Sunday, March 6, 2011

ஜெயமோகனின் ஆன்மா வாங்கலியோ! ஆன்மா! ஆன்மா!

பிரபல ஆளுமைகளைக் கதை மாந்தர்களாக்கி ஆனால் அதைக் கதையில் குறிப்பிடாமல், கதையில் வரும் சில கற்பனை சம்பவங்களுக்கு நிஜத்தில் நடந்தது போன்ற வரலாற்றுச் சாயத்தை ஏற்றும் மோசடியை, விக்கிப்பீடியாவில் தொடர்ந்து செய்யப்போய்க் கையும் களவுமாய் மாட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

ஒரு புனைவு இப்படித்தான் எழுதப்படவேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. வரலாற்று ஆளுமைகளைப் பெயர் போட்டுப் புனைவு என எழுதினால் வாரிசுதாரர்களிடம் இருந்து வரப்போகும் வக்கீல் நோட்டீஸைத் தவிர்ப்பதற்காக அவர்களின் வீட்டுப் பெயர்கள், பாதிப் பெயர்கள், சில சாயல்கள் என்று கிசுகிசு போல எழுதுகிறார். ஆனால் அவர் இலக்கிய எழுத்தாளர் ஆயிற்றே! எனவே இதிலெல்லாம் அவர் திருப்தி அடைந்துவிட முடியுமோ? ஆகவேதான், ஏதோ வரலாற்றில் மறைக்கப் பட்ட பக்கங்களை தர்மாவேசத்துடன் அகழ்வாராய்ச்சி செய்து எழுதுவதாக பாவ்லா செய்கிறார். 

திடீர் பிள்ளையார்கள், பெரும்பாலும் நிலத்தைத் தோண்டுகையில் தற்செயலாகக் கிடைப்பவர்கள்தாம். அவற்றுக்கு சுயம்பு மூர்த்திகள், தானாய் அவதரித்த கடவுளர்கள் எனப் புனைவுகளை உருவாக்கி நிலைக்கச் செய்வது அரதப் பழைய மோசடி. உண்மையில் இந்த சிலைகள் பூமியிலிர்ந்து கிடைத்தவைதாம். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் எவ்வளவு காலம் அவை பூமியில் இருந்தன? முந்தாநாள் பூமியில் புதைக்கப்பட்டு நேற்றுத் தோண்டுகையில் கிடைத்து இன்று தெய்வங்களானவை என்பதே பெரும்பாலும் உண்மை. 

சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய தாயார் பாதம் என்கிற கதையை எடுத்துக் கொள்வோம். அந்தக் கதை என்ன சொல்ல வருகிறது? எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது இலக்கிய விமர்சனம். அந்தக் கச்சேரியைத் தனியாக வைத்துக் கொள்ளலாம். இது கதைக்குப் பின்னே உள்ள மோசடி மட்டுமே குறித்த கட்டுரை.//சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது.


இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.


இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ // தாயார் பாதம் February 14th, 2011

ஜெயமோகனுக்கு பரிச்சயமான சினிமா பாஷையில் சொல்லப் போனால், ”தாயார் பாதம் என்னா மேட்டர்? ”

சங்கீதத்தில் பேரார்வம் கொண்ட இரண்டு எழுத்தாளர்கள். அவர்களில் ஒருவர் பாடவும் ஆசைப்படுபவர், ஆனால் பாட இயலாதவர். அவர் பாட இயலாமல் போனதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. குழந்தைப் பருவத்திலேயே அற்புதமாகப் பாடக்கூடிய அவரது பாட்டியைப் பாடவே விடாமல் செய்துவிடுகிறார் எழுத்தாளரின் இசை குருவான அவரது தாத்தா. அந்தப் பாட்டி பேசுவது கூட இல்லை. அப்படி ஒரு சாது. போதாக் குறைக்குத் தொப்பி திலகங்களின் படங்களில் வருவது போல, புத்தியும் பேதலித்துப் போய்விடுகிறது. வீட்டைக் கழுவுவதே அவர் வாழ்வதற்கான ஒரே பயன் என்பதாக மாறிப்போகிறார். எழுத்தாளரின் குருதாத்தா, தமது மனைவியான, பாட்டியைப் பாடவிடாமல் அடித்ததன் பாவமே ஒரு சாபம் போல சிஷ்யனும் பேரனுமான தம்மைக் கவிந்து கொண்டிருப்பதாக, அந்த எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்கிறார்.ஆரம்ப உரையாடலுக்குப் பின் ஓரங்கநாடகம் போல ஜெயமோகக் கீர்த்தனை ஸ்டைலில் மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கிறார் தமது பாடவராத கதையை. 

வழக்கமான ஆர்பாட்ட நாடகீய சம்பவங்கள் பெரும்பாலும் இல்லாமல், இசை பற்றி நானும் ஒரு கதை எழுதிக்காட்டுகிறேன் பார் என்கிற சிறுபிள்ளைத்தனமான முயற்சி என்பதற்கு மேல், ஜெயமோகனை உபாசிக்கும் சாமியாடிகளையே உபவாசம் இருக்க வைத்துவிட்ட ஒரு நோஞ்சன் கதை. இதில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்சூண்டு எலும்பும் தோலும் ஒரு எழுத்தாளன் தன் வாழ்வில், நனக்கு நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறான் என்பதில்தான் இருக்கிறது. அதுவும் அமரத்துவம் வாய்ந்த படைப்புகளை அளித்த, நாம் எல்லோரும் அறிந்த, தமிழின் மாபெரும் கலைஞர்களில் ஒருவர் அந்த எழுத்தாளர். ஆனால் அவர் வாழ்வின், யாருக்கும் தெரியாத இருண்ட பக்கத்தை த்ன் எழுத்தில் காட்டி இருக்கிறார் ஜெயமோகன், அடடா! என்பதுதான் கதையில் இருக்கும் கவர்ச்சியே.  

ஆகவே கதை சொல்லும் எழுத்தாளர் பெயர் ராமன். அதை அவர் பகிர்ந்து கொள்வது இன்னொரு எழுத்தாள ஆளுமையிடம் என்றால் தூத்பேடாவில் ஜிகினாவும் சுற்றியது போல அல்லவா ஆகிவிடும். ஆகவே தாயார் பாதம் கதையைக் கேட்கிற எழுத்தாளர் பெயர் பாலசுப்பிரமனியன். அவரைக் கதை சொல்லும் ராமன் பாலு பாலு என்று அழைத்து உங்களது ஊக சக்திக்கு உத்வேக லேகியம் கிண்டுகிறார். போகவும் தில்லிக்காரரான எழுத்தாளர் தமது கதையைச் சொல்லத் தேர்ந்தெடுக்கும் இடம் நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள கன்யாகுமரி. ஒரு பீரியட் கதையைப் பீரியடிலேயே சொல்வதாக ‘உண்மை’க்கு மெருகேற்ற தூவலாக விவேகாநந்த மண்டம் வரப்போவதான தகவல் குறிப்பு.

கதையின் தொடக்கத்திலேயே,


//‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா? சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார்.// தாயார் பாதம் February 14th, 2011

கே.பாலச்சந்தர் ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ கதாநாயக நாயகி வில்லநாயன் அந்தஸ்து கொடுக்கும் முன்பாக சின்ன டெஸ்ட் பிட்டு போல ஒரு படத்தில் நடிக்க வைப்பார். அது போல மணி அய்யர் கச்சேரி பற்றிய குறிப்பு. 


இதில் கொடுமை என்னவென்றால், மணி அய்யர் 1968ல் இறந்துவிட்டார். 
Madurai Mani Iyer (Tamilமதுரை மணி ஐயர்) (October 25, 1912–1968)
http://en.wikipedia.org/wiki/Madurai_Mani_Iyer

//‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது?’ என்றார் ராமன்//

Vivekananda Rock Memorial is a sacred monument and popular tourist attraction in VavathuraiKanyakumari, India. The memorial stands on one of two rocks located about 500 meters off mainland of Vavathurai, India's southernmost tip. It was built in 1970 by the Vivekananda Rock Memorial Committee in honour of the visit of the great spiritual teacherSwami Vivekananda to Shripada Parai during the month of December 1892 for deep meditation and enlightenment.
http://en.wikipedia.org/wiki/Vivekananda_Rock_Memorial

எவ்ளோன்னுதான் சார் நானும் அட்ஜெஸ்ட் பண்ணுவேன். பீரியட் கதையிலப் பீரியட் இல்லை. இலக்கியக் கதையில லாஜிக் இல்லை. சேசே சில குறிப்புகள் லெவல்ல கதைகளை எழுதிட்டு வரலாற்றைத் தாண்டிக் குதிக்கணும்னா, தொபுகடீர்னு குதிக்க முக்கடல் சந்திப்பை விட்டா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் வேறு எது இருக்க முடியும்? போனஸா காவிக் கோமணத்தைக் காய வைக்கப் பாறை வேற ஏகப்பட்டது இருக்கு.


சுரேஷ் கண்ணன் - Google Reader – Public                                                             Feb 14
'ஒரு படைப்பு எந்த விதத்திலாவது உங்களை பாதிக்கணும். அழ வெக்கணும்சிரிக்க வெக்கணும்கோபப்பட வெக்கணும்எதுவுமில்லாம மண்ணு மாதிரி இருந்தா அது வீண்' - ன்ற மாதிரி ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார். மெல்ல மெல்ல ஸ்ருதியை கூட்டிக் கொண்டே போய் இறுதியில் உச்சத்தில் நிற்கிறது இந்தக்கதை. இசைச் சூழலிலிலேயே அமிழ்ந்திருந்தாலும் ராமனால் ஏன் பாட முடியவில்லை என்பது இறுதி பகுதியில் தேள் கொட்டினாற் போல் விளங்கி...

ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்ததுஅனேகமாக ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு சரிவிடுங்க’ என்று சிரித்தார். இல்லநான் சிலசமயம் நினைக்கறதுண்டு,...
Expand this post »
 1 person publicly reshared this - Aishwarya Govindarajan
3 people liked this - Aishwarya GovindarajanS.Raja Priyan and T. Duraivel
Arangasamy K.V - சு.க தி.ஜா சு.ரா .Feb 14

ஜெயமோகனின் அதிகாரபூர்வ அறிவிப்பு மையம் அரங்கசாமியின் கமெண்டைப் பாருங்கள். ஜெயமோகன் எழுதும் கிசுகிசுக்கள் எங்கே புரியாமல் போய்விடுமோ என்று என்ன ஒரு கவலை!


ஜெயமோக குருவே! தி.ஜானகிராமன் அவர்களுக்கு சங்கீதம் நன்றாகப் பாட வரும் என்கிற வரலாற்று ஆதாரம் கொடுக்கப்பட்டால் உங்கள் கிசுகிசு வெற்று அவதூறு என்று ஆகிவிடுமா இல்லையா? மஹா சந்நிதானம், மாமல்லன் போன்ற ஈனர்களுக்கு நேரடியாய் பதில் சொல்வது தெய்வ குற்றம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் மெம்பர்களாவது சொல்லலாம் இல்லையா? 


சங்கீத வித்துவான்களே பாராட்டும் அளவிற்குப் பாடக்கூடிய ஒருவரை, நீ கிண்டிய ஒரு நொண்ணைக் கதைக்கு உயர்ந்த சாயம் அடித்து மேடை ஏற்ற, தி.ஜானகிராமன் மேல் அவரது பாட்டியின் சாபம் கவிந்ததனால் அவரால் பாட முடியாமல் போய்விட்டதாக சித்தரிப்பது எதற்கு இணையானது? 


இதற்காகவும் கூட நாம் எங்கேயும் தேடத்தேவை இல்லை. இந்த ஜெயமோகன் என்கிற ராட்சசன் எழுதாத விஷயமே இல்லை அல்லவா!


//ஒரு தனிப்பட்ட விஷயத்தையே உதாரணம் காட்டுகிறேன். எப்படியானாலும் பதிவாகவேண்டிய விஷயம் இது. நான் பத்மநாபபுரத்தில் இருந்த நாட்களில் தக்கலையில் இருந்த ஒரு இடதுசாரிப் புத்தகக் கடையில் ஓர் கல்லூரி மாணவரை சந்தித்தேன். இருகால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர். என்னிடம் முறைப்பாக இருந்தார்.


பின்பு சில மாதங்கள் கழித்து அவரை பத்மநாபபுரம் சாலையில் சந்தித்தேன்....


மறுநாள் அவர் வீட்டுக்கு வந்தார். அவரை அவரது அம்மா கிட்டத்தட்ட சுமந்து வந்தார்....// ஆன்மாவை கூவி விற்றல் April 16th, 2010

என்ன ராட்சதரே! உங்கள் கதை போலவே உங்கள் கட்டுரையும் தர்க்க அறிவு உள்ளவனுக்கு குமட்டும் போல இருக்கிறதே!


இடதுசாரி புத்தகக் கடையில் யார் துணையும் இல்லாமல் இருப்பவன், பத்மாநாபபுரம் சாலையில் சந்திப்பவன், தங்கள் வீட்டிற்கு வருகையில் மட்டும் எப்படி சார் கிட்டத்தட்ட அம்மா சுமக்கிற அளவிற்குக் கால்களைக் கட் பண்ணி வைத்துவிட்டு வருகிறான்?


உங்களின் அழுக்காச்சி டிவி சீரியல் இலக்கியக் கதைகளைப் போலவே அம்மா தூக்கிவரும் நிலையில் இருந்தவனை, ஆத்தும சாரீர சுகமளிக்கும் சுவிசேஷ கூட்டங்களில் நிகழ்த்துவது போல,உங்கள் இந்து ஞானமரபின் ஆன்ம வலிமையால் உங்களையே விமர்சித்துக் கட்டுரை எழுதுமளவிற்கு, நீங்கள்தான் அவருக்கு மனத்தேர்ச்சி சிகிச்சை அளித்து ஆளாக்கினீர்கள் என்று கருப்பு வெள்ளைப் படம் காட்ட முயல்கிறீர்களா? வாழ்க்கை எப்போதுமே முழு கருப்புமல்ல முழுக்க வெள்ளையுமல்ல சாம்பல்நிறம்தான் என அறியாதவன் பலபரிமாணக் கதைகளை ஒருபோதும் எழுதிவிட முடியாது என்பதை அறிந்ததில்லையோ?


ஜெயமோக பக்த ஜனசபையே உனது ஊனக் கண் திறந்து பார்!
கொள்ளாமோ ஜெயமோகா!

”....நானும் அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகம், பிரதான ஸஞ்சாரங்கள், ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் இறுகி வளர்ந்த ஒன்று” என்று கரிச்சான்குஞ்சு கூறியிருப்பதை இங்கே மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது.


- தி.ஜானகிராமனின் இலக்கியத் தேடல் - சிட்டி (தி.ஜானகிராமன் படைப்புகள் தொகுதி-2)

ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை, கலாச்சாரத்தை, தனது சொந்த அனுபவங்களை அல்லது கேள்விப்பட்டவற்றை மனத்தால் வாழ்ந்து புனைவாக்குபவன் கலைஞன். தன் புனைவுகளுக்கு ஏற்ப தன் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என வரலாற்றைத் திருத்தி மோசடி செய்பவன் 420.