Saturday, December 11, 2010

நந்தலாலா

மிஷ்கின் என்கிற ஆர்வக்கோளாறான முட்டாள் கலைஞனுக்கு வாழ்த்துக்கள், சினிமா எடுக்கத் தெரிகிறது என்பதற்காக. கூடவே ஒரு வேண்டுகோள்: தயவு செய்து மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் படம் எடுக்கப் பார்க்கவும்.

கலையில் மூளையின் பங்கு கைத்தடிக்கு ஒப்பானது. அவ்வபோது உபயோகித்துக் கொள்ளலாம். நிரந்தரமான மூன்றாவது கால் ஆகிவிடக் கூடாது. ஊன்றுதடியே கால் என ஆகிவிட்டால் நிராதரவாக நிற்க வேண்டியதுதான், கலை நம்மைக் கைவிட்டுப் போய்விடும் தனக்கு நெருக்கமான உறவைத் தேடி.

நந்தலாலா நான் பார்க்கும் மிஷ்கினின் முதல் படம்.


கிகுஜிரோ டிவிடி வாங்கி ஏறக்குறைய ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிறது. புத்தக வேலை மட்டுமின்றி, வேண்டுமென்றே அதைப் பார்ப்பதை தவிர்த்தேன். காலக் கிரமப்படி அதை முதலில் பார்த்துவிட்டுதான் நந்தலாலாவைப் பார்த்திருக்க வேண்டும். கிகுஜிரோ பார்த்துவிட்டால், எங்கே நந்தலாலா பிடிக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தினாலும், பிடிக்காமல் போய்விடக்கூடாதே என்கிற ஆதங்கத்தினாலும் அதைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

நந்தலாலாவைவிட சிறந்த படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. பற்பல ஆண்டுகளுக்கு முன்னும், சமீப கடந்த காலத்திலும். ஆனாலும் இது முக்கியமான படம். இதைச் சுலபமாகச் சொல்ல விடாமல் ஏகப்பட்ட விஷயங்கள் தடுக்கின்றன்.

ஏதோ கணக்கு சூத்திரம் போல், இந்தப் படத்தை ஒரு படமாகப் பார்க்காமல் குறியீடுகளாகப் பார்ப்பது மகா கொடுமை.

அதைவிடக் கடுப்படிக்கிற விஷயம் மிஷ்க்கினே இது அதைக் குறிக்கிறது இன்னொன்று உதைக் குறிக்கிறது எனக் குதறித் தள்ளுவது பெரும் குமட்டல்.

கட்டற்ற இணையத்தின் கணக்கிலடங்கா இலக்கிய செல்லங்கள்  சாதாரணமாக அணுகினால் தாம் எங்கே ஆர்ஏஸி கூட இல்லாமல் வெய்ட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டு விடுவோமோ என்கிற ஆவலாதியில் துண்டு போட்டு இண்டலெக்ச்சுவலாக இடம் பிடிக்க முண்டியடிக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மிஷ்கினுக்கு ஏன் இந்த அவஸ்தை. புரியவே இல்லை. ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டு அதை மூளைசார் பயிற்சியாக உயர்த்த இப்படியொரு அல்லாட்டம் தேவையா? 

இது இந்த காலகட்டத்தின் நவீன இலக்கியத்திற்குப் பீடித்த நோய். ஏற்கெனவே இருந்துகொண்டு இருப்பதையே திரும்பச் செய்திருக்கிறோம் என்று எவனேனும் கூறிவிடுவானோ என்கிற தன் பயத்தில் படிமம் குறியீடு எனக் கூவி, பொதுக் குழாயில் வருவதை கங்கையாக்கி, அது மலையிலிருந்து கொட்டுகிறது என்கிற தோற்றத்தை அளிக்க முனையும் உள்ளீடற்றவைகளின் பரிதாப முயற்சி.

கதையோ சினிமாவோ எதுவாக இருப்பினும் அது விரிக்கும் உலகத்திற்குள் ஒத்திசைவோடும் இயல்போடும் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இயல்பற்ற பாத்திரம் எனில் அதற்கென்று ஒரு இயல்பற்ற இயல்பு இருக்கும் அதிலிருந்து விலகினால் இளித்துவிடும்.

பாஸ்கர் மணியிடம் பிஸ்ஸடிப்பதாய்ப் பொய் சொல்லி, கழற்றி விட்டுவிட்டு பஸ்ஸில் போய் தனியே உட்காருவது, காசு குறைகிறது என்கிற அகியின் சுயநலம் மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளால், தன்னைக் காப்பாற்றிய நல்லவன் எனினும் முரடன் என்பதால் உண்டான பயம் காரணமான பையனின் நம்பிக்கையின்மை. அவனை பஸ்ஸிலிருந்து இறக்கி பஸ்டாண்டுக்குக் கொண்டுவர இயக்குநர் எவ்வளவு செயற்கையான காட்சியை வைக்கிறார். நாலு முரட்டுத் தோற்றமுடையவர்கள் பஸ்ஸில் ’தனியாவாப் போறே’ என ஒருவர் மாற்றி ஒருவர், எக்கோ ஸ்டைலில் கேட்க பையன் ’மாமாவுடன் போறேன்’ என பாஸ்கர்மணியிடம் வந்து சேருகிறான். இது குறியீடும் கிடையாது கூமுட்டையும் கிடையாது. கற்பனை வறட்சி. அல்லது உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் ஒழுங்காய் போய்ச்சேரவில்லை. எனவே விவாத்த்தில் எவனும் வாய் திறக்கவில்லை.

பையன் மூத்திரம் அடிக்கப்போய் வெகுநேரமாகியும் வராததில் பாஸ்கர் மணி தனியே பஸ் ஏறுவது, பையன் செய்கை போல இயல்பாக இருக்கிறதா? இருபது வருஷம் பைத்தியக்கார விடுதியில் இருந்தவன் இவ்வளவு கனகச்சிதமாக முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் வேறு செய்வானா?

சை என்று சொல்லப் பார்த்தால் அதுவும் அவ்வளவு சுலபத்தில் சொல்ல முடிவதில்லை. உடனே ஒரு மெளன கவிதை. ஒரு வார்த்தை கூட பேசாமல் டிக்கெட் எடுக்க கண்டக்டரிடம் காசு நீட்ட, கண்டக்டர் பார்க்கிற அந்த ஒற்றை ஷாட் என்ன ஒரு அழகு. பையனுடன் இணைய வைக்க, பாஸ்கர் மணியை பஸ் ஸ்டாண்டிற்கு வரவழைப்பது எவ்வளவு அருமை.

பஸ்ஸிலிருந்து வீசிக் கடாசப்படும் பாஸ்கர்மணி நமக்கு முதுகைக் காட்டியபடி பஸ்ஸைப் பார்த்து வவ்வெளவெனக் கரகரத்த குரலில் கத்துவது தொடங்கி இந்தக் கதாபாத்திரத்துக்கு மிஷ்கின் எடுத்துக் கொண்ட உடல் மொழி அப்படியே தொஷிரோ மிஃபுனேவுடையது. 
ரெட் பியர்ட்
செவன் சாமுராய்
அகிரா குரஸோவாவின் இஷ்ட நாயகன் மிஃபுனே. ரொஷமானில் பஞ்சாயத்தில் அவரது விலங்கிடப்பட்ட ஆர்ப்பாட்டம். செவன் சாமுராயில் தன்னையும் சேர்த்துக் கொண்டால்தான் ஆயிற்று என ஆர்ப்பரித்துத் தொடர்கையில் செய்யும் காமெடிகள். ரெட் பியர்டில் விழியுருட்டும் வீராப்பு. இவை எல்லாமாகச் சேர்ந்த கலவைதான் பாஸ்கர்மணியின் நடையுடை பாவனை. அகிரா குரஸோவாவுக்கு தொஷிரா மிஃபுனே இஷ்டம். மிஷ்கினுக்குக் அகிரா இஷ்டம். அதான் பையனை அகின்னு பேர் வெச்சு அக்குநாலெட்ஜ் பண்ணிட்டோம்ல.

திருவருட்செல்வரில் சிவாஜியின் அப்பர் சுவாமிகளுக்கு நிஜவுலக மாதிரி காஞ்சிப் பெரியவர். ஒரிஜினல் மார்லன் ப்ராண்டோ என்றாலும், பேராசிரியர் அன்பழகன்தான் கமலின் வயதான வேலுநாயகர் தோற்றத்திற்கான மெய் உலக பிம்பம். நிஜ வாழ்விலிருந்து எடுத்தாண்டு பிரதிபலிக்கையில் அது கலைத்திறன். சினிமாவில் ஏற்கெனவே நிகழ்த்தித் தன் சாதனையை நிலைநாட்டிய ஒன்றை இன்னொரு மொழி என்கிற ஒரே வேறுபாட்டுடன், அதே சினிமாவில் நிகழ்த்துவது பெருமை சேர்ப்பதாகுமா

உடல்மொழி போகட்டும், உடை விஷயம் என்ன ஆயிற்று?

மனநலக் காப்பகத்தில் இருக்கிற அத்துனை பாதுகாவலர்களும் ஒல்லிப் பிச்சான்கள். அவர்கள் அப்படி இருந்தால்தான் நம்பகத் தன்மை இருக்கும். காரணம் பாஸ்கர் மணி காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்ப வேண்டும். ஒருவனை அடித்து மண்டையை உடைத்து வீழ்த்தவும், மற்றவனின் உடையை உருவவும் அவர்கள் ஒல்லியாய் இருப்பதுதான் பொருத்தம். உடை உருவப்பட்டவன் ஒல்லிக்கால்களுடன் க்ளோஸில் நிற்கிற ஷாட் கட்டாயம் இருக்க வேண்டும். சரியான கதை விவாதம். சபாஷ்.

ஒல்லிப் பிச்சான் போட்டிருந்த உருவப்பட்ட சீருடை பேண்ட் பாஸ்கர் மணியாக நடிக்கும் உலவும் உருளைக் கிழங்காகத் திரியும் ஒருவனுக்கு தொளதொளவென்று இருப்பது நகைப்புக்குரியது இல்லையா? இதற்கே நகைத்துவிட்டால் எப்படி?

அவன் படம் முழுக்க தொப்புளை ஒட்டி பேண்டை பிடித்துக் கொண்டே, கழுவிக்கொள்ளாதவன் போல இருக்க வேண்டும். என்ன செய்வது குறியீடு குறியீடு. அம்மாவைத் தேடிப் போகிறவன் தொப்புள் அருகிலேயே கைவைத்துக் கொண்டிருக்க வேண்டும். கலை சார் கலை. கலை படுத்தும் பாடு. கலைப்படம் என்று வரிந்து கட்டிக் கொண்டு நம்மைப் படுத்தும் பாடு. அதைக் கலைக் குறியீடு எனச் சொல்லி விடுவோம். இப்படி சொல்வதில் இன்னொரு சவுகரியம் இருக்கிறது. எங்கே புத்திஜீவியாக இல்லாமல் போய்விடுவோமோ என்கிற பதற்றத்தில், லூஸான பேண்ட்டு எங்கேந்துடா வந்துதுன்னு ஒரு லூஸும் கண்டுக்காது. முடிந்தால் தன் பங்குக்கு ஆஹா ஓஹோ என  அட்சதையும் போட்டுவிட்டுப் போகும்.

தொப்புளில் கை இருக்க வேண்டும். அதற்கு பேண்ட் லூசாய் இருக்க வேண்டும். பேண்ட்டு லூசாய் இருந்தால்தான் வேசியாக நடிப்பவள் பெல்ட்டை கட்ட முடியும். பெல்ட் அவளது பாவாடைத் துணியாக இருத்தல் அவசியம். பெண்ணின் பாவாடை தொப்புளுடன் உறவு கொண்டால் மகனே அறிந்துகொள் தொப்புள் கொடி உறவு.

ஏனென்றால் கதை முடிவில் அந்தப் பெண்தான், சிறுவனுக்குத் தாய்போல் ஆகப் போகிறாள்.

மழை பேஞ்சி அவள் உடம்பை வேசைத் தொழிலால் அப்பிக்கொண்டிருக்கும் சேத்தக் கறைக்குது. அது எங்க நம்ப மரமண்டைக்குப் புரியாமப் போயிடப் போவுதோன்னு, சேத்தை வேற பாஸ்கர் மணி பூசிவிடறான். 20 வருஷம் பைத்தியக்கார ஆஸ்பித்திரில ஊசி போட்டுகிட்டு மாத்தரை சாப்ட்டு சைடெஃபெக்டே இல்லாமல், ஆனா (ஸீஷோஃப்ரீனிக் நோயாளியின் பார்வையாக) நெட்டுக்குத்தா முழிக்கிறவன். அவனுக்குக் கற்பென்றால் என்னவென்று தெரியும். விபச்சாரம் என்றால் என்ன வென்று தெரியும். அது கேவலமான கறை என்று தெரியும். எப்படி? இது என்ன அறிவற்ற கேள்வி. இதெல்லாம் மிஷ்கினுக்குத் தெரியும். எனவே பாஸ்கர்மணிக்கும் தெரியும். டைரக்டர்தான் கேரெக்டர்.

ஒல்லிப்பிச்சான் போட்டிருந்த பேண்டை பாஸ்கர்மணி போட முயற்சித்தால் தொடைக்கு மேல ஏறுமா. அப்பேர்ப்பட்ட பேண்டை நல்லா தொப்புள்ல வெச்சி வேசியாக வருபவள் கண்கட்டி வித்தைபோல் கிழிப்பதுகூடத் தெரியாமல் பாவாடைத் துணியால் கட்டிவிட முடிவது எப்படி? தாயுடனான தொப்புள் கொடிக்கான குறியீடு வந்தாக வேண்டாமோ? அதெல்லாம் கண்டுக்கப் பிடாது.

தாய்வாசலில், சிறுவனின் தாய் தற்போது புது வாழ்வில் இருக்கிறாள். அவள் தன் சூழ்நிலையை விளக்குவதை, வார்த்தைகளில் சொல்லாமல் விட்டது அருமை. ஆனால் காட்சிப் படுத்துதலில் இருக்கும் நாடகீயம்? குட்டிப் பாப்பா தவிர யாருமில்லை அந்த வீட்டில். அதையும் கூட அறைக்குள் தள்ளியாயிற்று. பாஸ்கர்மணியும் அவளும் மட்டுமே ஹாலில் இருக்கிறார்கள். கதவையும் தாள் போட்டாயிற்று. ஓரக்கண் பார்வைக்கே கிறுக்கன் எனப் பிடிபட்டுவிடக்கூடிய தோற்றத்தில் இருப்பவனிடம் பார்த்த எட்டாவது செகண்டில் காலில் விழுந்து கதறுதல் இந்தப் படத்தின் இயல்பிற்குள் ஒட்டவில்லை. அதைக்கூட அந்த சந்தர்ப்பத்தின் அவளது நிர்பந்தத்தின் கட்டாயமாக ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் அந்தக் காட்சியில் மட்டும் பாஸ்கர் மணி, அகியின் தாயார், மடமடவென சொல்லும் அவளது சந்தர்ப்ப சூழ்நிலையை, ஃப்ளாஷ்பாக்கை கற்பூரமாய்ப் புரிந்துகொண்டு விடுகிறான். மட்டுமல்ல எது அந்த சூழலில் இரண்டு தரப்பிற்கும் காயம் ஏற்படுத்தாத முடிவாக இருக்கும் என்று முதிர்ந்த தீர்வை நொடியில் எடுக்கிறான். யார்? ரூபாயின் மதிப்பறியாத காசு மட்டுமே செலாவணியாகும் பொருள் என்கிற அளவிற்கே உலக நடப்பு அறிந்தவன். இந்த ஓட்டைகளை ஒரே தாண்டாய்த் தாண்ட இருக்கவே இருக்கிறது இரட்டை அர்த்தம் தொனிக்கும் கவிதை. உங்க அம்மா இங்க இல்லை.

ஒரு கதாபாத்திரம், கதாசிரியன் அல்லது இயக்குநர் விருப்பத்திற்கேற்ப எட்டு குட்டிக்கரணம் போடுகையில் அது எப்படி, உயிரும் ரத்தமும் சதையுமாக எழுந்து வரமுடியும். 

வெகுஜனப் பத்திரிகையின் கதைகள் இலக்கியம் ஆகாமல் ஏன் போகின்றன? வாழ்க்கையின் சிடுக்குகளை அவை ஒரு போதும் அதன் பின்னல்களோடு பேசுவது இல்லை. ஏனெனில் அவை யாரை குறித்து அச்சிடப் படுகின்றன்வோ அவர்களுக்கு அது தேவையில்லை என அவற்றின் அதிபர்கள் தீர்மானிக்கின்றனர். வாசகனை சிந்திக்க வைத்து அதிகத் துன்பப் படுத்தாமல்,  எளிய சூத்திரத் தீர்வுகளைக் கொடுத்து அடுத்த பக்கதைப் புரட்ட வைக்கின்றன. 

ஒரு பாத்திரத்திற்குக் குழப்பம் ஏற்படுவது வேறு. ஒரு பாத்திரமே குழப்பமாக உருவாவது வேறு.

காட்சிக்குக் காட்சி ஒட்டிஒட்டாத தகவல்கள்.
 மர்ஃபியாக ஜாக் நிக்கல்ஸனும் சீஃபாக வில் சாம்சனும்
ஒன் ஃப்ளூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்டுக்குப் போகலாம். வெந்நீர் தொட்டியில் இருந்து தப்பிக்க எண்ணெய்ச் சட்டியில் விழுந்தவன் கதை. ஏகப்பட்ட பைத்தியங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் அதுவது அதனதன் இயல்பில் இருப்பவை. பைத்தியங்களுக்கு நடுவில் பைத்தியம் போல நடித்து சிறையிலிருந்து தப்பிக்க பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்தவன், தனது வித்தியாசமான நடவடிக்கைகளால் கலகக்காரனாகத் தோன்றுகிறான். விடுதியின் ஒழுங்கமைவுக்கு உலைவைப்பவன். தகுந்த பாடம் புகட்டப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும். அந்தக் கட்டுப்படுத்தல், அமைப்பின் தீவிரம் தனிமனிதனை, அவனது எதிர்ப்பை எப்படி மூர்க்கமாக ஒடுக்குகிறது. ஏதோ பைத்தியக்கார மருத்துவமனையின் கதையைச் சொல்வதே போல என்னென்னவோ சொல்லிப் போகிறான் பாருங்கள் உங்களையும் என்னையும் சமூகத்தையும் அமைப்பியும் பற்றி. ஐயா சாமிங்களா இந்தப்படத்தையும் குறியீடுகளாய்க் குனியவைத்து பச்சைக் குதிரை தாண்டிவிடாதீர்கள்.

சர்வ சாதாரணமாக வணிகப் படங்களே தாண்டி வந்துவிட்ட விஷயங்களைக்கூட மிஷ்கினால் தாண்டமுடியவில்லை. இல்லையென்றால், சைக்கிளில் விழுந்த பெண்ணிடம் அகி லாங் ஷாட்டில் பேசிக்கொண்டிருப்பதைக் (தங்களின் தாய்த் தேடலை ஃப்ளாஷ் பேக்காக சொல்கிறான் வசனங்களற்று). காட்டும் போது ஃபோர்க்ரவுண்டில் சைக்கிளை சரிசெய்து வீல் சுற்றிக் கொண்டிருக்குமா? கேமராவுக்கு சமீபத்தில் ஏதேனும் கொனஷ்ட்டை செய்தல் கே.பாலச்சந்தர் அவர்களாலும் சைக்கிள் சுற்றி வளர்தல் இந்திய சினிமாவாலும் உலக மார்க்கெட்டில் பேட்டண்ட் செய்யப்பட்டது. டக்கர் டைரக்‌ஷன் மிஷ்கின்.

ட்ராக்டர் ஓட்டி லிஃப்ட் கொடுத்து உதவ முன்வரும் பள்ளிச்சிறுமியை – காசு கேட்டாக் குடுக்காத அப்பனே இப்ப என்ன செய்வே என்கிற நியாயப் படுத்தலுடன் கூடிய துடுக்குப் பெண் மணிரத்னம் சார்வாளோட பேடண்ட் இல்லையோ.

இயக்குநருக்குத் தேவையென்றால் நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்களில் நான்கைந்து பேராக சிறுமிகள் பள்ளிக்குப் போவார்கள். மித்த நேரங்களில்,  ஆள் நடமாட்டமற்ற 144 அமலில் இருக்கும். உதவி இயக்குநர்கள் அமல் படுத்திய 144. 

ஜாதிக்கலவரம்கூட நடுவாந்திர வயற்காட்டில்தான் நடக்கிறது. குறைந்த பட்ஜெட் என்பதுதான் காரணமோ?

பாஸ்கர் மணி என்கிற பைத்தியம் போன்ற பைத்தியம் கோர்வை இல்லாமல் துண்டுதுண்டாக வசனம் பேசினால் ஏற்றுக் கொள்ளலாம். காட்சிகளாய்க் கோர்க்காமல் துண்டுதுண்டாய்க் குறியீடுகளாய் வார்த்துக் கொண்டால் இணையத்தில் கும்மியடித்து இலவசமாய் இண்டலெக்ச்சுவல் பேட்ஜ் குத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் பாஸ்கர்மணியின் குளறுபடிகளால் தெருவில் நிற்க நேர்வது, லுக் பெசோனின் ப்ரொஃபெஷனல் படத்தில் சிறுமியின் லொள்ளு காரணமாக ஒவ்வொரு வீடாய்க் காலி பண்ணி தெருவில் நடக்க நேரும் ஷாட்களை நினைவுறுத்துகிறது. போகட்டும்.

ஒருமுறை புனே திரைப்படக் கல்லூரியில் நிகழ்ந்ததாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் கர்ண பரம்பரைக் கதையாக உண்டு. கல்லூரியின் திரையரங்கில் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டு அதன் மீதான விவாதம் நடந்து கொண்டு இருந்தது. ஒரு காட்சியில் கல் ஒன்று கீழே கிடப்பது காட்டப்படுகிறது. அது எதைக் குறிக்கிறது என்பதைக் குறித்துதான் மயிர் பிளக்கும் தர்க்கம். தற்செயலாக சத்யஜித் ரே அந்த தருணத்தில், கல்லூரியில் இருப்பதாகத் தெரியவர, அவர் அழைத்து வரப்பட்டார். காட்சியை ஓட்டச் சொல்லிப் பார்த்தவர் கூறினார். இப்படி ஒரு கல் அங்கே கிடப்பதை இப்போதுதான் நானே முதல் முறையாக கவனிக்கிறேன் என்று.

வெகுஜன ஊடகங்கள் அறிவுக் கிளர்ச்சி உண்டாக்காமல், மொண்ணைத்தனத்தை மூடுபனியே போல வாசகர்கள் மீது கவிய வைக்கின்றன. அதுபோலவே, எதையெடுத்தாலும் கிண்டிக் கிழங்கெடுத்து ஸ்பெஷல் அர்த்தம் பார்க்காமல் விடமாட்டேன் என்று கோமணத்தை இறுக்கிக் கொண்டு களம் இறங்குவதும் கூட இன்னொரு வகை மொண்ணைத்தனம்தான். ஒரே வித்தியாசம் முன்னதற்கு பின்னது, நேர் எதிர் என்பது மட்டும்தான். சும்மாக் கிடப்பதை எடுத்து, விடாமல் மூளையை சுரண்டிக் கொள்ளும் பயிற்சி. அறிவுஜீவி தோல் போர்த்தி அலட்டித் திரியும் மேனி மினுக்கல். சும்மா காபி சாப்பிட்டதைக் கூட காரண காரியம் கற்பித்து, கடுமையான கவித்துவம் போல் பம்மாத்துவது. 

ந்தக் காலத்தில் படம் வெளியாகும் சினிமாக் கொட்டகைகளில், அந்தப் படத்தின் பாட்டுப் புத்தகம் விற்கப்படும். அதைப் போல் மிஷ்கினுக்கு ஒரு ஆலோசனை. இதுவரை இந்தப் படத்தைப் பற்றி எழுதி வெளியாகி இருப்பவற்றைத் தொகுத்து, நந்தலாலா ஒரு குறியீடு என்று புத்தகமாக்கினால் இந்த நூற்றாண்டின் தலையாய இலக்கிய குறியீடான ஜெயமோகனையேப் புறமுதுகிட்டு ஓட வைத்துவிடும்.

இளையராஜாவின் இசை, இந்தப் படத்தில், படம் பார்த்துக் கொண்டிருக்கையில், தனியாக கவனத்திற்கே வரவில்லை என்பதுதான் அதன் சிறப்பு என்று கருதத் தோன்றுகிறது. காது பொத்தவைக்கும் அளவிற்கு நாராசமாய் ஒலிக்கும் சில இடங்கள் இருக்கின்றன. குறிப்பாக நீண்ட பாலம் போன்ற அகல நெடுஞ்சாலையில் பையனும் பாஸ்கர் மணியும் நடந்து வருகையில் வரும் பின்னணி ஓசை அவர்கள் ஏதோ கார்கில் நோக்கிப் போவதான பிரமையைக் கொடுக்கிறது. தனிப்படக் கேட்கையில் ஒலி அளவைக் குறைத்துக் கேட்டால் மகுடி நாதம் போல் மயங்க வைப்பதை உணரலாம். இந்த இறைச்சல் மிக்சிங் கோளாரன்றி வேறென்ன?

http://www.mediafire.com/?p2mwaf1gio78yye (ஆரம்ப பீட்டுகளுக்குப் பிறகு வலியதும் சற்று கழித்து மென்மையான குழல் தொடர்கிறது)

இந்த மைய இசையையே வெவ்வேறு சந்தர்பங்களில் கதாபாத்திரங்களின் மனநிலை காட்சிச் சூழலுக்கேற்ப குழைத்துக்கொண்டே இருக்கிறார் படம் முழுவதும்.

http://www.mediafire.com/?h5oxaqrq1joq08c
(அதன் இன்னொரு நுண்திரிபு பின்னும் மென்மைகூடியது)

(நந்தலாலா படத்தின் முழு பின்னணி இசையையும் சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்து பதிவு செய்து WinRAR வடிவில் தன் தளத்தில் கொடுத்து இருக்கிறார். http://www.backgroundscore.com/2010/11/nandhalala-score.html).

”ராஜாவின் இசை இரைச்சல்” பற்றி ஜெயமோகனார் ஷாஜிக்கு அருளிய பாஷ்யத்தில், ராஜாவைக் காப்பாற்றுவதாய் நினைத்து (பாவம் அனுகூல சத்ருக்களுக்கு ராஜாவும் விதிவிலக்கில்லை போலும்), அது இளையராஜாவின் தவறில்லை, ஒலிக்கலவையில் (மிக்ஸிங்கில்) ஒலி நிபுணரும் (ஸவுண்ட் இன்ஜினியரும்) இயக்குநரும் செய்த காரியம் என்று விளக்கி’ இருக்கிறார். இதுகூடத் தெரியாமல்தான் ஷாஜி ஒரு இசை விமர்சகராய் இருந்துகொண்டு இருக்கிறாரா?அல்லது தமிழின் முதல் பட டைரக்டருக்கு மிக்ஸிங் அறிவு பூஜ்ஜியமா? ஆம் எனில் இது எப்படி தமிழின் முதல் படமாக முடியும், முக்கால் படமாக அல்லவா இருக்க முடியும்.

மாபெரும் வெற்றிபெற்ற மிகச்சாதாரண வர்த்தகப் படங்களில் எல்லாம் காட்சிகளை இணைக்கிற ஊடுசரடாக ராஜாவின் பின்னணி இசைதான் இருக்கும். வரப்போகும் காட்சியை நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்சி முடிவுறும் முன்பாகவே இழைக்கத் தொடங்கிவிடுவார். அதை நாம் அந்தப் படங்களில் உணர முடிந்ததற்கு முழுமுதற்காரணம், திரையில் இருக்கும் காட்சிகள் வேறாகவும் நாம் தள்ளியும் இருந்ததுதான் எனத் தோன்றுகிறது.

நந்தலாலாவில் நாமும் படமும் இளையராஜாவும் வேறுவேறாக இல்லை. அப்படியென்றால் மேலே சொன்னதற்கெல்லாம் என்ன பொருள் என்று கேட்கிறீர்களா? ஒரு குப்பையும் இல்லை சும்மா படம் பாருங்கள் என்பதுதான். அப்படி பர்த்தால் இந்தப் படம், ஒட்டுமொத்தமாக  உங்களை ஈர்த்துக் கொள்ளும் சாத்தியம்தான் அதிகம். 

இயக்குநரும் அவரைச் சுற்றி நின்ற ஆலாத்திகளும் தமிழின் முதல் திரைப்படம் என்றெல்லாம் உளராமல், மேலொரு கையும் கீழொரு கையும் வைத்துப் பொத்திக்கொண்டு நம்மை சும்மா படம் மட்டும் பார்க்க அனுமதித்து இருந்தால்... நந்தலாலா நல்ல முயற்சி. நல்ல படம். முக்கியமான படம். பிரம்மாதமான படமும்கூட- அதன் களவு முத்தங்களுடனும் அபத்தக் குறியீடுகளுடனும்.