Thursday, January 13, 2011

இது உன் வாழ்க்கை இன்னுமொரு சந்தோஷத்தை எடுத்துக்கொள்.

க்ரியா கடையில் நின்றுகொண்டு (க்ரியா) ராமகிருஷ்ணன் சொல்லியிருந்த, நேற்று வெளியாகியிருந்த தற்கால ஃப்ரெஞ்சு எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு நூலை வாங்க டப்பு கொஞ்சம் இடித்தது - 190 பக்கம் 190 ரூபாய்.

யோசித்தபடி ஏறிட்டுப் பார்க்க எதிர்சாரியில் பெருங்கூட்டம். ஒரு முகத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தில் அடையாளம் தெரிந்துவிட்டது. ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம். கைப்பிடி அளவிற்கு கனத்து, பெண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் நீண்ட ஜடையைக் காணவில்லை. ஆனாலும் அவள்தான்.

இரண்டு மூன்று நாள் முன்பாக பிரமிளின் முழு கவிதைத் தொகுதி அடையாளத்தில் வாங்கிக் கொண்டிருக்கையில் பில் போட்டுக் கொண்டிருந்தவர் பிரமிள் பற்றிய என் சிலாகிப்பு கண்டு, கூட்டமற்றும் இருக்கவே,

காத்துல இருந்து ஒரு செறகு விழுமே அது தவிர எதுவுமேப் புரியலை சார்.

சும்மா அந்தப் புத்தகத்தின் பக்கங்களை எந்த திட்டமுமின்றி பிரித்தேன்.
கன்னி

ஒரு நூற்றெட்டு 
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள்நிழல் 
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள் நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று 
ஒரு கதிர்; உச்சியில்
ஒரு நெல், சுற்றிலும்
வரப்பு நிழல்களின்
திசை நூல்கள்-

இன்று நிழல்நகரும்
நாளை உதயம்;
உனக்கும் 
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும்; உன்
கூந்தலின் உமிநீக்கி
வெடித்தெழும் வெண்முகம்.

ஒரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்.

- பிரமிள்
(கொல்லிப்பாவை, ஜனவரி-மார்ச் 1977.
வைகை, ஆகஸ்ட் 1977)
வாசித்துக் காண்பித்தேன். 

அறுவடை காலத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரிய பட்ஜெட் படத்தின் ஒரு காட்சியில் ஒரு ஷாட். எக்கச்சக்க வேலை ஆட்களின் அறுவாள்கள் கதிர் அறுத்தபடி இருப்பதை சுற்றுப்புற சூழலின் சத்தங்களோடு தலை தூக்கித் திரையில் பாருங்கள். லாங்கும் மிட்டும் க்ளோஸிலுமாக வெவ்வேறு ஷாட்களில் ஒலி கலந்து பின்னணி இசை கலந்து சொல்வதை, சும்மா எட்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டான் பாருங்கள்.

இப்படி அவன் கவிதை, அவ்வப்போது காட்சிகளாகும், அடுத்து உடனே 
//ஏதோ ஒரு ஆள்நிழல் 
மிதிக்க மடங்கி//
எனும்போது, இது எப்படி என யதார்த்த வியாதி பீடித்து கம்யூனிஸ கனவுக் குட்டை நதியில் தொபுகடீர் எனக் குதித்தால் காலும் உடையும். என விளக்கிவிட்டு வெளியேறினேன். 

மறுநாள் வேறொரு புத்தகம் வாங்கப் போகையில் அந்த நண்பர் கேட்டார், 
சார் உங்க பேர்
மாமல்லன், விமலாதித்த மாமல்லன்
(மை நேம் ஈஸ் பான்ட் ஜேம்ஸ் பான்ட் என்று நிழலாட சிரித்தால், ஆம் சிரிப்பான் அற்ற காலத்தின் நகைப்பான்)
அவர் சேரை விட்டு எழுந்தார். 
ஐயையே உட்காருங்கள்
சார் அமரந்த்தா உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். உங்கள் கதைகள் முக்கியமானவை என்று சொல்லி இருக்கிறார்கள்.
யார் அமரந்த்தா
மொழிபெயர்ப்பாளர் என்று பக்கவாட்டிலிருந்து புன்னகைத்தபடி குரல் வந்தது - தமிழ்நதி.
பாருங்கள் எழுத்தாளர்களெல்லாம் உங்களைப் பற்றி சொல்கிறார்கள்.
அமரந்த்த்தா - யார் விசாலாட்சியா?
ஆமா சார்.
அப்படிச் சொல்லுங்க. 83ல தில்லிலப் பார்த்தது. 

பிறகு அண்ணாநகர் பதினோராவது பிரதான சாலையில், க்வார்ட்டர்ஸ்ஸில் எங்கள் செண்ட்ரல் ரெவின்யூ வளாகத்தில் இருந்தாள். தள்ளி இருந்து, அதிகம் பழகாமல் பரஸ்பர அபிமானம். பல நேரங்களில் இடைவெளியே அபிமானத்தை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

//ஏதோ ஒரு ஆள்நிழல் 
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து//

என்றேனும் தற்செயலாய் சந்திக்கையில்

//அறுவடை முடிய
ஆள் நகர//

அருகில் சென்று, பின்னால் இருந்து ஹலோ என்றேன். என்னயும் உயரமாக உணர வைக்கும் உயரம் குழப்பப் பார்வை சூழ விழிப்பது கண்டு, குரலில் இருந்தாவது அடையாளம் தெரிகிறதா? என்றேன். ம்ஹூம்.

மொழுக்கு குண்டு பேனாவைப் பார்த்தபடி, காலம் உருண்டோடிய படிகளில், பழைய பலப்பத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்கிற போதத்தின்  சுவடு கூட இல்லாமல் இருப்பதில் மகிழ்வெய்தி, மாமல்லன் என்றேன் ஜேம்ஸ் பான்ட் சொல்ல வேண்டிய அவசியத்தைக் கொடுக்காமல்,

ஏதும் எதிர்நோக்கா நட்பு உணர்ந்து

//மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று
ஒரு கதிர்; உச்சியில்
ஒரு நெல், //

எவ்ளோ வருஷம் கழிச்சி பாக்கறோம். நீங்க எங்கையோ பூனே போய்ட்டதா... திருச்சில ரெண்டே முக்கால் வருஷம் இருந்தேன்.
அண்ணா நகர் கேந்திரிய பண்டார்ல ஒரு தடவை உங்க மனைவியைப் பார்த்து ஹலோ சொன்னதா ஞாபகம். இப்ப எங்க?
பெஸண்ட் நகர்.
இன்கம்டாக்ஸைத் தலைமுழுகிட்டேன். எப்படா இருபது வருஷம் ஆகும்னு பாத்துகிட்டே இருந்து, விஆர்எஸ் குடுத்துட்டேன். கிட்டத்தட்ட பத்துக்கும் மேல மொழிபெயார்ப்புகள் வந்துருக்கு. க்யூபாவின் முதல் புரட்சியாளன் 1898 ஹொஸே மார்த்தி.
எங்க கெடைக்குது 
கீழைக்காற்று

பல வருஷங்கள் இருவர் வீடும் ஒரே வளாகத்தில், 93-94ல் ஆஃபீஸ்களும் நுங்கம்பாக்கத்தில் அடுத்தடுத்து. கேண்டீனில் எப்போதேனும் பார்ப்பது. எதிர்ப்படுகையில் ஒரு புன்னகை. 

வாழ்வு கொடுத்த ரணங்களை வடுக்களாக்கிக் கொள்ளாமல், நீந்திக் கரையேறி தனது உண்மை முகம் தேடி தனித்தெழுந்து களைத்துச் சிரித்தபடி நிற்கும் ஒரு முகத்தைக் கெளரவிக்க வேண்டி, கீழைக்காற்று சென்று மொழிபெயர்ப்பாளர் பெயர் சொல்லி விசாரித்தேன்.
புதுமலர் பதிப்பகம் / 2003 பதிப்பு / 144 பக்கங்கள் / விலை 60/-
திரும்பி வந்து புத்தகத்தைக் காட்ட, கொஞ்சம் கூடுதல் மலர்ச்சி.
சிறுகதைகள் ஏதாவது மொழிபெயர்த்துருக்கியா?
பனி...ஆனா பிரிண்ட்ல இல்லை. நிழல்களின் உரையாடல்னு ஒரு நாவல். இதுதான் என்னோட க்யூபா பயணத்தை சாத்தியமாக்கிச்சி.
எதுப்பத்தின நாவல்?
அர்ஜெண்டீன ராணுவ ஆட்சியின் கொடூர அடக்கு முறைகளில் கணவனை இழந்த பெண்ணும் மகனை இழந்த தாயும். 

இவர் என் கணவர், இது என் இரண்டாவது பெண், முதலாமவளுக்குத் திருமணம் முடித்துவிட்டேன் தெரியுமா? அருமையான பையன் அமைந்தான். பெருமித முறுவல் இழையோடப் பொரிந்தபடி இருந்தாள்.

இந்த நாவல் கிடைக்கிறதா?
கீழைக்காற்றில்
நீயும் வாயேன்
சரி
நீயும்தான்

அம்மாவும் பெண்ணுமாகக் கூட வர, திரும்பக் கீழைக்காற்றுக்கு விஜயம். 

//சுற்றிலும்
வரப்பு நிழல்களின்
திசை நூல்கள்-//

உள்ளே போய் கல்லாவுக்கு குறுக்கு வெட்டு நேரெதிர் மூலையில் அடியில் குனிந்து, தான் வைத்த இடத்தில் இருந்து வெளியே எடுத்துக் கொடுத்தாள்.
தாமரைச் செல்வி பதிப்பகம் / 1997 பதிப்பு / பக்கம் 192 / விலை 50/- 
விற்பதால் ஒன்று கோமேதகமும் அல்ல - தங்கி
நிற்பதால் இன்னொன்று குப்பையும் அல்ல

புத்தகக் கடைக்கு வெளியில், அழைப்பு வரவும், அலைபேசியில் பேசத்தொடங்கினாள் அமரந்த்தா. 

தோள்பைகளில்களில் கணினிகள் சுமந்தபடி,குழந்தையும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். 
எவ்ளோ அடர்த்தியா எவ்ளோ நீளமா முடியிருக்கும், அதனாலயே மொதல்ல பார்த்தப்ப இவ இல்லையோன்னு நெனச்சிட்டேன்.
ஆமா அது போகப்போக கீழல்லாம் ரொம்ப மெல்லிசாயிடிச்சி. நாங்கதான் அதைப் பிடிச்சி வெட்டிட்டோம்....

//இன்று நிழல்நகரும்
நாளை உதயம்;
உனக்கும் 
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும்; உன்
கூந்தலின் உமிநீக்கி
வெடித்தெழும் வெண்முகம்.

ஒரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்.//

ஹொஸே மார்த்தி - ஓர் அறிமுகம் புத்தகத்திலிருந்து 


நிழல்களின் உரையாடல் - மார்த்தா த்ராபா - மொழிபெயர்ப்பாளர் குறிப்பு 
பி.கு. அமரந்த்தா: இவ்வளவு கடினமான நாவலை நீ எப்படியம்மா மொழிபெயர்த்தாய் என தோப்பில் முகமது மீரான் பாராட்டியதைச் சொன்னாயே! 

இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு பற்றி சுந்தர ராமசாமி ’அபூர்வம்’ எனக் குறிப்பிட்டு எழுதியிருப்பது உனக்குத் தெரியுமா? (முத்துலிங்கத்துடன் சந்திப்பு - வானகமே இளவெயிலே மரச்செறிவே - காலச்சுவடு மே-ஜூன் 2001 - தகவல் உபயம் சுகுமாரன்)

இது உன் வாழ்க்கை, இன்னுமொரு மகிழ்ச்சியை எடுத்துக்கொள்.