Sunday, April 24, 2011

தீக்குள் விரலை வைத்தால்...

1992 

மிதவாத மதவாதிகளும் தீவிரவாதிகளாகத் திரிந்துகொண்டு இருந்த காலகட்டம்.

எந்த அலுவலகத்திலும் அதீத உயர் அதிகாரிகளாக தம்பதியர் அமைவது அபூர்வம். 

கலெக்டர் அம்மாவின் தலைமையில் வியாழன் தோறும் சாய் பாபா பஜனை நடக்கத் தொடங்கியது. அய்யா அவர்கள்தான் அப்போதய நிர்வாக கலெக்டர். கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் தனிமனிதன் சார்ந்தவை. அவற்றுக்கு அலுவலகம் போன்ற அனைத்து தரப்பினருக்கும் உரிமையுள்ள பொது இடங்கள் ஏற்றவையல்ல. மேலதிகமாக ஒரு குறிப்பிட்டப் பிரிவினர், நாடே தங்களுடையது என்கிறவிதமாகத் தன்னிச்சையாய் செயல்படுவது சரியல்ல என்று தோன்றியதால் எதிர்ப்பு தெரிவித்தேன். 

அலுவலகத்தில் இது வேண்டாத வேலை என நான் சொன்னது, உனக்கும் இது வேண்டாத வேலை என்று எதிரொலித்தது. எவனோ எதையோ செய்துவிட்டுப் போகிறான் உனக்கென்னப் போச்சு என்பதே என் மீது நல்லெண்ணம் கொண்டோரின் பொதுப் பேச்சாய் ஆச்சு.

திராவிட இடதுசாரி சாய்வுடையோரும் சிறுபான்மையோரும் தலித்துகளும் அடுத்தவருக்குத் தெரியாமல் தனிப்பட என்னிடம் தார்மீக ஆதரவு தெரிவித்தனரே தவிர முகம் காட்ட எவரும் தயாரில்லை. காரணம் இதன் பின்னணியில் இருந்து இயக்குபவரின் கனிந்த முகம்.

பஜனைக்கு நடுவில் அந்தக் காட்டான் கரடியாய் நுழைவதாய் இருக்கிறான். படங்களைக் காலால் உதைத்து நொறுக்கப் போகிறான் என்பதாகவெல்லாம் வதந்தி. வித்தியாசமாக இருந்தால் முதலில் உங்களைக் குரங்கென விளிக்கும் உலகம் பிறகு உண்மையிலேயே குரங்குதான் என நம்பத் தலைப்படும். நீங்களே அறிந்திராத அமானுஷ்ய சக்திகளை உங்கள் மேல் ஏற்றி அனுமாரின் அவதாரமாகவே பார்க்கத் தொடங்கும்.

தொடர்ந்த எதிர்ப்புக் குரல் காரணமாக, ஹாலில் தொடங்கிய பஜனை, குட்டி அதிகாரியின் அறைக்கு உள்ளே போனது. அவர்களின் பிடிவாதம் கண்டு, வாய் வார்த்தையில் கூறிக்கொண்டிருந்த எதிர்ப்பைக் கடிதத்தில் தெரிவித்தேன்.

ஏதோ எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியதை எனது வக்கீல் நண்பனிடம் கொடுத்துத் திருத்திக் கொண்டேன். 16.10.1992ல் அலுவலகத்தில் சேர்த்தேன்.
எதிர்பார்த்ததைப் போலவே கடிதம், அதிஉயர் அதிகாரியின் அறையைவிட்டுக் தலைமையகம் நோக்கி நகரவே இல்லை. இதற்கிடையில் 06 டிசம்பர் 1992 வந்து சென்றது.   

அடுத்த கடிதம் 14.12.1992ல் சமர்ப்பித்தேன். (இது என் முந்தைய கடிதத்தின் சாராம்சத்தையும் உள்ளடக்கி என் விஷயத்தை தன் வார்த்தைகளில் வக்கீல் நண்பர் எழுதியது - அவர் எலக்ட்ரானிக் தட்டச்சு வாங்கியிருந்த புதிது - தகவல்)
இந்தக் கடிதமும் தலைமையகத்தை அடையவில்லை என்றால் தரையில் அமர்ந்துதான் வேலை செய்வேன் என அறிவித்தேன். 

அந்த நாளும் வந்தது. மேஜை நாற்காலிகளை அலுவலகத்தின் ஓரமாய்த் தள்ளி வைத்தேன். பழைய தினத்தந்தி நாளிதழ்களைத் தரையில் விரித்துக் கொண்டேன். ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். மீதி நாளிதழ்களின்மேல் அலுவலர்களின் பணிப்புத்தகங்களைப் (Service Books) பிரித்து வைத்து வேலை பார்க்க ஆரம்பித்தேன். 

எங்கள் அலுவலகத்தின் அடிப்படை வேலையே உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து வரி வசூலிப்பதுதான். நான் இருந்ததோ ஊழியர்களின் சம்பளம் விடுப்பு சரித்திரம் போன்றவற்றை பராமரிக்கும் நிர்வாகப்பிரிவு. நிறுவனங்களுக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு இல்லையெனினும் அவர்கள் எங்கள் பிரிவு வழியாகவே செல்ல வேண்டும். அத்துனை மேஜைகளுக்கு நடுவில் ஒருவன் மட்டும் தரையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்பது துறைக்கே அவப்பெயர் உண்டாக்கக் கூடிய காரியம். கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தகுதியான குற்றம். ஒருவன் வேலை செய்கிறானா இல்லையா என்பதல்ல, கீழ்படிகிறானா என்பதுதான் முதல் எதிர்பார்ப்பு. எதிர்பார்க்கப் படுவதற்கு முன்னாலேயே எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவனே சிறந்த ஊழியன்.

குரங்கொன்று இங்கேக் கூத்தடிக்கிறதென்கிற தொல்லையைத் தொலைபேசியில் தெரிவித்திருக்க வேண்டும். தலைமையகத்திலிருந்து அதீத உயர் அதிகாரி சந்திக்க அழைப்பதாய்ச் சொல்லி அழைப்பு வந்தது.

அதீத உயர் அதிகாரியுடன் ஒற்றைக்கொற்றை 45 நிமிடத்திற்கு சந்திப்பு நிகழ்ந்தது. எதிரெதிர் தரப்புக் காய்கள் வெட்டி மரித்தன எனினும் சதுரங்கக் கட்டங்களை விட்டு எதுவும் வெளியேறும் வழியாய்க் காணோம். அவசர வேலை என தலநகர் தொலைபேசி அழைக்கவும் அப்படியே ஆட்டத்தை முடிக்க வேண்டியதாயிற்று.

பஜனை நின்றது. எதிர்ப்பிற்கு இடையில் பஜனை நடப்பதை பாபாவே விரும்ப மாட்டார் என்கிற விதமாய் நிறுத்தப்பட்டது.  

பஜனை வேண்டும் என்று கேட்கும் கோஷ்டியின் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கிற்று.

அது ஒரு சுவாரஸியமான கதை. அதைவிட கலெக்டருடனான சந்திப்பும் உரையாடலும் பெரும் கதை. 

நடப்பதெல்லாம் எனக்கு மட்டும் கதையாகவே நடக்கிறதா அல்லது நடப்பது அனைத்தையும் கதையாகவேப் பார்க்கிறேனா என்று தெரியவில்லை. 

என்றேனும் ஒரு நாள் இதை நான் எழுதக்கூடுமேயானால் அந்தக் கதையின் தொடக்கம் இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளாக இருக்கக்கூடும். கதையின் கடைசி வரிகூட நிஜத்தில் சொல்லப்பட்டதேதான். 

சரி கதையின் தலைப்பு என்ன? ஆங்.. இது ஒரு விஷயமா? 

பஜனை.