Saturday, January 8, 2011

டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது

முன்னட்டை வடிவமைப்பு: தேவிபாரதி
மிகைல் ஷொலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழில் சி.ரகுநாதன்


பின்னட்டை வடிவமைப்பும் மூச்சுமுட்டும் முன்னட்டைக்காரரே

மிகைல் ஷொலக்கோவ்

கெளரவிக்கக் கற்றுக் கொள்வோம். 
உங்களையே ஊரெல்லாம் நட்டுகிட்டுத் திரியிறீங்களே. நாவல் காட்சிய சிலையாக்குறான் பாருங்கடா நாதாரி முண்டங்களா!

இது படமாகவும் வந்திருக்கிறது. படம் பார்த்ததில்லை.

டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று நம்பப்படும் இந்தப் புத்தகம் (பின்னென்ன அட்டைகூட இல்லாத புத்தகம். ஆங்காங்கே டான் நதி என்று வருகிறது. சங்க இலக்கிய செபுலப் பெயல் நீரார் போல ஒரு நம்பிக்கை பெயர்தானே) இது 1983ல் தேவிபாரதியால் (தற்போதைய காலச்சுவடு ஆசிரியர் குழு) ஈரோடில் தண்டனைப் பணிமாற்றலாய் ஆறுமாதம் தங்க நேர்ந்த காலம்.

என்ன பிரச்சனை? ஏன் தண்டனை? 

(என்னிக்கி எதைத்தான் அரசு அலுவலகத்துல அஃபீஷியலாச் சொன்னான். இல்லைத் தெளிவாய்ச் சொன்னான். மத்திய அரசு தொல்லைதூர மாம்சப் பட்சிணி. மீசையப் புடிச்சிக் கரப்பை தூக்கிக் கடாசறாப்புல ஒரே ஒரு கையெழுத்துல தமிழ் நாட்டின் ஒரு கோடியிலேந்து இன்னோரு கோடிக்கு,  தூக்கிப் போட்டாப் போச்சு. தப்பித்தவறி தலைகுப்புற விழுந்த கரப்பு பொறண்டு எழுந்து சுதாரிச்சிகிட்டுக் கேள்வி கேட்டா இருக்கவே இருக்கு - ”நிர்வாக காரணங்கள் நிமித்தம்” அப்படின்னு ஒரு பதில். 

உண்மையான பிரச்சனை, 
ஐயா அதிகாரி அவர்களே, கிட்ட வந்தா உங்க ஜட்டி நாறுது. கொஞ்சம் கசக்கிக் கட்டுங்க
அப்படின்னு சொன்னதாக் கூட இருக்கலாம். ஒக்காளி உண்மை குசுவுக்குக் கூடப் பொறாது)

மெட்ராஸில் அம்மா க்வார்ட்டர்ஸில் இருக்க, நான் மற்றும் மெட்ராஸ் ஆட்டோ பார்ட்ஸில் வேலை பார்த்த நான்கு பையன்களும் ஆக ஐந்து பேர் ஒரு அறையில் தங்கியிருந்தோம். மெட்ராஸிலும் ஈரோடிலுமாக இரண்டு வீடுகளை என் சம்பளத்திலும் அம்மாவின் (அப்பா செத்ததால் கிடைத்த) குடும்ப ஓய்வூதியத்திலுமாக சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி கொண்டிருந்த 22 வயது.

என் அப்பர் அவர் வாழ்க்கையில் செய்த இரண்டே நல்ல காரியங்கள். ஒன்று என்னைப் பெத்தது. மற்றொன்று அவர் செத்தது. பணியில் இருக்கையிலேயே பூட்டதனால் ’கருணையாய்க்’கிடைத்தது இந்தப் புடுங்கி வேலை. அதனாலேயோ என்னவோ வேலையின் அருமை தெரியாமல் இன்றுவரை ஃபுட்பால் ஆடியாகிறது, என்னை அதுவும் அதை நானும்.

21வயதிலேயே கலைக்குற்றுலகம் அறிந்த இலக்கியவாதி அல்லவா! எந்த ஊரிலும் எவராவது ஒருவருக்கேனும் விமலாதித்த மாமல்லன் என்கிற பெயர் அப்போதே தெரிந்திருந்தது. கணையாழி போகுமிடமெல்லாம் நம் சிறப்பு நமக்கு முன்னாலேயே போயிருந்தது.

பரீக்‌ஷா வழியாகத் தெரிய வந்த மருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் வழியே வாடகைக்கு இடம் கிடைத்தது. வக்கீல் சிதம்பரம் வாயிலாகத்தான் தேவிபாரதி தெரிய வந்திருக்க வேண்டும்.

ஈரோடு பார்க் பக்கத்தில் என் அலுவலகம். 
மெயின் ரோடில் இருந்த தபால்தந்தி அலுவலகம் முன்பாக பேப்பர் ரோஸ்ட் பேப்பர் ரோஸ்ட் என்று ஆர்டர் கொடுத்தபடி பரிமாறும் மெஸ் மாமா மெஸ். அவர் போட்ட தகுடுதோசை எப்படிக் காலையில் குழாப் புட்டாக மாறுகிறது என்பது 27 வருடம் கழித்தும் இன்னும் புரிபடாத மருமம்.

முதல் இரண்டு பக்கம் கிழிந்து போயிருந்த இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார் என தேவிபாரதி 1983ல் எனக்குக் கொடுத்தான். அந்தப் பயலும் இலக்கியம் பேசித்திரிவதை மட்டுமே ஒரு தொழிலாக செய்து கொண்டிருந்த காலம். அவன் கூட இருந்த இன்னோரு பயலாவது வேலை வெட்டி ஏதும் இல்லாவிட்டாலும் ஜாடிக்கேத்த மூடியாக ஒல்லிக் குட்டி ஒன்றை டாவடிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தான்.கொடுத்தவனைப் போலவே அட்டையற்று வளைந்து கொண்டிருந்தது புத்தகம். இந்தத் தொள்ளாயிரத்து இருபது பக்கத் தலையணையை பார்த்ததில் உண்டான பிரமிப்பு, வாசிப்பில் வாயடைக்க வைத்தது. என் வாயை அடைப்பது என்றால் என்ன என்பது புரிந்த புண்ணியாத்மாக்களுக்கே இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புரியும்.


மைலாப்பூர் சந்தில் C.மோகன் நடத்திய அச்சகத்தில் இருந்த சிற்றிளைஞன் 1990-91 வாக்கில் உற்சாகத்துடன் இந்த அட்டையை ஒட்டிக் கொடுத்தான் என நினைவு.

கல்கியின் அமாஞ்சிக் கண்றாவிகளையும், பத்து-பதினொன்றாம் வகுப்பில் அலை ஓசை, பொன்னியின் செல்வன் மற்றும் சாண்டில்யனின் நாகரீக சரோஜாதேவி சுயமைதுன தடவல்களையும், வேத பாடசாலைத் தீவிரத்துடன் படித்துக் கொண்டிருந்த காலம். சாண்டில்யன் 22 நாவல் எழுதி இருந்த காலகட்டத்தில் 19 புத்தகங்களைப் படித்து முடித்திருந்தேன். 

கல்கியும் சாண்டில்யனும் உண்மையான சரித்திரமும் ஒழுங்கான நாவலும் இல்லாத ஏதோக் குப்பைகள் எனப் புரிய வைத்த முக்கியமான புத்தகம்தான் இந்த டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உள் நெருக்கடிதான் உன்னை இலக்கியத்திடம் கொண்டு சேர்க்கிறது. உனக்குள்ளே இருக்கும் நெருக்கடிகளின் சிடுக்களை இலக்கியத்திடம் அடையாளம் கண்டு கொண்டு அவிழ்த்துக் கொள்ள முனையும் யத்தனம்தான் உன்னை எழுதத் தூண்டுகிறது. 

பிற்காலத்தில் பேர்வாங்க எல்லா எத்தத்தனங்களையும் செய்ய ஆட்டி வைக்கிறது உன் புத்தி. புத்தி இல்லாதவனை போதைக்கு ஆளாக்கி அதுவே இலக்கிய போதம் என தள்ளாடி சிடுக்கை பின்னும் சிக்கலாக்கி சீரழிய விடுகிறது.

சொந்த அனுபவங்களுக்கு உண்மையாய் இருப்பவன் இலக்கிய எழுத்தாளன் ஆகி ஏதுமற்று இறந்து, சந்ததிகள் கடந்து எந்தகாலத்தில் எடுத்துப் படிப்பவனுக்கும் அர்த்தமுள்ள அமரத்துவம் அடைகிறான்.

வாசகனுக்கு சொறிந்துவிட உண்மையாய் உழைப்பவன் சொறி பரப்பி சகல செளபாக்கியங்களும் பெற்று செளக்கியமாக வாழ்ந்து வாசகன் உக்கிரமடையும் போதெல்லாம் இறந்துபடுகிறான்.

சண்டையோ புண்டையோ எதைப் போடுவதாக இருந்தாலும் முழுதாகப் போடு. ரத்தமும் சதையுமாக வாழ முயற்சி செய். கெளரவக் கூச்சம் தவிர்.

செத்து செத்து வாழ்ந்தாய் நீ
வாழ்ந்து வாழ்ந்து செத்தேன் நான்
- பசுவைய்யா 
(நடுநிசி நாய்கள் - வாழ்க்கை என்கிற கவிதையில் இருந்து)

புரிந்தவர் புரிவாராக
மற்றவர் சொறிவாராக.