணவனின் தம்பி அவ்வப்போது ஜெயிலை குசலம் விசாரித்துவிட்டு வரும் சொட்டா மாஃபியாக்காரன். தற்கொலை செய்து கொண்டு செத்தவளுக்கும் இந்தக் கணவன் மனைவிக்கும் ஸ்நானப் பிராப்தி கிடையாது. ஆனால் இரண்டையும் இணைத்தால் இடையில் ஏகப்பட்ட கேரெக்டர்கள். வாடகைக் கணவர்கல். வடகை மனைவிகள். எல்லாவற்றுக்குள்ளும் ஜோடிகள். ஜோடி மீறும் ஜொள்ளுகள். ஜொள்ளு முற்றி சிப்பிகளாகிற பிறழ் ஜோடிகள். கணவன் மனைவி மட்டுமேயாக உம்மணா மூஞ்சிகளாக வயதேறி வாழ்ந்த வீடு சந்தை மடம் போல் ஆகிவிடுகிறது. 

நகைச்சுவை இழையோட்டத்தில் எத்துனை மனித முகங்கள் பாவங்கள் பரிமாணங்கள். உலக சினிமாவில், உள்ளூர் இலக்கியம் போல் சும்மா சுய தம்பட்டமடித்தெல்லாம் இடம் பிடிக்க முடியாது. சரக்கு சார் சரக்கு. சரக்கு இருக்கணும். 

உயர்ந்தவை என ஏற்கெனவே அஃமார்க் அங்கீகாரம் பெற்ற விஷயங்களான ஆன்மீகம் ஞானமரபு போன்ற பண்டார மேட்டர்களை எழுதி விட்டாலோ அல்லது நேர் எதிராக ஜிப்பை அவிழ்த்துக் கொண்டு டிங் டாங் என கண்டாமணியைக் கையில் பிடித்துக் கொண்டு அலைந்தாலோ போதும் லோக்கலில் உயர் இலக்கிய அல்லது எதிர் இலக்கியப் பேராளுமை ஆகிவிடலாம். 

எதைத்தொட்டாலும் அதை பாசாங்கில்லாமல் ஒப்பனையில்லாமல் வாழ்வின் ஒரு உயிர்த் துடிக்கும் துண்டாக செதுக்கி வைப்பதுதான் உண்மையான சாதனை. தான் எழுதியதைத் தானே அடிக்கோடிட்டு தருக்க உரை எழுதிக் கொண்டு இருப்பது அல்ல.

தமிழின் இலக்கிய முன்னோடிகள் அனைவரும் இந்த சாதனைகளை வந்து போன சந்தடி இல்லாமல் அநாயாசமாக செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.