Sunday, May 15, 2011

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி இரண்டு

July 10th, 2000

முதல் பகுதியின் இரண்டாவது பாரா இப்படித் தொடங்குகிறது.

<இருண்டதும், சாக்கடை தாறுமாறாக வெட்டி ஓடியதுமான தெருவில்>

இரண்டாவது பகுதியின் முதல் பாராவில் மறு நாள் இரவு இப்படி வருகிறது.

<காலம் இப்போது கலிகாலம். காடு மேடெல்லாம் காணாமல் போய், எங்குப் பார்த்தாலும் வீடும், தார் ரோடும், சாக்கடையும், குழந்தைகளுமாக இருக்கிறது.>

அதே சேரி ஒரே இரவு.சாக்கடை தாறுமாறாக ஓடிய தெரு தார்ச்சாலையாகிவிட்டது. சரஸ்வதி மெஸ்ஸின் மேல்மாடியில் மசாலாப்பால் அருந்தியதன் மகிமை போலும்.

இதற்கு முன்னால் என்ன எழுதினோம், இப்போது என்ன எழுதுகிறோம் என்பது பற்றிய பிரக்ஞையற்ற எழுத்து ஓட்டம். இதற்குப் ’பித்துநிலை எழுத்து’ என்று சுயதம்பட்டப் பெருமை வேறு. அந்தந்த வாரம் தோன்றியதை தோன்றியமேனிக்கு எழுதுவதற்குப் பெயர் தொடர்கதை. இதைத்தானே புஷ்பா தங்கதுரை இத்யாதிகள் செய்து கொண்டு இருந்தன. இதை கபளீகரித்துக் கொண்டதற்கா இலக்கியத்தில் இவ்வளவு பெத்த பேர்?கதையின் பகுதி ஒன்றில் சேரிக்கு முக்கியத்துவம், எனவே விவரித்தாயிற்று. இரண்டாம் பகுதியில் வியாதியை வீசுவதும் அது வேலைக்கு ஆகவில்லை என்பதுமே முக்கியம் எனவே அதற்குத்தக எழுதியாயிற்று. எந்தச் சேரி எக்கேடு கெட்டால் என்ன? இதற்குப் பெயர்தான் வாசகமனம் தானாய்ப் பார்த்து இட்டு நிரப்பிப் புரிந்து கொள்ளுவதற்காக விடப்படும் இடைவெளியோ? எதற்கு இவ்வளவு கஷ்டம், வேண்டியதை நீயே எழுதிக்கொள் என்று வெள்ளைத்தாளை விற்றுவிட்டுப் போகலாமே? 

சொல்ல வந்த கதைய முழுக்க மனதில் வாங்காமல் வெந்ததும் வேகாததுமாய் வேகவேகமாகப் பரிமாறினால், வயிற்றுவலியில் நல்ல வாசகன் வாளியைத்தான் தூக்க வேண்டும்.

<எது வேதக்காரன் வீடு, எது நம்மாள் வீடு என்று எப்படி அறிவது ?>


முதல் முறை மாடன் அப்பி வீட்டிற்குள் எப்படிப்போனது?

<பிறகு கதவிடுக்கு வழியாக ஊடுருவி உள்ளே போனது.>

ரூபம் மாறும் காற்றில் கரையும் சக்தி கொண்ட மாடனுக்கு 

எது வேதக்காரன் வீடு, எது நம்மாள் வீடு என்று எப்படி அறிவது ? என்கிற குழப்பம் வருமா?
குழப்பம் தெளிவு எல்லாமும் எழுத்தாளன் வா என்றால் வரும் வராதே என்றால் வராது.

ஒரு புள்ளி கிடைத்தால் எழுததொடங்கி விடுங்கள். கதை தன்னைதானே எழுதிக்கொள்ளும், கதாபாத்திரங்கள் தன்னால் உருவாகிறவை. அவற்றிற்கென்று தனி இயக்கம் உண்டு.

இந்தக் காலட்சேபத்திற்கு எல்லாம் என்ன பொருள்?

ஹையோ ஹையோ கதைக்காரன் விடுவதெல்லாம் வாயு பகவான் அருள். இது கூடத் தெரியாதா? கட்டுரை என்கிற பெயரில் விடும் கேஸை எல்லாம் சிலிண்டருக்கு சிலிண்டர் உண்மை என்று நம்பி எதிர்வாதம் வேறு எழுதுகிறார்கள். மாநில சுயாட்சியே இன்னும் வந்தபாடில்லை என்னும் போது கதா பாத்திரத்திற்கெல்லாம் சுயாட்சி கொடுக்க முடியுமா? நானே எல்லா பாத்திரத்திற்கும் ஜீவனும் ஒளியுமாய் இருக்கிறேன். எனது எண்ணற்ற குருமார்களில் ஏசுவும் ஒருவர். ஆமென்.

<குத்து மதிப்பாக வீசி வைத்தது.> 

சேரியில் வேதத்திற்கு மாறிய தலித்துகள்மேல் வியாதியை வீசி அவனைப் பயமுறுத்தித் திரும்ப ஹிந்துமதத்திற்கு இழுக்கும் ஆரிய சமாஜ சங்கதியே, மாடனின் வயிற்றுப் பசிபோல சொல்லப்படுகிறது. வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் வானரங்களாய்க் கீச்சுமூச்செனக் கூக்குரலெழுப்பும் ஆழமற்ற மூட முற்போக்குகள் ஆரம்பத்தில் இதைத் தூக்கிக் கொண்டாடியதன் காரணம் பின்னால் வரும் பிராமணப் பிரதிஷ்டைதான். கண்ணைக் கட்டவேக் கொண்டுவரப்படுகிறது சர்க்கரைப் பொங்கல் கதையின் கடைசியில். நாட்டார் தெய்வங்களை பிராமணர் ஆரியமயமாக்கினர் என்பதைச் சொல்லும் கதை என்கிற லேபிள் பளிச்செனத் தெரிகிறது எனவே முற்போக்கு என்று கூத்தாடு கொண்டாடு.

அரசியல் சரிகளை ஆஹா ஓஹோவென அவ்வப்போதைக்குத் தூக்கிப் பிடிக்கும் ஆழ நுட்பம் அறியா முற்போக்குகள் கிடக்கட்டும். இலக்கிய உலகின் ஐய்யமாரெல்லாம் ஆரத்தழுவுகின்றனரே! அப்படியென்றால் இந்த எழுத்தாளர் சமஸ்கிரத விற்பன்னரோ? சமஸ்கிருதம் என்று காதில் விழுந்ததும் தாவாக்கட்டையில் போட்டுக் கொள்ளும் கும்பலே ஜாஸ்தி. அங்குமட்டும் முண்டங்களில்லை என்று அப்படியென்ன மூட நம்பிக்கை? 

சமஸ்கிருதத்தைத் தெரிந்துகொள்ளும் அக்கறையோ முயற்சியோ உள்ளவர்களை எண்ணிவிடலாம்.

<எதற்கும் ஜாக்ரதையாக அப்பியின் தெருப்பக்கமே போகவில்லை. தப்பித் தவறி ஏதாவது ஆயிற்றென்றால் சஸ்திரம் பண்ணிவிடுவான்.>

என்ன சொல்ல வருகிறது இந்தவரி?

அப்பிதப்பி அப்பிக்கு சிறு தொல்லையேனும் வந்தால் அப்பி தன்னைக் கொன்றே விடுவான் என்று மாடன் சொல்ல வருவதாகத்தானே தோன்றுகிறது.   சமஸ்கிருதமும் அறிந்த சேரி மாடன். 

<சஸ்திரம்> என்றால் என்ன பொருள்?


அகராதியில் இருந்து
பொருள்: , weapons. , weapons.
உச்சரிப்பு: castiram castiram

அஸ்திர சஸ்திரம், arrows and weapons.
சஸ்திர வித்தை, the art of using weapons.http://wiki.senthamil.org/சஸ்திரம்

ஆக சஸ்திரம் என்பது ஆயுதம் மட்டுமே. ஆயுதத்தை வைத்துக் கொன்றே விடுவான் என்று எழுதலாம். ஆனால்,

அவனுக்கு ஏதாவது ஆயிற்றென்றால் அவ்வளவுதான் ஆயுதம் பண்ணிவிடுவான் என்று தமிழில் எழுதினால் வாயால் சிரிப்பீர்களா அல்லது வாயு வெளியேறும் துவாரத்தால் சிரிப்பீர்களா?

அப்படி எனில், எழுத்தாள இமயம் ’சஸ்திரம்’ என்று ஏன் எழுத நேர்ந்தது?

வஸ்திரம்

சென்னை மாகாணத்திலே அந்தக்காலத்தில் ஒரு நீதிபதி இருந்தார். அவர் சமஸ்கிருத பண்டிதரும் கூட. சொந்த ஊரிலிருந்து யாரோ அனுப்பி வைத்தார்கள் எனப் பள்ளிப் பக்கமே போகாத ஒரு ஆளைத் தோட்ட வேலைக்கு சேர்த்திருந்தார்.

தோட்டக்காரனுக்கு, ’வாங்கோ போங்கோ செளக்கியமா இருக்கேளா’ என அந்த வீட்டுக்காரர்கள் பேசுவது கேட்கப் புதிதாய் இருந்தது. அதைவிட அவ்வப்போது கார் போட்டுக் கொண்டு வந்து போகும் பெரிய மனிதர்களிடம் எல்லாம், அந்த வீட்டு ஐயா, தோட்டத்தில் உட்கார்ந்து சமஸ்கிருதம் கலந்து பேசுவது, ஒரு அட்சரம் கூடப் புரியாமற் போனாலும்,ஷ் ஷ் என்று விசிலடிப்பது போல வினோதமாகவும் பெரிய மனுஷ தொரணையாகவும் தோன்றியது. வந்து செல்பவர்கள் எல்லோரும் அவரைக் கையெடுத்துக் கும்பிடுவது என்ன!அவர்கள் குனிந்தால் பண்டிதர் கையைத் தூக்கி தஷ்ஷுபுஷ்ஷென்று ஆசீர்வதிக்கும் தோரணைதான் என்ன! தெய்வ அருள் பெற்ற சாமியார் போலவே தோட்டக்காரன் கண்ணிற்கு அவர் தெரியத்தொடங்கினார்.

வாயிருக்கிறது என்று நாமும் பேசி என்ன பயன்? ஒரு நாயேனும் நம்மை மதிக்கிறதா? நாலு பேர் மதிக்க வேண்டுமென்றால் ஒரே வழி நாளை முதல் ஷ் போட்டுப் பேசுவதுதான் என்று முடிவு செய்துகொண்டான்.

மறுநாள் காலையில் அவன் தோட்ட வேலையைத் தொடங்கும் போது, முதலில் கண்ணில் பட்ட நபர், வீட்டோடு வேலைக்கிருக்கும் மாமி. அந்தம்மாள் தோட்டத்தின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றுக் கொடியில், அய்யாவின் வேட்டியைக் காயப்போட்டுக் கொண்டு இருந்தாள். பேச வாய் பரபரத்தது. ஆனால் அந்த அம்மாளோ அவசர வேலையாய் வீட்டிற்குள் போய்விட்டாள். சரி இப்போது என்ன கெட்டுவிட்டது? என்னதான் அயிரம்மா என்றாலும் நம்மைப்போல அவளும் வேலைக்காரிதானே. அவளிடம் பேச வாய்ப்புத் தவறியது ஒரு விஷயமா என மனதைத்தேற்றிக் கொண்டான். அடுத்து பேச ஒரு வாய்ப்பு வராமலா போய்விடும் நேரடியாக அய்யாவிடமே பேசிவிடுவது என்கிற தீர்மானத்தோடு தக்க தருணத்தை எதிர்பார்த்து இருந்தான்.

தொட்டத்தில் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியது, அய்யா வெளியில் கிளம்புகிறரா என, எட்டி வீட்டுப் பக்கம் ஒரு பார்வை பார்ப்பது என இருந்ததில் மாடு தோட்டத்திற்குள் நுழைந்ததை அவன் கவனிக்கவில்லை. தொலைவிலிருந்த பிளஷர்கார் டிரைவர் ஏதோ சொல்லியபடி சைகை செய்வதைத் தற்செயலாய் கவனித்துத் திரும்பிப் பார்த்தால், மாடு பண்டித ஜட்ஜ் அய்யாவின் வேட்டியை முட்டிக் கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அய்யமார் வேட்டியைத் தொடுவதைவிட அவர்களிடம் சொல்லுவதே சரி என்று பட்டது. பேசவும் இதுவே சரியான தருணம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் என்று குஷியாகி, வீட்டை நோக்கி ஓடினான். கதவருகில் ஒரு பக்கமாய் பவ்வியமாய் நின்றுகொண்டு சத்தமாக அஷ்யா அஷ்யா என்று கூவினான்.

கிட்டத்தட்டக் கிளம்பி, கண்ணாடிமுன் நின்று காதுக்கு மேல் மட்டுமே இருந்த முடி என்கிற நாமதேயம் கொண்ட வஸ்துவில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஜட்ஜ், தோட்டக்காரனின் வினோத சப்தத்தில் துணுக்குற்றவராய், தலைப்பாகை ஒரு கையிலும் வாக்கிங் ஸ்டிக் ஒரு கையிலுமாய் முகத்தில் சிடுசிடுப்புமாய் வந்து என்னடா என்றார்.

அஷ்யா அஷ்யா மாஷ்டு மாஷ்டு என்றான் தோட்டக்காரன்.

என்னடா ஒளற்றே வாய்ல தர்ப்பையப்போட்டுக் கொளுத்த, சொல்றதை ஒழுங்கா சொல்லித்தொலை என்றார்.

மாஷ்டு வேஷ்டிய முஷ்டிமுஷ்டி கிஷிக்குது பாஷுங்க என்றபடி மாட்டிற்காய்க் கையைக் காட்டினான்.

’நாசமாப் போறவனே வஸ்திரம் போச்சேடா’என்றபடி பதற்றத்தில் தலைப்பாகை கை நழுவிப் புல்தரையின் ஈரத்தில் விழுந்து கறையாவதைக் கவனியாது, ஓட்டமும் நடையுமாய்க் காலெட்டி வைத்ததில் பஞ்சகச்சத்திற்குள் இருந்த கோவணம் அவிழ்ந்ததுவும் அறியாமல் வாக்கிங் ஸ்டிக்கை ஓங்கியபடி மாட்டிற்கு சமஸ்கிருதம் தெரியுமோ இல்லையோ என்கிற சம்சயத்தில் ஏய் ஏய் போ போ மாடு மாடு என்று தூய தமிழில் விரட்டிக் கொண்டு போனார். என்ன இருந்தாலும் அய்யர் ஜட்ஜ் இல்லையா, அது மாடல்ல கோமாதா என்பதை ஒரு போதும் மறவாதே என அவ்வளவு ஆத்திரத்திற்கிடையிலும் ஆன்மாவின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. தெய்வ குத்தம் ஆகிவிடக்கூடாதே எனப்பதைத்து நடைக் கழியைக் காற்றில் ஆட்டியபடி ஏய் சொல்வதையும் நிறுத்தி ‘ மாடு உசு உசு போ போ’ என விரட்டியபடி, கைவசமிருக்கும் அத்துனை ஸ்தாவர சொத்துக்களையும் பரம்பரையாக வந்து சேர்ந்த ஒற்றை ஜங்கம சொத்திற்காக விற்று வழக்கு நடத்துபவனைப்போல, மாட்டின் வாய்க்கு வெளியில் இருந்த ஆகிவந்த அப்பாவின் வேஷ்டியை இருக்கும் தேகபலத்தையெல்லாம் திரட்டி ஒற்றைக் கையில் இருத்தி வேஷ்டியை மீட்டார்.

வேட்டிதானே காயப்போட்டிருந்தாய் அதற்கே இவ்வளவு அல்லாட்டமா?அல்பனே! அங்கவஸ்திரம் எங்கேடா? என்பதுபோல் அவரை அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு வாயகப்படுத்தியதை அசைபோட்டபடி, என்ன இருந்தாலும் சினிமாப் போஸ்டருக்கு வேஷ்டி பரவாயில்லைதான் என்ற திருப்தியுடன், காம்ப்பவுண்டு கேட்டைப் பார்க்க நடந்தது. அதுவாகப் போவதை கனகாரியமாய் விரட்டுவதில் டிரைவரும் சேர்ந்து கொண்டான்.

வெளிய போற வழி மாட்டுக்கே தெரியறது. நீ ஏண்டா இன்னும் நிக்கறே? கெட் அவுட் என்றார் ஜட்ஜ்.

என்னதான் ஜட்ஜென்றாலும், அவரை விடவும் தான் அய்யமாரு பாசையை நன்றாகப் பேசுகிறோம் என்பதில் அவருக்குப் பொறாமை எனவேதான் வீட்டை விட்டு விரட்டிவிட்டார் என்று கிராமத்துப் பொடிசுகளிடம் கடைசி மூச்சுவரை சொல்லிக் கொண்டிருந்தான் தோட்டக்காரன்.

மாடன் மண்டையில் சஸ்திரம் என்று எழுதி வைத்தது, அசடுகளை விழுத்தாட்டக் காட்டிய அஸ்திரம்.


தயிர் வடைக்கு அடிப்படைத் தேவை தயிரும் வடையும். மேலே தூவப்படும் பூந்தி வெறும் அலங்காரம்தான். 

எல்லோரும் தாண்டிக் குதிக்க வசதியாய், எழுதப்படாத ஒப்பந்தமாய், முழங்கால் அளவிற்குத் தாண்டுகழியை இறக்கிக் கொண்டுவிட்ட ஜனநாயக மைதானமாய் இருக்கிறது சமகால இலக்கியம். 

தயிரின் மேல் தூவப்பட்டிருக்கும் பூந்தியைப் பார்த்ததுமே, உள்ளே வடை இருப்பதான அனுமானத்திலேயே, ஹையா!தயிர்வடையோ தயிர்வடை தரமான தயிர்வடை தன்னிகரற்ற தயிர்வடை என்று ஆரவாரித்து சர்வே நடத்தி சான்றிதழே வழங்கிவிடுகின்றன தயிர்வடைகள்.

<மூன்றாம் நாள் சிகப்பு பட்டாடை கட்டி, சதங்கையும் வாளும் குலுங்க, வாயில் வெற்றிலைச் சாறு தளும்ப, அப்பி அவ்வழியாக அவசரமாகப் போனான்.>


<வாளும் குலுங்க> 

வாள் குலுங்குமா? அடப்போப்பா குலுங்க என்பது வெற்றிலைச் சாறு தளும்பவுக்கு ரைமிங்கப்பா?எகனை மொகனையாய் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் இதெல்லாம் ஒரு குத்தமா?

இல்லையில்லை நான் ’ம்’ பற்றியே பேசவந்தேன்.

வாளும் குலுங்க என்கிறாரே! எதுவேண்டுமானாலும் குலுங்க நடந்துவிட்டுப் போகட்டும் நமக்கென்ன? 

அவளுக்கு வாயும் பெருசு என்று வெகண்டையாக பாண்டிச்சேரியின் பெருசுகள் பேசுவதை பால்யத்தில் கேட்டிருக்கிறேன். அதுபோல வாளும்  குலுங்க என்பதில் இடக்கரடக்கல் ஏதுமுண்டோ என்கிற ஐயமே எனக்கு. எக்குத்தப்பான எகனை மொகனை பார்த்து போட்டிக்கு ஆள் வந்துவிட்டதே என்று கோடம்பாக்க சலவை நிலா சக்கரவர்த்தி இத்யாதிகள் அல்லவா வயிறெரிய வேண்டும். முறுக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுகிறவனுக்கு என்ன இருக்கிறது இழப்பதற்கு?

<‘அவனுவ வெள்ளைச் சட்டைக்காரனுவளை இஞ்சயே கொண்டாந்துட்டானுவ வேய். நம்ம பயவகூட அங்க செண்ணு கலர் வெள்ளமும் குளிகெயும் வாங்கித் திங்கியானுவ; பெறக்கிப் பய மவனுவ. நீரும் உம்ம வித்தும் . . . ‘>

அதிபயங்கர முற்போக்கு புரிகிறதா? அல்லது வட்டார வழக்கில் அமுங்கி விட்டதை அப்படியே வாசித்துக் கடந்தாகிவிட்டதா?

கிறித்துவம்,மருத்துவ ரூபமாய் தலித்துக்கள் இருக்கும் சேரிக்கே வந்துவிட்டது. இன்னமும் ஹிந்துவாக இருக்கும் தலித்துக்கள் அவர்களிடம் போய் மதவித்தியாசம் பாராமல் மருந்தும் சிரப்பும் பொறுக்கித் தின்கிறார்கள். ஆகவே மாடனின் வியாதியெல்லாம் இனி பலிக்காது - அப்பியின் அங்கலாய்ப்பு

அடுத்து வரும் உரையாடல்கள் வலிந்த தன்மை கொண்டவை.

மாடனுக்கு பூசை இல்லாததால் தன் நிலையே பிச்சை எடுப்பதாக ஆகிவிட்டது  எனப் புலம்பிக் கோபிக்கும் பூசாரியிடம், வியாதிகளை ஏவி வேலைக்காகாமல் தோற்ற நிலையில் இருக்கும் மாடன் ’கிடா’ கேட்பது கண்டு நமது விலாவில் நாமே கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டுதான் சிரித்தாக வேண்டும்.

கிடா கேட்டதும் அப்பி என்கிற சேரிப்பூசாரி கடுப்பாகி, திடீரென பிராமணோத்தமனாய் அவதாரம் எடுத்து

<‘கட்டேல போக’> என மாடனைத் திட்டுகிறான்.

அடுத்து எரிப்பனை - கள்ளோ சாராயமோ வார்னிஷோ கேட்கிறான்

அப்பி உடனே மூத்திரம் பேய்கிறேன் என்கிறான்.

மாலையில் வரும் பூசாரி நோஞ்சான் கோழி ஒன்றையும் கொஞ்சம்போல எரிப்பனையும் மாடனுக்குப் படைக்கிறான்.

அந்த காலத்திலேயே டிவி சீரியல்களின் வசன நாடியைக் கச்சிதமாய்ப் பிடித்திருக்கிறார் ஆசிரியர். மூன்று ஏழரை நிமிட செக்மெண்டுகளை ஓட்ட ஏற்கெனவே தெரிந்த, பேசிய விஷயத்தையே சும்மா பண்ணிப்பண்ணிப் வலைத்து வளைத்துப் பேசிக்கொண்டிருப்பதே ஆகிவந்த மகா கலை. 

<மீசையைக் கோதியபடி மாடன் தலையை ஆட்டிச் சிரித்தது.> 

நல்ல வளர்ச்சி. மாடன் உபயோகிக்கும் தலைமுடி எண்ணெயின் பிராண்ட்  என்னவெனத் தெரிந்தால் எழுத்தாளருக்கே இன்று உபயோகப்டும்.

<இப்படியே விட்டால் மீசையைக்கூட பீராய்ந்து கொண்டு போய்விடுவான்கள்.>  

திக்கினியூண்டு இருப்பதைத்தான் பீராய வேண்டிவரும், அம்பாரமாக இருப்பதைத்தான் ஆராயமுடியும் என்பதைப் போல.

பீராயந்து கொண்டு போய்விடுவார்கள் என்கிற அளவில் முந்தின தினம் இருந்த மீசை கோதிக் கொள்ளும் அளவிற்கு ‘என் தலைமுடி எவ்ளோ நீளமா இருக்குன்னு பாக்கணுமா?இவ்ளோ நீளம்’ என்கிற விளம்பரம்போல் வளர்ந்துவிட்டிருக்கிறது.

பீராய்வதற்கும் அர்த்தம் தெரியாது கோதுவதற்கும் பொருள் தெரியாது. எந்த வார்த்தையை எங்கே உபயோகிப்பது பொறுத்தம் என்பதும் தெரியாது. ஆக மொத்தம் ஞான் தமிழ் அறியில்லா. இந்தத் தகுதி ஒன்றே போதுமே டாக்டரேட் சூடிக்கொள்ள? எந்த பல்கலைக்கழகம் முந்தப் போகிறது என்பதுதான் கேள்வி. துடிப்பான ஆழ்வார்க்கடியான்கள் முனிவருக்கு முனைவர் எனப் பட்டம் கொடுப்பதற்காகக் கானடாவில் பிரத்தியேகப் பல்கலைக்கழகமேகூடத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

<‘வேய் மாடா, இப்பம் ஆதிகேசவன் கோவிலும் அம்மன் கோவிலுமொக்கெ எப்பிடி இருக்கு அறியிலாமா வேய் ? கொலு கொலுண்ணு வேய். வெளக்குக்கு வெளக்கென்ன; மந்திரமென்ன; நாலு சாமத்துக்கு பூசெ . . . கண்டாமணி . . . வரியத்துக்க மூணு திருவிளா. படையல் . . . கோளோட கோளுதான். இப்பம் இஞ்ச மகாதேவருக்கு ஸ்பீக்கரும் வாங்கப் போவினுமாம். நம்ம மகாதேவரு கோவிலிலே எம்பிடு கூட்டம் தெரியுமா ? ‘

‘அது என்ன லேய் ஸ்பீக்கறு ? ‘

‘காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை கொட்டினா வராதுவேய். நம்ம மூலயம் வீட்டு கொச்சேமான் கோபாலன்நாயருதான் அதுக்க பெரசரண்டு. ஒரு கூட்டம் ஏமான் பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு இட்டனுவ ஆறெஸ்ஸு. மத்தவனுவ இந்துமின்னணி. ‘>

ஆர்எஸ்எஸ்ஸும் இந்து முன்னணியும் வந்த பிறகே உயர்த்தபட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக் கடவுளர்களுக்கு மவுசு வந்தது போல சீரியல் பல்பில் ஜோடனை.

ஆடிமாதம் முழுக்க காதை லாக்கரில் வைத்துவிட்டால் தேவலாம் என்கிற அளவிற்கு திராவிடஸ்தானர்களின் அம்மன் கோயில் அலறல்கள். அவ்வப்போது ’ஏசுவுக்கு வீடு திறந்து விடுகிறேன்’ என்கிற பெயரில் தெருவைப் பார்த்துக் கதறும் ஸ்பீக்கர்கள். இவை இரண்டுமே காலாகாலமான நாய்ஸ் பொல்யூஷன்தான். 

<‘ஏமான் பெயவளுக்கு ஒரு சொரனை வரட்டும் எண்ணுதேன் வேய். அவியளுக்கு வேற என்னத்த செய்தாலும் சகிக்கும், பேர மாத்தினா மட்டும் விடமாட்டானுவ ‘ என்றான் அப்பி.>

மத ரீதியாய் ஒன்று திரட்டலுக்கு இலக்கியம் என்கிற பெயரில் இவ்வளவு முஸ்தீபா? அதுவும் ஒரு எழுத்தாளனிடம் இருந்து. அடேங்கப்பா? பிரச்சார பீரங்கிதான் போங்கள்.

அப்பி என்கிற செந்தில், ”அண்ணே இப்பிடிப் பண்ணினா என்னண்ணே!” என்று இரண்டாம் தடவையாக, மாடன் என்கிற கவுண்டமணிக்கு பின்னுமொரு ஐடியா கொடுப்பதோடு பகுதி இரண்டு முடிகிறது.