Sunday, December 5, 2010

எழுத்துக் கலை - பூரண சிருஷ்டி

கிகுஜிரோ நந்தலாலா என்னாச்சு? 

இப்படி ஒரு Direct message sent by kavirajan (@kavi_rt) to you (@maamallan) on Dec 05, 3:57 PM.

அன்பான கவிராஜன்,

கிகுஜிரோவாவது நந்தலாவாவது:)))

தமிழ்ப்பறவை உதவியால ப்ரூஃப் பார்த்து ட்ராஃப்ட் புத்தகம் ஒரு வழியாக முடிந்தது என மனுஷ்ய புத்தரனுக்கும் தெரிவித்து இன்று கொடுப்பதாய்க் கூறினேன்.

எதற்கும் ஒரு கடைசி ரிவிஷன் எனப் புரட்டினால். ’இலை’ கதையின் மூன்றாவது பத்தி டைப் அடிக்கப் படவே இல்லை. நானும் பப்ளிஷிங்கின் ஆதார சூத்திரமான ”எதற்கும் நீ ஒரு முறை பார்” கடைப்பிடிக்காமல் பதிவேற்றி இருக்கிறேன். 

இத்துனைக்கும் எனது மூன்று புத்தகங்களையும் சொந்தமாக (நண்பர்களின் உதவியோடு)வெளியிட்டவன்.இது போக பிரமிளின் ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை (12 டிசம்பர் 1984) மற்றும் சுகுமாரனின் முதல் கவிதைத்தொகுதியான கோடைகாலக் குறிப்புகள் (மார்ச் 1985) ஆகியவற்றிற்குத் தயாரிப்பின் அனைத்துப் பொறுப்புக்களையும் (பிரமிளின் புத்தகத்திற்கு நிதி திரட்டுவது உட்பட) ஏற்றுக்கொண்டவன். 

அகநாழிகை பொன்.வாசுதேவனிடம் இருந்து தட்டச்சி இந்தக் கதை வந்ததும் பதிவேற்றும் பரபரப்பு. டைப்படிப்பது என்பது அச்சு கோர்ப்பதைவிட எந்த வகையிலும் பிழையின்மைக்கு உத்திரவாதம் அல்ல. இதிலும் மானுடப் பிழைகள் இருக்கும் என்கிற கணினி அறிவின்மை. 

ஆகவே ஒரு பத்தியே இல்லாமல் இலை பதிவேறி இருப்பது இப்போதுதான் தெரிய வந்தது.

ஃப்ர்ஸ்ட் ஷாட்டில் கறிவேப்பிலை மரம்

பிறகு லாங் ஷாட்டில் மாமியின் வீட்டு வெளிப்புறம்

கதையின் முதல் காட்சி எஸ்டேப்ளிஷிங் சீன். கதையின் முக்கிய பாத்திரங்கள் பெளதிக ரீதியில் துல்லியப் படுகிறார்கள். இதுதான் மூன்றாவது பத்தி

மாமி தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் கொண்டபடி, ஹைகிரி நந்தினி சொல்லிக்கொண்டு இருந்தாள். மாமா முன் ஹாலில் ஈஸிச்சேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். ரிடையர் ஆனதிலிருந்துதான் சாவகாசமாகப் பேப்பர் படிக்க முடிகிறது என்பதில் அவருக்குப் பெரும் திருப்தி.

இந்தப் பத்தி இல்லையென்றால் கீழ்க்காணும் தகவலுக்கு என்ன பொருள் இருக்கக்கூடும்.

அவன்  போனதும்  ’சில்லறைக்குன்னு  மொதல்ல  சொல்லுவன். தோ பறிச்சிண்டு  மீதி  தர்ரேம்பன். பறிச்சிண்டப்பறம்  அடுத்த  தடவை தர்ரேம்மான்னுட்டுப் போயேப் போயிடுவன். இந்த பிராமணருக்குப் புத்தி வாண்டோமோ’ என்று  தனக்குத் தானே பேசியபடி பாத்ரூமுக்குள் நுழைந்து சீயக்காய் போட்டு கொல்லைக் கதவுச் சாவியை எண்ணெய் போகத் தேய்த்தாள்.

சில்லறை மாற்றிவர கறிவேப்பிலைக்காரனை அனுப்பி அவன் திரும்பி வர ஆகும் டைம் கேப்பில்தான் அவள் மாமா பற்றிய புலம்பலுடன், சாவியை எண்ணேய் போகத் தேய்க்கிறாள்,  விடுபட்ட பத்தி இல்லை எனில் இது தேவையற்ற பத்தி ஆகிவிடும். ஒரே உபயோகம் கால இடவெளியை இட்டு நிரப்புதல். இதற்காக ஒரு பத்தி தேவையா? இந்தப் பத்தியின் முதல் எழுத்தை போல்ட் பண்ணினால் போதாதா என்ன?

அதேபோல அந்த பத்தி இல்லை என்றால்


’கொறஞ்சது இருபது ரூபாயாவது சம்பாதிச்சுடுவன் இன்னக்கி’ என்று முணுமுணுத்தபடி குளிக்க பாத்ரூமுக்குள் போனாள்.

தலையில் டவலைக் கட்டிக் கொண்டபடி பூஜை செய்து முடித்து சாப்பிட அழைத்தாள். தானும் ஒரு தட்டு வைத்துக் கொண்டாள்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டால்தானே தலைக்குக் குளித்து தலையில் டவல் கட்டிக்கொள்ளப் போகிறாள். 

மேலும் விடுபட்ட அந்தப் பத்தியில் மாமி ஹைகிரி நந்தினி சொல்லியபடி என்கிற உபரித் தகவல் வெள்ளிக்கிழமையைக் குறிக்கிறது அல்லவா.

மேலதிகமாக கதை முடிகிற பத்தியான 

காலையிலிருந்தே  ஈஸிச்சேரும்  பேப்பருமே  கதி  என்று  கிடந்தவர், அன்று முழுக்கவும்  அப்படியே  இருக்கத்  தீர்மானித்து  விட்டிருக்க வேண்டும். மாமி நகர்ந்ததும் கண்ணை ஒருமுறை கிறக்கத்துடன் திறந்து ஈஸிச்சேரில் லேசாக ஒருக்களித்து லகுவாகப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டார்.

இந்தப் பத்தியில் மாமா, ஈஸிச்சேர் இவற்றிற்கான அழுத்தம், அந்த விடுபட்டப் பத்தியான எஸ்ட்டாப்ளிஷிங் காட்சி இல்லையெனில் என்ன வெசேஷ அர்த்தம் கொடுத்துவிடக்கூடும்.

இதை என் வலைப்பூவில் படித்து இந்தப் பத்தி இல்லாமலேயே பாராட்டியவர்கள் பலர். அவர்களைக் குறை சொல்வதான அனர்த்தமாக்வோ அல்லது சுய தம்பட்டமாகவோ ஆகிவிடாது என்கிற நம்பிக்கையிலேயே இது எழுதப் படுகிறது.

எழுத ஆரம்பித்து வெளியான இரண்டாவது கதையில், கணையாழியில் வெளியான முதல் கதையிலேயே யார் இது எனக் கேட்கவைப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லையல்லவா?

ஓய்வு பெற்று தி.ஜானகிராமன் 82ல் கணையாழியின் நேரடிப் பொறுப்பேற்றார். அவரிடம் ”சரிவு” என்றொரு கதையைக் கணையாழி அலுவலகத்தில் வைத்துக் கொடுத்தேன். அங்கேயே படித்துவிட்டு. 

என்ன சார் இது 
ஏன் சார்
கதையா இது
.......
உங்க இலை பெரியவர்கள் எல்லாம் எங்கையோ இருக்கு. இது என்னதிது?
அப்ப இதை வேற ஏதாவது பத்திரிகைக்கு...

அதற்காகவே காத்திருந்தவர் போல டபக்கெனக் கையில் கொடுத்துவிட்டார். 

அப்போதுதான் தெரிந்தது என் எழுத்து பற்றிய தி.ஜாவின் அபிப்ராயம். இணையமா என்ன பதிவேற்றி இந்தப் பக்கம் திரும்புவதற்குள் ராம்ஜி_யாஹூவின் பின்னூட்டம் அறிய?
இலை வெளியானது 81 நவம்பர் அல்லது டிசம்பர் கணையாழி என நினைக்கிறேன். 

சிலந்தி வலை பின்னும்போது நம்மையா கவனிக்கிறது. அது தன்னையே கூடப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்பதால்தான் பொருட்படுத்தும்விதமாக அதன் சிருஷ்டி அமைகிறது போலும். 


இசைக்கலஞனோ எழுத்தாளனோ ஊடுபாவாய் இழைகளையும் நுட்பங்களையும் ஏகத்திற்கும் தூவிய வண்ணம் போய்க்கொண்டே இருக்கிறான். பாதையா பாறையா விளைநிலமா எங்கேபோய் விழப்போகிறதென்று அவனுக்கென்ன கவலை. அவன் கவலை எல்லாம் விருட்சத்தை உள்ளடக்கிய விதையா என்பது மட்டும்தானே.

வெளியில் தெரிவது கொழுக்கட்டை. உள்ளே இருப்பது பூரணம். பூரணத்தின் சூக்ஷமத்தில் அல்லவா இருக்கிறது சிருஷ்டியின் பூரணம்.