Thursday, December 30, 2010

மனவெளியில் அலையடிப்பு - ட்ராட்ஸ்கி மருது

மருது சகோதரர்கள் எனக்குப் பரிச்சயமானது கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் எனலாம். ட்ராட்ஸ்கி மருது திலகர் மருது போஸ் மருது. இவர்களில் ஓவியர் போஸ் மருது முத்துசாமி நடேஷ் (அப்போதைய ஓவியப் பள்ளி) மூலமாகவும் திலகர் மருது ராஜன் சர்மா ஸ்ரீதரன் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ட்ரைவ் இன் தொடர்பினாலும் ட்ராட்ஸ்கி மருது 80-81ல் (என் தந்தையின் 8/5) பெஸண்ட் நகர்  க்வார்ட்டர்ஸில் 8/4ல் அண்டைவீட்டுக் காரரான ஓவியர் ஆதிமூலம் வழியாகவும் அறிமுகம்.


திலகர் மருதுவை திரைப்படக் கல்லூரியில் சந்தித்ததைக் காட்டிலும் ட்ரைவ்-இன்னில் சந்தித்ததுதான் அதிகம். உண்மையில் இவை நான்கைந்து சந்திப்புகளே.

திலகர் மருதுவுடனான எந்த சந்திப்புகளிலும் ஓரிரண்டு தெறிப்புகள் இல்லாமல் போகாது.

தமிழ் சினிமாவின் அப்போதைய முக்கியத் தூண்களில் ஒருவர் இவரைத் தன்னிடம் அழைத்து வைத்துக் கொண்டு கூறிய அறிவுரை

எவன் சொல்றதையும் கேள்வி கேக்காம அப்படியே எடுத்துக்காதே
- நான் சொல்றதைத் தவிர. 

அஞ்சலி திரைப்பட முன்னோட்டம் முடிந்ததும் பழைய திரைப்படக்க் கல்லூரித் தோழனான திலகரிடம் இயக்குநர் மனைவி,

படம் எப்படி இருக்கு.
படத்துல வர ஒரு டயலாக் மாதிரியெ இருக்கு.
என்ன டயலாக்
நம்பளால அவங்களைப் பாக்க முடியும் ஆனா அவங்களால நம்பளப் பாக்க முடியாது.
என்ன சொல்ற
இல்ல, ஸ்க்ரீன்ல இருக்கறவங்களால ஆடியன்ஸைப் பாக்க முடியுது. ஆடியன்ஸாலதான் ஸ்க்ரீன்ல இருக்கறவங்களைப் பாக்க முடியலை. 

அஞ்சலி படத்திற்கு ரிலீசாகி ஒரு வாரம் கழித்து, தனியாக ப்ளீச் பண்ணிய பளிச் பிரிண்ட் போட்டது சினிமாவுலக பிரசித்தம். இப்போது டிவியில் நாம் பார்ப்பது அது மாதிரி வெள்ளாவி போட்டு எடுத்த பிரிண்டுதான். அதுபோக அஞ்சலி பாப்பா ஷாம்லீயை மக்கள் நன்றாகப் பார்ப்பதற்காகவே மிருகங்ளோடு தனிப் படமே எடுத்து நல்ல சில்லறை தேற்றினார் பிராணிசிநேகித இயக்குநர்.

ஜனங்களும் மாணவர்கள் போல பாட புஸ்தகமாய் அஞ்சலியையும் கோணார் நோட்ஸாக இந்தப் படத்தையும் அடுத்தடுத்து பார்த்தார்கள், அஞ்சலிப் பாப்பா அஞ்சலிப் பாப்பா என அவரவர் வீட்டு அஞ்சலிப் பாப்பாக்களை சமாதானம் செய்ய வேண்டி பார்த்துக் கொண்டே இருந்தார்கள். மிருகங்கள் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் மனிதர்களுக்கு சம்பாதித்துக் கொடுக்கின்றன. உயர்ந்த மிருகங்கள் என்று ஒருவரும் பாராட்ட்டு விழா நடத்துவதே இல்லை.

சமீபத்திய சென்னை உலக திரைப்பட விழாவில் திலகர் மருதுவை சேம்பரில் சந்தித்தேன் அதே ஒளி மிளிரும் கண்களும் குறும்புச் சிரிப்புமாக. ஆண்களுக்கும் கண்கள் சிரிக்கக்கூடும்.

என் முதல் தொகுதியான அறியாத முகங்கள் அட்டையை 83ல் ஸ்க்ரீன் பிரிண்டில் அச்சடித்தது நடேஷ். அவனுக்கு அஸிஸ்டெண்டாக சுத்து வேலை உதவியாக, சட்டத்தைப் பிடித்துக் கொள்ளுதல், மையை உள்ளே ஊற்றி இழுத்தல், ஈர அட்டையை எடுத்து ஃபேன் காற்றில் தனித்தனியே வைத்துவிட்டு வருதல், என்று நிதானமாய் பர்பரபத்தவர்கள், நா.முத்துசாமி அவர்களின் இன்னொரு மகன் ரவி, நான் மற்றும் போஸ் மருது. நானும் நடேஷும் 60ல் பிறந்தவர்கள் போஸ் மருதுவும் அந்த வருடமாகவே இருக்கக் கூடும்.

போஸையும் நடேஷையும் பெரும்பாலும் சந்தித்தது வெள்ளிக்கிழமை 9.30 காட்சிக்கு சத்தியம் தியேட்டர் படிக்கட்டுகளில். ஒன்றா அவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அல்லது நான் உட்கார்ந்திருப்பேன், கெளண்டர் திறப்புக்காக. சில தருணங்களில் ஓவியர் முரளீதரனும் இவர்களுடன் இருப்பார் ’என்ன மாமல்லா’ என கைகால்கள் ஆட்டி நடனமாடாத குறையாக, அட்டகாசமாய் சிரித்தபடி. எனக்குத் தெரிந்து மருது சகோதரர்களில் அநேகமாகப் பேசவே பேசாமல் அமைதியாய் இருப்பவர் போஸ் மருதுதான்.

96-97ஆக இருக்கலாம் எங்கள் அலுவலகத்தின் அலுவலர் நல சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் ஓவியப் போட்டிக்கு நடுவராய் இருக்க வேண்டுமாறு அழைப்பதற்காக நந்தனம் குடியிருப்புக்கு சென்றிருந்தேன். அப்போது திலகர் போஸ் பற்றி சொன்னபோது அப்போதுதான் ஒரு அபூர்வம் நடந்ததைச் சொன்னார்.

இரண்டு மருதுக்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கையில் மூன்றாவது மருது முதல் மருதுவுடன் பேச முயற்சித்துக் கொண்டிருக்க ஒரு தருணத்தில் டெலிஃபோன் ஒயரில் ஏதோ ஓட்டை போலும், மூன்றாமவர் பேசுவதும் கேட்கத்தொடங்கி விட்டது. சகோதரர்கள் மூவருமாக உரையாடியிருக்கிறார்கள். ஆக இன்று நேற்று என்றில்லை, தொலைபேசியில் ஓட்டை ரெம்ப நாளாகவே இருக்கிறது. அதை ரெக்கார்ட் செய்யும் பழக்கம் மட்டுமே சமீபத்தியது.

பெரும்பாலும் கலை இலக்கிய சினிமா வட்டத்தில் எல்லோரையும் ஒருவருக்கொருவர் தெரியும். நேர் சந்திப்பு கொஞ்சம் அபூர்வம். மாலைகளில் நான் ட்ரைவ் -இன்னிலேயேக் கிடப்பவன் என்பதால் அபூர்வமாய் வருபவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். நான் அங்கேம் இருப்பேன் என்கிற காரனத்திற்காகவே வராது போனவர்களும் உண்டு.

உட்கார்ந்து அளவளாவவே போடப் பட்டிருக்கும் மேஜை நாற்காலிகள். காஃபியோ சிற்றுண்டியோ திங்கவும் செய்யலாம் பேச்சுக்கு இடையில்.

நண்பர்களுடன் வருடக் கணக்கில் இடைவெளிகள் ஏற்பட்டு விடும், அவர்கள் தத்தம் காரியங்கள் காரணமாக ட்ரைவ்-இன் வருவது தடைப்படவும் வாய்புண்டு. மாறாத அம்சங்கள் கல்லா, பெட்டிக்கடை, பிபி ஸ்ரீநிவாஸ், சேர் டேபிள்கள் மற்றும் நான்.

2005 வாக்கில் நண்பர்கள், ஒளிப்பதிவாளர்-இயக்குநர் தரன், கிரிஸ்டோஃபர் (ராஜன் ஷர்மா ஸ்ரீதர் கூட நடிப்பு படித்துவிட்டு அதைத்தவிர அனைத்தும் செய்து கொண்டு இருப்பவன்) இவர்களுடன் மருது கணிசமான ஒரு கால அளவில் அநேகமாய் தினமும் சந்தித்திருக்கிறோம்.

அப்படியான சமயத்தில் ஒருமுறை ட்ராட்ஸ்கி மருது தரனுடன் பெஸண்ட் நகர் வீட்டிற்கு வந்திருந்தார். மருது சிரிப்புக்கு இடையில் பேசவும் செய்வார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் பேசிக்கொண்டிருப்பது திலகரா ட்ராட்ஸ்கியா என்று குழம்பிவிட வாய்ப்புண்டு. பேசு பொருளில்தான் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

மனம் திறந்த மருது ஒரு சுவாரசியத் தகவல் களஞ்சியம். அவருடன் பேசிக் கொண்டிருப்பது, வெவ்வேறு துறை சார்ந்த புத்தகங்களை ஒரே நேரத்தில் புரட்டிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும். பெரியார், ஹாலிவுட் சினிமா, ஓவியங்கள் (அபூர்வமாகவே பேச்சில் தட்டுப்படும்) பழங்காலத்து தமிழ் சினிமாவின் முக்கிய ஆகிருதிகளின் சுவாரஸ்யமான தனித் தகவல்கள். 50களிலேயே விலாவாரியாக ஸ்டோரி போர்ட் தரத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த திரைப்பட ஸ்க்ரிப்ட்டுகள். திராவிட அரசியலின் ஆரம்ப கால ஆளுமைகள் மற்றும் அவர்களின் தனித்தகவல்கள். மற்றவர் பேசுவதை வாய்மூடி காது திறந்து நான் கேட்கும் மிகச்சில தருணங்கள் ட்ராட்ஸ்க்கி மருதுவுக்கும் சொந்தமானது.

பேசப்பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

ஜெயகாந்தன் எங்கோ சொன்னதாக கல்லூரியின் முதுகலைத் தமிழிலக்கிய நண்பன் இதயகுமார் சொல்லி மனதில் பதிந்த வாக்கியம்

மனிதர்கள் பேசும் போது தங்கள் மனதோடு கொஞ்சிக் கொள்கிறார்கள்.

மருதுவிடம் பெரியார் நிறைய இருப்பார். அவரது ஓவியப் பள்ளி நாட்களில் பெரியாரை அவர் நேரில் சந்தித்தவர்.

பெரியாரின் கடைசி காலம். கூட்டத்திற்காக வந்தவர் அறையில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். அப்போது இருந்தாற் போலிருந்து

என் மொத்த வாழ்க்கையையும் உபயோகமில்லாமப் பாழாக்கிட்டேனேய்யா என்றிருக்கிறார்.

சுற்றி இருந்தவர்கள் பதறிப்போய்,

என்னக்கய்யா உங்களோட இடைவிடாத கடுமையான உழைப்பினாலதான் எங்களை மாதிரி லட்சக் கணக்கான பேர் மனுசங்களா நடமாடிகிட்டு இருக்கறோம், என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க?

வெங்காயம். இல்லாத ஒன்னுத்தை (கடவுளை), இல்லே இல்லேன்னு சொல்லியே ஆயுசு பூராவும் போயிடுச்சே.

ஒரு கவிதை போல என்னிடம் பதிந்துவிட்ட வாக்கியம். 

பெரியாரைப் போலவே, ட்ராட்ஸ்கி மருதுவும், இம்மியும் அசையாத உறுதியான கருத்துக்கள் கொண்டவர். அவற்றைப் பேசுகையில் பொது தளத்தில் மட்டுமே வைத்துப் பேசுபவர். எதிரில் இருப்பவன் காயமடையக் கூடும் என்பதற்காக, எந்த விஷயத்தையும் பேசாமல் தவிற்கும் சமரசம் கிடையது. அதேசமயம் பொது விவாதம் எவ்வளவு கடுமையின் தகிப்பை அடைகையிலும் சிரித்தபடியே தனிக்காயமாக ஆகிவிட அனுமதிக்க மாட்டார். காயம் உண்டானால்தானே வடுவாகும்.

தன் தரப்பை ஆணித்தரமாக எடுத்து வைத்து அமைதியாக சிரிப்பும் கும்மாளிப் பேச்சுமாக சவப்பெட்டியில் ஆணி அறைந்தபடியே இருப்பார்.பெட்டிக்கு உள்ளே இருப்பது நாம்தான் என்பதை மறந்து, நாமும் ஆவென வாய்பிளந்து ரசித்துப் பார்த்தபடியே இருப்போம். மதுரையின் வக்காளியும் இன்னபிற வாழ்த்துக்களும் ஆங்காங்கே ஃபுல் ஸ்டாப்பும் கமாவுமாக வந்துகொண்டே இருக்கும். இன்னும் இன்னுமென பேச்சு நம்மை விஷயத்திற்கு உள்ளே இழுத்தபடி இருக்கும்.

ட்ரைவ் -இன் திறந்த வெளி மேஜைகளில் சில தருணம் உட்கார நேர்ந்திருக்கிறது. அது போன்ற ஒரு சமயம், எதிரில் மருது கிறிஸ்ட்பர் பக்கத்தில் தரன். நோட்புக் திறந்து ஒரு கருவி இசையைக் கேட்டால்தான் ஆச்சு, போட்டேத் தீருவேன் என்று என் அடம். அவரோ,

சரி போடுங்க மாமல்லன் வக்காளி நாங்க ஒளரங்க சீப் பரம்பரை அதை மட்டும் சொல்லிடறேன் (இந்த வாக்கியத்தின் மேல் சிரிப்பு ஜீரா போல் படிந்திருந்தது)

கணினி உயிர் பெற்று பிள்ளையார் வால்பேப்பர் வந்ததும் அனிச்சையாக கர்சர் படத்தின் பாதத்திற்குப் போக கை நெஞ்சுக்குப் போனது. அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை இது நடந்தது போலும், மருது எதிரில் இருக்கும்போதெல்லாம் நாத்திகனாகி விலாவில் குத்தும் தரன் ’ஏய் எத்தனை தடவடா கும்புட்டுப்பே’ என்றான்.

மாமல்லன் அது அங்கிட்டேதான் இருக்கும். நீங்களா மனசு வெச்சு மாத்தாத வரைக்கும் அது அங்கதான் இருந்தாவணும், அதுக்கு வேற கதியில்லே. உங்களை நம்பித்தான் அது இருக்கு. நீங்க என்னடான்னா அத்த நம்பி நீங்க இருக்கறதா நெனச்சிகிட்டு இருக்கீங்க.

(கடைசி இரண்டு சொற்றொடர் மருது சொல்லாமல் இப்போதுதான் எழுத்து ஓட்டத்தில் வந்தது. அதனால் என்ன, வக்காளி பாராவுக்கு முத்தாய்ப்பு நல்லா இருக்கில்ல இருந்துட்டுப் போவட்டும்)

மனம் திறந்து சிரிப்பதுதான் ஆகக் கடினமான காரியம். அநேகமாக சமூகத்தில் பெரிய மனிதர்களாக அறியப்படும் பலர் சிரிப்பது போல நடித்துக் கொண்டிருப்பதில் வல்லவர்கள்.

மூளை, மும்முரமாய்க் கணக்கு போட்டுக் கொண்டிருக்கையில் மனம் மட்டும் எப்படி விச்ராந்தியாய் திறந்திருக்க முடியும்.

பெரிய மனிதர்கள் போல் இருப்பவர்களுக்கும் பெரிய மனிதர்களாக இருப்பவர்களுக்கும் இடைப்பட்ட வேறுபாடு இதுதான்.

மருது ஐந்து வருடம் முன்பு தரனுடன் இரண்டாம் முறையாக வீட்டிற்கு வந்திருந்தார். எங்கள் வீட்டு பால்கனியில் பிரிபிரியென காற்று பிய்த்துக் கொள்ள பெஸண்ட் நகர் பீச்சாகிக் கொண்டு இருந்த ஒரு மதியம்.

மடிப்புக் கலையாத வெள்ளை சட்டையை மேல் பட்டன் போடாமல் அணிபவர் மருது. காற்றுக்காக வேண்டி கொஞ்சம் அவ்வப்போது காலர் பின்னுக்குப் போகும். பெஸண்ட் நகர் காற்றும் சந்தோஷப் பட்டிருந்தது.

அப்பல்லாம் ஆதியப் பாக்க வருவோம். எக்மோர்லேந்து கெளம்பி இங்க வரதே ஒரு பெரிய வேலையா இருக்கும். வரணும்னாலே அதுக்கு தயரிப்புலாம் செஞ்சிகிட்டு வக்காளி ஏதோ ஊருக்குக் கெளம்பறாப்புல பொறப்படணும். அதுவும் பஸ்ஸு அடையார் வரைக்கும்தான் வருவான். எறங்கி அங்கேந்து நடக்கணும்.

பேச்சு கொஞ்சம் போல பழங்காலம் பற்றித் திரும்பி, தாத்தாவின் வெத்திலைச் செல்லத்திற்குத் தாவியது.

வக்காளி அந்த காலத்துல நல்லா வாழ்க்கையை வாழ்ந்து தீத்துருக்காய்ங்க.

ஹேமக்கில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து ஹாலுக்கு வந்து ஆம்ப்ளிஃபையருக்குப் பக்கத்தில் இருந்த குட்டை நோட்டை எடுத்து வெத்திலை செல்லப் பெட்டியின் மேல், தன் சிறுவயதில் பார்த்த படம் எப்படி இருக்கும் என்று பேனாவில் பேசி விளக்கினார்.

பெஸண்ட் நகரில் மூன்று அறை கொண்ட ஃப்ளாட் வாங்கும் விலைக்கு யாரேனும் இதை வாங்கிக் கொள்ளும் பட்சத்தில் விற்கத் தயார். ஒரே வேண்டுகோள், ட்ராட்ஸ்கி மருதுவிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள்.