Sunday, February 20, 2011

மின்னல் - கி.ராஜநாராயணன்

ராஜநாராயணன் அவர்களை நான் முதல் முதலாக சந்தித்தது 82 தேசாந்தரத்தில். பிறகு 83 ஜூலையில் அப்புறம் 84ல் இளைஞன் ஒருவனின் வேலைக்கான உதவி வேண்டி அனுப்பி வைத்தார். நானே, டைப்பிங்கில் வருடத்திற்கிருமுறை தோற்றபடி 6 ரூபாய் இன்க்ரிமெண்ட் கூட இல்லாமல் 260ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில்,ஓப்பன் டிக்கட்டில் ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்டில் கக்கூஸ் அருகில் குறுக்கிக் குந்தியபடி பயணம் செய்பவன் போல,நெஜமான கக்கூஸ் நாற தபால் குமாஸ்தாவாக தேனாம்பேட்டை அலுவலகத்தில் காலம் தள்ளிக் கொண்டிருந்த நேரம். வேலை என அந்த இளைஞனைப் போல் வருகிறவர்களை குற்றிலக்கியக் கோமான்கள் அனைவரும் கொண்டு சேர்க்கும் ஒரே வெங்கடாஜலபதி சுப்ரமண்ய ராஜு. சடங்கு மாறாமல், டிடிகே அலுவலகத்தில் அந்த இளைஞனைக் கொண்டு சேர்த்தேன். ஆனால் அவன் என்னைப் பார்க்க வருகையில் வெறுங்கையோடு வராமல் கி.ரா கொடுத்து அனுப்பிய கோடி ரூபாயைக் கொண்டு வந்திருந்தான். 

அதுதான் கதவு புத்தகம். அதில் இருக்கும் ஒரு கதைதான் மின்னல். 

விஷய கனம் இருந்தால்தான் ஒன்று உயர்ந்த கலையாகும் அல்லது இலக்கியக் கதையாகும் என்பதெல்லாம் ஒன்றும் சட்டமில்லை. இதையெல்லாம் கூட எழுதலாமா? என்று ஆச்சரியப் படுத்தக் கூடிய அளவிற்கு சும்மா சில கோடுகளைத் தீற்றி ஒரு அழகான காட்சியை சித்திரமாக்கி விடுவதும் கலைதான். தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் முகங்களை சாயல்களை அசத்தி இருப்பார். கி.ராவும் லேசுப்பட்ட ஆளில்லை. இடைசெவலில் ஏது ரயில். பஸ்தானே. மூன்று பக்க அளவிற்குள் எத்துனை பாத்திரங்கள். அவர்களுக்கும்தான் என்னென்ன வண்ணங்கள்.

மின்னல் : கலைமகள் : ஜனவரி 1960

நன்றி: அன்னம்