Saturday, February 19, 2011

சத்தமில்லாத சமயவேல்

இடம்: ஸ்ரீநிவாஸ சாஸ்திரி ஹால், லஸ் சர்ச் ரோடு, மைலாப்பூர்.
நிகழ்ச்சி: கணையாழி குறுநாவல் போட்டி பரிசளிப்பு விழா, 1982
பேச்சாளர்கள்: அசோகமித்திரன், கஸ்தூரிரங்கன், சுஜாதா
முதல் பரிசு மூன்றாம் பரிசு பெற்றவர்கள் பெயர் நினைவில்லை - மன்னிக்கவும்.

பெரியவர்கள் குறு நாவலுக்காக, இரண்டாம் பரிசை பெற்றுக் கொண்டு, “இதைப் படிக்க வேண்டிய எங்க அப்பா உயிரோட இல்லை. அம்மாவிடம் படிக்கச் சொல்லிக் கொடுக்க என்னால் முடியாது” என்று குரல் தழுதழுக்க கண்களில் நீர் தளும்ப கஷ்டப்பட்டு தத்துபித்தினேன். என் ஏற்புரையேக் கிட்டத்தட்ட அவ்வளவுதான். சிறுபத்திரிகை இலக்கியப் பிரமுகர்களாகவும் என் இலக்கிய நண்பர்களாகவும் பார்வையாளர்களில் பலர் சங்கடத்தில் நெளிந்தனர்.  அதற்குமேல் அங்கே நின்றுகொண்டு என்ன செய்வதென்று தெரியாததால் எழுந்து சென்ற இடமான சமயவேலுக்கும் நம்பிக்கும் (விக்ரமாதித்யன்) நடுவில், திரும்ப வந்து அமர்ந்து கொண்டேன். 

என்னப்பா இளைஞர்கள், இப்படிக் கொலைகாரப் பாவிகளா இருக்கீங்க என்றான் சமயவேல். 

ஆறு எட்டு மாதம் கூடப் பழகியிராத சமயவேல் அந்த காலகட்டத்தில் என்னை அள்ளிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருந்த ஆள். கெக்கெபிக்கே என்கிற இளிப்பைத் தவிர என்ன இருக்கிறது இவனிடம் என விழுந்தேன் என்றே தெரியவில்லை.  கொழுக் மொழுக்கெனக் கண்ணாடி போட்ட ஒரு அமுல் பேபி அவ்வளவுதான். அநேகமாகப் பேசவே மாட்டான். 

கூட்டம் முடிந்து, முடிச்சுகளின் வாழ்த்து முகங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கையில்,வயதான பிராமணப் பெரியவர் ஒருவர் சற்றுத் தொலைவில் ஏதோ முகவரி விசாரிப்பதைப் போலவும் சமயவேல் அவருக்கு பதில் கொடுப்பதும் பார்வையில் பட்டது. அடுத்த கனம், அந்த பெரியவர் முகம் கருத்து அகல்வது தெரிந்தது. அருகில் நம்பியும் இருந்தார். இதைப் பார்த்தபடி யாருக்கோ முகம் கொடுத்துக் கொண்டிருந்தவன், அங்கிருந்து பிய்த்துக் கொண்டு அவர்களருகில் பாய்ந்தேன். 

என்ன என்ன?
ஒண்ணுமில்லப்பா!
தம்பி என்ன இருந்தாலும் வயசானவர். நீங்க அப்படிச் சொல்லி இருக்க வேண்டாம். என்றார் நம்பி
நம்பி நீங்களாச்சும் சொல்லுங்க என்ன ஆச்சு!
அட இவன் ஒருத்தன். ஒண்ணுமில்லப்பா! சள்ளென்றான் சமயவேல்.
நம்பி.....!
மாமல்லன் நானே கடைசீலதான் கவனிசம்ப்பா! முழுசாத் தெரியாது. ஆனாலும் அவ்ளோ கடுமையா சொல்லி இருக்க வேண்டாம்.

அவர் ஏதோ பழைய ஆள். கூட்டத்திற்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளே வந்திருக்க வேண்டும். வாசலில் இருந்து பார்க்க, பெரும்பாலான முகங்கள் தம்மைப் போலவே இருப்பது கண்டு சுவாதீனமாக உள்ளே நுழைந்திருக்க வேண்டும். சரியாகத் தவறான ஆளைத் தேர்ந்தெடுத்துத் தவறான எழுத்தை சிலாகித்து சும்மா பேச்சு கொடுத்திருக்கிறார்.

ஏன் இவாளுக்கெல்லாம் *******அவாளயெல்லாம் ரைட்டர்ஸாத் தெரியாதா? என்கிற ரீதியில் பாவம் அச்சுபிச்சென ஏதோ கேட்டிருக்கிறார். அவர் முகம் கருக்கும் படியாக சமயவேல் சொன்னது பெரிதாக ஒன்றுமில்லை. சும்மா இவ்வளவுதான்.

பூ விக்கற எடத்துல எதுக்குக் காய் தேட வர்ரீங்க. (அல்லது)
பூ விக்கற எடத்துலக் காய் தேடக்கூடாதில்ல! (இது மாதிரி ஏதோ!)

இன்றைக்கும் நினைத்துக் கொண்டால், இடி இடி என சிரிப்பேன். மனிதம் மயிரம் என்கிற மனிதாபிமான மசுருகள் தெரியாததால் அல்ல. தெரிந்துத் தொலைக்கிறது என்பதால்.

************ 

இடம்: வெங்கட் நாராயணா சாலை பர்கிட் ரொடு சந்திப்பிற்கு அருகில் ஒரு அறை, 1982
நிகழ்ச்சி: அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளில் 50-60 பேர் கொண்ட ஒரு குழு உடைந்து அதில் ஒரு குறும் பிளவு தன்னை ஸ்தாபித்துக் கொள்ள சிருங்கேரி - காஞ்சி மடங்களின் ரேஞ்சில் குடுமி பிடித்துக் கொண்டிருந்த காலகட்டம்.

ஏறி அடிப்பதில் யார் தீவிரம் காட்டுகிறார்கள் என்பதில் பார்வை குவிந்திருந்த தருணம். குள்ள இளைஞன் ஒருவன் உச்சக் குரலில் கூவினான்.

ஏ! சுப்பிரமணிய பாரதி மாமாவே!

சமயவேல் நம்பி, நான் மூவரும் எழுந்து வெளியே வந்துவிட்டோம். ஒருவருக்கொருவர் ஏதும் பேசிக்கொள்ளாமல் சாலையோர மரத்தடியின் மதிய நிழலில், புகைக்கத் தொடங்கினோம். சட்டென ஒரு தருணத்தில் சமயவேல்,

அடப்பாவிகளா! தான் வாழ்ந்த காலகட்டத்தின் உச்சம் எதுவோ அதுல வாழ்ந்தவன்யா! யாருக்காக எந்தப் புரட்சியைக் கொண்டுவந்து என்ன செய்யப்போறோம்யா?

****************

82 மார்ச்சில் கருணையில் வேலை கிடைத்து, ஜூன் வாக்கில் இலக்கிய குறு வட்டத்திலும் பேர் கிடைத்து அக்டோபர் வாக்கில் அலுவலகப் புழுக்கம் வெடிக்க, காவியில் அலைக்கழிந்து, தண்டணை மாற்றலாக ஈரோடு சென்று, ஆறு மாதத்தில் 83 ஏப்ரலில் மெட்ராஸ் திரும்பினேன். 83ல் சமயவேலுக்கு விருப்ப மாற்றல் கிடைத்து, கோவில்பட்டிக்கு சென்றுவிட்டான்.

83 ஜூலைக் கலவரத்தினால் வருகிற அகதிகளுக்கு எந்த விதத்திலேனும் உதவமுடியுமாவென ஒரு வேகத்தில் அலுவலகத்தில் விடுப்பெழுதிக் கொடுத்து மதுரைக்குப் போய் நெடுமாரனை சந்தித்தேன். எவருமே வரத் தொடங்கவில்லையெனத் தெரியவர இலக்கியத் திரிதலாய் கோவில்பட்டி - இடைசெவல் - நாகர்கோவில் மர்க்கத்தில் சமயவேலை சந்தித்ததுதான் கடைசியாகப் பார்த்தது.

மூன்று மாதம் முன்பான ஒரு தொலைபேசி உரையாடலில் இருபத்தியேழு வருடங்களின் இடைவெளி,  ஆவியானது.

இன்று காலையில் அவனிடம் இருந்து இந்தப் புத்தகம் வந்தது. 
தானப்பர் தெரு

தேடிச் சென்ற நண்பரின்
மூடிய கடைப்படிகளில்
ஓய்ந்து உட்கார்ந்தோம்
மனைவி பற்றிய புகார்களை
புகைக்கத் தொடங்கினான் நண்பன்;
உறவுகளின் கசப்பு எங்கள்
கண்களில் கசிந்து கொண்டிருக்க
குறுக்கிட்டது ஒரு குழந்தைக் குரல்
ராணி பேக்கரி அய்யா வீடு
எங்க சார்?

ஒரு சிறுவன், அவன் கையைப் பிடித்தபடி
பார்வையற்ற அப்பா, அப்பாவின் கையில்
பார்வையற்ற அம்மா, அம்மாவின் கையில்
ஒரு துறுதுறு சிறுமி

சார் உங்களுக்குத் தெரியாதா,
வாங்கப்பா அங்க கேட்கலாம்
நகர்ந்தது குடும்பம்

கைகளாலும் குரல்களாலும் இணைந்த
அந்தச் சிறு குடும்பம்
ஒரு பேரதிசயமாய் மிதந்து கொண்டிருந்தது
தானப்பர் தெருவில்.

பாடம் :8 பல்கோணமிதி

அடிபம்பில் தண்ணீர் அடிக்கும் மேகலாவை
நான் பார்த்தேன்; அவள் மாமரத்தில் நின்ற
காக்கையைப் பார்த்தாள்; காக்கை
குப்பைக் கூடையில் கிடக்கும் தோசையைப் பார்த்தது
முக்கோணம் தெரியும்
அறுகோணம் தெரியும்
பல்கோணம் புரியும்
முடிவிலி கோணம் கூட
(சவம் போல் வாய் திறந்து கிடக்கும் 8)
எப்படியும் கூட்டினால் 180 பாகை வரும்
புதிர் மட்டும் புரியாமலே இருக்கிறது
ஆனால் அவன் அவள் நான் நத்தை நண்டு சிங்கம்
என்று பூமியின் மில்லிய மில்லியன் உயிர்களும்
பிறந்து அலைவது அந்த முடிவிலி
கோணத்தில் தானே?

பூர்த்தியாகாத கோணங்களில் நின்றபடி
சரிந்து விழுந்து கொண்டிருக்கும்
மில்லியன் மனிதர்களை
எந்தக் கூடையால் ஏந்திப் பிடிக்க முடியும்?

ஒவ்வொரு உயிருக்கும்
ஒவ்வொரு புள்ளிக்கும்
360 பாகை பூரணமாய் இருப்பதை
எப்படி மறந்தோம்?
அடுத்தவர் வெளியில் அத்துமீறி நுழைந்து
கீறிப் பிராண்டி கடித்துக் குதறி
குரல்வளைகளில் கை வைக்கிறோம்
மலம் அள்ளும் நண்பருக்கு 0.3 பாகை
மாநகர மேயருக்கு 359.7 பாகை
ஒரு அதிகாலையில் சதாமுக்கு சைபர் பாகை
அமெரிக்க அதிபருக்கு 360 பாகை
பாலஸ்தீனியர்கள் முதல் தீவுத் தமிழர்கள் வரை
சொந்த வெளி தேடுவோரின் பட்டியல்
நீண்டு கொண்டே போகிறது

பூர்த்தியாகாத கோணங்களில் நின்றபடி
விழுந்து கொண்டே இருக்கிறார்கள்
மக்கள்; எம் மக்கள்.


நன்றி: ஆழி பப்ளிஷர்ஸ்