Saturday, March 19, 2011

நண்பராக விழைபவருக்கு ஒரு கடிதம்

நன்றி. இணைப்பைப் பார்க்கவும்.

ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி. 

(இன்னும் சில நண்பர்களிடம் மென்வடிவில் இன்னும் சில கதைகள் உள்ளன. அவர்களிடம் வைத்த வேண்டுகோளேதான் இங்கும் - தயவுசெய்து யாருடனும் பகிர வேண்டாம். நாட்டுடமையை நானே செய்ய விருப்பம்)


நீ கேளேன்! நீ கேளேன்!


படித்திருக்கலாம் எதற்கும் இருக்கட்டுமே என்றுதான் கொடுக்கிறேன். 

நான் ஸ்கேன் செய்து வெளியிடும் அனைத்துக் கதைகளும் என் பார்வையின் லயிப்பைச் சுட்டுபவையே. என் ’வெறுப்புமிழும்’ விமர்சனங்கள் போலவே நான் எதை உயர்ந்ததாகச் சொல்கிறேன் ஏன் சொல்கிறேன் என்பதை வாசகனாகவே படித்து இழையைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஓரிருவர் என்றாலும் பாதகமில்லை. புரியாவிட்டாலும் பரவாயில்லை. மெல்ல மெல்ல கயிறு பிடித்து ஏறி வரக்கூடும். 

ஆனால் இணையம் எனக்கு ஒருவித அயர்ச்சியையும் விலகலையுமேத் தரும் போல இருக்கிறது. காரணம் ஒத்த அலைவரிசையைக் காண்பதே அரிதாக இருக்கிறது. எனது முன்னோடிகளுடன் எப்போதேனுமே அபூர்வமாய் ஓரிருமுறை மட்டுமே உரையாடலில் பிசிறு தட்டி இருக்கக்கூடும். அநேகமாய் எப்போதுமே ஆனந்த ஆகர்ஷணம்தான் பரஸ்பரம்.

அதற்காக நான் திட்டே வாங்காதவன் இல்லை. ராமசாமியை ஒரு காலத்தில் நிம்மதியாய் மற்ற நண்பர்களுடன் இருக்க விட்டதே இல்லை. எழுத்துச் சூழலில் நேரடி இயங்கலில் இருந்து விலகியதில், பல வருடங்கள் அவரைப் பார்த்ததுகூட இல்லை.

ஜெயகாந்தனிடம் - செய்யாத தவறுக்காய், தவறான புரிதலில், பிறர் போட்டுக் கொடுத்ததற்காய், நான்கடி மேஜையில் இரண்டடி இடைவெளியில் ‘தேவடியாப் பையா’ என திட்டப்பட்டபோது - முக்கால்மணி நேரம் ஒரு வார்த்தை பேசாமல் அவர் கண்களையேப் பார்த்துக் கொடிருந்தவன். இது பற்றித் தனியே எழுதுவேன். அப்புறம் அவரே நெகிழ்ந்து தடவியபோதும் கல்லாகவே நின்று குட்பை ஜேகே என்றவன். இரண்டு மூன்று முறை பல வருட இடைவெளியில் பொது இடங்களில் சந்திக்க நேர்ந்த தருணங்களில், கையைப் பிடித்து, ’மனசுல எதுவும் வெச்சிக்காதே! மடத்துக்குவா’ என அழைத்தும் போகாதவன். சில வருடங்கள் முன் ஒரு நண்பரின் (இப்போது உறவு முறிந்து நெ.1 எதிரி) மச்சினி திருமண சரக்கு விருந்தோம்பலில் இன்னும் சில பிரபலங்கள் சூழ்ந்திருக்க, அருகில் உட்கார வைத்துக் கொண்டு என் தலையைத் தடவியபடி, எதிரில் நின்ற என் மனைவியிடம் ‘இவன் என் புள்ள மாதிரிம்மா’ என்று சொன்ன அதே வாய் கண்களைக் கலங்க வைத்தது.

நேர்ப்பழக்கத்தைத் துண்டித்துக் கொண்ட போதும் இலக்கிய வெளியில் ஜெயகாந்தனுக்கான இடம் / விதந்தோதல் மாறியதே இல்லை. அதே மைக் முழுங்கிதான். அன்றைய காலகட்டத்திற்கு அவசியமான மைக் முழக்கம்.

சுந்தர ராமசாமி - திருவல்லிக்கேணி தள்ளுவண்டி மார்க்கெட்டில் தற்செயலாய் சந்திக்க நேர்ந்த போது, எனது தாஸில்தாரின் நாற்காலியைப் பாராட்டினார். நீ போ, இவரொட பேசிட்டு வறேன் என்று கமலா மாமியை அனுப்பி விட்டு, ‘மாமல்லன், நான் மட்டும் இப்ப மெட்ராஸ் வரலேன்னா நிச்சயமா இந்தக் கதையப் பத்தி உங்குளுக்கு எழுதி இருப்பேன் ரொம்பப் பிடிச்சி இருந்துது என்றார். அதையொட்டிக் கிளைத்த உரையாடலின் ஓரிழையில், அசமந்தமாய் ஆர்வக்கோளாறில் (23 வயது), அவரது சவால் கவிதை ஜேகேவைக் குறித்தது அல்லவா எனச் சொல்லப்போய் ’அது ஜெயகாந்தன் இல்லே. ஷேலோ மைண்ட்தான் இப்படில்லாம் யோசிக்கும்’ என விருதும் வாங்கி இருக்கிறேன். 

மானசீகமாய் அசோகமித்திரனாலேயே எழுத வந்தவன், பின்னொரு நாள் அவர் வீட்டில் காபி குடித்துக் கொண்டே இலக்கிய விவாதச் சூட்டில் பதறி நேர் உறவில் இருந்து விலகியவன். அமி ஒரு போதும் என்னிலிருந்து விலகியதே இல்லை. சமீபத்தில் திலீப் விழாவில் வரந்தாவில் அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் காலைத்தொட்டு வணங்கினேன். 

இவர்களெல்லாம் இல்லை என்றால் நான் யார்?

விவாத வெப்பம் வேறு, மாறாது மனசுக்குள் மறுகி உறையும் வன்மம் வேறு.

அன்பன்

விமலாதித்த மாமல்லன்.

பிகு. நான் எதை எழுதினாலும் - இந்தக் கடிதம் உட்பட - இலக்கியச் செயல்பாடோ இல்லையோ துல்லியமாக இருக்க வேண்டுமென நினைப்பவன். எனவே திரும்பப் படித்து திருத்தி. வாக்கிய அமைப்பில் அழுத்தங்கள் நிறைவாக உள்ளனவா எனப் பார்க்கிற வியாதி உள்ளவன். எனவே நேரம் எடுக்கும். வாழ்வு வீணாகும். 

படைப்பு என ஒன்று தனியாக எங்கோ காய்த்துத் தொங்குகிறதா என்ன? அறிவுரை வழங்கும், அம்மி உளி மூடர்களிடம் இதை அறியும் உணர்வுக் கொம்புகள் உள்ளனவா?