Wednesday, May 18, 2011

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி மூன்று

July 10th, 2000

<அப்பால் நடந்ததெல்லாம் மாடனுக்குத் சரியாகத் தெரியாது.>

ஆசிரியர் போலவே மாடனுக்கும் சரியாகத் தெரியாதா ரொம்ப சந்தோஷம். அப்பால?

<குட்டி தேவதையாக இருந்தாலும்>

<அதுவும் கடவுள்தானே!>

<ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடுராத்திரி மையிருட்டில் பசியும் பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை.> 


ஜெயமோகனுக்கு எழுத்து நேர்த்தியில் துல்லியத்தில் எந்த அளவிற்கு முனைப்பு அல்லது மொழியில் தேர்ச்சி இருக்கிறது அல்லது மொழியின் மீதான ஆளுமை இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அவர் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று ரெக்கமண்டு செய்யும் அ.முத்துலிங்கம் பரவசத்துடன் பதிவு செய்திருக்கும் உரையாடல்.


(அ.மு) நீங்கள் திருத்தங்கள் செய்வதே இல்லையா?

ஜெ: இல்லை. திருத்துவதென்பது எனக்கு மிக எந்திரத்தனமான வேலை. எழுதியபின் மீண்டும் படிப்பதைக்கூட நான் விரும்புவதில்லை. திருப்பித்திருப்பி எழுதும் எழுத்தாளர்கள் உண்டு. திருப்பி எழுதவே எழுதாத எழுத்தாளர்களும் உண்டு. முன்னது என்பது ஒரு மனச்சிக்கல் தான். ஒரு சொல்லை திருப்பி எழுதுவதனால் ஒன்றும் பிரதி மேம்பட்டுவிடப்போவதில்லை. சிலருக்கு வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருப்பது ஒரு வகையான \'அப்ஸெஷன்\' அதுபோலத்தான் இதுவும்.

அத்துடன் திருத்துவது மிகவும் பிரக்ஞைபூர்வமானது. தர்க்க பூர்வமானது. ஒரு படைப்பை உருவாக்கிய படைப்பூக்கத்துக்கு நேர் எதிரானது. அறியமுடியாமையின் நிறம் நீலம். அதை தெரிய முடியாமை என்று மாற்றலாம். அறியாமை என்று மாற்றலாம். அறிவின்மை என்று மாற்றலாம். அறியப்படாமை என்று போடலாம். இந்த சாத்தியங்களை உட்கார்ந்து சிந்தித்தால் ஒருவரியில் ஒரு நாளைக் கழித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு படைப்பு இன்பம் இல்லை. ஆகவே அதை நான் ஈடுபட்டு செய்யமுடியாது. அந்த நேரத்தில் நான் அடுத்த படைப்பைப் பற்றிக் கனவு காண்பேன். கடிதங்களைக்கூட நான் முதலில் வரும் கைப்பிழைகளுடன் தான் அனுப்புவேன். திருத்தும் நேரத்தில் இன்னொன்று எழுதலாமே.

<அறியமுடியாமையின் நிறம் நீலம்.> 

என்று மனதில் தோன்றியதை

<தெரிய முடியாமை என்று மாற்றலாம். 
அறியாமை என்று மாற்றலாம். 
அறிவின்மை என்று மாற்றலாம். 
அறியப்படாமை என்று போடலாம். 

இந்த சாத்தியங்களை உட்கார்ந்து சிந்தித்தால் ஒருவரியில் ஒரு நாளைக் கழித்துவிடலாம்.>

மொழி அதன் உள்ளியக்கம் வெளிப்பாடு பற்றிய ஜெயமோகனின் புரிதல் இவ்வளவுதான். 

கொற்றவை என்கிற காப்பியம் என்னய்யா, இதிகாஸமே படைக்கத் தக்கப் பேராளுமை.எதையும் யோசிக்காமல் கசகசவென்று எழுதிக்கொண்டே போகவேண்டியதுதானே!எந்தக் கருமாந்திரத்தையும் மைபூசி காசாக்கப் பதிப்பகங்களுண்டு. அறிவால் ஜீவிக்கும் அடையாள பேட்ஜுக்காய் அச்சடித்ததெல்லாம் அமிர்தம் என சப்புகொட்ட  வசதிபடைத்த மரத்தமிழர் உண்டு. இந்தச் சூழலில் மூளை என்கிற உபரி வஸ்து இருந்தால் மட்டும்தான் பிரச்சனை.

இந்த நுட்பமற்ற பெரும்போக்கு மனம்தான் வெங்கட் சாமிநாதன் பாராட்டு விழாவில் பேசுகையில் அவரது மு.மேத்தா பற்றிய காலத்தால் அழியாத முத்திரை மேற்கோளைத் தப்பும் தவறுமாகச் சொல்ல வைக்கிறது. எழுதும்போதுதான் கோளாறு வாசித்ததிலுமா? தப்பாக வாசித்து மனதில் தங்கியது தத்துபித்தென்றுதான் பேச்சில் வெளிப்படும்.

முப்பது வயதான எவரும் முதலமைச்சர் ஆகலாம் என்பது போல மு.மேத்தாவும் என்றாவது கவிதை எழுதலாம். 

(நேர்ப்பேச்சில் கேட்டது.மீள் ஓட்டத்திற்கான வாய்ப்பில்லை. எனவே வாக்கியக் கட்டமைப்பு மாறியிருக்கலாம்) ஆனால் முப்பது வயது, முதலமைச்சர் என்கிற வார்த்தைகள் சொன்னார் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை. 

ஆனால் வெங்கட் சாமிநாதன் வானம்பாடிகளின் ”வெளிச்சங்கள்” தொகுப்பின் விமர்சனத்தில் சொன்னதற்கும் ஜெயமோகன் வெ.சாவை மேடையில்  வைத்துக் கொண்டே கூறியதற்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லை என்றால் ஏற்றுக் கொள்வார்களா? 

இணையத்தில் R.P.ராஜநாயஹம் சொல்வனம் என எல்லா தளங்களிலும்,, ஜெயமோகன் அளவிற்கு அபத்தமாக இல்லை எனினும், தவறாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது. 

'முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் !' -வெங்கட் சாமிநாதன்

”எந்தவொரு 35 வயதான இந்தியனுக்கும் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பது போலவே என்றாவது ஒரு நாள் மு.மேத்தாவும் கூட கவிதை ஒன்றை எழுதக் கூடும்” 


வெ.சாவின் புகழ்பெற்ற மு.மேத்தா பற்றிய அந்த அசல் சாட்டையடி விளாசல் தான் என்ன? 
(மு.மேத்தா) இனி, எதிர்காலத்தில் கவிதை எழுதலாம். எந்த இந்தியப் பிரஜையும் ராஷ்டிரபதி ஆகலாம் என்பது போன்ற ஒரு நம்பிக்கை.

சரிய்யா ஜனாதிபதி என்று சொல்ல வேண்டியதை ஏதோ நினைப்பில் முதலமைச்சர் என்று சொல்லிவிட்டேன் எப்படிச் சொன்னால் என்ன இரண்டிற்கும் என்ன பெரிய வித்தியாசம். விஷயம் ஒன்றுதானே? என்று ஜெயமோகன் கேட்பாரோ?

இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி இமயமலைத் தொடருக்கு இணையானது.

முப்பது வயதான எந்தக் குடிமகனும் முதலமைச்சர் ஆகிவிட வாய்ப்புண்டா? முதலமைச்சர் ஆக அடிப்படைத் தகுதி முதலில் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்க வேண்டும். பிறகு வென்றாக வேண்டும். அப்புறம் பெரும்பாலான எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும் என்று அது பல தொடர் நிகழ்வுகள் கொண்டது. 

பேப்பரை எடுத்தேன் 
பேனாவால் எழுதினேன் 
கவிதையானது
(இதை யாத்தது அடியேன் - விருது தவறான ஆளுக்குப் போய்விடக்கூடாதென்கிற ஜாக்கிரதை உணர்விலேயே இந்தத் தகவல் கொடுக்கப்படுகிறது)

என்பது போல எந்தவித சிரமமோ பிரயத்தனமோ அறிவோ இல்லாது எழுதியதற்கு அவர் மாபெரும் கவிஞராகப் போற்றப்பட்டார் என்பதைப் பற்றிய கிண்டல் அல்லவா அது.

ஜனாதிபதியாவதற்கு அடிப்படைத் தகுதி என்ன? 
Article 58 in The Constitution Of India 1949 [Constitution]
58. Qualifications for election as President
(1) No person shall be eligible for election as President unless he
(a) is a citizen of India,
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 

இந்தியக் குடிமகனாக இருப்பதற்கு ஏதும் விசேஷ முயற்சி பயிற்சி தேவையா என்ன? பிறந்ததெல்லாம் பெருமாள்தானே!

மாபெரும் கவிஞராக மு.மேத்தா கொண்டாடப்பட்ட காலத்தில், அந்த ஆள் கவிதை என்றால் என்ன என்பதே அறியாதவர் என்பதைக் குறிக்கும் நையாண்டியில் இருக்கும் கவித்துவத்தைக்கூட விளக்க வேண்டிய காலக் கொடுமையை என்னவென்று சொல்வது?

ஜனாதிபதி என்பது இந்தியா முழுமைக்குமான உச்சபட்ச பதவி அதே சமயம் நடைமுறையில் உண்மையான எந்த அதிகாரமும் அற்ற வெறும் அலங்காரம். எல்லாவற்றுக்கும் மகுடமாக ‘என்பது போன்ற ஒரு நம்பிக்கை’ என்றாரே அங்கே, கமெண்ட் கவிதையாகிவிட்டது. 

இப்போது வெ.சா சொன்னதாக ஜெமோ சொன்னதையும் வெ.சா சொன்னதையும் படித்துப் பாருங்கள்.

”முப்பது வயதான எவரும் முதலமைச்சர் ஆகலாம் என்பது போல மு.மேத்தாவும் என்றாவது கவிதை எழுதலாம். ” (வெ.சாவுடையது என்று ஜெயமோகன் மேற்கோள் காட்டியது.

(மு.மேத்தா) இனி, எதிர்காலத்தில் கவிதை எழுதலாம். எந்த இந்தியப் பிரஜையும் ராஷ்டிரபதி ஆகலாம் என்பது போன்ற ஒரு நம்பிக்கை. - வெங்கட் சாமிநாதன் சொன்னது.

எழுத்தைத் தன் பிடியில் வைத்து ஆள்பவன்தான் எழுத்தாளன். இப்படி எழுதினால் என்ன அப்படிச் சொன்னால் என்ன என்பவருக்கு எப்படிப் புரிய வைப்பது? 

ஜென்கயமோ என்றால் ஜெயமோகன் ஆகுமா? 

ஓரெழுத்துகூடக் கூடவோ குறையவோ இல்லை இடம்தானே மாறி இருக்கிறது எப்படி எழுதினால் என்ன என்று கேட்கலாமா? 

அதிகாலைப் புல்நுனியில் அமர்ந்திருக்கும் பனித்துளி, புல்லின் அகலத்திற்கேற்ப சிறிது பெரிதாகலாம் ஒருபோதும் மூளியாய் இருக்க முடியாது. கலை, முழுமையின் விகசிப்பு.

மூடர்கள் சேர்ந்து சூட்டிய முடியல்ல க.நா.சு, பிரமிள், வெ.சா, சுரா, தி.ஜா அமி போன்ற ஆளுமைகளின் தலையில் இருப்பது. 

காயலாங்கடையில்,இருப்பதிலேயே கனமானதைத் தேர்ந்தெடுத்துத் தலையில் கிரீடமெனத் தானே வைத்துக் கொள்வதால் ஒருவ்ன் கலைஞனாகிவிட முடியுமா? தலைகனத்தால் தள்ளாட்டம்தான் மிஞ்சும்.

கதையின் தொடக்க வரி எப்படி முடிகிறது? 

<.....சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது.>

அது என்கிற விகுதி தமிழ் ஹிந்து மரபில் எப்படிக் கட்டமைக்கப்பட்டது? யாருக்கு உரியது? 

ராமசாமி என்று எழுதுவதற்கும் ராமசுவாமி என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியசம்? சுந்தர ராமசாமியின் பெயர் ஆங்கிலத்தில் என்ன? http://sundararamaswamy.com/MeettheAuthor.htm இதிலிருக்கும் கலாச்சாரப் பின்னணி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லையா? பிறக்கையில் ராமசுவாமியாக இருந்தவர் எழுத்தாளராக ராமசாமியாக ஆகிறார்.

முத்துசாமிக்கும் முத்துசுவாமிக்கும் என்ன வித்தியாசம்? ஒரே தெய்வத்தின் பெயர் சாமியாகவும் சுவாமியாகவும் எப்படித் தெளிவாக வேறுபடுத்தி எழுதப்படுகிறது? சுடலைமாடசாமிதான் உண்டு ஏன் சுடலைமாடசுவாமி இல்லை? சாமியைத் தலையே போனாலும் சுவாமியாக ஏற்காத யதார்த்தத்தைத் திரித்து, சாமி ஸ்டீபன் ஆகிவிடாமல் இருக்கவேண்டி, மாடசாமியை மடத்து சுவாமிகள் ஏற்கத் தயார் ஆனால் சாமிக்குதான் சர்க்கரைப் பொங்கல் பிடிக்கவில்லை என்று கதை விடுவது ‘மோடி’ மஸ்தான் வேலையா இல்லையா? இதற்குப் பெயர் அறமா? 

எனது எதிரிகள் எப்போதும் என் எழுத்தில் எடுத்ததெற்கெல்லாம் அரசியல் பார்க்கும் படைப்பூக்கமற்றவர்கள், இவர்கள் எவரையும் திருப்திப்படுத்த அரசியல் சரிகளைப் பேசாதவன் ஞான், எனவேதான் எனக்கு பலத்த எதிர்ப்பு என்று பரப்புவது உண்மையின் திரிப்பு இல்லையா? இதற்குப் பெயர்தான் கலை இலக்கிய மோசடி.

அம்மை போட்டு குணமானபின் சமயபுரம் கோவிலின் வாயில்முன் சூடம் கொளுத்தி தேங்காய் உடைப்பவன், இஸ்லாமியனாகவே இருந்தாலும் தமிழ் முஸ்லீமாகவே இருப்பது ஏன்? அம்மை போட்டதற்காக கதவின்மேல் வேப்பிலை கட்டினாலும், அய்யங்காரில் எத்துனைபேர் அம்மன் கோவிலுக்குப் போகிறான்?

ஆரியன் இல்லை தமிழ்க் கடவுள்தான் முருகன்.அன்பு மீதூர்ந்து, அவன் என்று அழைக்கப்பட்டாலும் அது என்று ஏன் குறிப்பிடப்படுவதில்லை? சுடலைமாடசாமி மட்டும் தன்னைக் கும்பிடுபவர்களாலேயேக்கூட அவர் விகுதியுடன் விளிக்கப்படாதது ஏன்? இவை அனைத்திலும் அநேக விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றனவா இல்லையா?. 

தெய்வம்? கடவுள்? தேவதை? என்று கைபோன போக்கில் அடித்து விடுவதுதான் உயர் கலையா?

<இப்படி ஒரு தெய்வம்> 
<பசியும் பாடுமாக அல்லாடுவதை> 
<பிரக்ஞை>

தனது மக்களாகிய சேரிவாசிகள் தன்னைக் ’கண்டுகொள்ளவில்லை’ என்பதுதானே கதையின் முதலிரண்டு பகுதிகளிலும் நையப் புடைக்கப்படும் சமாச்சாரம். எழுத்தாளர் பிரக்ஞையற்ற கோமா நிலையில் கதை எழுதுவதாக கூவிக்கொண்டாலும் மாடனால் பிரக்ஞை என்கிற வார்த்தையை சரியான ஒலியுடன் உச்சரிக்கவேனும் முடியுமா? அந்த வார்த்தை அதன் கலாச்சாரத்தில் இல்லையெனும்போது அதனால் நினைக்க மட்டும் எப்படி முடியும்?

வார்த்தைகளின் வாக்கியங்களின் அந்த நேர வாசக அசத்தலில் மட்டுமே ஆசிரியர் குறியாக இருக்கிறார். எழுதுவதன் முழுமையோ, முழுமையில் அந்தப் புள்ளியின் பங்கு பற்றிய கவனமோ இல்லாதது மட்டுமல்ல, அதைப் பற்றிய பிரக்ஞையும் அவருக்கு இல்லை. இப்படி ஆங்காங்கே தூவித்தெளிப்பவர் அடிமடையர்களிடமே ஆளுமையாக ஜொலிக்க முடியும்.

உதாரணமாக, இன்றைக்கும் கொண்டாடப்படும் இவரது ஒரு வாசகம்.

“இன்மையில் இருந்து இருப்புக்கு வருவதுபோல!”

அடடா எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டார் என்று அசந்து போக வைக்கிறது அல்லவா? போகவும் முதல் குழந்தை பிறந்த தருணத்தில் இந்த வாக்கியம் எழுதப் பட்டு இருக்கிறது என்கிற பின்னணியும் தெரிகையில் வாக்கியத்திற்கு கனபரிமாணம் கூடி கவிதையாய் ஒளிர்கிறது இல்லையா?

ஆனால் இது ஆசிரியர் அருளிச்செய்தபோது எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

<நான் போய் எல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வந்து உள்ளே நுழைந்தேன். மாமனார் வந்து அவளை மகப்பேறு அறைக்குக் கொண்டுசென்றிருப்பதாகச் சொன்னார். நான் அறைவாசலுக்குச் செல்லவும் டாக்டர் கதவை திறந்து வெளியே போகவும் சரியாக இருந்தது. ”என்ன ஆச்சு?”என்றேன். நடுவயதான நர்ஸ் சாதாரணமாக ”குழந்தை பொறந்திருக்கு ஆண்குழந்தை” என்றாள். அத்தனை சர்வசாதாரணமாக.!இன்மையில் இருந்து இருப்புக்கு வருவதுபோல! ‘காற்றில் விளைந்த கனி’ என்று அந்த வருகையை பின்னர் ஒரு கட்டுரையாக எழுதினேன் [ வாழ்விலே ஒருமுறை. கவிதா பிரசுரம்]>

<நடுவயதான நர்ஸ் சாதாரணமாக ”குழந்தை பொறந்திருக்கு ஆண்குழந்தை” என்றாள். அத்தனை சர்வசாதாரணமாக.!இன்மையில் இருந்து இருப்புக்கு வருவதுபோல!>


சாய்பாபா ‘ஒரு அற்புதத்தை’ செய்து காட்டிய போது பக்தர்கள் எப்படி பரவச நிலை எய்துவார்களோ அது போல ஆசிரியரின் பக்த வாசகர்கள் <இன்மையில் இருந்து இருப்புக்கு வருவதுபோல!> என்பதைத் திருவாய் மொழியாகக் கொண்டாடோ கொண்டாடு எனக் கொண்டாடி குதூகலிக்கிறார்கள். 

குழந்தை பிறப்பு என்பது, தொழிலாக நாள்தோறும் பார்க்கிற நடுவயது நர்சுக்கு சாதாரணம்தான். நமக்கு அப்படியா? இன்மையில் இருந்து இருப்புக்கு வருவது போல அது எத்துனைப் பெரிய விஷயம் என்று வாசக மனம் எடுத்துக் கொண்டு குதூகலிக்கிறது. ஆனால் அவர் எழுத்தில் அது நேரெதிராக அல்லவா எழுதப்பட்டிருக்கிறது. 

<அத்தனை சர்வசாதாரணமாக.!இன்மையில் இருந்து இருப்புக்கு வருவதுபோல!> 

உன்னதங்களை மட்டுமே எழுதும் எழுத்தாளர் எனவே அவர் எழுதிய வார்த்தைகளில் இல்லாத உன்னதத்தை வாசகனாகப் போட்டு உரக்கப் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.

<அன்றிரவு அப்பி மாடனைப் புரட்டிப் போட்டு, பீடத்தின்மீது மரச்சிலுவை ஒன்றையும் நட்டுவிட்டுப் போனான். மாடனுக்கு மார்பை அடைத்தது. எத்தனை தலைமுறைகளைக் கண்டது. கடைசியில் பசிக் கொடுமையில் நாடகம் போட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஏதோ எல்லாம் ஒழுங்காக நடந்தேறி, வருஷா வருஷம் கொடை மட்டும் முறையாக கிடைத்துத் தொலைத்தால் போதும். கும்பி ஆறினால் அது ஏன் வேறு வம்புகளில் தலையிடப் போகிறது ?>

<மாடன் படுத்தபடியே, வாளைக் கிடையாகப் பிடித்தபடி, உருட்டி விழித்து இளித்தது. மழை பெய்து தொலைக்குமோ என்று பயம் வந்தது. கூரையும் இல்லை . . . ஜலசமாதிதான் கதி.>

<கூரையும் இல்லை>

எவ்வளவு செயற்கையான வெளிப்பாடு. எந்த சேரியின் எல்லையில் மாடன் மழைக்கு பயந்து கக்கத்தில் குடையோடு காட்சியளிக்கிறார்? அவரென்ன விதானத்திற்குள் பாதுகாப்பாய் நிற்க விஷ்ணுவா? பாதுகாக்க நிற்கிறவர் என்பதல்லவா சேரியின் நம்பிக்கை.

<ஜலசமாதி> 

கதை யாருக்காக யாரைக் கவர்வதற்காக எழுதப்படுகிறதோ அவர்கள் மொழியில் அல்லவா எழுதப்பட வேண்டும். சேரி / மாடன் மொழியில் எழுத, ஆசிரியர் என்ன மடையரா? அவரிடம் இருப்பது குச்சியில் செருகிய காற்றாடியா என்ன? பெரிய காற்றாலையே அல்லவா இருக்கிறது! காற்றடிக்கும் திசையில் தானாகவே திரும்பிக்கொள்ளும் காற்றாலை. 

கதை வெளியாகும் வருடம் விசேஷம் தற்செயலா? 1991 கரசேவை ஜுரம் பள்ளி கல்லூரிகளுக்கு எல்லாம் பரவி ’ராமர் கல்’ ஏற்றுமதி தெய்வ கைங்கர்யமாய் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம்.

<அப்பி மறுநாள் காலையிலேயே வந்துவிட்டான். குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான். பழைய பறையர்கள் சிலருக்கு ஞானோதயம் வந்து, மாடனைத் தரிசிக்க ஓடோடி வந்தனர்.>

புனைவு என்ற போர்வையில் அலுவலகத்தில் சொல்ல இயலாத ‘பற’ எத்துனை முடிகிறதோ அத்துனை முறை சொல்லிப் பார்த்துக் கொள்வதில்தான் என்னவொரு ஆனந்தம். இதில் அரசியல் இருக்கிறது என்று சொல்லிவிட்டால் மட்டும் அது ’திருகிய பார்வை’. இது போன்ற மனங்களால் கலையின் கால் சுண்டுவிரல் நகத்தைக் கூடத் தீண்ட முடியாது என்கிற சாபக் கூப்பாடு. 

<பழைய பறையர்கள்>

உரையாடலில் சொல்லிப் பார்த்துக் கொண்டது போக ஆசிரியர் கூற்றிலும் அவிழ்த்து விடுவது ஆபத்தில்லை என்பதனால் வருகிற அற்ப வக்கிரம் இல்லையா?

<மாடனின் காம்பீர்யம் அந்நிலையிலும் ஜ்வலிப்பதாய் சிலர் புல்லரித்தனர்.>

கதையில் அதுவரை அங்கு வந்து குழுமியோர் எல்லாம் அப்பகுதி தலித்துகள் மட்டுமே. ஆனால் அவர்கள் குருகுல வாசத்தில் சமஸ்கிருதம் வாசித்த தலித்துகள் போலும் <காம்பீர்யம்> <ஜ்வலிப்பதாய்> இது என்ன மலையாளச் சேரியா? ஆம் எனில் மலையாளச் சேரியில் சுடலைமாடன் உண்டா? 

<ஒரு சில வேதக்கார ஆசாமிகளும் வந்து எட்டி நின்று பார்த்தனர். என்ன இதெல்லாம் என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. மாடனின் வீழ்ச்சியில் அவர்களுடைய பரம்பரை மனம் நோகத்தான் செய்தது.>

அடடா ஆசிரியக் கூற்றில் அரசியலற்ற தூய கலை என்னமாய் மிளிர்கிறது. இதெல்லாம் பிரக்ஞையற்றப் பெருவெளியில் நின்று எழுதியது. ஆர்ய சமாஜ கண்ணடிப்பெல்லாம் என்னவென்றே தெரியாது.

<எவனோ வம்புக்காரப் பயல் செய்த வினை; மாடனின் பீடத்திலே சிலுவைக்க என்ன வேலை என்று கருதிய எட்வர்டு என்ற முத்தன் அப்பிக்கு ஒரு கை கொடுத்து மாடனைத் தூக்கி நிறுத்த உதவ முன்வந்தான்.>

ஏமாற்று வேலையில் ஈடுபடுவது அப்பி போன்ற கீழ்சாதிப் பயல்கள். போலவே கலவரத்தை விதைப்பதும் மூட்டிவிடுவதும் அவர்களே! இதை நகைச்சுவையாக சொல்லிவிட்டால் அனைத்தும் நையாண்டி எழுத்தாகிவிடும். என்பது நரியை வெட்கப்பட வைக்கும் புத்திசாலித்தனம். இவ்வளவு ‘புத்திசாலியாக’ ஒரு எழுத்தாளன் இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா? அப்படி இருப்பவன் உண்மையிலேயே எப்படி ஒரு கலைஞனாக இருக்க முடியும்? ஆனால் அறிவுரை 

//கதையுலகமும் கதைமாந்தரும் அந்த ஆசிரியன் உட்கார்ந்து யோசித்து உருவாக்குபவை அல்ல. அப்படி உருவாக்கப்படும் கதையையும் பாத்திரங்களையும் எந்த நல்ல வாசகனும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். கலையம்சம் கொண்ட எழுத்தில் கதை அதுவாகவே அவனுள், அவன் வழியாக, நிகழும். ஒரு மனிதனுக்குள் கனவு நிகழ்ந்தாலும் அந்த கனவு அவனால் உருவாக்கப்படுவதோ அவன் கட்டுப்பாடு கொண்டதோ அல்ல.

கனவைப்போலவே நல்ல கதையும் முழுக்க முழுக்க பிரக்ஞை சாராதது. முற்றிலும் ஆழ்மனம் சார்ந்தது. மொழியை அளைந்து அளைந்து அக்கனவை தன்னுள் நிகழ்த்தவே எழுத்தாளன் முயல்கிறான். அந்தக்கனவை மொழியில் நிகழ்த்துவதற்கே அவன் மொழியையும் வடிவத்தையும் பயிற்சி செய்கிறான். அந்த ஆழ்மன வெளிப்பாட்டை பொருத்துவதற்கான சில புறக்கட்டுமானங்கள், தர்க்க அமைப்புகள் மட்டுமே அவனால் உருவாக்கப்படும்.

ஒரு கதாபாத்திரத்தையோ கதையையோ அதன் ஆசிரியன் கொஞ்சம்கூட மாற்றமுடியாதென்பதை எழுத்தாளன் சொன்னால் நல்ல வாசகன் கண்டிப்பாக புரிந்துகொள்வான் என்றே நம்புகிறேன். அந்த யதார்த்தம் யாருடையது? ஆம், அது அந்த எழுத்தாளனின் ஆழ்மனம்தான். ஆனால் அந்த ஆழ்மனம் சமூக ஆழமனமும் கூட. ஆகவேதான் வாசிப்பவனும் அதற்குள் வர முடிகிறது.


ஆசிரியரின் பிரக்ஞையின்றி கதாபாத்திரங்கள் எவ்வளவு தன்னிச்சையாக பேசிக்கொள்கின்றன.

<அப்பி ஆக்ரோஷம் கொண்டான். ‘ச்சீ மாறி நில்லுலே, மிலேச்சப் பயல. மாடன் சாமியைத் தள்ளிப் போட்ட பாவி. ஒனக்க கொலம் வெளங்குமாவிலே ? ‘//

எட்வர்டு முத்தன் தயங்கினான். ‘ஆருலே தள்ளிப் போட்டது ? ‘

‘நீதாம்பிலே. ஒங்க கூட்டம் தாம்பிலே தள்ளிப் போட்டது ‘ மடேரென்று மார்பில் ஓங்கி அறைந்தபடி அப்பி கூவினான்.

‘பிலேய் ஆருவேணுமெங்கிலும் போங்கலேய். பால்ப் பொடியும் கோதம்பும் குடுத்து அப்பிய வளைக்க ஒக்காதுலேய். நான் இருக்க வரைக்கும் ஒரு பயலும் மாடனைத் தொடவிடமாட்டேம்பிலேய் . . . ‘>

<பால்ப் பொடியும் கோதம்பும்> பெறுவதற்கே தலித்துகள் கிறித்துவத்திற்கு மதம் மாறினர் எனில் கதையில் வரும் மற்ற ஜாதியார் எப்படி கிறித்துவராயினர்? ஆக எவருமே ஆன்மீக ரீதியில் தேர்வு செய்து மதம் மாறவில்லை அப்படித்தானே! 

கொஞ்சம் முன்னால் போய் ஹிந்து தலித்துகளின் எதிர்கொள்ளலுக்கான விவரணையைப் பார்த்து விட்டு பின் வரும் கிறித்துவ தலித்துக்களைப் பற்றிய பாத்திர உரையாடல் அல்லாமல் ஆசிரிய மொழியில் இருக்கும் விவரிப்பைப் பாருங்கள்.

<சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் குழுமத் தொடங்கினார்கள். கட்டைக் குரலில் குரியன் தோமஸ், ‘எந்ததிசயமே தெய்வத்தின் சினேகம் ‘ என்று பாட, தெருவில் சப்பணமிட்டு அமர்ந்த மீட்கப்பட்ட மந்தைகள் ஜால்ரா தட்டித் தொடர்ந்து பாடின.>

<மீட்கப்பட்ட மந்தைகள்>

இந்தக் கதைக்கு, நாட்டார் தெய்வங்களை பிராமணர்கள் பெருந்தெய்வங்களாக மாற்றுவதை அம்பலப்படுத்தும் நையாண்டி வடிவிலான கதை என்ற பெயரில் எப்படி முற்போக்கு முத்திரை விழுந்தது? வெறும் திரை எப்படி கதை காட்டும் திசை என்று ஆயிற்று?

இதற்கு எதிரொலிப்பாக எஜமானர்கள் கார்களில் வந்து இறங்குகின்றனர்.

<ரட்சணியபுரம் என்று கிறுக்கப்பட்டிருந்த பலகையையும், சிலுவையையும் கோபாலன் புருவம் சுருங்க உற்றுப் பார்த்தான்.

‘ஆரும் ஒண்ணையும் தொடப்பிடாது. எங்க அண்ணாச்சி ? பாத்துக்கிடுங்க. நான் போலீசோட வாறேன். ‘

பஜனைக் குழுவில் அமைதி கலைந்தது. ‘ஓடுலே காவிரியேலு . . . ஓடிச் செண்ணு வலிய பாஸ்டர வரச் செல்லு ‘ என்றார் டாக்கனார் வேலாண்டி மைக்கேல்.>

இப்போதுதான் வருகிறது கலைக் காமெடி. 

<ரகளை தொடங்கிவிட்டது என்று மாடன் அறிந்தது. கண்ணை மூடியது;>

என்ன அட்டகாசமான ப்டைப்பூக்க கலை எழுச்சி.

<அப்பால் நடந்ததெல்லாம் மாடனுக்குத் சரியாகத் தெரியாது. குட்டி தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய சம்பவங்களின் போது கல்லாகிவிடுதல் என்ற பொது விதியிலிருந்து அது மட்டும் எப்படித் தப்ப முடியும் ? >

இதற்கு என்ன அர்த்தம்? அப்போதுதான் கண்ணை மூடியது மாடன் என்றால் அதுவரை கவனித்துக் கொண்டு இருந்தது என்றுதானே பொருள். எனில் அப்பால் நடந்தது எதுவும் மாடனுக்கு சரியாகத் தெரியாது என்று தொடங்கியதற்கு என்ன காரணம்?

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு என்பார்கள். குடிக்காத ஜெயமோகனுக்கோ பத்திக்கு பத்தி போச்சு என்றுதான் சொல்ல வேண்டும்.

<போலீஸ் வந்தது. தொடர்ந்து பெரிய பாஸ்டர் அங்கி பளபளக்க வந்து சேர்ந்தார். சிலுவையைப் போலீஸ் அகற்ற வேண்டும் என்று குங்குமப் பொட்டுக்காரர்களும், அது சுயம்பு எனவே அங்கேயே இருக்கட்டும் என்று பாதிரியாரும் வற்புறுத்தினர். >

பாஸ்டர் - ப்ரொட்டஸ்டண்ட். 
பாதிரியார் - ரோமன் கத்தோலிக்கர்கள் 

எல்லாவற்றையும் போட்டுக் கலக்கிக் குழப்பி எழுதி வைப்பதுதான் படைப்பூக்கப் பெருவாழ்வா?

கலவரம் ஆகாமல் சமரசம் பேசப்பட்டு ஒன்றாக இருந்த இடம் மூன்றாகிறது.  ஏசுவிற்கு காந்திக்கு மாடனுக்கு என்கிறவிதமாக மூன்றாம் பகுதி முடிகிறது.