Thursday, December 23, 2010

சென்னை உலக திரைப்பட விழா 22.12.2010

இன்றைய தினம் இப்படிக் கடி ஆகும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. திரைப்பட விழாவின் மிக ஏமாற்றமான தினம். 7.15 வரை. அதிலும் குறிப்பாக ஏமாற்றுதலுக்கு வேறு உள்ளாக நேர்ந்தது பெருங்கொடுமை. 

2000 டாலரில் தயாரிக்கப்பட்ட படம் என்று கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். இருப்பவர்கள் 2000 டாலரை எடுத்து முதலில் தனியாக ஒதுக்கிவைத்து விட்டுதான் மறுகாரியம் பார்ப்போம் இல்லையா? எதுவும் இல்லையென்றாலும் கூட அட 2000 டாலரில் எடுக்கப் பட்ட படம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க் கண்டிப்பாக முண்டியடிப்போம். போகவும் படம் எடுத்தவர் வேறு வந்திருக்கிறார் அவரும் நாமும் ஒன்றாக அமர்ந்து வேறு பார்க்கப் போகிறோம் என்றால் கேட்கவும் வேண்டுமா?

2000 டாலரில் அர்ஜெண்டினா போவதே முடியாத காரியம் அந்தக் காசில் ஒருவர் படம் எடுத்திருகிறார். இதை சொல்வது, ரிடையர்டு சுந்தரியான சுஹாசினியாக வேறு இருந்துவிட்டால், நம் உயிர் இன்றுதான் போகப் போகிறது என்றால், அது போகவேண்டியது அந்த அர்ஜெண்டினப் படம் பார்த்த பிறகுதான் என்று ஒரு சினிக் காதலனுக்குத் தோன்றுவது நியாயம்தானே.

உணர்ச்சிவயப்பட்டு ஒன்றை ஓஹோவெனத் தூக்கிப்பிடித்து அள்ளிவிடுவது தமிழர் பாரம்பரியம் அல்லவா?

கேமராவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் நந்தலாலாதான் என்று தமிழ் கூறு நல்லுலக எழுத்துக் கோமாளிகள் தொலைக் காட்சிகளில் க்குக்குக்குக்கூவாமல் இருந்திருந்தால் பையன் அம்மாவைத் தேடிப்போகிறானாம் என்று சீரியல் அழுக்காச்சி அம்மைகள் மதியக் காட்சியாவது பார்த்து கொஞ்ச நாளாவது ஓடவைத்திருப்பார்கள். அய்யையோ எழுத்தாளர்லாம் ஒஹோங்கறாங்க. அப்பிடின்னா கண்டிப்பா இது ப்ரெய்ன் மேட்டர். நமக்கெதுக்கு அதெல்லாம் என ரிலீசான தியேட்டர்களுக்குப் பக்கத்துத் தெருக்களில் சுற்றிக் கொண்டு போய்க்கொண்டு இருந்ததாக தகவல்.

அளவிற்கு அதிகமான ஆர்வ அடுக்குகள் ஏமாற்றத்திற்கு உள்ளாக நேரிடுகையில் அபிப்ராய பேதம் என்பதாக இல்லாமல், கேலிக் கூத்தாய் ஆகிவிடுகின்றன். 

10.15 காட்சி உட்லண்ட்ஸ்
Silent Souls / ருஷ்யப் படம் 10.30 - 11.00க்குள் ஏகப் பட்ட பேரை அரங்கத்தை விட்டு வெளியில் துப்பியது.

இறந்த மனைவியின் நிர்வாண உடலைக் கட்டிலில் கிடத்தி கணவனும் அவனது நண்பனும் ஈரத்துணியில் துடைத்து அலங்கரித்து வண்டியில் எடுத்துக் கொண்டு பற்பல மைல்கள் ப்யணப்படுவதும், இடைவெட்டி திருமணச் சடங்குகளுமாக போகிற படம்.

திரித்திரியாய் நூல் நூர்த்து நெளி ரிப்பன்கள் போலாக்கி உள்ளுறுப்பில் சடை பின்னித் தொங்கவிட்டு மணமகளுக்கு அலங்காரம். சடங்குகளை விதரணையாக விவரித்துச் சொன்னாலே உயர் கலை இலக்கியம் என்பது இன்னமும் செலாவணிப் பொருளா இருப்பது வியப்புதான்.
SILENT SOULS / Dir: Aleksei Fedrochenko / Russia / 2010 / 75 Min

10.30 காட்சி சிம்ஃபொனி
குழந்தைப் பேறு இன்மை. குறை களையும் நிபுணரான மருத்துவப் பெண்மணி குழந்தையை இழக்கிறார். வரிசையாக விதவிதமான காம்பினேஷனில் ஜோடிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் டாக்டரிடம் அல்லாடுவதில் உள்ள அன்றாட காரியங்களை பாத்ரூம் முதல் படுக்கைவரை போட்டுக் கொள்ளுங்கள். சுலபமாக இந்தப் பின்னணியில் தாயாராக முயல்பவர்கள் பற்றிய ஒரு படம் தயார். 11.00 மணிவரைகூட நம்மைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. பிரச்சனையைப் பேசுகிறது என்கிற ஒற்றைக் காரனத்தாலேயே ஒன்று பெரிய கலை ஆகிவிடுவதில்லை.
MAMAS AND PAPAS / Chech Republic / 2010 / 90 Min

2.45 காட்சி உட்லண்ட்ஸ்
மூட்டமான வானம். நடுவில் பனிப் பொழிவு. கீழே பனிப்பாலை. முதல் ஷாட். அடப்பாவி அட்டகாசம். தொலைவில் இருந்து பனியில் கால் புதையப் புதைய மூச்சுவாங்கி ஓட்டமும் நடையுமாக வருகிறான். பனிக்கு நடுவில் நீர் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் கருப்பாக சிறு கட்டை போல ஒரு பொருள் அடித்து வரப்பட்டுக் கொண்டிருக்கிறது. மறுகரைப் பனியில் ஒரு பெண் அழுது அரற்றியபடி ஓடிவந்து கொண்டிருக்கிறாள்.

வந்த மனிதன் நீரில் இறங்கி சிறுவனைக் காப்பாற்றித் தாயின் கையில் கொடுக்கிறான். அதற்குப் பிறகு கரேம் புரேமென்று ஏகப்பட்டபேர் திரை நிறைத்து பிருமாண்டமாய்ப் பேச டீ குடித்துவிட்டு வரலாம் என வெளியேறினேன். துருக்கியின் பெண் இயக்குநர் எடுத்த படம்.

2000 டாலர் படமும் முடிந்த பிறகு, CFSன் சிவக்குமார் உட்லண்ட்ஸில் காஃபி குடிக்கையில் கூறினார், கதாநாயகன் பேசும் பேச்சுக்கள் கவித்துமாய் இருந்தன என்று.
KOSMOS / Dir: Reha Erdem / Turkey / 2010 / 122 Min

3.00 காட்சி சிம்ஃபொனி
2000 டாலர் தயாரிப்பு. ஒரு சமையலறையை உள்ளடக்கிய சோபாக்கள் கொண்ட ஒரு ஹால். அதில் ஒருவன் ஒருத்தி ஒய்ன் அருந்தியபடி சமைக்கிறார்கள் அப்புறம் சாப்பிடுகிறார்கள். வாய்க்கு உணவு சிறிது ஈயப்படும் முன் வாய்களை அருகருகே கொண்டுவந்து விலகிக் கொள்கின்றனர்.

சாப்பிட்டபின் 50 நிமிடம் வாக்கில் மீதி இருக்கும் 25 நிமிடத்தில் என்னவாவது பண்ணிவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு உண்டாக்கும் வண்ணம் உடல்களைத் தொட்டு முத்த்மிட்டுக் கொள்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே காற்றோட்டமாக இருக்கும் பெண்ணின் உடை ஸ்டாண்டில் காயும் துணியெனப் பறக்காமல் காய்ந்து கொண்டே இருக்கிறது. இதோ நிகழ்ந்துவிடப் போகிறது என்கிறவிதமாகக் காலிடையில் போய் இறுக்கும் போது என் கைப்பையை/பர்சை எடு என்கிறாள். தேடுகிறாள். அப்புறம் பாத்ரூம் போகிறாள்.

அவள் பாத்ரூமில் இருக்கையில் அவளே பாத்ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் தோற்றத்தில் ஒரு ஷாட் வருகிறது. 2000 டாலரில் எடுக்கப்பட்ட படத்தின் அபூர்வமான எக்ஸ்ட்ரா ஷாட் போலும். அவள் வெளியில் வர அவன் பாத்ரூம் போகிறான். அப்புறம் படத்தின் தொடக்க ஷாட்டோடு ப்டம் முடிகிறது. பிட் இல்லாத பிட்டு படம் எனப் பெயர் பெற்றது சிந்து சமவெளி. 

டுபாகூர் கலை. ஆனால் அண்டம் அனைத்திலும் பரம்பொருளைக் காணும் ஞான்மரப்பாக்கள் சினிமாவில் மட்டும் இல்லாமல் போய்விடுவார்களா என்ன. ஒருவர் இந்த மொக்கையிலும் ஏகப்பட்ட குறியீடுகள் இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றதாக அப்போதே அறிமுகப் படுத்தப் பட்ட ஒளிப்பதிவாளர் சொல்லிக் கொண்டு இருந்தார். 

அப்புறம்தான் தெரிந்தது அவர் மாபெரும் வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் என்று. பெயர் சொன்னால் அடையாளப்படுத்திக் கொள்ளத் தெரியாத அளவிற்கு தமிழ் சினிமா பற்றி பேதையாக இருப்பது குறித்து கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. ஆச்சரியத்தை நண்பர் மூலம் தெரிவிக்க, இன்னும் இரண்டு படங்களின் பெயரைச் சொன்னார். வாயடைத்துப் போனேன். சும்மா ஒரு சட்டை பேண்டுடன் சாதாரணமாகத் திரிந்து கொண்டிருந்தார். 

எழுத்தாளனுக்கு மட்டும் எப்படி எங்கெல்லாமோ கொம்பு முளைத்து விடுகிறது. கீபோர்டில் கைவத்த மறுகனமே புதுமைப்பித்தன் வீச்சில் பேச்சு மட்டும் வந்துவிடுகிறது.

WINE / Dir: Diego Fried / Argentina / 2010 / 76 Min

5.00 காட்சி உட்லண்ட்ஸ்
இந்தப் படத்தைப் பற்றி ஆரம்ப 10 நிமிடங்கள் தாண்டி நான் எது எழுதினாலும் அது முழு அயோக்கியத்தனமாக மட்டுமே இருக்கும். காரனம் மூனு ரவுண்டோ நாலு ரவுண்டோ ஒரு கருப்பு கார் ரேஸ் ட்ராக்கில் போவது போல நிலைத்து நிற்கும் ஃப்ரேமில் உள்ளே வந்து வெளியே போய் ஒலியாய்த் தொடர்ந்து திரும்ப ஃப்ரேமுக்குள் வ்ருவதைப் பார்த்தத்தோடு சரி. அதற்குப் பின் மாத்திரை போட்டுப் போர்வை போர்த்திக் கொண்டவன் போல வியர்க்க் வியர்க்கத் தூங்கினேன். வருத்தப் பட வேண்டிய அவசியமே இல்லை என்று நன்பர்கள் ஆறுதல் கூறினர்.

அப்பன் போலவே பெண்ணும் பிரமாதமாகப் படமெடுக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் மனது கிடந்து அடித்துக் கொள்கிறதே அப்பன் பெயர் கொப்பல்லோ எனத் தெரிவர்கிற பட்சத்தில்.
SOMEWHERE / Dir: Sofia Coppola / USA / 2010 / 98 Min

7.15 காட்சி உட்லண்ட்ஸ்
நாளைதான் இந்தத் திரைப்பட விழாவின் கடைசி தினம் என்பதால் அநேகமாக உறுதியாகச் சொல்லலாம் ருஷ்யாவின் இந்தப் படமே இந்த விழாவின் ஆகச் சிறந்த படம். நான் செய்திருந்த பூர்வ ஜென்ம புண்ணியமே போன படத்தில் என்னத் தூங்க வைத்தது போலும். அது போக படமும் மெல்ல இறுகும் சுருக்குக் கயிறாக உங்களை உள்ளே இழுத்துக் கொண்டு விடுகிறது. 
படம் ஆர்க்ட்டிக் பகுதியில் நடக்கிறது. இருவர் மட்டுமே பாத்திரங்கள். மாதக் கணக்கில் மனித வாசனையற்ற தனிமை. வெளியுலகத் தொடர்பு என்பது அலைவரிசை ரேடியோவில் இருந்து வரும ஒலிவடிவ ஆணைகள் மற்றும் அறிவுருத்தல்கள் மட்டுமே. ஒருவன் இளைஞன். மற்றவன் நடுவயதுப் பெரியவன். 
இருவரும் நண்பர்கள், சீனியர் ஜூனியர் ஊழியர்கள். அந்தப் பகுதியே கதிர்வீச்சிற்கு ஆட்பட்டது. அங்கிருக்கும் குறிப்புகளை கால அளவுகளுடன் எடுத்து மேலிடத்திற்கு அனுப்புவதே ஊழியம். பெரியவன் வெளியில் சென்றிருக்கையில் அவனுக்கு சொல்லும்படி ஒரு முக்கியமான தகவல் வருகிறது. அவனிடம் இருக்கும் அன்பும் கரிசனமும் அதைச் சொல்லாமல் மறைத்து விடுவைக்கிறது.
செய்தி தவிர்க்கமுடியாமல் தெரியவர நேர்கையில், பெரியவனுக்குக் கொலை வெறி பிறக்கிறது. இருவருக்குள்ளான பிழைத்த புரிதல் கோபத்தில் பிளவாகிறது. வன்மம் தலைதூக்க, ஒருவரை ஒருவர் வேட்டையாடத் தொடங்குகின்றனர். 
இயக்குநர் அலெக்சி பப்ரெப்ஸ்கி
போதும். இது போல ஒரு படம் பார்க்கக் கிடைத்தால் கூட வறட்சிக் காலகட்டத்தில் முழு சாப்பாட்டிற்கு இணையனது. நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 

படம் என்பது, இயக்குநர் எடுத்த வடிவத்தில் பார்த்தும் கேட்டும் துய்க்க வேண்டியது.
HOW I ENDED THIS SUMMER / Dir: Aleksei Popogrebsky / Russia / 2010 / 124 Min


இயக்குநருடன் ஒரு நேர்காணல்


விருதுகள் மற்றும் விழா நுழைவுகள்டாரண்டுகள் மற்றும் தரவிறக்கங்கள் (எவ்வலவு வேலைசெய்யும் என்பத்ற்கு உத்திரவாதம் இல்லை.