Sunday, January 2, 2011

எலிகளின் பந்தையம்

இந்தப்புகைப்படம் 03.12.1982ல் ஊட்டியில் எடுக்கப்பட்டது. முதலில் இருப்பவன் பிஃபார்ம் படிக்க வந்து, ஸ்வரம் என்கிற கவிதைப் பத்திரிகையாக இண்லேண்ட் லெட்டரில் தொடங்கிய நந்தலாலா. அதை இலக்கியப் பத்திரிகையாக்கிப் பிறகு மீட்சி நடத்திய பிரம்மராஜன். இடையில், காவியுடையில் இருப்பது நான். இது என் இரண்டாவது துறவுப் பயண முயற்சி. 

முதல் முறை வெறும் மூன்று நாள் கதை. ஆனால் முழு நாவலுக்கு ஆனது.  

விஜய T ராஜேந்தரும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவார். உயிருள்ள வரை உஷா ஷூட்டிங்கின் நடுவில் காதி வஸ்திராலய ஜிப்பாவுடனும் காவித்துணி துருத்திய (திஜா அன்பளிப்பாய்க் கொடுத்த ஜோல்னாப் பையுடனும்) நின்றிருக்கிறேன். என்னிடம் ”ஹிந்தி மாலும்” எனக்கேட்டு நடிக்கிறாயா என்பார். இல்லை நான் எட்ட இருந்து பராக்கு பார்க்க வந்தவன் எனச்சொல்லி ஓரத்தில் போய் நின்றுகொள்வேன். 

பார்ப்போம் முப்பதாவது வருடமான 03.12.2012லாவது எழுத சித்திக்கிறதா என்று. அதற்குள் எத்துனை பேர், என்னை மிரட்டி அடக்கிவிடலாம் என்கிற மூட தைரியத்தில் குச்சியுடன் வரப்போகிறானோ எவனெவன் கோமணம் கிழிந்து ஜல்லடையாகிக் காற்றாடப் போகிறதோ எவனுக்குத் தெரியும்.
இந்தப்படம் 2005ல் எடுக்கப்பட்டது. இன்றைய நான். வருடத்தில் சுதந்திர குடியரசு தினங்களில் மட்டுமே அணிவோம் என்கிற இடைக்கால சமரசத்துடன், நிரந்தரமாக அகற்றச் சொல்லி தேசிய அளவில் போராட்ட கோரிக்கையாய் ஆகியிருக்கும் சீருடை. அலுவலகக் காரியங்கள் எல்லாம் ஆன்லைனுக்குப் போய்க்கொண்டிருக்கையில், இந்த சீருடை தொங்க வேண்டிய இடம் ஆணிதான். அதிகாரச்சின்னம் போல் தோற்றமளிக்கும் இது, உண்மையில் பார்த்தால், மேலோரின் அதிஅதிகாரத்தைப் பிரகடனிக்கக் கீழோரைக் கோட்ஸ்டாண்டாக ஆக்கிக்கொண்டிருக்கும் ஒரு குறியீடு. 

நமக்குக் கிடைத்த அடிமை மிகவும் புத்திசாலி என்கிற பாராட்டைப் பெற்றுவிட எல்லா எலிகளும் ஒன்றோடொன்று முண்டுகின்றன. கோடிக்கணக்கில் வரிகட்டாமல், பக்கத்துத் தெருவில் வேறு பலகையில் வேறு பெயரில் அமோகமாய் தொழில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

கோடிகளில் மோசடி செய்து வரி ஏய்த்துக் கொண்டிருப்பவன் சம்பந்தம்மாய்   எதையும் பார்க்காதே எங்கேயும் போகாதே இருப்பதை வைத்து ஏதாவது செய்து மூடு, என தலைநகரிலிருந்து வரும் ஃபோன் செய்தி ஒவ்வொரு காதாய்க் கடந்து கடைசியில் வந்து சேருமிடம்தான் இது. 

மூத்திர கேஸ் நடக்கும் கோர்ட்டிலும்கூட ஜெயிக்க முடியாத அளவில் பேருக்கொரு கேஸ் போட்டு மூடப்படும் ஃபைலகள்.

இந்திய ஜனாதிபதி விருது வாங்கி, தன்னை டெரராகக் காட்டிக்கொள்ளும் ஒரு அதிகாரிக்கும் அரசியல் பின்பலம் கொண்ட சேவை வரி ஏய்ப்பாளர் ஒருவருக்கும் நடந்த சுவாரசியமான தொலைபேசி உரையாடல். (மறுமுனைப் பேச்சை டெரர் பாண்டியே புலம்பியதால் தெரியவந்து, இப்போது சேவை வரித்துறையின் சிறந்த ஜோக்காக ஆகிவிட்டது)

சார் வணக்கம் நாந்தான் அந்த.....
ஹலோ அப்படியா குட் ஆஃப்ட்டர் நூன் சொல்லுங்க.
நம்ம ஃபைலக் கொஞ்சம் மூடுங்க .
இது நான் போட்ட கேசு இல்லைங்க அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆஃபீஸ்லேந்து எங்களுக்கு வந்த கேசு
அதனால என்னங்க?
இல்லைங்க நான் ஒன்னும் பண்ன முடியாது.
இல்லைங்க நீங்க ஃபைலை மூடலாம்?
என்னாங்க இது நாளைக்குக் கேள்விகேட்டா நானில்ல பதில் சொல்ணும்?
கேள்வியே வராம நா பாத்துக்கறேன். அங்க மூடறது என் பொறுப்பு. உங்க சைட்ல நீங்க மொதல்ல மூடுங்க.
என்னங்க இப்படிப் பேசினா எப்படிங்க?
எனக்கு சேவை வரியே வராதுங்க!
இல்லைங்க வருது
என்னா சார் ஒலகம் புரியாத ஆளா இருகீங்க. நாலு எம்பி தொகுதிக்கு செலவு செஞ்சிருக்கறவனுக்கு எப்படிங்க வரி வரும்?

கொஞ்ச நேரத்தில் ஃபோன் வந்தது அதிதலைமை அதிகாரியிடமிருந்து.

இதை சிறுகதை ஆக்குவதா அல்லது பெரும் நாவலின் ஒரு பகுதி ஆக்குவதா என்கிற குழப்பத்தில் இருக்கையில் குழாயடிச்சண்டை குறுக்கிடுகிறது.

என் பிரச்சனை மட்டும் என்றில்லாமல் அலுவலகம் தொட்ட சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை தமிழினி வசந்த குமாருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவன் சொன்னான். 
மாமல்லா இப்பவே நான் அஸ்யூரன்ஸ் குடுக்க்றேன், நீ எழுது பதிப்பிப்பது என் பொறுப்பு. நாவலில் நீ இருப்பாயா? என்றான்.
நான் இல்லாமலா ரத்தமும் சதையுமாகக் கட்டாயம் இருப்பேன். என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா என்ன? வேலையில் இருந்து கொண்டே எழுதுகையில் அதிகார மையங்களின் குடலை நோண்டி எடுத்துக் காட்டுவது சில சட்ட சிக்கல்களை உருவாக்கக் கூடும். வளைவு வழியில் நீரைத் திருப்ப வேண்டியதுதான் என்றேன். 
அப்ப சரி கண்டிப்பா நான் போடுகிறேன் என்றான்

அவன் போடுவான் என்பதெல்லாம் சரி, எவன் எழுதுவதாம் எலிகளின் பந்தையம்?