Sunday, January 23, 2011

ஞானக்கூத்தனின் பவழமல்லிஜ்யோவ்ராம் சுந்தர் said...


சார், முதல் கவிதை ஞானக்கூத்தனின் பாதிப்பில் எழுதியதா?

@ஜ்யோவ்ராம் சுந்தர்: பாதிப்புல்லாம் கிடையாது. அதை ஒட்டி அப்படியே அந்த வடிவத்தில் முயற்சி.

ஒரு காலகட்டம் வரை ஞானக்கூத்தன் அங்கதக் கவிதைகளுக்கு சந்த வடிவத்தைத் தனது பாணியாக வைத்திருந்தார். சமயத்தில் பவழமல்லிமாதிரியான காதல் கவிதையும் சந்தத்தில் எழுதி இருக்கிறார். 


செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்னும் பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
- பாரதி

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே - எங்கள்
மந்திரி மார்களின் பேச்சினிலே - கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே
- கண்ணதாசன்
(நினைவிலிருந்து எழுதியது தவறிருப்பின் ஆதாரத்துடன் தயவு செய்து திருத்தவும்)

இது பாரதி புகழ்த்திய பாட்டையே எடுத்து, அரசியல் விமர்சனமாகத் தற்காலத்தை அடிக்கும் நையாண்டி.


ஒரு காலகட்டத்தின், குறிப்பிட்டவகை ஞானக்கூத்தன் கவிதைகள், எதுகை போனை தவிர்த்து சந்தத்தை உபயோகித்தவை.

நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

மீட்டர் என்கிற சந்தம் (பொட்டிதட்டும் பீட்டர்களுக்கு இப்படிச் சொன்னால்தானே புரியும்) எவ்வளவு சுத்தமாக உட்கார்ந்திருக்கிறது பாருங்கள்.

இதையே கொஞ்சம் அகன்ற சந்தத்தில் அவர் காதலில் உருகுவதைப் பாருங்கள்.


அன்றாடம் புழங்கும் சொற்கள். ஒன்றில் கூட உபரி அலங்காரம் இல்லை.  

பவழமல்லி

கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதைமுடிந்து தாய்திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என் நினைப்பு தோன்றுமோடீ?

எவ்வளவு காட்சிகளை, மிகக் குறைந்த சொற்களில் தொனியில் உருவாக்கிக் கொண்டு போகிறார் மனுஷன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இரண்டாவதைப் பெற்ற தாய், குடும்பக் கட்டுப்பாடு, அரசாங்கத்தால் தீவிர பிரச்சாரமாய் அமல் படுத்தப்படாத காலம்.  சமயோசிதமாய் சைட் எஃபெக்டாய் புண்ணியமும் சேரட்டுமென கோவிலில் கதா காலட்சேபம் கேட்கப் போய்விடுகிறாள்.

பூண்டு வெங்காயம் தவிர்த்த சாப்பாடும் தனிப்படுக்கையும்தான் போலும் அப்பாவிற்கு, காற்றாட மாடிக் கொட்டகைக்குப் போய்விடுகிறார் தூங்க.

சன்னத் தாலாட்டின் முதல் வரிக்கே தூங்கிவிடும் குழந்தைத் தம்பி.

நேரம் ஏறிய இரவு. இந்தக் கால ஆடி மாத மாரியாத்தாள் தெருக்கச்சேரி லவ்ட்ஸ்பீக்கராகவா தாலாட்டுப் பாட முடியும். ஆரவாரம் அடங்கிய அந்தக் கால ஏழு மணிக்கே ஊரடங்கும் இரவு. காலமும் சரித்திரமும் இடக்கைக் காரியமாய்ப் பதிவாகிக்கொண்டே போகிறது பாருங்கள். அதற்குத்தான் இலக்கியத்திற்கு உண்மை உயிர் எனச் சொல்வது.


குழந்தைத்தம்பி – தாலாட்டு கேட்டுத் தூங்கும் வயதே உள்ள தம்பி. இன்னும் கதை கேட்டுத் தூங்கும், வயது கூட வரவில்லை. எங்குமே தென்படாத அவளின் வயது வாசகனின் யூகத்திற்கு விடப்படுகிறது.

சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பழுத்த தாத்தா. கொஞ்சம் விசிறினாலே தூங்கிவிடும் அளவிற்குப் பழம். பொதுவாக வயசாளிகளுக்குப் பூனைத்தூக்கம்தான். அவர் தூங்கியதும் விசிறும் கைக்கு ஓய்வு. இரவை, காட்சிக்குள் கால நீட்சியை, எப்படி இழுத்துச் செல்கிறார் பாருங்கள்.

எல்லாப் பூக்களும் காலையில் மலர்ந்து இரவில் ஓய்ந்து தூங்கத் தொடங்கிவிடும். ஆனால் பவழமல்லி அப்போதுதான் கட்டவிழ்கிறது. அந்த வீட்டின் பகல் இறுக்கம் தினப்படிகள் ஓய்ந்து மெல்ல மெல்ல பெண் மனம் தனிமையில் வாசற்படியில் உட்கார்ந்திருக்கையில் – கோவிலில் இருந்து கதை முடிந்து திரும்பிவரும் அம்மாவிற்காக மட்டுமே காத்திருக்கும் பாவனையில், உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம்

தாய்திரும்பும் வேளை மட்டும்

இது - வேளையில் மட்டும் அல்ல - திரும்பும் வரையில், அம்மா வந்ததும் வாயிற் கதவைத் தாள் போட வேண்டுமல்லவா? தூங்காமல், கட்டவிழும் பவழ மல்லியாக (தேசலாக,வயது தெரிவது போலத் தோன்றவில்லை?) தெருப்படியில் காத்திருக்கையில்,

முழு நிலவில் தனிமையிலே என் நினைப்பு தோன்றுமோடீ?

காதலனின் மனதில் வியாபித்திருப்பதைப் போலவே, கவிதை முழுக்க கண்ணுக்குப் புலப்படாமல் விரவி இருக்கிறாள். காதலன்/கவிஞன்/காதல் கடைசி மூன்று வார்த்தைகளில்தான் தெரிகிறார்கள். அதைப் போல, காதலி கடைசி எழுத்தில்தான் – டீ – காட்சிரூபப்டுகிறாள்.

ஞானக்கூத்தனின் உச்சங்களில் ஒன்று இந்தக் கவிதை.

மேலே நான் எழுதியிருக்கும் அனைத்தையும் சுழற்றிக் குப்பைக் கூடையில் கடாசிவிட்டுப் ‘பவழமல்லி’யைத் திரும்ப ஒருமுறை படித்துப் பாருங்கள். உங்களுக்கும் ஞானக்கூத்தனுக்கும் இடையில் நான் யார்.

அவர் மனையாளை அவர் டீ என அழைக்கிறார் என்று (பச்சைப் பாக்கெட் பால், வழக்கமான பால்காரர் வராமல், புது ஆளால் போடப்பட்டதால், பக்கத்து ஃப்ளாட்டிற்கு பாக்கெட் மாறிப்போனக் கடுப்பில்) பக்கது ஆத்துக்காரர் கொடுக்கும் பிராது மேல் கூட ஆணாதிக்க வன்புணர்ச்சி எனச்சொல்லி, இணையத்துப் பஞ்சாயத்தில் ஆக்‌ஷன் எடுக்கும் காலம் இது. சொல்றதை சொல்லிட்டேன். இனிமேலாவது, பார்த்து டீ போடாமல் கவிதை எழுதுங்க ஞானக்கூத்தன் சார்.