Thursday, March 17, 2011

புர்ரா - கதையின் பாத்திரங்களும் காலி பாத்திரங்களும்


புர்ரா

- சிறுகதை - எஸ்.ராமகிருஷ்ணன்.

எழுத்துக்கலை - விவரண தர்க்கப் பிழை 

என்கிற பதிவில் மேற்கண்ட கதையில் தொடக்கத்திலேயே வரும் ஒரு நிகழ்ச்சி விவரிப்பில் இருந்த, எனக்கு நெருடிய தர்க்கப் பிழை பற்றிக் குறிப்பிட்டு மேற்கொண்டு வாசிக்கவிடாமல் அது தடுப்பது பற்றி எழுத்துக்கலை - விவரண தர்க்கப் பிழை என எழுதி இருந்தேன். அது தொடர்பாக எழுந்த விவாதங்களின் அடிப்படையில் இந்தப் பதிவு.

விவாதத்திற்கு நீதி செய்யும் பொருட்டு, நெருடலுக்கு மனம் கரிக்கும் என் மனத்தடைக்கு நானே ஒரு கொட்டு வைத்துக் கொண்டு, முழுக்கப் படிப்பது  என முடிவு செய்து தொடக்கம் முதல் மேற்படிக் கதையைப் படிக்கத்தொடங்கினேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே நியாயமாகும்.

முதல் விஷயம் இந்தக் கதை யதார்த்தவாத தளத்தில் எழுதப்பட்ட உள்மன பிடிபடா ஓட்டங்கள் பற்றிய கதை. அலங்காரத் தோரண வளைவுகளை மட்டுமே பார்த்து விழாவை ஏற்பாடு செய்து பங்குபெற்று விருதும் வழங்கியது  போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கதை. கருத்துக்களைக் கதையாக 90% சதவீதம் வாசகனையே எழுதிக்கொள்ளச் செய்யும் கால்களற்ற புனைவு. 

பெரும்பாலானோர் யதார்த்த வாழ்வில் எதிர்கொண்டு தாண்டிச் செல்லும் யந்திரமய வாழ்வின் பிரச்சனையை ரொமாண்டிசைஸ் செய்து அதீதமாகப் புனையப்பட்டிருக்கும் ஒரு கதை. ஒரு கவிப்போலி.

அந்தக் கதையை எழுதியவரையும், இந்தப் பதிவு எழுதிக் கொண்டிருப்பவரையும் தயவு செய்து, கொஞ்ச நேரத்திற்கு மறந்துவிட முயற்சிப்போம். கடினம்தான் ஆனால் சாத்தியமற்றதன்று.

தன்மை ஒருமையில் சொல்லப்படும் போலிக் கவித்துவக் கதை. ஒவ்வொரு இடமும் வரிகளும் அலங்காரங்களாக தூக்கி தூக்கி நிறுத்தப்படுவதில் வாசகனுக்கு ஒருவித இழப்புகள் சார்ந்த கிளுகிளுப்பை அபிஷேகிக்கும் முயற்சி.

கதை சொல்லி தரமணியில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்.  அவன் மனைவி ஆவடியில் உள்ள பன்னாட்டு வங்கி பிரிவில் வேலை செய்பவள். இந்த தம்பதியருக்கு சுகு என்று ஒரு குழந்தை. அதன் வயது? கதையின் விவரிப்பு வழியே கொடுக்கப்படும் தகவல்களை வைத்து அனுமானத்திற்கு வரவேண்டும். அதற்குக் கதையைத் தொடக்கத்தில் இருந்து படிப்போம்.

<அந்த வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.>

சுகு பள்ளி செல்பவள். <கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது> ப்ரி கேஜியாக இருக்கலாமோ? இல்லை இன்னும் கொஞ்சம் பெரிய குழந்தையோ? ஏனெனில் 

<யார் கிட்டே இதை கத்துகிட்டே என்று கேட்டதும் அவள் உதட்டை கடித்தபடியே பேசாமல் இருந்தாள்.> என்று தகப்பன் கேட்கும் கேள்வியைப் ’புரிந்து கொண்டு’ உதட்டைக் கடித்தபடி பேசாமல் இருக்கும் அளவிற்கு உரையாடல் புரியும் வயது. அப்படி எனில் எல்.கே.ஜியாக இருக்கலாமோ?

<தினமும் சுகு பள்ளியிலிருந்து எங்கள் இருவருக்கும் முன்பாக வீடு திரும்பி வந்துவிடுகிறாள். நான் வீடு வருவதற்கு ஐந்தரை மணியை கடந்து விடும். அதுவரை இரண்டு மணிநேரம் அவள் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியோடு பேசிக் கொண்டோ, தன்நிழலோடு விளையாடிக் கொண்டோ தானிருக்கிறாள்.> 

மூன்றரை மணிக்கே வந்துவிடும் குழந்தை, அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியோடு பேசிக்கொண்டும் தன் நிழலோடும் விளையாடிக்கொண்டும் இருக்கிறது.

இதில் ஒரு முக்கியமான விஷயம். கணவன் மனைவி வேலை பார்க்கும் நகர நடுத்தரக் குடும்பத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள க்ரீச் என்கிற வசதியோ அல்லது தனிப்பட வேலைக்காரர்களோ இல்லாமல் தனியாகக் கடவுளின் கையில் குழந்தையை விடும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பன்னாட்டு வங்கி/தரமணி அலுவலக தம்பதியர் இருப்பார்களா. நீங்கள் இருப்பீர்களா? இந்தக் கேள்வி உங்களுக்கு எழுமா? எழாதா? இல்லை இது என்போன்ற பைத்தியங்களுக்கு மட்டுமே தோன்றக் கூடியதா? 

அப்படித் தனியாக நிழலோடு விளையாடும்படிக்கு அநாதரவாக விடப்படும் குழந்தைக்கு, காவலாளியோடு பேச முடிகிற குழந்தைக்கு என்ன வயது நிர்ணயிக்கும் உங்கள் மனம்? அல்லது கதை சொல்லி போல,

<சில நேரங்களில் அதை காணும் போது குற்றவுணர்ச்சி மனதில் உருவாகிறது. அதை வளரவிடாமல் ஆளுக்கு ஒரு இடத்தில் வேலைக்கு போவதால்  இதை தவிர்க்க முடியாது என்று சுயசமாதானம் செய்து கொள்வேன்.>

மனித நெகிழ்ச்சியில் கரைந்து போய்க் கொண்டு குழந்தையின் வயதை நிர்ணயிக்காமல், என்ன வயசாக இருந்தால் என்ன? ஏதோ ஒரு குழந்தை. என்ன ஒரு நிகழ்கால யதார்த்தப் பிரச்சனை. இதுதான் அனுபவப் போலிமையின்  அடித்தளம். அடித்தளமற்ற அலங்கார மாடிகளின் போலி. 

<என் மனைவி ஆவடியில் உள்ள பன்னாட்டு வங்கி பிரிவில் வேலை செய்கிறாள். எனது அலுவலகமோ தரமணியில் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் மின்சார ரயில் வசதி உள்ள இடமாக வேண்டும் என்பதற்காக சில வருசங்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம். அங்கே தான் சுகு பிறந்தாள். ஆரம்ப நாட்களின் சந்தோஷத்தை தாண்டி சுகு எங்கள் இருவருக்குமே எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருந்தாள்.>

மேற்படி வரிகளில் இருக்கும் இடங்களின் பெயர்களைச் சற்றே கூர்ந்து பாருங்கள் கிருஷ்ணன் வாயில் உலகமே தெரிந்தது போல உங்கள் முன் பெரிய பூசனி தெரியும். ஆவடி ஒரு ரயில் நிலையம் இன்னொன்று தரமணி 

<இரண்டுக்கும் நடுவில் மின்சார ரயில் வசதி உள்ள இடமாக வேண்டும் என்பதற்காக சில வருசங்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம்.> 

ஆவடியும் தரமணியும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துடன் எழுத்தாளரே ரயில் மந்திரியாக ஆகும் பொழுது இனைக்கப்படலாம் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் கதை சொல்லி <வசதி உள்ள இடமாக> நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்தார் போலும். எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வு தலைவணங்கும் தரத்தில் உள்ளது.

இட்டுக்கட்டி கதை சொல்ல முற்பட்டதால் வந்த கோளாறு. உங்களைச் சற்று இந்தக் கதை சொல்லியின் இடத்தில் பொருத்திப் பாருங்கள். தரமணி ஆவடிக்கு வசதியாக நுங்கம்பாக்கத்தில் வீடு பார்ப்பீர்களா? 

<அங்கே தான் சுகு பிறந்தாள். ஆரம்ப நாட்களின் சந்தோஷத்தை தாண்டி சுகு எங்கள் இருவருக்குமே எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருந்தாள்.>

பிறந்த முதல் குழந்தை,ஒரே முழந்தை, தாய் தந்தை இருவருக்கும் ஒரே சமயத்தில் எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருக்கிறாள் என்றால் வலுவான காரணம் எதிர்பார்க்குமா இல்லையா உங்கள் மூளை? அதெல்லாம் இலக்கியக் கதையில் எதிர்பார்த்தால் உங்கல்லைவிட மொக்கை வேறு யார் இருக்க முடியும்?

அவளை கவனிப்பதை இருவருமே தவிர்க்க முடியாத ஆனால் விருப்பமில்லாத வேலையை போலவே உணர துவங்கினோம். 

குழந்தைக்கு ஏதும் குறையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்க வேண்டுமா என்ன? வாசகன் தன்னை அறிவுஜீவியாக உணர வேண்டும். சும்மா காலி இடம் விட்டால்தானே வாசகன் சுயமாக எழுதி ரொப்பிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். >

<உறக்கத்தில் பாலூட்டும்> எழுத்தை ஆள்வதனால் அவன் பெயர் எழுத்தாளன் என்பதை உறுதி செய்யும் வார்த்தைகள். நிஜமாகவே எழுத்தின்மேல் ஆளுமை உள்ள எழுத்தாளர்களைப் படித்துப் பாருங்கள் இந்த தருணத்தில் என்ன வார்த்தைகளில் எழுதி இருக்கிறார்கள் என்று. ஒரு சின்ன திருத்தம் துல்லியத்தை நோக்கிக் கொண்டு போய்விடும். சொல்ல வருவதை எவ்வளவு குறைந்த வார்த்தைகளில் எவ்வளவு துல்லியமாகச் சொல்லி வாசக மனத்தில் காட்சியை உண்டாக்குகிறான் என்பதை வைத்தே இலக்கியத்தில் அவனது இடம் அங்கீகரிக்கப்படும்.

<அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.>

உலக அறிவு மூடிய கதவையும் தாண்டி அறைக்குள் வந்து படம் காட்டுகிற காலம் இது. அவர்கள் எத்துனையோ டிவி டாக்குமெண்டரிகளில் காணக்கிடைக்க்கும் ஆதிவாசிகளை சேனல் விட்டு சேனல் தாவுகையிலேனும் பாத்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா? அவர்கள் பன்னாட்டு வங்கிகளில் வேலை பார்ப்பதில்லை.  - கூடையோ ஓலையோ பின்னியபடிதான் சேலையில் தொங்கும் அல்லது மடியில் கிடக்கும்  குழந்தைகளுக்கு பாலூட்டுகிறார்கள்.இல்லை சரியாகச் சொன்னால் குழந்தைகள் தாமே முலை குடிக்கின்றன. அவர்கள் முகத்தில் கருணையோ அன்போ ஏதும் தெரிகிறதா? ஆகவே அவர்களுக்குத் தாம் பெற்ற குழந்தையிடம் கருணையோ அன்போ இல்லை என்றாகிவிடுமா? அட ஒரு தாயிடம் கருணையும் அன்பும் இருபத்தி நாலு மணிநேரமும் முகத்தில் வழிந்துகொண்டே இருக்க அவள் என்ன ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா?

<அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது.>

<எதுவுமிருக்காது> என்ன ஒரு ஓட்டமான எழுத்து. அடடா! வாசகனுக்குதான் எவ்வளவு சுதந்திரம் வழங்கப்படுகிறது. உன் விருப்பத்திற்கு வேண்டுமானால் இன்னும் இரண்டு மூன்றை வார்த்தைகளைச் சேர்ந்த்து எழுதிக்கொள்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. சுகு எனது குழந்தை என்றபோதும் உறக்கத்தில் அது அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சில நாட்கள் தலையணையை வைத்து முகத்தை பொத்திக் கொண்டுவிடுவேன். 

திரிகால சஞ்சாரி. எத்துனைக் கால மயக்கங்கள். ஆங்கிலத்தில் டென்ஸ் மாற்றி மாற்றி இறந்தகாலம் நிகழ்காலம் எனக் கலந்து கட்டி எழுதிப்பாருங்கள். அடுத்தவன் வழித்துக்கொண்டு சிரிப்பது இருக்கட்டும் உங்களை நீங்கள் என்னவாக உணர்வீர்கள்? நம்ப டமில் லேங்குவேஜ் இது. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எழுதறவனுக்கும் ஒழுங்கா தமிழ் தெரியாது படிக்கிறவனுக்கும் தெரியாது ரெண்டும் ரெண்டும் நாலு. எனக்கு நீதான் பெரிய ஆளு.

<உறக்கத்தில் அது அழுவதை > கதையின் தொடக்கத்தில் <அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை.> அவள் இடையில் அது ஆகி விடுகிறது. நல்லகாலம் கதை அவள் பெரியவளாகும் வரை செல்லவில்லை. இல்லையேல் சுகு அது அவள் அவர் எனப் பெயர் வைக்கும் படி ஆகியிருக்கும். 

இந்தக் குழப்பம் ஏன் நிகழ்கிறது? ஆசிரியன்,குழந்தையின் வயதை நிர்ணயிக்கவில்லை. கதை நிகழும் காலத்தை நிர்ணயிக்கவில்லை. பால்குடி பற்றி சொல்கையில் அது எப்போது என்பதை நிர்ணயித்துக் கொள்ளவே இல்லை. எல்லாமே பொத்தாம் பொதுவாக லூசாக சொல்லப்படுகிறது.  லூசாக இருப்பதும் எழுதுவதும் ஒரு பாணி, படைப்புவகை என்பதுதான் லேட் ஃபேஷன் போலும். 

ஆனால் கதை தொடங்குகையில் முதல் பத்தியிலேயே நன்றாகக் கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் சொல்லும் குழந்தையாக இருக்கிறது. காவலாளியிடம் பேசுகிறது. பள்ளி சென்று வேனில் திரும்பி வந்து தனியே விளையாடிக்கொள்ளும் குழந்தை என்கிற தூவப்பட்ட தகவலகளை வைத்துப் பார்த்தால் என்ன வகுப்பு? எந்த வயதில் கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் சொல்லும்? உரையாடும்?

அனுபவத்தை உள்வாங்கி படைப்பாக்காமல் கருத்தை முன்தீர்மானித்துக் கொண்டு கதை பண்ணத் தொடங்குவதால் உண்டாகும் அவலம்.

<அவளது பிறந்த தின கொண்டாட்டங்களில் கூட எங்கள் இருவர் முகத்திலும் மறைக்க முடியாதபடி விருப்பமின்மை படர்ந்திருந்ததை புகைப்படங்களில் காணமுடிகிறது. அதை மறைக்க நாங்கள் இருவருமே அதிகம் நடிக்க கற்று கொண்டோம். சுகுவை மாறிமாறி முத்தமிடுவதை இருவரும் செய்த போது நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்வதை நிறுத்தி பல மாதகாலம் ஆகியிருந்தது ஏனோ என் நினைவில் எழுந்து அடங்கியது.> 

இது என்ன பின்நவீனத்துவ மீ விவரணையா? 

<எழுந்து அடங்கியது> இதற்கு ஏதும் விசேஷ அர்த்தம் இல்லைதானில்லையா?

<சமீபமாகவே சுகுவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பழவந்தாங்கலுக்கு மாறியிருந்தோம். இதனால் என் மனைவி இரண்டு ரயில்கள் மாறி அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது.>

எழுத்தாளர் நேற்றுதான் சென்னை வந்தாரோ? ஆங்கிலத்தில் டாக்டரேட் வரை படித்தவர் ஆகவே தமிழ் தெரியாது வணக்கத்துடன் புரிந்து கொள்கிறோம். சென்னையும் தெரியாதா? இல்லை கதை சொல்லியின் மனைவி வேலை பார்க்கும் இடம் ஆவடி என்று சற்றுமுன் குறிப்பிட்டதை மறந்து விட்டாரா? அல்லது அவர்கள் வசித்த இடம் நுங்கம்பாக்கம் என்பது நினிவிலிருந்து நழுவி விட்டதா?

<பழவந்தாங்கலுக்கு மாறியிருந்தோம். இதனால் என் மனைவி இரண்டு ரயில்கள் மாறி அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது.> 

நுங்கம்பாக்கமும் பழவந்தாங்கலும் ஒரே ரூட்டில் இருக்கற ரயிவே ஸ்டேஷன்கள் இல்லையா? பழவந்தாங்கலில் இருந்து ஆவடிக்கு இரண்டு ரயில் மாறவேண்டிய கஷ்டம் என்றால், நுங்கம்பாக்கத்துல இருந்தது என்ன ஹெலிபேடா? நுங்கையில் இருந்து ஆவடிக்கு நான் ஸ்டாப் ட்ரெய்ன் செளகரியத்தைக் குழந்தையின் பள்ளிப்படிப்பிற்காகத் தியாகம் செய்துவிட்டு பழவந்தாங்கல் வந்தார்களாமா? 

உணர்ச்சி பெருக வைப்பதற்காக ஆவி குமுதம் எழுத்தாளன் ஓவராக சீன் போட்டால் மட்டும்தான் மட்டமா? வாடகை இலக்கிய சீருடை அணிந்திருக்கும் வளப்பத்தால், வலிந்த திணிப்புகளுக்கும் மொக்கை அறிவுஜீவிகள் அரிதாரம் பூசி ஆஜராவார்களோ?

சரி. பழவந்தாங்கல் பள்ளிக்கூடம் எப்படி?

சுகு ஆரம்ப வகுப்புகளை கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள். அந்த பள்ளியின் அருகில் கடல் இருந்தது.. பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளிக்கூடம். சுவர்கள் ரோஸ் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. கண்ணாடி கதவுகள், மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போன்று இயல்பான துள்ளலுடன் நடந்து திரியும் சிறுமிகள். ஒரு அறை முழுவதும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள். பொம்மைகள். பள்ளியிலே மதிய உணவு தந்துவிடுவதால் சுகுவை கவனிப்பதற்கு நாங்கள் அதிகம் மெனக்கெடவில்லை

<சுகு ஆரம்ப வகுப்புகளை கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள். > 

ஒரு நிமிடம் சினிமா உத்தியில் ஜம்ப் கட்டோ ஆரம்ப வகுப்புகள் என்றால் இப்போது வளர்ந்து என்ஜினியரிங் படிக்கிறாளோ என திடுக்கிட்டுவிட்டேன். அப்படியான அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடவில்லை.அவளது படிப்பிற்காகதானே பழவந்தாங்கல் வந்தது.

<கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள்.>

ஐயையோ இது என்ன புது ருப்புகுண்டு! பழவந்தாங்கல் அருகில் கடலா?

<அந்த பள்ளியின் அருகில் கடல் இருந்தது.. பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளிக்கூடம்.>

டிஸ்கிரிப்சனைப் பிரிஸ்கிரிப்ஸன் போலக் கூர்ந்து பார்த்தால் பெஸண்ட் நகரில் உள்ள த ஸ்கூல் என்கிற கிருஷ்ணமூர்த்தி ஃபவ்ண்டேஷன் ஸ்கூல் போல அல்லவா உள்ளது. பழவந்தாங்கல் தரமணி ஆவடி இப்போது பெஸண்ட் நகருமா? விஸ்தார நகரத்தின் விசாரங்கள்தான் எப்படி விஸ்வ்ரூபமாய்ப் படம் பிடிக்கப்படுகின்ற்ன?

<என் மனைவி அப்போது தான் சுகுவை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவேண்டும் என்பதை பற்றி சொன்னாள். ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே பள்ளியில் படித்தாள் மட்டுமே அவளது அறிவு வளரும் என்று தன்னோடு வேலை செய்யும் கலைவாணி சொன்னாதாகவும் அவள் பிள்ளைகள் <அப்படிதான் படிக்கின்றன என்றாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.

நாங்கள் சுகுவிடம் பள்ளிமாறுவதை பற்றி பேசவோ கேட்கவோயில்லை. எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதை முடிவு செய்து நாங்கள் இருவரும் அலைந்து திரிந்து வரிசையில் நின்று ஆள் பிடித்து பிரெஞ்சும் ஆங்கிலமும் போதிக்கும் அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் பிடித்து முதல்வகுப்பில் சேர்த்தோம். >

இதுதான் பழவந்தாங்கல் / பெஸண்ட் நகர் / கடல் / பசுமையான மரங்களடர்ந்த பள்ளியா இல்லை வேறு வேறா? 

யோவ் இதையெல்லாம் நோண்டாம மேட்டரைப் பாருய்யா?

என்னாது மேட்டரா? அதுவேற இருக்காக் கதையில.

<இன்றைக்கும் அப்படியொரு சொல்லை தான் கத்தினாள். அதை இதன் முன்னால் எங்கேயோ கேட்டது போலவும் இருந்தது. சுகுவை அருகில் அழைத்து மறுபடியும் அதை சொல்ல சொன்னேன். தயங்கியபடியே புர்ர்ரா என்றாள்.>

சாரே இந்த புர்ராவை மொதல் தடவை கேக்கறாப்புல எழுதறீங்க! கதையே இதைச் சொல்றதுலதானே தொடங்குது. ஓ! அதைக் கொண்டுவந்து கனெக்டிங். சர்க்கிள் கம்ப்ளீட்டிங். நைஸ் டெக்னிக். அப்பிடின்னா

<அர்த்தமில்லாமல் உளறக்கூடாது புரிஞ்சதா என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டு என் அறையிலிருந்து வெளியேறி போனாள். வாசலை கடந்த போது புர்ரா என்ற சப்தம் மறுபடி கேட்டது>

நான்: மூனாவது பத்தில இருக்கிற <அறையிலிருந்து வெளியேறி போனாள். வாசலை கடந்த போது>  கண்டினியூட்டி இடிக்குமே?

எஸ்.ரா: அதெல்லாம் ஒண்ணும் இடிக்காது ஓய்! எனக்குன்னு ஒரு மொக்கை என்னிக்கோ பொறந்து, இணையத்துல புர்ரா புர்ரான்னு எனக்கேத் தெரியாத ஆயிரம் இண்டர்ப்ரட்டேசனைக் குடுத்து, கொட்டை தொண்டைக்கு வர வாதாடிகிட்டு இருக்கு. நீ போயா உனக்கு ஒரு புர்ரா! 

மூளையைக் கழற்றி வைத்துவிட்டு எழுதிய கதைக்கு மூளையே இல்லாதவன்தானே வக்கீலாக முடியும்.

மொக்கை எழுத்து என்பது ஒஸ்தியாகக் காட்டிக்கொள்ள உயர்ந்த வார்த்தைகளைத் தேடிப்போட்டு உள்ளீடின்மையை ரொப்பிக் கொள்வது.

இப்படியாகவே கதை முச்சூடும் போலியாகவே போகிறது. யந்திரமய வாழ்வின் அவலத்தை சுட்டுகிற பாவனை மட்டுமே உள்ளது. அதற்கே இவ்வளவு பரவசம் இணையத்திற்கு என்றைக்கோ வந்துவிட்ட அந்த ஒற்றை வாசகனுக்கு.

குழந்தையின் தனிமையின் அவலத்தைச் சொல்ல எழுதத் தொடங்கிவிட்ட கதை ஆகவே அதை முன்னிட்டு மனைவியுடனான காமம் உட்பட அனைத்தும் கூரைப்பாயாகச் சுருட்டப்பட்டு கதைக்குள் செருகப்பட வேண்டும். 

அலுவலகத்தில் இருந்து வந்த மனைவியை முத்தமிடப் போகிறான் கதைசொல்லி

<என் முகத்தை விலக்கியபடியே கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன். நீங்க வேற ஏன் உயிரை எடுக்குறீங்க என்று  சொன்னாள் மனைவி. என் முகம் சிடுசிடுப்பேறி மாறியது.

அவசரமாக குளியல் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டேன்.>

முத்தமிட முடியாமல் போனதால், உணர்ச்சிவேகத்தைத் தணித்துக்கொள்ள பாத்ரூம் போயிருக்கிறான் போலும், அட பரவாயில்லையே கதையில் முதல் முறையாக, வாழ்க்கையின் யதார்த்தம் சொல்லப்படுகிறது போலும் என நினைத்தால், பஷீர் கதையில் பர் எனக் குசு விடுவதைப் போல, பாத்ரூமுக்கு உள்ளே போய் புர்ரா என்கிறான்.

யந்திரகதியான வாழ்க்கை தரும் பணம் எல்லோருக்கும் வேண்டும். அதற்காக இழப்புகளை ஏற்றாக வேண்டும் என்கிற யதார்த்தத்தை எல்லோரும் ஏற்கிறோம். அதற்கு விலையாகக் கொடுத்தாக வேண்டியதை, எவ்வளவு குறைவாக ஆக்கிக் கொள்ளலாம் என்பதிலேயே எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறோம். இது அப்பட்டமான உண்மை இல்லையா? அதை விடுத்து மனிதர்கள் எல்லோரும் அன்பற்ற மிருகங்கள் போலத் திரிவதாகக் காட்டுவ்து எதிர் ரொமாண்டிசிசிசமன்றி வேறென்ன? இதைப் பப்பளக்கா இலக்கியம் என்று வகைப் படுத்தலாமோ? இந்த மனோபாவமே, பிரச்சனைகளின் பன்முகப் பரிமானத்தை அணுகத் திரானியற்ற தட்டை எழுத்துக்களை ஃபேக்டரி சரக்கு போல உற்பத்தி செய்கிறது.

இந்த இனிப்பு பாகற்காயை இலக்கியமாக சப்பு கொட்டத்தான் எத்துனை பெரும் கூட்டம். மனிதனின் முகமூடியை கிழிக்கிற பாவனையில் வாசகனுக்கு புதிய முகமூடி அணிவிக்கப்படுகிறது. முகமூடிகளைக் கிழித்து அவன் முகத்தை அவனுக்குக் காட்டுபவனே இலக்கியகர்த்தா. 

கதை கடந்த காலத்தில் நடந்து முடிந்ததை சொல்கிறதா? அல்லது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பதை சொல்கிறதா?ஒரு பத்திக்குள்ளாகவே எவ்வளவு குளறுபடிகள். இந்தத் தெளிவெல்லாம் இருந்துவிட்டால் ஒருவர் நவீன எழுத்தாளுமையாக ஆகிவிட முடியுமா? இல்லை வாசகாளுமையாகத்தான் வாழ்ந்துவிட முடியுமா? நடமாடும் நூலகமாகத் திரிவதில்தான் என்ன ஒரு திருப்தி. நூல்களைப் பார்க்கிறோமா படிக்கிறோமா என்பது முக்கியமான சுயவிசாரனை.

அர்த்தமற்ற ஒரு சத்தத்தைக் குழந்தை எழுப்பியதில் சிடுசிடுத்த கதை சொல்லி இறுதியில் தானும் அது போலவே சிலபல சத்தங்களை எழுப்பப் பழகிக்கொள்வதுதான் யந்திரகதியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள சிறந்த தீர்வு என்கிற முடிவிற்கு குழந்தை வாயிலாக வந்து சேர்வது எவ்வளவு தூரம் நிஜமானது அல்லது பாசாங்கற்றது என்பதை வைத்தே இந்தப் பயணத்தின் உயர்வு தாழ்வு தீர்மானிக்கப்படவேண்டும்.

<அன்றிரவு இதை பற்றி என் மனைவியிடம் சொன்ன போது அதற்கும் சுகுவிற்கு அடி விழுந்தது. ஏன்டி ஊமைக்குரங்கா இருக்கே. உடனே நீ பிரண்ட்ஸ் பிடிச்சாகணும் புரிஞ்சதா என்று மிரட்டினாள்> 

அவள் அம்மாவா இல்லை அஞ்சுகண்ணனா என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? நல்லது நீங்கள் நார்மலாய் இருக்கிறீர்கள். இது போன்ற செயற்கை ஜோடனைகள் வரிக்குவரி மண்டிக்கிடக்கிறது.

கணவன் மனைவி வேலை பார்ப்பதால் பள்ளிவிட்ட குழந்தை தனியாக ஏங்கித் தனக்குத்தானே ஒரு கற்பித உலகில் அநாதையாகப் புரியாத பாஷை பேசி விளையாடித் திரிவது எவ்வளவு கொடுமை என்கிற கருத்தை நீங்கள் நான் என எல்லோருமே கொண்டிருக்கிறோம்தான். அந்தக் கருத்தை இந்தக் கதை வாழ்வின் ஒரு உயிர்த்துடிப்புள்ள துண்டமாகச் சொல்கிறதா என்பதுதான் கேள்வி? 

எதிரில் ஒரு காலிப் பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. குழந்தை சுகு போலவே வாசகன் தான் காண விரும்புவதை அதில் போட்டு நிரப்பிக் கொண்டு சோகமாக குதூகலிக்கிறான். இந்த இட்டு நிரப்பல் வாசகனுக்கு, மொண்ணையான யந்திர உலகத்தில் - அவன் உள்ளூர ஆசைப்படும் - தான் ஒரு நுண்மையான மேன்மையானவன் என்கிற பிம்பத்தைத் தருகிறது. இதைவிடவும் எழுத்தாளன் வாசகன் என்கிற இருதரப்பும் பூரண வெற்றிக் களிப்பில் சந்தொஷிக்க வேறென்ன வேண்டும்? 

ததாஸ்து.