Saturday, December 4, 2010

யாரோ ஒரு மனுஷன் [சிறுகதை]

கீய்ங்கீய்ங் கீய்ங்கீய்ங் ஏதோ குறுஞ்செய்தி. அசிரத்தையாக தலைமாட்டில் தடவி அரைத்தூக்கத்தில் மொபைலை எடுத்துப் பார்த்தார் ராஜ கோபால் ராவ்.

ஒரு பெண்ணிற்கு விபத்து. சோழிங்கநல்லூர் அருகில் இருக்கும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. எந்தப் பிரிவு ரத்தம் எனினும் பரவாயில்லை. பின்குறிப்பு: ராஜீவ் காந்தி சாலை, வேளச்சேரி போன்ற இடங்களில் உங்கள் நிறுவனம் / வீடு இருந்தால் அங்கே போவது சுலபம்.


திரும்ப ஒருமுறை படித்தார். கொஞ்சம் தள்ளிதான். 15 அல்லது 17 கிலோமீட்டர் இருக்கக்கூடும். யாரோ பாவம். சனி ஞாயிறு விடுமுறையும் கூட. அந்த நம்பருக்கு அடித்தார். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் சொன்னது. அந்த நம்பர்களுக்கு அடித்தாலே இப்படித்தான். தனியாருக்கு போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டு விரிவாக்கம் என்கிற பேரில் கொண்டா கொண்டா குட்டிச்சுவரே என எல்லாரையும் கிட்டத்தட்ட இலவசம் என்கிற ரீதியில் இழுத்துப் போட்டாயிற்று. எப்போது அடித்தாலும் சற்று நேரம் கழித்து முயற்சிக்கவும்.

முட்டியது எழுந்து போய்விட்டு பாத்ரூமில் காலலம்பி ஹாலுக்காய் வந்தார். மந்தகதியில் ஹேமக்கில் நைட்டிக் கால்கள் எட்டி எட்டிப் பார்த்தன. பின்னணியில் காற்றசைத்த இலைகளின் இடைவெளிகளில் எதிர் ப்ளாக்கு இங்குமங்குமாய் தென்பட்டது. அவ்வப்போது ஹேமக்கின் அசைவில் புத்தகமும் முகம் காட்டியது. அந்தக் கன்னடப் புத்தகத்தை எத்துனை முறைதான் படிப்பாள். சரி அவளும் என்னதான் செய்வாள் பொழுதைத் தள்ளியாகவேண்டி இருக்கிறதே. மத்தியானம் தூங்கினால் ஸ்தூலப்பட்டுப் போய்விடுவோம் என்கிற பயம். கல்யாணம் ஆகும்போதே ஒன்றும் கொத்தவரங்காய் இல்லைதான். ஆனால் அதன் சந்தோஷத்திற்கு அப்படி சொல்லிவைத்தால் என்ன கெட்டுவிடப் போகிறது. சரி ஆமாம். அப்போது சன்னமாகத்தான் இருந்தாய். இப்போது. இப்போது என்ன கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறாய். இது ஒரு குறையா. நாற்பது வயதிற்கு, இல்லை இல்லை முப்பத்து ஒன்பது வருடம் எட்டு மாதம் 22 நாளுக்கு இது ஒன்றும் குறையும் இல்லை குண்டும் இல்லை.

விளக்குப் போட்டுக் கொள்ளாமல் படித்து ஏன் கண்ணைக் கெடுத்துக் கொள்கிறாய்.

ஹேமக்கைப் பிடித்து நிறுத்தி புத்தகமும் கையுமாய் எழுந்துவந்தாள்.

காபி போடவா.
இன்னும் சற்று நேரம் வேண்டுமானால் ஆகட்டுமே.

பால்கனிக்கு வந்தார். எட்டிப் பார்த்தார்.

ஹாய்
ஹாய் அங்கிள். அங்கிள் ஒய் டோண்ட் யூ வியர் சம் க்ளோத் அண்ட் கம்.
ஹஹ்ஹா ஹஹ்ஹா. நன்றாக வேண்டும். நானும்தான் எத்துனை தடவை சொல்வது. வெளியில் போய் நிற்கையில் சட்டையோ டி ஷர்ட்டோ போடாமல் வெற்றுடம்புடன் நிற்காதீர்கள் என்று.
நீ சமையல் கட்டிலேதானே இருந்தாய். அங்கு வரைக்கும் கேட்டதா என்ன.

உள்ளே வந்தபடி கேட்டார்.

சரியாகப் போயிற்று. பின் ப்ளாக்கில புதிதாகக் குடிவந்தவள் சமையல் கட்டிலிருந்து பார்த்து சிரிக்கிறாள். ஐஷூவின் குரலுக்கு என்ன குறைச்சல்.

புத்தியிலும்தான் என்ன குறைச்சல். கீழ் வீட்டுக் குட்டி.  பக்கையாக கண்ணாடி போட்டுக்கொண்டு அடிக்கொரு தடவை இடதுகையால் அதைத் தூக்கி தூக்கி விட்டுக் கொள்ளும். பத்துகூட நிரம்பி இருக்குமா என்பது சந்தேகம். அப்படி ஒரு பேச்சு. ஈஷிக்கொள்ளும் படியான கருப்புதான். என்ன ஒரு லட்சணம். உண்மையில் பார்க்கப் போனால் கருப்பாக இருப்பவர்களில் மூக்கும் முழியும் கொஞ்சூண்டு திருத்தமாக இருந்துவிட்டாலே போதும். லட்சணம் எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டுவிடுகிறது. குழந்தைகளில்  கருப்பென்ன வெளுப்பென்ன எல்லாமே கொள்ளையடிக்கின்றன.

கொண்டுவந்து கொடுத்த டி ஷர்ட்டைப் போட்டுக் கொண்டிருக்கையில், அவள் விளக்குப் போட்டாள். வெளியில் பூசியிருந்த மாலையின் மங்கல் இருட்டுக்குத் தாவி  விட்டிருந்தது.

சமையற் கட்டிலிருந்து தாமரைத் தண்டுத் திரி விளக்கை எடுத்துக் கொண்டு பீரோ இருந்த ரூமுக்குப் போனாள். கதவு திறக்கும் சத்தம் கடக்கு புடக்கு எனக் கேட்டது. நல்ல பீரோ வாங்க வேண்டும். வாங்கலாம்தான். கல்யாணமான உடனே வாங்கியது. பூட்டு மட்டும் ஒரிஜினல் கம்பெனி அய்ட்டம்தான் போடுவோம் சார் என்றான். ஆனால் வந்து இறங்கியதுமே கடக்கு புடக்கு. அவள்தான் சமாதானப் படுத்தினாள்.  சண்டைபோட்டுப் பணம் வாங்கலாம். சாதிக்கப்போவது என்ன? ஒரிஜினல் காட்ரெஜ் வாங்குமளவிற்குப் பணம் இருக்கிறதா? எங்கே தலைக்குமேல் கடன்தான் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கான கடன். கல்யாணம் பண்ணிக்கொள்ள ஒரு ஆணுக்குக் கடன் ஆகுமா. விசேஷ ஜாதகமாய் இருந்தால் கல்யாணமே ஆகாமல் கடன் மட்டுமே ஆகவும் கூட வாய்ப்பிருக்கிறது.

காப்பியை வைத்து எவ்வளவு நேரம் ஆகிறது.

டம்ளரில் மட்டுமே சூடு இருந்தது. பக்கத்தில் செல் ஃபோன். தள்ளி வைத்தார். இதில் ஒரு மெசேஜ். ரத்தம் கேட்டு.

கடைசியாக ரத்தம் கொடுத்தது எப்போது?
ஆஃபீஸ்காரர் ஒருத்தர்... அவன் கூடப் பாவம் சின்னப்பையன்...
ஆமாம் பத்ரிக்காகக் கொடுத்தது.
மூன்று மாதம் ஆகி விட்டதா?
சரியாப் போச்சு. ஆறு மாதமே ஆகியிருக்கும். மார்ச்சில் ஒரு வெள்ளிக்கிழமை. வரும் போது தாமரைத் தண்டுத் திரி வாங்கி வந்தீர்களே! என்ன ஆயிற்று?
இல்லை ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது. யாரோ ஒரு பெண்ணுக்கு ரத்தம் வேணுமாம்.
யாரு? ஆஃபீஸா?
இல்லையில்லை யார்கிட்டேயிருந்தோ மெசேஜ்.
எந்த ஹாஸ்பிடல்?
சோழிங்க நல்லூர் பக்கத்தில்
ஆமாம் அம்மா வீட்டிற்குப் போகும்போது பார்த்திருக்கேன். ஓ கட்டி முடித்தே விட்டானோ. பெரூசு.
ஒரு நடை போய்விட்டு வரலாமாவென்று பார்க்கிறேன்.

பர்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள். தனியாக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும்.

இது எதற்கு? இருக்கட்டும். பர்ஸ்ஸிலேயும் இருக்கிறது. எதற்கும் இருக்கட்டும்.

ஹலோ..

உங்க ஹாஸ்பிடல்ல, எமெர்ஜென்ஸி வார்டில் ஒரு பேஷண்டுக்கு ரத்தம் வேணும்னு மெசேஜ் வந்திருக்கு.

இல்லையில்லை. உங்க ஆஸ்பிடல் குடுத்த மெசேஜ் இல்லை. ஆனா பேஷண்ட் உங்க ஆஸ்பிடல்லதான் அட்மிட் ஆயிருக்காங்க.

வார்ட்டெல்லாம் தெரியாதும்மா. பேஷண்ட் பேரு கூட ...


காண்டாக்ட் நம்பர் கெடைக்குமா!


ஒரு நிமிஷம்...

மனைவி குட்டை நோட்டை நீட்டினாள்.

ம். சொல்லுங்க...

குறித்துக் கொண்டார்.

ரிங் போய்க்கொண்டே இருந்தது. வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறான் போலும்.

சம்பந்தப்பட்ட ஆளிடம் பேசாமல் அவசரக்குடுக்கையாய் ஓடக்கூடாது. வயதின் காரணமான ஞாபக மறதி கொஞ்சம் படிய ஆரம்பித்திருந்தது எனினும், சற்று முன்ஜாக்கிறதைக்காரர்தான். பல மருத்துவமனைகள் ரத்தத்தை இலவசமாக பெற்றுக் கொண்டு நோயாளிகளிடம் காசுக்குக் கொடுக்கின்றன. நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனைகள் மோசமான நட்சத்திரேசர்கள்.

பத்ரிக்காகக் கொடுத்துவிட்டு வந்தபின், சரியாக 90வது நாள் அந்த அதிஉயர் நட்சத்திர மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைத்தது. வார்த்தைகளை அசையசையாய் அழுத்திப் பேசிய ஆங்கிலம், டோஃபல் முடித்து, விசாவிற்காக் காத்திருக்கிறது போலும்.  

ரத்தம் வேண்டி இருக்கிறது.
அப்படியா யாருக்கு.
மன்னிக்கவும் சர், அந்தத் தகவல் உடனடியாகக் கைவசம் இல்லை.
என்ன க்ரூப் வேண்டும்.
தாங்கள் ஏ பாஸிட்டிவ் அல்லவா. அதுதான் தேவைப்படுகிறது.
அட என் ரத்தத்தின் குரூப் கூட சொல்கிறீர்களே. ரெக்கார்டில் இருக்கோ?
ஆமாம் சர். டேட்டா பேஸில் இருக்கிறது.
ஓ அப்படியா. சரி, நான் ரத்தம் கொடுத்தால் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?
சர்..
இல்லை நான் இலவசமாகக் கொடுப்பது, எந்தக் கட்டணமும் இன்றி, இலவசமாகவே நோயாளியை சென்றடையும் என எழுத்தில் உறுதியளிப்பீர்களா? ஏனம்மா நான் கொடுத்தது என் நண்பனுக்கா இல்லை ஹாஸ்பிடலுக்கா?

தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னதான் அயல்நாட்டு நாக்காக மாறிவிடத் துடித்தாலும் ரத்தம் நம்மூர் இல்லையோ!

ரத்தம் முறையாக சென்றடைவதற்கு இன்னாருக்காக எனப் பெயர் குறித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அது நோயாளியின் பொறுப்பாளருக்கு தெரியும், என்பது மருத்துவமனைக்குத் தெரியவேண்டியதும் மிக அவசியம். சாப்பிட்ட பில்லை சரி பார்ப்பது தவறில்லைதானே. சரிபார்க்கப்படும், என்கிற சிறு தடுப்பான் பல தவறுகளுக்கான சபலங்களைத் தடுக்க வல்லது அல்லவா.

யாரையும் நம்புவதற்கில்லை. தயிரை நீர்மோராக்கும் தனியார் ரத்த வங்கிகள் கூட இருக்கிற காலம். 97 வாக்கில் அலுவலக நண்பன் அவனது சொந்த தம்பி நடத்தும் ரத்த வங்கி பற்றிப் பெயர் தவிர்த்துக் கூறிய தகவல். இப்போது அவனே இல்லை. அவன் தம்பி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறான், இந்தப் பரந்து விரிந்த பிரம்மாண்ட நகரில் எங்கோ ஓரிடத்தில். எந்த நீரைக் கலந்துகொண்டு இருக்கிறான்? பாத்ரூமில் வரும் உப்புத் தண்ணிரா, மெட்ரோ வாட்டரா இல்லை கொஞ்சம் கரிசனத்தோடு கேன் வாட்டரா? எதையாவது கலக்கி, டம்ளர் டபராவாக வேண்டும். சில்லறை நோட்டானால் போதும், வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை என்று ஆகிவிட்ட பைசா உலகம். பைசாச உலகம்.

முன்பு முயற்சித்த நம்பரிலிருந்து மிஸ்டுகால். அடித்த சத்தமே கேட்கவில்லை. இல்லை தாம்தான் கவனிக்கவில்லையோ? சரி போ அவஸ்தையில் இருப்பவன். கூப்பிட்டால் குறைந்தா போய்விடப் போகிறோம்.

நான் அவங்க ஹஸ்பெண்டுதான் சார் பேசறேன்
இங்கே அண்ணாசாலையில ESI ஆபீஸ்லதான் சார் இருக்கேன்.
நீங்க பெஸண்ட் நகர்லேந்து அங்க வரதுக்குள்ள வந்துடுவேன் சார்.
சோழிங்க நல்லூர் வந்துட்டு ஒரு மிஸ்டுகால் குடுங்க சார்

ESI என்றால் இவன் மாநில அரசு ஊழியனா. இல்லை தனியாரா? ராஜீவ் காந்தி சாலை என்றால் ஐடி கம்பெனியாக இருக்க அல்லவா வாய்ப்பு இருக்கிறது. மாநிலமும் மென்பொருளும் காதல் திருமணம் போலும். தேசலான சித்திரம் உருவெடுக்கலாயிற்று. இரண்டு பெயர்களும் ஒட்டவில்லையே உள்ளூர சிறிய குறுகுறுப்பு.

போவதென்று முடிவெடுத்தால் சட்டென்று கிளம்பவேண்டும். இங்கேயிருந்து இருபது கிலோமீட்டராவது இருக்குமில்லையா. போய்த் திரும்ப ஒன்பதாயிடும்.

பேசியபடி காபி குடித்த டம்ளர் சமையலறைக்குப் போயிற்று.

ராஜீவ் காந்தி சாலையின் எதிர்மருங்கில் வண்டிகளின் நத்தையடி நகர்வு. ஏழரை மணி முன்னிரவில் சாலை ஜெகஜ்ஜோதியாய் இருந்தது.

சோழிங்க நல்லூர் சிக்னல் திரும்பியதுமே, தொலைதூர இருட்டில் வண்ண ஒளியெழுத்துக்களால் வானில் ஒட்டவைக்கப்பட்டு இருந்தது மருத்துவமனை. அகல நெடும் பாதையிலிருந்து இடப்பக்கம் திரும்பிய இருட்டுச் சாலை வெளிச்சத் திப்பிகளில் நீண்டு கிடந்தது. நடந்து வந்தால் நெடுநேரமாகும். தனியார் பாதை முடிகிற இடத்தில் வாகனக் குறுக்குக்கம்ப வரவேற்பு. வண்டியை ஓரமாய் விடச்சொன்னான் அங்கிருந்த காப்பாளன். பேரேட்டை நீட்டி சுய விபரம் பதிக்கச் சொன்னான். அவன் அருகில் கிளம்புமுகமாய் பைக்கில் நெடுக உட்கார்ந்திருந்தவர்,

விபரத்தைக் கேட்டு நீங்க எழுதணும். கார்ல வரவங்க இறங்கி வந்து எழுதுவாங்களா?

ராஜ கோபால் ராவின் பர்முடோஸும் வலக்கையில் ஒளிர்ந்த காப்பும் அவர் நிறமும் பைக்கைக் காராகக் கற்பனித்து விருந்தோம்பல் பற்றிக் கூடுதல் கவலைகொள்ள வைத்துவிட்டிருக்க வேண்டும். கேட்டு எழுதிக் கொண்டு வழி கூறினான்.

விஸ்தார அடுக்குகளாய் கோடிகளில் விரிந்து கிடந்தது மருத்துவமனை.

ரத்த வங்கியில் இருந்தவன், எட்டுக்கும்மேல் ஆகி விட்டதே ஏழு மணிக்கே மருத்துவர்கள் போய்விட்டு இருப்பார்களே எனத் தயங்கினான். பரவாயில்லை நாளை பகலில் வருகிறேன் எனச் சொன்னார் ராவ். அவர் முகத்துப் புழுதியை படித்திருக்க வேண்டும் அவ்ன். எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டான். இடம் சொன்னார்.

தகவல் படிவத்தைக் கொடுத்தான். முகமறியா நோயாளியின் பெயரை மட்டுமே யோசிக்காமல் எழுத முடிந்தது. தம்மைப் பற்றி டிக்கடிக்க வேண்டிய தகவல்கள் நிறுத்தி நிதானித்து சுய பேரேட்டைத் திருப்ப வைத்தன. திருமணத்திற்குப் பின் தின்ற விதவிதமான வண்ண வடிவ மாத்திரைகள் பொய்த்த ஜாதகத்தைப் புரட்டியபடி புன்னகைத்து மறைந்தன.

சரிவுப் படுக்கையில் சாயப் போகையில் அவர் பெயரை விசாரித்தபடி ஒருவன் வந்தான். செல்ஃபோன் பேச்சில் உருவாகியிருந்த அனுமான சித்திரம் கசங்கிற்று. அவனது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன, முடியும் கலைந்திருந்தது. அயர்ண் பாக்ஸ் பார்த்திராத சட்டை. செருப்பு தாண்டி தரை சிராய்த்த சாதாரண ஜீன்ஸ். முதல் பார்வைக்கு மாநில அரசு ஊழியனாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் கடைநிலை ஊழியன் அல்லது ஏவலனாகவே இருக்கவேண்டும்.

அவங்க எங்க வேலை பார்க்கறாங்க?
சொன்னான்.
என்னவா வேலை பாக்கறாங்க
ஹவ்ஸ்கீப்பிங்.
காண்ட்ராக்டா?
ஆமாம் சார்.
என்ன ஆச்சு?

ரத்தம் ஏற்றிக்கொள்ளப் போகிற பெண் ஒரு ஒப்பந்த வேலையாள். ஸ்டூல் போட்டு ஜன்னல் பக்கம் நின்றபடி சீலிங்கில் வேலை பார்க்கையில், இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டிருக்கிறாள். இடுப்பில் 4 எலும்புகள் முறிந்துள்ளன. இரண்டு முறிவுகளுக்கு ஏழுமணிநேர சர்ஜரி, சற்று முன்புதான் முடிந்திருக்கிறது.  தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

ரத்தம் எடுப்பதற்கான ஆயத்தங்கள் துரிதப்படுவது கண்டு வெளியில் இருப்பதாய்க் கூறி அவன் வெளியேறினான்.

இடதுகை நடுவிரலில் ஊசி குத்தி, ஒத்திக் கொண்டு போய், சுவரோரம் இருந்த கருவியில் வைத்துவிட்டு வந்தான் குருதி வங்கி உதவியாளன்.

என்னப்பா இது. ஐடி கம்பெனின்னதும் என்னவோ ஏதோன்னு பார்த்தா பாவம் காண்ட்ராக்ட் லேபரர். பேர் வெக்கறதுல ஒன்னும் கொறைச்சல் இல்லை. பேரப் பாரு, ஹவுஸ்கீப்பிங்காம்.

முறுவலித்தான்.

வேலைக்கு மட்டுமன்று, பொதுவாகவே மனிதர்கள் பொதுப் பெயர்களுக்குள் புகுந்து கொள்ளத் தலைப்பட்டு விட்டனர். அடையாளங்கள் அழித்த பொதுப் பெயர்கள். அடையாளங்கள் அவமானமாகக் கருதப்படுவதால் அழிந்து கொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. தெருப்பெயர்களில் தொடங்கி இடப்பெயர்கள், ஊர்ப்பெயர்கள், தனிப்பெயர்கள் வரை. பெயருக்கு பதிலாக நம்பர் அமலுக்கு வரவும் கூடும். கோல் வைத்துக் கொண்டு சீருடையில் துடைத்தாலும், ஜன்னலோரம் ஸ்டூலேறி சீலிங்கிற்கு ஒட்டுப் போட்டாலும் மொட்டையாக ஒரு பெயர் ஹவ்ஸ்கீப்பிங். வேலையின் பெயரை அழிக்கலாம். வேலை இருந்துகொண்டுதானே இருக்கிறது. பெயர் மாறி விட்டதில்தான் என்னவொரு சாதனைப் பெருமிதம். அடப்பாவிகளா. நிரந்தர வேலைகளை நிர்மூலமாக்கி நாடே குத்தகைக்குப் போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த ஹாஸ்பிடலை எப்படிப்பா தாங்குவாங்க இவங்க?

ரெண்டாவது மாடிலேந்து விழுந்திருக்காங்க ப்ச்...அதுதான்...

பொட்டில் அறைந்தது போல் இருந்தது அவன் வார்த்தை. என்னதான் சொன்னாலும், தாம் அடையாள அட்டையில் அதிகாரச் சீருடையணிந்த குமாஸ்தாதான்.

அவன் உதவியாளன்தான் எனினும் மருத்துவத் தொழில்நுட்பத்துடன் உரசிக்கொண்டு இருப்பவன்.

மனிதர்களின் இயல்புகளை கவலைகளை அவரவர் செய்யும் தொழிலும் வருமானமுமே தின்னத் தொடங்கி விட்டன.

தம்பி டோனர் இல்லாமல், ஹாஸ்பிடல்ல நீங்களாவே கொடுக்கற ரத்தத்துக்கு சார்ஜ் உண்டா?
ப்ளட்டு ஃபிரீதான். டெஸ்ட்டிங் சார்ஜ் உண்டு சார்.
யூனிட்டுக்கு எவ்ளோ?
அது தெரியலை சார் பில்லிங் டிபார்ட்மெண்ட்லதான் தெரியும்.
சமர்த்தன்.
டோனர் குடுத்தாலுமா?
யார் குடுத்ததா இருந்தாலும், அப்பிடியே குடுக்க முடியாது இல்லிங்களா. டெஸ்ட் பண்ணிதானே ஏத்தமுடியும். டெஸ்ட்டிங் சார்ஜ் கண்டிப்பா உண்டு சார்.
சரிதான். இவ்ளோ எக்யூப்மெண்ட்ஸும் ஓவர்ஹெட்ஸும் ஏதாவது ஒரு ஹெட்ல ஏறிதானே ஆகணும்.
புன்னகைத்தான்.

ரப்பர் பந்தைக் கையில் கொடுத்து, மேற்கையில் சுருட்டிய பட்டையில் காற்றேறிக் கவ்வ கைக்குழியில் புடைத்த நரம்பில் ரத்த சேமிப்புப் பையிலிருந்து புறப்பட்ட பாம்பு கொத்தி இறங்கிற்று. கையகப்பட்ட பந்தின் கசக்கலில் வேகம் கூடி உறிஞ்சிக் குடிக்கப்பட, இயந்திரத் தாலாட்டில் இசைவாக பெருக்கத் தொடங்கிற்று உதிர சேமிப்புப் பை.

சுவரில் மணி பார்த்தார். கைப்பந்தைக் கொஞ்சம் துரித கதியில் அழுத்தி அழுத்தி விடுவிக்கத் தலைப்பட்டார்.

சடுதியில் பை நிரம்பிற்று. ஊசியை உருவிக்கொண்டு, கொத்துப் பட்டிருந்த புள்ளியின்மெல் வங்காளப் பொட்டு போன்ற ப்ளாஸ்த்திரி ஒட்டினான்.

தம்பி, அலர்ஜி பத்தி கேட்டிருக்காங்களே கார்டுல? சாக்கடைத் தண்ணி, இல்லை வெறும் அழுக்குத் தண்ணி பட்டா கூட  கால்ல அரிக்கும். பரவாயில்லையாப்பா?

எப்போதும் இருக்குதா சார் அரிப்பு?
அழுக்கு பட்டா அரிக்கும். அதனாலதான் எப்பவும் ஷூ போட்டுப்பேன்.
சார் இது சீரியஸ் ஸ்கின் டிசீஸ் பத்தி கேக்கற கேள்வி உங்குளுது சாதாரண அலர்ஜியாக் கூட இருக்கும்.
ஓ அப்படியா... இல்லை... இதுக்கு முன்னாடி கூட குடுத்துருக்கேன்
அப்பறம் என்ன சார். 
இல்லை. ஒரு தடவை லையன்ஸ் கிளப்புலேர்ந்து வந்து ஆஃபீஸ்ல கேம்ப் நட்த்தினாங்க. அப்ப ஒரு லெட்டர் வந்துது. உங்களுக்கு ஹெப்பாட்டிடிஸ் பி இருக்கு. ஆனா பயப்பட வேண்டாம் சமயத்துல இப்புடி பாசிடிவ் காட்டும் எதுக்கும் டெஸ்ட் பண்ணிக்கிங்கன்னு. அதுக்காக இதைப் பொருட்படுத்தாமையும் இருந்துடாதீங்கன்னு...
டெஸ்ட் பண்ணினிங்களா. ரிஸல்ட் என்னானு சார் வந்துது.
நெகட்டிவ்னுதான் வந்திச்சி. ஒரு மாசம் கழிச்சி திரும்ப பண்ணிக்க சொல்லி இருந்தாங்க. ஆனா பண்ணிக்கலே.
அப்பறம் என்ன. எப்ப சார் இது?
93ல. அப்பறம் ரெண்டு மூணு தடவை குடுத்திருக்கேன்.
ரிப்போர்ட் எதாவது வந்துதா.
இல்லை.
அப்ப ஒண்ணுமில்லைன்னுதான் அர்த்தம். டெஸ்ட்ல எதாவது பிரச்சனைனா கண்டிப்பா கம்யூனிகேட் பண்ணிடுவாங்க. அதுக்குதான் அட்ரஸ் வாங்கறது. ஒண்ணும் கவலைப் படாதீங்க சார்.
அதெப்படி எப்பவாவதுன்னாலும் கூட இல்லாததை எப்படி இருக்கறா மாதிரி காட்டும்.
வெளில, நீடில்ல, இப்படி எங்கையாவது, கண்ட்டாமினேட் ஆகி இருக்கலாம்.

சற்று ஆறுதலாய் உணர்ந்தார். ஒன்றுமே இல்லை என நன்றாகத் தெரியும். வேளாவேளைக்குப் பசித்து சாப்பிட்டு இருந்து கழிக்கிறார். தூங்காமையின் சுருக்கமும் வயதின் உலர்ந்த வடுக்களும் தட்டலுக்குக் காத்திருக்கும் புழுதி போல உடலெங்கும் அப்பிக் கொள்ளத் தொடங்கி இருந்தன. தட்டதான் முடியவில்லை. முகம் பொலிவோடு இருக்கிறது, அதுவே, ஆரோக்கியத்தின் அடையாளம்தானே. மேலும் இந்தக் குருதி வங்கி உதவியாளனும் அச்சாரம் கொடுத்துவிட்டான்.

அவன் கொடுத்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டார். குளிர்பான அட்டை டப்பாவை  இடக்கையால் உறிஞ்சிவிட்டு கிளம்புவதாகத் தலையசைத்து முறுவலித்தார். அரைமணி நேரத்திற்கு, வலது கைக்கு அதிக சிரமம் கொடுக்க வேண்டாமெனக் கூறி பிளாஸ்திரியை அழுத்திப் பார்த்து அனுப்பி வைத்தான். லேசாக அவன் தோளைத் தொட்டுவிட்டுக் கிளம்பினார்.

அந்த அறையைவிட்டு வெளியில் வந்தார்.  விஸ்தாரமான உள் நடையோடைகள். இரவு பகல் வித்தியாசம் தெரியாத வெளிச்ச வெளி. முப்பதடிக்கு ஒரு நாற்சந்தி கொண்ட சலவைக்கல் பாதைகள். எங்கு நோக்கினும் குறுக்குமறுக்காய் ஏகப்பட்ட ஊழியர்கள் நடந்து கொண்டு இருந்தார்கள். வியாதியஸ்தர்கள் எல்லாம், அறைகளுக்குள் படுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களைப் பார்க்க வந்தவர்கள், பார்த்துக்கொள்ள வந்தவர்கள் கூட்டம் வராந்தாக்களில் குறைவாகவே இருந்தது. உறவினர்கள் உள்ளேயே தங்கிக் கொள்ள வசதி கொண்ட பெரிய அறைகள். இதைப் போலவே ஏதோ ஒரு அறையின் உள்தளத்தில், பொய்க்கூரை ஒட்டிக்கொண்டு இருந்திருப்பாளாயிருக்கும் குருதி வேண்டி படுத்திருக்கும் பெண். இதே போன்ற ஒரு பெரிய மத்திய குளிர்சாதன வசதி கொண்ட அல்லது வசதி செய்வதற்காக போடப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் பொய்க்கூரை. அயல் நாட்டிற்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கான கட்டிடம். எண்ணிறைந்த கோடிகளில் நடந்து கொண்டு இருக்கும் வர்த்தகம்.

எங்க இருக்கீங்க?
இங்கதான் சார் மெயின் எண்ட்ரன்சுல.

போய்ச் சேருகையில், முகப்பில் விளக்கணைக்கப் பட்டிருந்தது. ஹாஸ்பிடலின் உள்தெரு விளக்குகள் பளீரிட்டுக்கொண்டு இருந்தன. இந்த விளக்குகளின் வெளிச்சமும் கூட கட்டணமாய் இவன் தலைமேல் அல்லவா விழும். போய் வண்டியை நிறுத்த ஒரு கூட்டமே எழுந்தது.

எந்தெந்த எடத்துலைங்க அடி பட்டிருக்கு?
இந்தப் பக்க இடுப்புதான் விழும்போது தரைல பட்டிருக்கு. அதுலதான் நாலு எடத்துல எலும்பு முறிஞ்சிருக்கு சார். ரெண்டு ஆப்பரேசன் முடிஞ்சிருச்சி. இன்னும் ரெண்டுக்கு எப்ப பண்ணுவாங்கன்னு தெரியலை சார்.
ஹாஸ்பிடல் செலவெல்லாம் எப்படிங்க?
காண்ட்ராக்ட்காரரும் கம்பெனி HR சாரும் வந்துட்டுப் போயிருக்காங்க. எதுக்கும் கவலைப் படவேணாம்னு சொல்லி இருக்காங்க சார்.
ESI யாருக்கு?
அவங்களுக்குதான் சார். அதுக்குதான் மவுண்ட் ரோடு போயிருந்தேன்.

ESI இவ்வளவு செலவு ஏற்குமா? சின்ன வயதுப் பையன். அது இன்னும் சின்னதாக இருக்கும்.  ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாய் குஞ்சு குளுவான்களுடன் பெரிய கூட்டமே வந்திருந்தது.
இல்லை சார் வேண்டாம்.
பின்னால் நகர்ந்தான்.
இல்லைங்க ஃப்ரீயா கெடைக்கற ரத்தத்தை, டெஸ்ட்டு பண்ணவே சார்ஜ் பண்ணுவாங்க. டெஸ்ட் பண்ணாம அப்படியே குடுக்க முடியாது இல்லீங்களா!
ஆமா சார். ஒன்ஃபைவ் போட்டுருக்காங்க.
பதினைஞ்சாயிரமா?
இல்லை சார் ஆயிரத்து ஐநூறு ரூபாய்.
அப்பறம். அது எத்தனை யூனிட்டுக்குங்க?
தெரியலை சார்.
எவ்ளோ பெரிய ஹாஸ்பிடலு, எதாவுது ஒரு பேர்ல, போட்ட பணத்தை எடுத்துதானே ஆவணும். எல்லாம் நம்ம தலைலதாங்க விழும்.
இல்ல சார் அதெல்லாம் ESIயும் காண்ட்ராக்ட்டரும் பாத்துக்குவாங்க சார்.
கரெக்டுங்க. கம்பெனி கூட, இருக்கறதுக்குள்ள கொஞ்சம் நல்ல கம்பெனிதான். ஆனா இந்தமாதிரி சமயத்துல ஓராயிரம் செலவிருக்கும். எதுக்காவுது உபயோகப்படும். வெச்சுக்குங்க.

வீட்டுக்கு வந்து சொன்னார்.

பக்கத்தில் ஏதாவது ஏடிஎம்மில் எடுத்து இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே.
நீயும் வந்திருக்கலாம். வெளியில் போய்விட்டு வந்தது போலவும் இருந்திருக்கும்.
நீங்கள் கூப்டீர்களா? நான் ஓ பாஸிட்டிவ் யூனிவர்சல் டோனராச்சே!
இன்ஜெக்‌ஷன் மெடிகேஷன் என்று ஏகப்பட்ட கேள்வி கேட்பானே என்று பார்த்தேன்!
எவ்வளவு டைம் கேப் சொல்கிறான்.
பெரும்பாலும் எல்லாக் கேள்வியுமே ஆறுமாதம் ஆயிற்றா ஒரு வருடம் ஆயிற்றாதான்.
அப்புறம் என்ன ஐந்து வருஷம் ஆகிவிட்டதே.
நாளைக்குப் போகலாமா?
ஓ எஸ். தீபாவளி முறுக்கு? சரி வந்து பண்ணிக்கொள்கிறேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது, அடுத்த நாள்.

ரத்தம் கொடுப்பது, பேசப்பட வேண்டிய விஷயமில்லை, செயல்படுத்தப்பட வேண்டியது. நேற்றே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அவளுக்கு உள்ளூர வருத்தம் இருப்பதை வெளிப்படையாகக் காட்டியது முகம், பேச்சில் பாதிகூட வரவில்லை. பெண்களின் தயவிலேயே பெரும்பாலான குடும்பங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பாவம் அவள், படித்த கன்னட நாவலையே திரும்பத் திரும்பப் படித்தபடி நாளைக் கடத்தியாக வேண்டும்.

பத்ரிக்குக் கொடுத்த போது எதையுமே படிக்காதே, முதல் கேள்விக்கு எஸ் டிக்கடி மீதி அத்துனைக்கும் நோ போடு என்றனர் அலுவலக நண்பர்கள். அவசரம். அவரது ரத்தத்தை அப்படியே எடுத்துக்கொள்ளப் போவதில்லை உட்கூறுகள் மட்டுமே தேவை. ஊற்ற ஊற்ற உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது நோய். இருந்தும் அவன் இருக்கும் வரை ஊற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஊற்ற ஊற்ற அவன் இறந்து கொண்டு இருந்தான். இது அவனது அலுவலக நண்பர்கள், அம்மா, மனைவி ஏன் அவனுக்கு உட்பட அனைவருக்கும் தெரியும். வரவேற்பறையின் இணைப்பு நாற்காலியில் அமர்ந்து ஒரு ஓரமாய் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்த முதிர்ந்த பெண்மணியைக் காட்டி பத்ரியின் தாய் என தழைத்துக் கூறினான் சந்திரமெளலி. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபித்துக் கொண்டிருந்தார் போலும். அந்த நிலையிலும் ஸ்வாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். முட்டுச்சுவர்தான் அதற்காக, முழிக்காமல் இருக்க முடியுமா?

சிகிச்சைக்குப் பிறகு அன்றுதான் அந்தக் கேள்விகள் அவரை நிறுத்தி நிதானித்துப் படிக்கச் செய்தன. நிம்மதி குலைக்கும் அளவிற்கு அந்தக் கேள்விகளில் ஏதுமில்லை எனினும் படித்த பின்னரே சற்று ஆசுவாசமாய் இருந்தது. இருவரிடமுமே அசாதாரண பிரச்சனைகள் ஏதுமில்லை என்றே எல்லா இடத்திலும் சொல்லி இருந்தார்கள். ஆனால் இருவரும் தின்ற மாத்திரைகள்? குறிப்பாக அவளுக்கு போடப்பட்ட ஊசிகள்? ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒரு ஜென்மத்திற்குப் போதுமான தண்டனை. சிகிச்சை பலனின்றி போனதுகூட போகட்டும், குறை நாட்களுக்குப் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்க விட்டால் போதும், அதுவே பெரிய பாக்கியம்தான்.

மறுநாள் மதியம் தொலைபேசியில் விசாரித்தார்.

அவள் அவனிடம் மொபைலில் பேசி இருக்கிறாள். வலி கொஞ்சம் குறைந்திருப்பதாகத் தெரிவித்தான். அவன் தற்போது கேகே நகரில் ESI காரியமாகவே இருக்கிறான். இதுதான் இறுதி அலுவலகம், அவர்கள் கொடுக்கும் ஆவணங்களைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்ப்பித்துவிட்டால் போதும். மீதியை காண்ட்ராக்டரும் கம்பெனியும் பார்த்துக் கொள்வார்கள். அவன் குரலில் முந்தின தினத்தை விட சற்று உற்சாகம் கூடி இருந்தது. அவன் எங்கே வேலை செய்கிறான், மாநில அரசா? மனைவிக்கு அடி பட்டதற்காக அவனுக்கு ஏதும் விசேஷ உதவிகள் உண்டா? இல்லையில்லை. அவன் தேனாம்பேட்டையில் ஒரு ப்யூட்டி பார்லரில் வேலை செய்கிறான். குறுஞ்செய்தி அனுப்பியது யார் என அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

மனைவியுடன் அன்று போகப்போவதாகத் தெரிவித்தார்.

வண்டியில் போகும்போது மனைவியிடம் கேட்டார்.

குறுஞ்செய்தி அனுப்பியது யாராயிருக்கும்.
அங்க வேலை பாக்கற யாரோ ஒரு மனுஷனா இருக்கும்.

ராவ் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தார்.

கடந்துகொண்டிருக்கும் கட்டிடங்களைப் பார்த்தபடி இருந்தவள், இவரை நோக்கி என்ன என்பது போல் பார்த்தாள். ஒன்றுமில்லை எனத் தலையாட்டினார். ஆனால் மருத்துவமனையை அடையும் வரை சாலையையும் பக்கவாட்டுக் கண்ணாடியில் கொஞ்சம்போலத் தெரிந்த அவளையும் அவளுக்குத் தெரியாதபடி, மாறி மாறிப் பார்த்தவண்ணம் வண்டியோட்டிக் கொண்டிருந்தார் ராஜ கோபால் ராவ்.


அவளது ரத்தம் ஓ பாஸிட்டிவ் என்று தெரியவந்ததும், படிவம் கூடக் கொடுக்கவில்லை. தங்களிடம் தேவைக்கும் மேல் ஓ பாஸிட்டிவ் இருப்பதாகத் தெரிவித்தார்கள். அவள் வாடிப் போய்விட்டாள். முந்தைய தினம் முறுவலித்தபடி பொறுமையாய் பதில் சொன்ன உதவியாளன் அப்போது ட்யூட்டியில் இல்லை, அடுத்த ஷிஃப்ட் போலும். தனது வீட்டிலோ அறையிலோ தூங்கிக் கொண்டு இருப்பானாய் இருக்கும். கதவைத் திறந்து கொண்டு வராந்தாவிற்கு வந்தனர்.

முதல் முதலாகக் கிளம்பி வந்தேனல்லவா. முதல்முறையாக கொடுக்கிறாள் என யோசிக்கிறார்கள் போலிருக்கிறது. நான் கேட்டு ஆசைப்பட்டு என்ன நடந்திருக்கிறது. பாழாய்ப் போன கடவுளைத் தினம் தினம் கும்பிட்டுதான் என்ன பிரயோஜனம். என்னிடம் இருந்து ரத்தம் கூடத் தேவையில்லை இந்த உலகத்திற்கு. முணுமுணுப்பாய்ப் புலம்பத் தலைப்பட்டாள்.

இல்லை இல்லை ஏதாவது வழி இருக்கும், கொஞ்சம் இரு முயன்று பார்ப்போம்.

அவர் ஆற்றாமையுடன் அட்மினுக்குப் போனார். சீருடையணிந்து கம்ப்யூட்டரை முறைத்துக் கொண்டு இருந்தவனிடம் விஷயத்தைச் சொல்லி முக்கிய மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்றார். அவன் ஒளித்திரையில் இருந்து கண்ணெடுக்காமல், எதிர்சாரி கெளண்டரில், சீருடை அணியாத ஒருவருக்காய் கைகாட்டி, அவர்தான் சிறப்பு உதவியாளர்  கேளுங்கள் என்றான்.

18 கிமீ தொலைவிலிருந்து வந்திருக்கிறோம், ரத்தம் எடுத்துக் கொள்ள இயலாதென்கிறார்கள். அதைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய முடியுமா பாருங்கள் என நயந்தார் ராவ். உதவியாளர் தலைமைப் பெண் மருத்துவரிடம் உரையாடுவது புரிபட்டது. ஓ பாஸிட்டிவா? அதுதான் பெரும்பாலானவர்களிடம் இருக்கிற வகையாயிற்றே. ரத்த முகாம்களில் கூட அதுதான் அதிகமும் சேகரம் ஆகிறது. தேவைக்கும் அதிகமாக இருக்கையில் எப்படி எடுத்துக் கொள்வது?

தமது அலுவலக அடையாள அட்டையைக் காட்டலாமா என்று ஒரு கணம் தோன்றியது. பல சமயங்களில் பொது விஷயங்களுக்காக அதை காட்டி காரியம் தகைந்திருக்கிறது. 


சரி விடுங்கள் போகலாம் என்றாள் அவர் மனைவி, முறிந்த முகத்துடன்.

என்னடா உலகம் இது. ரத்தம் கொடுப்பதற்குக்கூட சிபாரிசோ அல்லது அதிகார பூச்சாண்டியோ காட்ட வேண்டுமா? இவ்வளவு அதிர்ஷ்டக் கட்டையாகவா ஒருத்தன் படைக்கப்பட்டிருப்பான். அல்லது ஒருத்தியோடு இணைக்கப்பட்டிருப்பான்.

வந்தது வந்தாயிற்று வழியில் ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டலில்  கொடுத்துவிட்டுப் போகலாமா?

கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்க இது என்ன பெருமாள் கோவில் பிரசாதமா? அதுதான் ஊரெல்லாம் என் ரத்தம் சீ படுகிறது என்று சொல்லிவிட்டார்களே, இன்னும் என்ன வேண்டும்.

ராஜ கோபால் ராவிற்கு, வீட்டைவிட்டுப் புறப்படுகையில் உதவப் போகிறோம் என்பதில், உள்ளூர ஏற்பட்ட கெத்தும் எந்தக் குறையும் இருக்க வாய்ப்பில்லை என உதவியாளன் கொடுத்த உத்தரவாதத்தினால் உண்டான உற்சாகமும் போன இடம் தெரியவில்லை. ஆஸ்பிட்டலில் இருந்து உன் ரத்தத்தில், இது நொட்டை அது நொள்ளை என்று லெட்டர் ஏதும் வராமல் இருக்க வேண்டுமே என பதட்டமாக இருந்தது.

ஆண்டவனே குறைந்த பட்சம் நான் கொடுத்த ரத்தமேனும்,  குற்றம் குறை ஏதுமின்றி அந்தக் குழந்தைக்குப் போய்ச் சேரட்டும், வெண்ணையில் உனக்கு ராஜ அலங்காரம் அணிவிக்கிறேன் என்று ஆள்வார்பேட்டை ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டவராய் வண்டியை எடுத்தார் ராஜ கோபால் ராவ்.

(நவம்பர் 2010)