Sunday, March 20, 2011

லயோலா என்ற பெரும்பாம்பின் கதை - புரிதலுக்கான சிறு வெளிச்சம்!லயோலா என்ற பெரும்பாம்பின் கதை 
 - ஜெர்மன் மொழியில் : பீட்டர் ஹாக்ஸ் 
 - தமிழில் : சுகுமாரன்

அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக் காகிதத்தைக் கண்டார்: ‘அன்பான பயணியே! உங்கள் பயணத்தின் போது யாராவது, எப்போதாவது ஒரு பிராணியை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் தயவுசெய்து மறுத்துவிட வேண்டாம். எங்களுக்கு அதைக் கொண்டு வாருங்கள், நன்றி. ஹாலே மிருகக் காட்சி சாலை.’ அங்கிள் டைட்டஸ் அந்த அறிவிப்பைக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டார். புகை வண்டியேறி ஷீவார்ஸ்வாசர் போய்ச் சேர்ந்தார். ஆணியையும் வாங்கிக் கொண்டார். வீதியொன்றில், கறுப்பு நிறக் கைக்குட்டையைத் தலையில் சுற்றிக்கொண்டிருந்த முதுகு கூன்விழுந்த கிழவி ஒருத்தி அவருக்கு முகமன் கூறினாள்: “தயவுள்ள ஐயா! உங்களுக்குப் பிராணி எதுவும் தேவையாக இருக்கவில்லையா?” என்று கேட்டாள். “வாஸ்தவத்தில் தேவைதான். நீங்கள் ஏன் அதைக் கொடுக்கக் கூடாது?” என்று அங்கிள் டைட்டஸ் கேட்டார். “நகர்ப்புறத்திலுள்ள என்னுடைய பண்ணை வீட்டில் வசிக்கிறது அது. சமீப வருடங்களில் அது மிகவும் பெரிதாகிவிட்டது. ஆகவே அதைக் கொடுத்துவிட விரும்புகிறேன்” என்றாள் கிழவி.

அங்கிள் டைட்டஸ் கிழவியைத் தொடர்ந்து அவளுடைய பண்ணை வீட்டுக்குப் போனார். பறங்கிக் கொடிகளுக்கும், அவரைக் கொடிகளுக்கும் இடையில் சிவப்பும், மஞ்சளும், பழுப்புமான நிறங்கள் கொண்ட உருளை வடிவமான ஒரு வஸ்துவைப் பார்த்தார். வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ அதன் முனைகள் எதுவும் புலப்படவில்லை. ”பாம்பு என்று நினைக்கிறேன்” என்று யூகித்தார் அங்கிள் டைட்டஸ். “ஆமாம், அதன் பெயர் லயோலா” என்றாள் கிழவி. பாம்பின் மீது சுண்ணாம்பால் அம்புக்குறிகள் வரையப்பட்டிருந்தன. அவை வெவ்வேறு திசைகளைச் சுட்டிக் காட்டின. வால் பகுதிக்கு, தலைப்பகுதிக்கு என்று அடையாளச் சீட்டுகளும் இருந்தன. அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் காரியார்த்தமான ஏற்பாடு. அநாவசியமாகச் சுற்றுவதைத் தவிர்க்கிறது.” தலையை நோக்கிச் சுட்டிய அம்புக்குறிகளைத் தொடர்ந்து கணிசமான தூரம் நடந்தபின், தண்டவாள மேட்டுக்கு அருகில் வெயில் காய்ந்தபடி படுத்துக் கிடந்த அதைக் கண்டார். “உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான்.” அங்கிள் டைட்டஸ் தொடர்ந்தார்: “உனக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உன்னை ஹாலே மிருகக்காட்சி சாலைக்குக் கொடுத்து விடலாம். ஏற்கனவே என்னுடைய குரங்கு கேவார்டு அங்கே வேலை செய்கிறது. எனவே அந்த நிறுவனத்தை நிச்சயமாக உனக்கு சிபாரிசு செய்கிறேன்.” “எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” என்றது தலை. “என்னுடன் வீட்டுக்கு வந்தால் நல்லது. கேவார்டு நாளை உன்னை மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துப் போகும்,” அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் சந்தோஷம்” என்றது தலை. எனவே, அங்கிள் டைட்டஸ் ஷீவார்ஸ்வாசர்க்குப் போகும் புகைவண்டியைப் பிடித்தார். ஜன்னல் வழியாக, ரயில் பெட்டியை ஒட்டிய மாதிரியே, லயோலா என்ற பெரும் பாம்பின் முழுவடிவமான தலை அபார வேகத்துடன் ஓடிவந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

அன்றைக்கு, அங்கிள் டைட்டஸ், ஹென்ரியட், கேவார்டு மூவரும் அதே வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் போட்ஷீக்கா தம்பதியினரால் மாலை விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஹென்ரியட்டும், கேவார்டும் ஏற்கனவே மாடியில் இருந்தனர். “அன்புள்ள திருமதி போட்ஷீக்கா! துரதிருஷ்டவசமாக நான் தாமதித்துவிட்டேன். தவிர ஒரு விருந்தாளியையும் அழைத்து வந்திருக்கிறேன்.” என்று அங்கிள் டைட்டஸ், கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் சொன்னார். “ஓ! எனக்கு சந்தோஷமா” என்று என்ஜின் ஃபயர்மேனின் மனைவி சொன்னாள். “வந்திருக்கும் விருந்தாளி ஒரு பாம்பு” என்று அங்கிள் டைட்டஸ் தெரிவித்தார். திருமதி போட்ஷூக்கா, சற்றுப் பயந்த குரலில், “பெரியதா, சின்னதா?” என்று கேட்டாள். “மிகப் பெரியதுதான்” என்று ஒப்புக் கொண்ட அங்கிள் டைட்டஸ், தொடர்ந்து, “ஆனால், முழுவதுமாக உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. அதன் பெரும்பகுதி வெளியிலேயே தங்கி விட முடியும்” என்றார். “நான் காரணத்தைக் கேட்கவில்லை. ஆனால் என்னிடம் போதுமான உணவு இருக்குமா என்று நிச்சயமில்லை” - திருமதி போட்ஷீக்கா சொன்னாள். இதற்கிடையில் லயோலா அறைக்குள் தலையை நீட்டி, மிகுந்த மரியாதையுடன், “தயவு செய்து சிரமப்பட வேண்டாம். நான் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவேன்” என்று தெரிவித்தது. “என்ன பயங்கரமான யோசனை” என்று கத்தினார் ஹென்ரியட். “ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் நான் பட்டினியால் செத்தே போவேன்.” “முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவன் எவ்வளவு தடவை சாப்பிடுகிறான் என்பதல்ல, என்ன சாப்பிடுகிறான் என்பதுதான்” என்றது லயோலா. “ஆனால், இவ்வளவு பெரியதாக இருப்பதற்கு நீ என்ன சாப்பிடுகிறாய்?” திருமதி போட்ஷீக்கா தெரிந்து கொள்ள விரும்பினாள். “ஊறுகாய்” என்றது பாம்பு. அங்கிள் டைட்டஸ், “அப்படியா? இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது.” என்று கூவினார்.

“சந்தேகமில்லாமல் ஊறுகாய் மட்டுமேயல்ல, என்னுடைய ஆகிருதியை நிர்ணயிப்பது” என்றது பெரும்பாம்பு. “ஒருவகையில் அது என் குடும்பத்திலேயே ஓடுவது. என்னுடைய அசல் மூதாதை ஏதேன் தோட்டத்திலிருந்தது. நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.” “அது போன்ற பாம்பு உண்மையாகவே இருந்ததா என்று நான் எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்” என்று ஃபயர்மேன் திருவாளர் போட்ஷூக்க சொன்னார். “முன்னோர்களைப் பொறுத்த வரை நீங்கள் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. சில நிஜமாக இருந்திருக்கின்றன. சில இல்லை. எப்படியிருப்பினும் சொர்க்கத்திலிருந்த பாம்பின் வம்சாவளியில் வந்தது ஒரு ஹைட்ரா, பல தலைகள் கொண்ட பாம்பு. ஹைடிராவிலிருந்து வந்ததுதான் பிரசித்தி பெற்ற ஸாமர்கண்ட் ராட்சஸன். அதிலிருந்து கிரெண்டல் உருவானது. கிரெண்டலிலிருந்து சந்ததியானதுதான் வாஷ்நெஸ்ஸில். இன்றைக்கு வசிக்கிற நீர்ப்பாம்பு. அந்த நீர்ப்பாம்பின் சந்ததியே என் தாய் நூரெம்பர்க் ஃபுர்த்.” “நம்முடைய தெருக்களுக்கடியில் ஓடுகிற நீர்க்குழாய் உனக்கு ஏதாவது உறவா?” என்று கேட்டாள் சிறுமி போட்ஷீக்கா. “அபத்தம்” என்றது லயோலா. “எனக்குத் தெரிந்தவரை நீர்க்குழாய் சுத்தமான தொழில் நுட்ப ரீதியான வடிவம்.”

வெளியே கூடத்தில் தொலைபேசி மணி ஒலித்தது. அங்கிள் டைட்டஸ் எழுந்து போய் ரிசீவரை எடுத்தபோது, ஷீவார்ஸ்வசரில் இருக்கிற கூனல் கிழவியின் குரல் கேட்டது. “கவனி, நீ என் பாம்பை உன்னுடன் கொண்டு போகவில்லை” “நான் எடுத்துக் கொண்டுதானே வந்தேன்” என்று ஆச்சரியத்தில் கத்தினார் அங்கிள் டைட்டஸ். “ஆனால் அது இன்னும் என் தோட்டதில் படுத்துக் கிடக்கிறது” என்றாள் கிழவி. “சாத்தியமே இல்லை. அது இதோ இங்கே அடுத்த அறையில் இருக்கிறது.” அங்கிள் டைட்டஸ் சொன்னார். - ”அது என்னுடைய தோட்டத்தில் இருக்குமானால்....” கிழவி சிடுசிடுத்தாள். “நிச்சயம் உன்னுடைய அறையில் இருக்க முடியாது.” - “மாறாக இருக்கிறதே! ஏனென்றால் அது இங்கே இருக்கும்போது தர்க்கரீதியாகப் பார்த்தால் உன்னிடம் இருக்க முடியாதே” என்றார் அங்கிள் டைட்டஸ். “நான் அதை கிள்ளிவிடப் போகிறேன்” என்று சொன்னாள் ஷீவார்ஸ்வாரிலிருக்கிற கிழவி. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு லயோலா திடீரென்று கத்தியது.  “ஓவ்! ஊத்தைக் கிழவி. கிள்ளி வைக்கிறாள்.” - “என்ன? அவள் அங்கே கிள்ளுகிறாள் என்று நீ இங்கே அலறுகிறாய்?” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். “வாஸ்தவம். என்னுடைய வால் அங்கேயும் தலை இங்கேயும் இருக்கிறது” என்றது பாம்பு. “ஆனால் நான் புகைவண்டியில் வரும்போது என்னைத் தொடர்ந்து நீ ஓடி வந்து கொண்டிருந்தாயே?” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். பாம்பு அவரைத் திருத்தியது: “நான் வெறுமனே என்னைச் சுருளவிழ்த்துக் கொண்டிருந்தேன்.”

“அதுவும் உண்மைதான்.” அங்கிள் டைட்டஸ் முணுமுணுத்துக் கொண்டே ரிசீவரை மெதுவாக வைத்தார். “ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருக்கக்கூடிய ஒரே மிருகம் உலகத்திலேயே லயோலா ஒன்றுதான்.”

மருதா பதிப்பகம்

இந்தக் கதையைப் படித்த இணைய நண்பர்களில் சிலர் புரியவில்லை அல்லது புரிந்தும் புரியவில்லையோ எனக் குழப்பமாக இருப்பதாகவும் கூறினார்கள். அநேகமாக இவர்கள் அனைவருமே அதிகம் வாசித்தவர்கள் அல்லது நிறைய படிக்கும் பழக்கமுள்ளவர்கள்.

இந்தக் கதையில் வரும் ஒரு வாக்கியம் இங்குப் பொறுத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. லயோலா என்கிற பெரும்பாம்பிடம் கேட்கப்படும் கேள்வியும் பதிலும்.

<“ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் நான் பட்டினியால் செத்தே போவேன்.” “முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவன் எவ்வளவு தடவை சாப்பிடுகிறான் என்பதல்ல, என்ன சாப்பிடுகிறான் என்பதுதான்” என்றது லயோலா.>


இந்தக் கதை என்ன சொல்ல வருகிறது? இணைய இளைஞர்களில் கனிசமானோருக்கு ஏன் புரியவில்லை?


இலக்கிய எழுத்தாளன் மட்டுமின்றி வாசகனும் கூட, வெறும் அழகியல் சார்ந்தவனாக மட்டுமே இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. கூடாது எனத் தீர்மானிக்க நீ யார்? நான் யாருமே இல்லை. தீர்மானிப்பது தனி ஆள் எவரும் இல்லை. சமூகப் பிராணி எதுவும் அழகியல் மட்டுமே சார்ந்ததாக இருக்க முடியாது என்கிற யதார்த்தமே, இருக்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது.


சமூக அக்கறை அல்லது விழிப்பு என்பது அரசியல் அவதானிப்பாளர்களுக்கு மட்டுமேயானதா என்ன? 


இந்தக் கதை வெளியான நீ கேளேன்! நீ கேளேன்!பதிவில் எழுதி இருந்த, கதை பற்றிய ஊகத்திற்கான சில தகவல்கள், ஒரு சிறுபத்திரிகை வாசகனை நிச்சயம் முகம் சுளிக்க வைத்திருக்கும். ஆனால் அதுவே, இணையத்திற்குப் போதவில்லை. இத்துனைக்கும் அந்தப் புத்தகத்தின் அட்டையைக் கூட வெளியிட்டு இருந்தேன். இந்தக் கதையின் பின்னணி அட்டையிலேயே இருக்கிறது.
போருக்குப் பிறகான ஜெர்மன் கலாச்சாரம். முதல் படத்திலிருந்து வளர்சிதை மாற்றம் போல படம் தொடர் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. 


இந்தக் கதை புரியாத சிலருக்கு, வாசிக்க உதவியாக இருக்கட்டும் என்று மட்டுமே இதனை எழுதுகிறேன். மற்றபடி எவரின் வாசிப்பனுபவத்தையும் சிதைத்து என்னை முன்நிறுத்திக் கொள்வது என் நோக்கம் அல்ல. அதன் காரணமாகவே கதையை முதலில் கொடுத்துவிட்டு அதன் பிறகே இதை எழுதுகிறேன்.

கதை எப்படித் தொடங்குகிறது பாருங்கள். பொதுவாகவே நல்ல எழுத்தாளன் ஆரம்ப வரிகளிலேயே கதையின் மையத்தை தொனியைக் காட்டிவிடுவான்.

எடுத்துக்காட்டாக புகழ்பெற்ற கதைகளின் முதல் வரிகள்:

தி.ஜானகிராமன் - சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - நொடிந்த மனிதனின் பைசாப் பெறாத அச்சுபிச்சான, பட்டணத்தில் வேலையில் சேர்ந்திருக்கும் மகனைப் பார்க்கச் செல்லும் தந்தை பற்றிய சிறுகதையின் முதல் வரி

“மணியார்டரா! எனக்கா”

சுந்தர ராமசாமி - தண்ணீர் - தண்ணீர் பஞ்சம் பற்றிய சிறுகதையின் முதல் வரி

ஊர்ப் பெரிய குளத்தில் பையன்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

அசோகமித்திரன் - வாழ்விலே ஒரு முறை - அண்ணன் ராமமூர்த்தி, விளையாட்டுச் சுவாரசியத்தில் குட்டித்தம்பி சுந்துவைத் தொலைத்து விட்டு அவதிப்படுகிற சிறுகதையின் முதல் வரி

சுந்து மறுபடியும் வெளியே வந்துவிட்டான். ராமமூர்த்தி அவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.

அன்னா கரீனின் - லியோ டால்ஸ்டாய் - மணவாழ்வின் சிக்கல்கள் குறித்த நாவலின் முதல் வரி

அனைத்து மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பங்களும் தத்தம் வகையில் மகிழ்ச்சியற்றவையாகவே உள்ளன. [பாதிதான் படித்திருக்கிறேன், அதாவது, இந்த நாவலில் இதுவரை படித்தது இந்த இரு வரிகள் மட்டுமே :) ]

குற்றமும் தண்டனையும் - தாஸ்தாவெஸ்கி - கொலையாளியின் மனப்போராட்டங்கள் பற்றிய நாவலின் முதல் வரி

கடுமையான வெம்மை நிறைந்த ஜூலையின் மாலைப் பொழுதில், எஸ் என்னும் இடத்தில், ஓர் இளைஞன், தான் தங்கியிருந்த மாடிப் பொந்திலிருந்து வெளிப்பட்டு,   மெதுவாக தயங்கியபடி கே எனும் பாலம் நோக்கி நடந்தான். (எனக்கு இருக்குற எலிப்புளுக்கை ஆங்கிலப் பரிச்சயத்தில் எழுதி இருக்கிறேன். தவறிருப்பின் திருத்தவும்)

கதை என்ன சொல்லப் போகிறதோ அதன் உயிர்ச்சுழிப்பு, முதல் வரியிலேயே இருப்பதைப் பாருங்கள். 

ஒரு கதையின் தொனியை ஆரம்பத்திலேயே எழுத்தாளன் எப்படி குறிப்புணர்த்தி கதைக்கு உள்ளே உங்களை வரவழைக்கிறான் என்று அடையாளப்படுத்தவே இது குறிப்பிடப்பட்டது.


இப்படித்தான் இன்றிலிருந்து எல்லோரும் எழுத வேண்டும் என்று சொல்வதாக அய்யாடா அப்பப்பா முடியலைப்பா எனவோ, இது என்ன அரிச்சுவடிப் பாடம் என்றோ மாபெரும் இணைய எழுத்தாளுமைகளுக்கு, எரிச்சல் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். நம்பிக்கை மட்டும்தானே நம் கையில் இருக்கிறது. எனக்கு இருக்கும் பல மூடநம்பிக்கைகளில் இது இன்னொன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்.

சீனா என்றதும் பெருஞ்சுவர் நினைவிற்கு வருவது போல ஜெர்மனி என்றதும் நினைவில் எழுவது கிழக்கும் மேற்குமான இரண்டு ஜெர்மனிகள் அல்லவா? http://en.wikipedia.org/wiki/Berlin_Wall

நாம் புரிந்து கொள்ள முயலும் இந்தக் கதை எதைப் பற்றியது? தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? படிக்க வேண்டும். 

கதை எப்படித் தொடங்குகிறது?

<அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார்.>

என்ன! ஒரு ஆணி வாங்குவதற்காகப் பயணமா? அதுவும் வியாபார ரீதியான பயணமா? என்ன கிண்டலா? இது என்ன பகடிக் கதையா? 

யதார்த்தமான வார்த்தைகளில், யதார்த்தமில்லாத விஷயத்தைப் படிக்க வைக்க உங்களைத் தயார்படுத்துகிறது கதையின் தொடக்கம். அங்கேயே கதையின் தொனியைக் கோடிட்டு காட்டிவிடுகிறான். மேலும் கதையின் தலைப்பும் உதவுகிறது. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை.

அடுத்து வரும் நிகழ்ச்சிகள், தர்க்க நீட்சியாய் <ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார்> ஊருக்குப்போக டிக்கெட் வாங்குதல் அங்கே ஒரு பிட் நொட்டீஸ் விதைக்கப்படுகிறது. அதுவும் கூட வெகு இயல்பாக மிருகக் காட்சிசாலைக்குப் பிராணிகள் கொடுக்கலாம் எனச்சொல்லி செல்கிறது. ஊருக்குப் போய் வேலை முடிந்தபின் திரும்புகாலில் ஒரு கூன் விழுந்த கிழவி சொல்லி வைத்தது போல உங்களுக்கு பிராணி ஏதும் தேவையா எனக் கேட்கிறாள்.

மிகுந்த கணக்கு வழக்காக இருக்கும் இந்தக் கேள்வி இயற்கையாகவே இல்லையே எனப் புளித்தபடி, கதையை இங்கெயே தூக்கிப்போட்டிருப்பேன் என் வாசிப்பு மனநிலை அப்படி.

ஆனால் முதல் வரியிலேயே எழுத்தாளன் என்னைத் தயார் செய்துவிட்டானே. அடேய் இது யதார்த்த நடைக் கதை இல்லையடா என்று. ஓர் ஆணிவாங்க வியாபார நிமித்தம் வெளியூர் போகிறவன் என்னவும் செய்யலாம் என சிரித்தபடி தொடர வைக்கிறது.

வெளி ஊரில் இருக்கும் கிழவியின் தோட்டத்தில் இருக்கும் வஸ்துவின் நிறம் சிவப்பும், மஞ்சளும், பழுப்புமான நிறங்கள் கொண்ட, கிழக்கு மேற்கு  ஜெர்மனிகளின் கொடியின் நிறங்களும் கருப்பு மஞ்சள் சிகப்பு அல்லவா!

<பாம்பின் மீது சுண்ணாம்பால் அம்புக்குறிகள் வரையப்பட்டிருந்தன. அவை வெவ்வேறு திசைகளைச் சுட்டிக் காட்டின. வால் பகுதிக்கு, தலைப்பகுதிக்கு என்று அடையாளச் சீட்டுகளும் இருந்தன.>


வெவ்வேறு அரசியல் நிலைபாடுகளுடன் இருக்கிற இரண்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டு, அடுத்தவர்களால் அடையாளச் சீட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாடு, பாம்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும், ஏனோதானோ வர்ணனை இல்லை. கிண்டல் தொனியின் ஊடாகக் கதை சொல்லப்பட்டாலும் வருத்தப் புன்னகையின் நிழல் அல்லவா கவிந்திருக்கிறது. இந்தச் சரட்டைப் பிடித்துக் கொண்டால் எல்லா வார்த்தைகளுக்கும் பொருள் துல்லியப்படக்கூடும். ஆனால், நாடு பாம்பானது போலவே, கதையில் வரும் எல்லாமும் எதையோக் குறிக்கிற உருவகமாகவோ இணையத்தில் வன்புணரப்பட்ட ’குறியீடு’ ஆகவோ இருந்தாக வேண்டிய கட்டாயமேதுமில்லை. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். கதைக்கு ஆதாரமான எலும்புகளை ஒரு உருவமாகக் கொண்டுவர வேண்டி, வைக்கப்பட்ட சதையாகவும் பூசப்பட்ட நிறமாகவும் பதிக்கப்பட்ட முடிகளாகவும் இருக்கலாம். ஆர்வக்கோளாறில் அடையாள மைல்கல்லைத் தடைக்கல்லாக்கிக் கொள்ளுவதில் அர்த்தமில்லை.


இதில் வரும் உரையாடல்களில், பாம்பிற்கும் நாட்டிற்கும் பொருந்தும்படியாக இரட்டை அர்த்தங்கள், எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப் பட்டிருக்கின்றன் என்று பாருங்கள். 


இந்த வகைக் கதைகள், இரண்டு விஷயங்களும் இயல்புடன் பொருந்தி விவரிக்கப்படக்கூடியதாய் இருக்கையிலேயே உயர்ந்த இடத்தை அடைகின்றன. பாம்பிற்கு சொல்லப்படுவது அப்படியே அந்த நாட்டின் கலாச்சாரம் வரலாறு அப்போதைய இருப்பு அனைத்திற்கும் எப்படிப் பொருந்திப் போகிறது என்று பாருங்கள். 


டைட்டஸ் ஓர் ஆணி வாங்கப் போகிற ஊர் கிழக்கு ஜெர்மனியில் இருக்கிறது. அவர் இருப்பது மேற்கில் (அனுமானம்). அமெரிக்காவும் சோவியத்தும் பங்குபோட்டுக் கொண்டபோது எழுப்பப்பட்ட மதில்சுவர் 1989லேயே இடிக்கப்பட்டது. இந்த வரலாறு தெரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை


பாம்பின் மூதாதை பற்றிய விவரிப்பில் நேரடிப்பொருள் தேடிப் பொருத்திப் பார்க்க அவசியமில்லை. ஆனாலும் நாட்டின் முந்தைய வரலாறு தெரியத்தான் செய்கிறது. குறிப்பாக தன்னுடைய தாயின் பெயர் நூரெம்பர்க் ஃபுர்த் என்கிறது. பாம்பு. நூரெம்பர்க் என்கிற இடத்தில்தான் நாஜி போர்க் குற்றங்களுக்கான சிறப்பு விசாரணை நடத்தப்பட்டது http://en.wikipedia.org/wiki/Nuremberg_Trials

<“வாஸ்தவம். என்னுடைய வால் அங்கேயும் தலை இங்கேயும் இருக்கிறது” என்றது பாம்பு.>


இணையத்தில் இந்தக் கதை யாருக்குமே புரியாமல் போய்விட்டதென்றும் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. லயோலா கதையின் பதிவு வலையேறிய உடனேயே இந்த இளைஞர் எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார். 

Giridharan Rajagopalan - Buzz - Public                                                     Mar 18 (edited Mar 18)
கிழக்கு-மேற்கு ஜெர்மனி பிரிவினை பற்றிய அற்புதமான சிறுகதை. நன்றி மாமல்லன்.


கூகுள் பேச்சில் இன்னொரு இளம் குரல்

fromசென்ஷி 
tomadrasdada@gmail.com
dateFri, Mar 18, 2011 at 1:42 PM
subjectChat with சென்ஷி
mailed-bygmail.com

hide details Mar 18 (2 days ago)
1:22 PM சென்ஷி: machi sir
  காலை வணக்கங்கள்
1:23 PM me: வணக்கம்
 சென்ஷி: ஒரு சந்தேகம் கேக்கலாமா
 me: என்ன லொள்ளு
 சென்ஷி: நீங்க கொடுத்திருக்கற லயோலா கதை குறிப்பிடுற குறியீடு என்ன?
1:24 PM me: அடப்பாவி. கிழக்கு மேற்கு ஜெர்மனிகள் பிக்கப்பட்டாலும் கிள்ளினால் வலிக்கிறது
  பிர்க்கப்பட்டாலும்
1:25 PM பிரிக்கப்பட்டாலும்
 சென்ஷி: :)
  ம்
 me: அட்டை புரிகிறதுதானே?
1:26 PM சென்ஷி: கொடியமைப்பு நாஜியில ஆரம்பிச்சு
 me: இரண்டாம் உலகப்போரின் போது அது நாஜி ஸ்வஸ்திக்காக இருந்தது மாறி இன்று கொடியின் வண்ணம்
 சென்ஷி: ஸ்வஸ்திக் சின்னத்திலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மாறுபட்ட எல்லா விதத்தையும்
  காட்டுது
  ம்ம்
1:27 PM me: ஆங்கிலத்தில் குறிப்பு பார்
  ஆசிரியர் 55 முதல் கிழக்கு ஜெர்மனியில் வசிப்பவர்
 சென்ஷி: ஜெர்மனியின்
  25 ம்ம்
  25 ஆண்டுகால
1:28 PM me: ஆமாம் அந்தக் கதையைப் படித்து சிலிர்த்தபோது எனக்கும் 25 வயசுதான்:))
 சென்ஷி: பண்பாடு மாற்றம், வரலாறு குறித்தது
  ஓஹ்
  ம்ம்
  உண்மையில் முதல் முறை இதைப் படிக்கும்பொழுது புரியலை
  நேத்து இரவு படிச்சேன்.
 me: நான் நாஜி இல்லே என்னை அப்படிப் பாக்காதேடான்னு கத்தறான்
 சென்ஷி: ஏதோ இருக்குதுன்னு தோணுச்சு
  சரின்னு இப்ப மறுபடி காலையில எழுந்து படிச்சேன்
1:29 PM பாம்பை உருவகிக்கறதுலயும், அதோட
  மூதாதைய சங்கதியும் படிச்சப்ப சம்திங் ராங்க்னு பட்டுச்சு.
 me: அப்ப ரெண்டு நாள் கழிச்சு இந்தக் கதையைப் பத்தி எழுதவா? எல்லாருக்கும் புரியாது போல இருக்கே:(
 சென்ஷி: :)
  தெரியல
  எனக்கு புரியலை
  மத்தவங்களுக்கும் புரியாதுன்னு அர்த்தம் கிடையாதே
1:30 PM ஆனா உண்மையிலேயே நீங்க சொன்ன பிறகு அந்த வார்த்தைகளை படிச்சு பார்த்தா
  சிலிர்க்குது
  :))
  ரொம்ப நன்றி சார்