Sunday, December 12, 2010

க்ளாஸிக் - கொல்லையில் கிடக்கும் பழந்துணியல்ல

//ரொம்பவும் கறாரா லாஜிக் பாத்தம்னா நாம் ரொம்ப சிலாகிக்கற கிளாசிக் படங்கள் கூட தேறாது.//
ஒன் ஃப்ளூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்
ஒரு அடி ஸ்கேலில் உடைந்த சிள்ளைக் கையில் வைத்துக் கொண்டு உலக சினிமாவை அளக்க முயற்சிப்பது அபத்தம். அளந்ததோடு நில்லாமல் தீர்ப்பும் வழங்குவது அதைவிட அபத்தம். பட்டாணி என்றிருந்தால் சொத்தை இல்லாமலா இருக்கும் என்பது போலப் பொத்தாம் பொதுவான ஒரு தத்துவ முத்து.
மிலோஸ் ஃபோர்மென்
வயதாகிக் கிழடுதட்டிவிட்டது என்கிற காரணத்தால் ஒரு கலைப் படைப்பு உலக அளவில் க்ளாசிக் என அழைக்கப் படுவதில்லை.
மேற்குறிப்பிட்ட வரியைப் படித்துவிட்டு உண்டான கடுங்கோபத்தில் எதையேனும் எழுதி ரசாபாசம் ஆகிவிடக் கூடாதே என கட்டுப்படுத்திக் கொண்டேன். பொது வெளிக்குள் என் தனி இடமான ப்ளாகிற்குப் போய்விடுவதே உசிதம் என வந்ததோடு அல்லாமல், ஆத்திரம் அடங்க நேரமும் எடுத்துக் கொண்டேன்.
நாம் ஏன் தன்னடக்கம் கூச்சம் போன்ற அற்புத குணங்களை இழந்துவிட்டோம். எதை வேண்டுமானாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இடது கையால் பேசுமளவிற்கு அப்படி என்ன சாதித்துக் கிழித்துவிட்டோம்.
இதுவே இணையமாக இல்லாமல் ஒரு பத்திரிகையாக இருந்தால் என்ன வேண்டுமானலும் எழுதிவிட முடியுமா? அல்லது எழுதியது எல்லாம் பிரசுரமாகித்தான் விடுமா? நாம் எழுதியது மொக்கையல்ல, ஒப்பற்ற இலக்கியமே என்றாலும், மைக்கறை வெண் தாளில் படியும் முன், அது எத்துனைக் கரைகளை நீந்திக் கடந்தாக வேண்டும். மூன்றாந்தர பரபரப்புப் பத்திரிகை தவிர மற்றவை எல்லாம் தமக்கென வகுத்துக் கொண்ட பிரதியேக சட்டதிட்டங்களுக்குள் இயங்குபவை. எதுவாக இருந்தாலும் எடிட் செய்யப்படும் எனப் பேனாவை இரண்டாகப் பிளந்து கத்தரி போல் பிடித்திருப்பவை.
எதைப் பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்பது இந்திய அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள ஷரத்து. அதில் கூட சில வரையறைகளுடன் என சேர்த்தே வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் உள்ள இந்த ஜனநாயக உரிமையை நமது பிரத்யேக விசிட்டிங் கார்டாக நீட்டி, மரபணு நிபுணர்கள் குழுமம் நடத்தும் மண்டபத்திற்குள் நுழைய முடியுமா? முயல்வது கூட நகைப்புக்கு உரிய விஷயம் அல்லவா? அப்படி இருக்கையில் மேடையில் ஏறிப் போடியத்திலும் நிற்பேன் அல்லாமல் நீட்டி முழக்கிப் பிரசங்கமும்  செய்வேன். ஏனென்றால், எழுதப் படிக்கத் தெரியும், கூடுதலாய் நானும் அணுக்களால் உருவானவன் என்று ஒருவர் சொன்னால், நம்  மண்டையை எதில் போய் இடித்துக் கொண்டால் சீக்கிரம் கபால மோக்ஷம் கிடைக்கும் எனத் தேட வேண்டி ஆகிவிடாதோ?
ஒரு ஒற்றை வரிக்கு இந்த அலப்பறையா என யாரேனும் ஒரு சுய நியமன நியாயாதிபதி மணியடித்துக் குரல் கொடுக்கக் கூடும்.
கோபம் குமுறலாய் மாறிக் குறைந்தும் விட்டது. ஒரு சிறிய விண்ணப்பம். என்னதான் இணையம் எனினும் கொஞ்சம் சுயக் கட்டுப்பாட்டை வைத்துக் கொள்வோம். நாம் எழுதியது என்பதால் நாபிக் கமலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் கடாட்சம் என்கிற நினைப்பின்றி, ஒரு மறுவாசிப்பு கொடுத்து சமநிலையுடன் எழுதி இருக்கிறோமா என உறுதி செய்து கொள்வோம். பேசுபொருளுக்கு உரிய கண்ணியத்துடன் அது நம் எழுத்தில் அணுகப் பட்டிருக்கிறதா என பரிசீலித்தல் நல்லது. பின்னொருநாள் படிக்க நேர்கையில் நமக்கு முன் நாமே கூசிக் குறுக நேராமலிருக்கும் இல்லையா?.
போனது போகட்டும். மேலே இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கிறுக்கர்கள் பற்றிய ஒரு படம் சார்ந்தது. கிறுக்குகளுக்கு இடையில் கிறுக்கனைப் போல் நடிப்பவனின் நடிப்பை உலகமே கொண்டாடிய படம். கொஞ்சம் நாமே கிறுக்காக இருக்கப் பார்ப்பது, முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் கிறுக்குத்தனத்தைப் புகழ்ந்தோதுவது, இதுதானே இப்போதைய ஃபாஷன். அதனால் தான் இந்தப்படம்.
1975ல் எடுக்கப் பட்ட, ஒன் ஃப்ளூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் என்கிற இந்தப் படத்தை எடுத்துக் கொள்வோம். பதிவெழுதிதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயமின்றி, இதைக் கறார் லாஜிக்கில் வைத்துப் பார்ப்போம். தனிப்பட்ட நெட் ப்ராக்டீஸ் போல இதில் எவ்வளவு ஓட்டை இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முற்படுவோம்.
1984ல் அமடேயஸ் (I am a vulgar man, but I assure you my music is not) என்கிற தேவ சிருஷ்டியைக் கொடுத்த மிலோஸ் ஃபோர்மெனுக்கு, அவரது பழைய படைப்பில் இருக்கும் ஓட்டைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், அடைத்துக் கொண்டு அவர் தம்மை முழுமை ஆக்கிக் கொள்ளட்டும். அதற்குப் பேருதவி செய்தவர்கள் என வரலாற்றில் நம் பெயரும் இடம் பெறட்டும். ஒரு வேளை அந்தக் கிழட்டு முண்டம் நமது ப்ளாகைப் படிக்காமலோ அல்லது நமது விமர்சனத்தை ஏற்காமலோ போகக் கூடும். எந்த படைப்பாளி ஏற்றுக் கொண்டான் என்னைவிடப் படிப்பவனோ பார்வையாளனோ ஒஸ்தி என்கிற உண்மையை. மூளியே இல்லாத முழுமை என ஒன்று உலகத்தில் இருகிறதா என்ன. இன்று இரண்டில் ஒன்று பார்க்காமல் விடுவது கிடையாது. அப்படி என்ன பெரிய புனிதப்பசு?  
வாருங்கள் ஒன் ஃப்ளூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் படத்தை டிவிடியில் பார்க்கலாம். டிவிடி கைவசம் இல்லையா. கவலை வேண்டாம். கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கிறது. சிறந்த படங்களின் நாமறியாப் பட்டியல் வாய்ப் பேச்சாய் வெளிவந்து வியக்கவைக்கும்.
ஜெமினி மேம்பாலம் எதிரில், பார்ஸன் கீழ் தளம். படிக்கட்டில் கீழிறங்கும் போதே எதிர்த்தார்ப்போல் கண்ணுக்குத் தெரியும் கடை எண் 4 & 5 ஒரே கடையாய் நீளமாய் இருக்கும். அதன் எதிரில் நின்று வலப் பக்கமாய் 90 டிகிரி திரும்பினால் நேர் எதிரில் தெரியும் கடை எண் 14 & 15 இரண்டும் ஒன்றே. மொஹிதீன் 9840116667
92 அல்லது 93ல் அண்னாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி அருகில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த சுந்தர ராமசாமிக்கும் கமலா மாமிக்கும் வெங்கடேஷ் மகாதேவன் என்கிற அட்வகேட் நண்பனின் உதவியுடன் டெக்கை எடுத்துப் போய் இந்தப் படத்தைக் காட்டினேன். படம் பார்த்து இருவரும் பரவசப்பட்டனர்.
அமடேயஸ் என்கிற இந்தப் படத்தை, செங்கல்பட்டைச் சேர்ந்த, உலக சினிமா பரிச்சயமே அற்ற, பெரும்பாலும் தமிழ் படங்கள் கொஞ்சம் போல ஹாலிவுட் ஆக்‌ஷன் பார்க்கிற, ராஜா மற்றும் ரஜினியின் தீவிர ரசிகனான என் அலுவலக நண்பன், ரமேஷ் பாபு, என் வீட்டு LD Playerல் 1997ல் இந்தப் படம் பார்த்துவிட்டு, கூறிய வார்த்தைகளையே, என் அனுபவ எல்லைக்குள், இந்தப் படத்திற்கான, ஆகச் சிறந்த பரிந்துரையாக்க் கருதுகிறேன்.
ஆறு வயதில் 
மச்சி இன்னாடா இவன் படமா எடுத்துருக்கான். ங்கோத்தாத் தூங்கினாக் கனவுல கூடக் கைய ஆட்டிக்கினே இருக்கான். ம்யூசிக் பாட்டுக்கும் மண்டையில் நிக்காம ஓடிக்கினே இருக்குது. இன்னாடா இது.
க்ளாஸிக் என்பது கொல்லையில் கிடக்கும் பழந்துணியல்ல. காலங்களைக் கடந்து நிற்கும் கருவூலம்.
Mozart (27 January 1756 – 5 December 1791)

Wolfgang Amadeus Mozart - Symphony 40 in G min KV 550

Mozart-Symphony No. 41 "Jupiter"/Leibowitz/Pt. 1 (of 3)

Mozart - Requiem